Sunday 26 May 2019

மனிதர்களின் மகப்பேறு ஏன் சிக்கலானது?

'நம்ம முன்னோர் எல்லாம் வீட்டுல குழந்தை பெத்துக்கலையா? ஆறு ஏழு பெத்துக்கிட்டு செழிப்பா வாழலையா?'
ஆமாம், ஆத்தாக்கள் ஆறு ஏழு என்று பெற்றார்கள், தாத்தாக்கள் இரண்டு மூன்று என்று மனைவி கட்டிக்கொண்டார்கள். மூன்று தலைமுறை தாண்டிப் பாருங்கள் உங்கள் வீட்டிலும் ஒரு தாத்தாவிற்கு இரண்டு மனைவி இருந்திருப்பார், முதல் மனைவி மகப்பேறுச் சிக்கலினால் இறந்திருப்பார்.
நிச்சயம் அவர்கள் முட்டாள்கள் இல்லை, அவர்களுக்கு வேறு வழியில்லை. புத்திசாலிகளாய் இருந்த காரணத்தினால் தான் மருத்துவ வசதி பெருகியதும் வீட்டில் பிள்ளை பெருவதை நிறுத்திவிட்டார்கள். அதனால் தான் நீங்களும் நானும் மரணிக்காமல் இன்று இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

மகப்பேறு இயற்கை தானே? ஆமாம் மகப்பேறும் இயற்கை தான் அதில் தாயும் சேயும் இறப்பதும் இயற்கை தான். மனிதர்களின் மகப்பேறு என்பது மிகவும் சிக்கலானது. அதைவிடச் சிக்கலான பேறு காலம் கொண்ட பாலூட்டிகள் ஒன்றிராண்டு தான். அவற்றின் பேறு கால தாய் சேய் இறப்பு விகிதமும் மிக அதிகம். இது தான் இயற்கை, மீண்டும் வாசியுங்கள், இது தான் இயற்கை.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இரட்டைக்காலில் நடக்கத் தொடங்கிய போது அவர்கள் இடுப்பு எலும்பு குறுகத் தொடங்கியது. மனித மூளை வளர்ச்சி அடையத் தொடங்கிய போது மண்டையும் பெரிதானது. மண்டை பெருத்த குழந்தைகள் குறுக்கு சிறுத்த மனிதர்களுக்கு பிறக்கத் தொடங்கினார்கள், பிறக்கிறார்கள். அப்படிப் பிறந்தால் இயற்கையில் அது சிக்கல் தான். பலர் இறந்து தான் போனார்கள். 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அது தான் இயற்கை.

வரையாட்டுக் குட்டி ஒரு வாரத்தில் நரியிடம் இருந்து தப்பி ஓடும், வடதுருவத்தில் போட்டதும் ஆட்டுக் குட்டி வலசை போகும் தன் கூட்டத்தோடு இன்னல்களைக் கடந்து நடக்கும், யானைக் குட்டி பஞ்ச காலத்திலும் தண்ணீர் தேடி அம்மாவுடன் நடக்கும். இது எதுவும் மனிதக் குட்டிகளுக்கு சாத்தியம் இல்லை. ஏனென்றால் மனிதக் குட்டிகள் அவற்றைப் போல முழு வளர்ச்சி அடைந்து பிறப்பதில்லை. மூளை பெரிதாக இடை சிறிதானதும் பேறுகாலம் சிக்கலானது. முழு வளர்ச்சியடையாமல் பிறந்த குட்டிகளும் அவற்றின் தாயுமே பிழைத்தனர்.

இத்தனை சிக்கலையும் மனித இனம் இந்த ஒற்றை மூளைக்காகத் தான் கடந்திருக்கிறது.
அப்படிப் பெரிதான மூளை நம் காலத்தில் இந்தப் பல மில்லியன் ஆண்டுகால சிக்கலுக்கு வழி கண்டுபிடித்திருக்கிறது. இவ்வளவு காலம் மனித சமூகம் பெரிய தலையைத் தூக்கிக் கொண்டு இரண்டு காலில் நடந்ததிற்கு இப்பொழுது தான் பலன் கிடைத்திருக்கிறது. இயற்கையின் உந்துதலினால் அதனைக் கண்டு அடைந்திருக்கிறோம்.

எதையுமே புரிந்துகொள்ளாமல் 'பிரசவம் இயற்கை, நம் முன்னோர்கள்' என்று கிளம்ப வேண்டாம்.

பணத்திற்காக அறுவை சிகிச்சை செய்வார்கள் என்று பயமாய் இருந்தால் அக்கம் பக்கம் கேளுங்கள். நல்ல மருத்துவமனைக்குச் செல்லுங்கள். வீட்டுப் பிரசவம் பற்றிப் பேசுவது பகிர்வது செய்யும் நேரத்தில் நல்ல மருத்துவமனைகள் பற்றி பேசுங்கள் பகிருங்கள்.

நல்ல உணவை உண்கிறோம், நஞ்சில்லாத காய்கறிகள் வாங்கி சமைக்கிறோம். எல்லாம் எதற்காக? நாளை நளமுடன் நம் குழந்தைகளோடு வாழத் தானே? அத்தனை நல்லதையும் ஒரே தவறான செயலால் தூக்கிக் குப்பையில் வீசுவது மடமையல்லவா?

ஆண்களுக்கு! நீங்கள் உங்கள் உயிரைக் கொடுத்துப் பிள்ளை பெறப் போவதில்லை, சன்னி வந்து சாகப் போவதில்லை. அதனால் அமைதியாய் இருங்கள். அப்பா பட சமுத்திரக்கனி போல ஆணாதிக்க சிந்தனையோடு மனைவி இப்படித் தான் குழந்தை பெற வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள், மண்டை கழுவாதீர்கள்.

பெண்களுக்கு! உங்கள் குழந்தையை உங்களைவிட யார் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும்? அவர்களை மனதில் கொண்டு முடிவெடுங்கள். யாராவது ' ஆட்டுக்கல்லில் மாவாட்டுங்கள் தோழி! வீட்டில் சுகப்பிரசவம் ஆகும் தோழி' என்று சொல்லிக் கொண்டு வீட்டுப் பக்கம் வந்தால் சற்றும் சிந்திக்காமல் அதே ஆட்டுக்கலை அவர்கள் தலையில் போடுங்கள்.
ஆட்டுக்கல்லில் மாவாட்டுவதும் ஜிம் போய் உடற்பயிற்சி செய்வதும் உங்கள் விருப்பம், உரிமை. இவர்கள் பேச்சுக்கள் உங்கள் குற்ற உணர்ச்சிகளைத் தூண்ட விடாதீர்கள். நல்ல மருத்துவமனைக்குச் சென்று பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Aug 02 2018.

No comments:

Post a Comment