Tuesday, 22 July 2014

போதையனார் பாடலையும் பித்தோகோரஸ் தேற்றத்தையும் ஒப்புமை படுத்தாதீர்கள்

அரிசிமாவு புளிக்குமென்றும் புளித்தபின் அதனை தோசையாகச்சுட்டால் நன்றாகயிருக்குமென்று என் பாட்டிக்குத் தெரிந்திருந்தது. அதற்காக "புளித்துப்போவதற்குக் காரணம் பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிரிகள்" என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார் என்று சொல்லும் போது என்னை முட்டாள், வெற்றுப்பெருமை பேசுபவள் என்றெல்லாம் நீங்கள் சொல்வது நியாயமே. இது போதையனார் பாடலுக்கும் பொருந்தும். புளிக்கும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பதற்குப் பகுத்தறிவு (Common sense) என்று பெயர். அது ஏன் புளித்துப்போகிறது என்று ஆராய்ந்து உண்மைப்பொருளைக் கண்டறிவதற்குப்பெயர் தான் அறிவியலறிவு. போதையனார் பாடல் பகுத்தறிவு. ஆனால் பித்தோகரஸ் கண்ட "பை" என்னும் மாறிலி ஏன் என்ற கேள்வியின் பதிலாகத் தோன்றிய விடை. இரண்டிற்கும் வேறுபாடிருக்கிறது. - இதைச் சொன்னால் நான் தமிழ்த்துரோகி, மேற்கத்திய அறிவியலின் அடிமை, தமிழ் நாஜ்ஜி என்றெல்லாம் வைவார்கள்.

Sunday, 20 July 2014

உங்கள் குழந்தைக்குத் தமிழ்ப்பெயர்தான் சூட்டுகிறீர்களா?

சமீபத்தில் என் உறவினர் ஒருவர் தன் மகனுக்குச் சூட்ட ஒரு நல்லதமிழ்ப் பெயர் கேட்டிருந்தார். ஆனால் அவர் போட்ட "CONDITION"ல் ஒன்று பெயர் "அன்" என்று முடியக்கூடாது. அதற்கு அவர் கூறிய காரணம் "அன்ல முடிஞ்ச மரியாதய இருக்காது". எனக்குப் புரியவேயில்லை. ஆண்பாற்பெயர்கள் அன் விகுதிகொண்டுமுடிவதும், பெண்பாற்பெயர்கள் ஆள் விகுதிகொண்டு முடிவதும் இயல்புதானே. இதில் என்ன மரியாதைக்குறைவு இருக்கிறது? ஒருமுறை என் தோழி கட்டுரைப்போட்டி ஒன்றில் தீரன் சின்னமலைக்குப் பதிலாகத் தீரர் சின்னமலை என்று எழுதியிருந்தாள். தீரன் என்றால் மரியாதையாக இராது என்ற எண்ணத்தில் எழுதியிருந்தாள். தமிழாசிரியை அவளிடம் "அது ஆவரின் அடைமொழி, அன் விகுதிகொண்டு ஆண்பாற்பெயர்கள் முடிவதில்லை தவறில்லையென்று கூறினார். இந்த நிகழ்வு தான் என் நினைவிற்கு வந்தது. இது தெரியாமலேயே தமிழ்மக்கள் தமிழ்ப்பெயர்கள் தேடுகிறார்களா? மற்றொரு உறவினர் தன் மகளுக்குத் தமிழ்ப்பெயர் வேண்டுமென்று கேட்டார். தேடி ஒரு பட்டியல் போட்டுக்கொடுத்தால் வடமொழிப்பெயர் என்று பெயர்வைத்திருந்தார். கேட்டால் அது தமிழ்ப்பெயர்தானே என்றார். என்ன பதில் சொல்வது? இன்னும் சிலர் தமிழ்ப்பெயர்களை "க்,த்,ப்" போன்ற பெய்யெழுத்துகள் கொண்டுமுடிக்கின்றனர். இவ்வெழுத்துக்கள் மொழிக்குக் கடையாக வாராவென்று படித்த நினைவு. பிறகு அழைக்கும் போது அந்தப்பெயரின் ஒரு உகரத்தைச் சேர்த்து அழைப்பார்கள். காரணம் விளிச்சொல்லை அந்த எழுத்துக்களைக் கொண்டு முடிப்பது கடினம். இன்னும் ஒருவர் வஞ்சியம்மனை வழிபடுவதால் தன் குழந்தைக்கு "வஞ்சித்" எனப் பெயரிட்டிருந்தார். உண்மையிலேயே இவர்களுக்கு இதன் பொருள் தெரியவில்லையா இல்லை இதுதான் trend என நினைத்துவைக்கிறார்களாத் தெரியவில்லை. இணையத்தில் தேடினால் அதைவிடக்கொடுமை. வடமொழிப்பெயர்களையெல்லாம் தமிழ்ப்பெயர்ப் பட்டியலில் காட்டுகிறது. கிரந்தயெழுத்துக்கள் சேர்த்தபெயரையும் அவர்கள் தமிழில் சேர்த்ததுதான் வேதனையாகயிருக்கிறது. உங்கள் குழந்தை உங்கள் விருப்பம்போல் பெயர்வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் வைத்தபெயரையெல்லாம் தமிழ்ப்பெயரென்று சொல்லாதீர்கள்.

Tuesday, 15 July 2014

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்.

இட்டேரிப்பக்கமா நடந்து போனால் இந்தச் சொற்களையெல்லாம் பார்க்கலாம்.
(இட்டேரி??? இப்படி யோசிப்பவர்கள் இந்தப்பக்கமா போய்ப்பாருங்க- இட்டேரி).

1. கடவு. 

சில சமயம் தோட்டத்தைச் சுற்றி வேலி நீண்டுகொண்டே போகும். ஒரு கல் தொலைவெல்லாம் தாண்டி தான் வழியிருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் வேலியில் கொஞ்சம் முள்ளை நீக்கி ஓட்டை போட்டு அந்த வழியைப் பயன்படுத்துவார்கள். (By-pass). இதற்குக் கடவு என்றுபெயர்.


2. தொக்கடா.

"இது என்ன இந்தியன் படப்பாடல் வரிமாறி இருக்கே" என்று சோசிக்காதீர்கள். இதுவும் ஒரு அழகான சொல். நாம் மட்டும் தான் கடந்து போக வேண்டும், கால்நடைகள் கடக்கக் கூடாது. அப்பொழுது என்ன செய்வது? மனிதர்கள் மட்டும் தாண்டும் வகையில் பட்டியில் ஒரு வழி அமைத்துவிடுவார்கள் (இடுப்பு உயரத்திற்கு கீழ் வழியில் கட்டை கட்டி அடைத்துவிடுவார்கள்.) இதற்குத் தொக்கடா என்று பெயர். ஆடு தாண்டாத என்று கேட்கலாம். ஆடுகளின் கால்களைக் கட்டிவைத்திருப்பார்கள் (முன்னங்காலில் ஒன்றோடு பின்னங்காலின் எதிர் பக்கக் காலோடு சேர்த்து அதனை விரைந்து ஓடாமல் கட்டி வைப்பார்கள்). அதனால் அவற்றால் தாண்ட முடியாது.

3. தொண்டுபட்டி.

பட்டிகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது இச்சொல் நினைவிற்கு வந்தது. சுற்றி வேலியால் அடைத்த பகுதியில் இரண்டொரு மாடு ஆடு வைக்கற்போர் வைக்கக் கொஞ்சம் இடம், ஒரு குட்டிச் சாலை, இப்படி இருக்கும் இடத்தை தொண்டுபட்டி என்பார்கள். (மற்ற வட்டாரங்களில் எதைத் தொண்டுபட்டி என்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை).
4. வெள்ளதாரை.

sink / wash basin என்றெல்லாம் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது சலதாரை என்னும் சொற்பயன்பாடு அழிந்துவருவதைக் கண்டேன். சலம்- வடமொழி என்பதாலோ என்னவோ அது வழக்கொழிந்து போவதில் எனக்குப் பெரிதாய்க் கவலை ஏதுமில்லை. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது என் அம்மா வெள்ளதாரையைப் பற்றி நினைவுபடுத்தினார்.

மழை பெய்யும் போது தோட்டங்காடு, புன்செய் நன்செய் என்றிருக்கும் இடங்களில் மழைநீர் ஓடும். ஓடை, ஆறு இவற்றில் சேர்க்கமுடியாத நீர் போகும் பாதையை வெள்ளதாரை என்பார்கள். இங்கும் அடித்துவரப்பட்ட மண் சேர்ந்திருக்கும். அங்கு எந்தச் செடிகளும் வளர்வதில்லை. எல்லா நாளும் நீர் போகாமல் அடைமழை காலங்களில் மட்டும் நீரோடும் வெள்ளதாரையைச் சிறு வயதில் கண்டிருக்கிறேன். அதிலும் நீர் இருக்கும் போது கண்டதாய் நினைவில்லை. நீரின் தாரையை மட்டுமே கண்டிருந்தேன். என் அம்மா அவர்களின் சிறுவயது நினைவிகளைப் பகிர்ந்தபோது அங்கு சென்று பலரும் துணிதுவைத்ததாகக் கூறினார். ஒருமுறை மீண்டும் சென்று அந்தத் தாரையாவது இருக்கிறதாவென்று பார்த்துவர வேண்டும்.

இதெல்லாம் எங்கள் வீட்டிற்குப்பின்னால் இருக்கும் இட்டேரியில் எடுத்த படங்கள்.

இதேபோல் இன்னும் கொஞ்சக் கொஞ்சும் வட்டாரவழக்குச்சொற்களோடு மீண்டும் எழுதுகிறேன்.
அன்புடன்
சுபாசினி.


Wednesday, 9 July 2014

பேரூர் கோவில் யாளிகள்

நேற்று பச்சை நாயகி உடனமர் பட்டேசுவரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கும் என் கண்ணை நிலை கொள்ளச் செய்தது யாளி சிற்பங்கள் தாம். தஞ்சைப்பெரிய கோவிலில் (நின்ற வண்ணம்) இருக்கும் யாளி சிற்பங்களுக்கும் இங்கு உள்ளவைக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. தஞ்சைப்பெரிய கோவில் யாளிகள் சற்று வாயை மூடிய வண்ணமும், இங்குள்ளவை வாயைத் திறந்துள்ளவையாகவும் இருந்தன. (15 சூன் 2014)இலக்கணம் தேவையா? 2

"தமிழிலக்கணம் கற்றான்", "தமிழ் இலக்கணம் கற்றான்." இவ்விரண்டிற்குமான பொருள் வேறுதான். இதனைப் படிப்பவரின் அவாவிற்கேற்றாற் போல படிக்க இயலுமே தவிரப் பொருள் தெளிவு கிடைக்காது. எளிமையென்பது எழுதுவதில் மட்டுமில்லை. படிப்பதிலும் சொன்ன பொருளையே புரிந்துகொள்வதிலும் கூட இருக்க வேண்டும். இலக்கணமென்பது எப்படி எழுத வேண்டுமென்று கற்பிப்பதைவிட எப்படி வாசித்துப் பொருள்கொள்ள வேண்டுமென்று கற்பிக்கிறது. தனிமொழியாய் எழுதுவது பொருள் மயக்கம் தராதவரை நல்ல மாற்றம் தான். ஆனால் புணர்ச்சிவிதிகளைப் பயன்படுத்தினால் கணினிமயமாக்கல் எளிது. இதையே ஒருவர் கூகிளில் மொழிபெயர்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இலக்கணவிதிகளைப்படி அதனால் எளிதாக சரியான மொழிபெயர்ப்பைத் தரவியலும். " He is learning Tamil grammar", "Tamil is learning grammar". Tamil grammar has a mathematical structure which makes it easier to computerize. When all are trying to make a formula for randomly working things, we are moving from a well defined structure to a randomness.

ஊருக்குப்போறேன்- இப்படித் தான் பேசுகிறோம். இதே எழுதும் போது- ஊருக்கு போறேன்- என்று எழுதுகிறோம். இந்த முரண்பாடு ஏன்? வட்டார வழக்கில் எழுதுவது தவறில்லை, பேச்சுவழக்கை எழுதுவதும் சரிதான். பேச்சில் நமக்கு இயல்பாக வருகின்ற ஒன்றை எழுத்தில் விடுவதுதான் இடிக்கிறது. நம் பேச்சில் இன்னும் ஒற்று வாழ்கிறது. புணர்ச்சி வாழ்கிறது. வயித்துவலி- வயிற்றுவலி என்பதன் பேச்சு வழக்கு, இதே எழுதும் போது பல வயிறு வலி என்று எழுதுகின்றனர். இதை எப்படித் தானாக நிகழும் மாற்றம் என்று கூறுவது? எழுத்துவழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் ஒவ்வாத ஒரு தட்டச்சு வழக்கு சரியில்லை.

உற்று நோக்கும்போது ஏதோ பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் ஒத்துப் போவது இன்றைய காலகட்டத்திற்கு புணர்ச்சியிலக்கணங்கள் தான். இதை எழுத்து வழக்கை(தட்டச்சு வழக்கு) எளிமை படுத்துவதாக நினைத்து பல நேரங்களில் சோம்பல் கொண்டு எழுதுவதை இயல்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாமாவென்று தெரியவில்லை. ஒரு மாற்றம் நிகழும் போது அது இயல்பானது தானா என்று பார்க்க வேண்டும். இயல்பு தானென்றால் அது எல்லாவிடங்களிலும் நிகழ வேண்டும். இங்கு எழுத்து வழக்கில் மட்டும் நிகழ்கிறது. இது இயல்பா இல்லையா என்று தெரியவில்லை
என் கருத்து இப்பொழுதும் நம்மால் இலக்கணத்தைப் பின்பற்ற முடியும். ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் எழுத்தில் இல்லாத பிழைகள் நம் எழுத்தில் வருகிறதே.  இதை வெறுமனே மாற்றம் என்று ஏற்றுக்கொண்டுவிட முடியவில்லை.


மொழியில்லா ஒரு நிலை->எப்படி பேசுவது என்ற வரைமுறைகள்-> பேச்சு வழக்கு மொழி->எழுத்து வழக்கு->இலக்கணங்கள். இப்படி நம் மொழி உருவானதாக எண்ணுகிறேன். இதற்கு முன்னர் நடந்த மாற்றங்கள் எல்லாம் மெதுவாக நடந்தது. உதாரணமாக வடிவு- அழகு, இந்தப் பொருள் மாறி வடிவு-வடிவம், இந்தப் பொருளில் வழங்குகிறது. பாவினங்களில் சேராக் கவிதைகள் வந்துவிட்டன. இது இயல்பான மாற்றம். ஒரு நீண்ட நெடிய காலக்கட்டத்திற்கு பின்பு தானாகவே நடந்த மாற்றம். ஆனால் இப்பொழுது நிகழும் இம்மாற்றம் இயல்பானதா? இதுவே என் கேள்வி. முன்னர் நடந்த மாற்றங்களில் ஒரு சேர அனைவரும் பயணித்தோம். ஆனால் இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பயணிக்க முற்படுகிறோம். இதன் விளைவு குழப்பம் தான் (chaos).


சரி இம்மாற்றம் பேச்சு வழக்கிலும் நிகழ்கிறதா? இல்லையே. நாம் மாற்றம் இயல்பானதும் அதை ஏற்றுக்கொள்வது முறை என்று சொல்வதற்கும் அடிப்படை ஒன்று தான். "பேச்சு வழக்கு எழுத்து வழக்கானது;அதன் தன்மை ஆராய்ந்து இலக்கணம் இயற்றப்பட்டது;கடிய இலக்கணத்தால் மக்களை மூச்சுத் திணறச்செய்யக்கூடாது". இதை நன்கு கவனத்தால் நான் சொன்னது போல அண்மை காலமாக நம் பேச்சு வழக்கில் இருக்கும் இலக்கணங்கள் அல்லது அதன் அமைப்பு எழுத்து வழக்கிற்கு வரும்போது அடிபடுகிறது. பேசுவது ஒன்றையும் எழுதுவது ஒன்றையுமாகச் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி ஏதோ ஒரு உந்துசக்தியால் நிகழும் திடீர் மாற்றமானது குழப்பத்தைத் தான் தரும். சில காலம் கழித்து பேசுவதற்கு பொருந்தாத ஒரு எழுத்துவழக்கு இலக்கணத்தை நாம் கடைபிடுத்துக்கொண்டிருப்போம்.

செவ்வான நேரமதில் காத்திருக்கிறேன்

தொடுவானமும் அதனை அங்கே
தொட்டுவிட்ட தென்னையும் மஞ்சள்
வண்ணங் குழைத்தவன் கைபோலே
வண்ணங் கொள்ளும் மாலையிது..

குடம்பை தனித் தொழிந்த
குருவியெல்லாம் கூடுதிரும்பும் வேளையிது...

செம்மலது வாசம் வீசும்
செவ்வான நேரமதில் காத்திருக்கிறேன்
கடல் கடந்து சென்றயென்
கண்ணன் வரும் சாலையெது??

Monday, 7 July 2014

பொன்னியின் செல்வன் நாடகம்- என் பார்வையில்.

பொன்னியின் செல்வன் நூல் நாடமாக நிகழ்த்தப்படுகிறதென்றவுடன் என்னை முதலில் ஆச்சரியம் கொள்ளச்செய்தது "எப்படி இவ்வளவு பெரிய நூலை நாடகமாகப் போடப்போகிறார்கள்" என்பதில்லை. "எப்படி  இவ்வளவு புகழ்பெற்ற நூலை நாடகமாகச் செய்யத் துணிந்தார்கள்" என்பதுதான். பல்லாண்டு காலமாக இந்நூல் மக்களிடையே ஏற்படுத்திய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யமுடியும் என்றெண்ணி இந்நாடகத்தை அரங்கேற்ற வந்ததற்கே அவர்களை நாம் மெச்ச வேண்டும்.

கோவையில் சூலை 6 ஆம் தேதி நடித்த அதே நடிகர்கள் தான் மற்ற இடங்களில் நடித்தார்களாவென்று தெரியவில்லை. இதை நான் அன்று பார்த்த நாடகத்தை மட்டுமே மையமாக வைத்து எழுதுகிறேன்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் அரங்கத்தைச் சென்றடைந்துவிட்டேன். கூட்டம் சேரத் தொடங்கியது. " அம்மா! நாடகம் எனக்கு புரியுமா? ஈசித் தமிழா இருக்குமா?", " புரியற தமிழாத் தான் இருக்கும்" இப்படி அம்மாவிற்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைக் கேட்டு அது என்ன புரியற தமிழ் புரியாத தமிழ், ஏதோ அந்தமிழ் பைந்தமிழ் போல நமக்குத் தெரியாத தமிழாக இருக்கும் என்றெண்ணிக் காத்துக்கொண்டிருந்தேன்.

நாடகம் சொன்ன நேரத்திற்கு ஆரம்பமானது. அரங்கமும் அதில் இருந்த கோட்டை மதிலும் யாளியும் (அங்கும் நான் யாளியைவிட்டு வைக்கவில்ல) நம்மை சோழர் காலத்திற்குக் கூட்டிச்செல்வதாய் இருந்தது. ஆனால் அத்தகைய பிரம்மாண்ட அமைப்புகளுக்கு மேடை போதுமானதாகத் தெரியவில்லை. கோவையில் இதைவிடப் பெரிய அரங்கம் இல்லையே என வருத்தமாக இருந்தது :( கைபேசி வேண்டாம் என்பதற்கு அவர்கள் அறிவித்தவிதமே இரசிக்கும்படி இருந்தது. நாடகம் தொடங்கியது. மூன்றரை மணி நேரத்தில் அது முடிந்தது.

இந்த மூன்றரை மணி நேரத்தில் நான் இரசித்தது இவற்றைத் தான்:

வந்தியத் தேவனாக நடித்தவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நூலைப் படிக்கும் போது நம் கண்முன் வந்து போகும் வந்தியத்தேவன் நாடகத்தில் நடிப்பது போன்றே இருந்தது. கொஞ்சம் குறும்பும் பெண்களைக் காணும் போது கொஞ்சும் காதலுமாய் நெஞ்சை அள்ளிவிட்டார். நாடகத்திற்கு அத்தகை உயிரோட்டத்தை இவர்தான் கொடுத்திருந்தார். எதிர்பார்த்த கதாப்பாத்திரம் எதிர்பார்த்தது போல் இருந்தது வாணர்குல வீரன் தான்.

நான் அவ்வளவாக எதிர்பார்க்காமல் இருந்த ஒரு கதாமாந்தர் நடிப்பால் கவர்ந்திழுத்துத் தன் இருப்பை மக்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார் என்றால் அது பழுவேட்டரயர் தான். கோபம் கர்வம் இரக்கம் என அனைத்துக் குணங்களையும் ஒன்றே கொண்ட ஒருவரைத் தேடிப்பிடித்து அந்தக் கதாபாத்திரமாக நடிக்க வைத்ததைப் போல் இருந்தது.

இவர்கள் இருவருமே அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறியிருந்தனர். தங்களுக்குத் தொடர்பில்லாத ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் போதும், வசனமில்லாமல் சும்மா அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது கூடத் தாங்கள் பூண்ட வேடத்திற்கு உரியவர்களாகவே நடந்துகொண்டனர். இது அவர்களின் தேரிய நாடக அனுபவத்தைப் பறைசாற்றுவது போல இருந்தது.

ஆதித்த கரிகாலனின் அறிமுகம் அட்டகாசம். மதம்கொண்ட யானையாக அவன் உலா வருவதாகக் கற்பனை செய்ததைப் போலவே அவரின் நடிப்பு இருந்தது. கோபம், உணர்ச்சிவசப்படுவது, நந்தினியைப் பார்க்கும் போது கனிந்துருகுவது என நாடகத்தின் இறுதியில் வந்து புயல் மழையாய் அடித்து ஓய்ந்தது ஆதித்த கரிகாலன் என்னும் புயல்.

நந்தினியின் பணிப்பெண்ணாக வந்தவரின் நடிப்பு கொஞ்ச நேரமேயாயினும் அசத்தல். இயற்கையாக நகைச்சுவை வரவழைத்தது.

ஆண்பால் நடிகர்கள் அனைவரும் தமிழ் உச்சரிப்பில் தேரியவர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. அவர்களின் தமிழ் இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது.

செம்பியன் மாதேவி, மதிராந்தகன், இளைய பழுவேட்டரயர், கந்த மாறன், இரவிதாசன் போன்றோர் ஏமாற்றங்களைத் தராமல் சிறப்பாக நடித்திருந்தனர்.

ஆழ்வார்க்கடியானக வந்தவர் அருமையாக நடித்திருந்தார். இருப்பினும் குட்டை உருவமாய் தொப்பையுடன் இருக்கும் அழ்வார்க்கடியானுக்கு உயரமாய் ஒருவரைப் போட்டது ஏதோ போலிருந்தது. இதே போல பார்த்திபேந்தரனாக நடித்தவரை பனைமரத்தில் பாதி உயரத்திற்குக் கற்பனை செய்துவைத்திருந்தேன். குட்டையாக ஒருவர் நடித்ததால் மன ஏற்கவில்லை. மேலும் அவர் சாமியாடியாக வந்ததும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவரின் நடிப்பும் கலைஞர்களுக்கே உரிய ஒன்றாய் இருந்தது. நந்தினியைக் காணும் போது அவர் முகத்தில் காட்டிய மாற்றங்கள் அடேங்கப்பா என்று சொல்லிக் கைதட்டும் அளவு அருமை.

ஆனால் பெரிதும் ஏமாற்றியது நாடகத்தின் பெண்பாற் கதாபாத்திரங்கள் தான். நந்தினியின் நடிப்பும் உச்சரிப்பும் குறைகூறும் வகையில் இல்லை. இருப்பினும் ஒரு நாகம் போலக் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு கதாநாயகிக்கு அவரை வைத்துப் பார்க்க முடியவில்லை.
குந்தவை, பூங்குழலி- இவர்கள் இருவருமே மிகச் சுமாராக நடித்திருந்தனர். குந்தவைக்குத் தொடர் மொழியாக வரும் சொற்களைப் படிக்கும் போது குளறியதும், பூங்குழாலியாய் நடித்தவர் அனைத்து லகர, ளகரத்தையும் ழகரமாக உச்சரித்தமும் நாடகத்தின் தமிழைக் குழைப்பதாய் இருந்தது. நடிப்பிலும் அவர்கள் சொதப்பியிருந்தனர். வந்தியத் தேவன் தேனொழுகக் காதலித்த காட்சியில் குந்தவை பக்கத்திலிருந்து எந்த உணர்வும் வெளிப்படவில்லை :( அதே போலப் பூங்குழலி அருள்மொழியைப் பார்த்த காட்சியில் அவளின் கண்களிலும் குரலிலுல் எந்த உணர்ச்சியும் இல்லை. வானதியாக நடித்தவர் ரொம்பக் கொஞ்சிக் கொஞ்சிப்பேசிக்கொண்டிருந்தார்.

நாடகத்தின் தொடக்கதில் இருந்த நேர்த்தி போகப் போக கொஞ்சம் குறைந்தது. முதற்காட்சியில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் கோட்டை மதிலுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருப்பதைக் காட்டிய விதமெல்லாம் மிகச்சிறப்பு. அதே போன்று இறுதி வரை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வானதி அருள்மொழியைப் பார்த்ததும் மயங்கி விழும் காட்சியை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் வரவில்லை.
மணிமேகலையைக் கதையில் விட்டுவிட்டனர். :(
சேந்தன் அமுதன் முதற்காட்சியிலேயே வாளெடுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஆதித்தகரிகாலனின் இறப்பு நூலில் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு விழுக்காடு கூட நாடகம் ஏற்படுத்தவில்லை.
மேடையின் பின்னால் இருந்த திரையைக் கடலருகில் வரும் காட்சிகளுக்குக் கடல் போல் மாற்றியருக்கலாம்.

பெண் நடிகர்களின் உச்சரிப்பை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நாடகம் மிக அருமை. திருப்தி அளிக்கும் ஒரு அனுபவம்.
திரையுலகத்தினரைவிட இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள் என்பதை நிருபித்துவிட்டனர்.
இதில் நான் கண்ட அதிருப்தி கூடப் பள்ளிப்பருவத்தில் எங்கள் பள்ளியில் நிறைய வரலாற்று நாடகங்கள் பார்த்துப் பழகிவிட்டிருக்கிறபடியால் தோன்றியவை தானே ஒழிய குறை கூறும் அளவிற்கு நாடகமில்லை.

பள்ளி மாணவர்கள் சிலர் நாடகம் பார்க்க வந்திருந்தனர். எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள். மொக்கைடா என்று பேசிக்கொண்டு சென்றது வருத்தமாக இருந்தது. அதே வயதில் நான் கல்கியைப் படிக்க ஆரம்பித்திவிட்டிருந்தேன். அவர்களுக்கு அந்த அனுபவம் கிடைத்தால் அவர்களும் இரசித்திருப்பர் என்று நினைத்துக் கொண்டேன்.

நாடகத்தமிழ் அழியும் விளிம்பில் இருக்கும் இந்தக்காலத்தில் இப்படியொரு நாடகப்புரட்சி செய்த S.S. International Live நிறுவனத்திற்கு நாடகத் தமிழே கடமைப்பட்டிருக்கிறது தான். நாடக்கத்தை மீட்டெடுத்துவிட்டனர். மேலும் பல வரலாற்று நாடங்களை இவர்கள் அரங்கேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பில் அரங்கத்தைவிட்டு வெளியே வந்தேன்.

-சுபாசினி. (06/07/2014)

Saturday, 5 July 2014

இலக்கணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? ஆம்.

தமிழ் மொழியையும் அதன் இலக்கணங்களையும் உற்று நோக்கும் போது அது இயற்கையாகத் தானாக பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் தோன்றியது எனப் புலப்படும். ஓசைகளின் அடிப்படையில் பிறந்தது. சங்க இலக்கியங்களில் வந்த காதல் தொடங்கி அனைத்தும் இயல்பானவை. அதனால் அதில் இயல்பிற்கு எதிரான செயற்கை விதிகள் எதுவும் இல்லை. கொஞ்சம் கவனம் வைத்தால் அதன் விதிகளைப் பின் பற்றுதல் எளிது.

இப்படி இயல்பான மொழிக்கு நாம் ஏன் இலக்கணத்தைப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் என்று தாங்கள் கேட்கலாம்.
ஒரே ஒரு காரணம் தான். நாம் ஏன் சொல்ல வந்ததோமோ அதையே மற்றவரும் புரிந்து கொள்ள வேண்டும். There should not be any communication gap.

நீங்கள் கேட்கலாம் " அத நான் சொல்றது உங்களுக்குப் பிழையா இருந்தாலும் புரியுதே?"
இப்பொழுது உங்கள் காலக் கட்டத்திலேயே நிகழும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டே தாங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளுதல் எளிது. ஆனால் இன்னும் சில பல நூற்றாண்டுகள் கழிந்தபின் இதே நிலை இருக்குமா?
நீங்கள் சொல்ல வந்ததை ஒரு ஆயிரம் ஆண்டு காலம் கழித்து ஒருவன் புரிந்து கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

ஒரே வழிதான். Proper documentation. நம் மொழியின் இலக்கணத்தை சரியாகப் பயன்படுத்தினாலே அது சரியாக நிகழும். பண்பாடு நாகரிகம் மருத்துவம் கட்டிடக் கலை என அனைத்தையும் எல்லாக் காலங்களுக்கும் கொண்டு செல்லலாம்.
மொழியின் இலக்கணத்தை சரியாகப் பயன்படுத்தினால் அது நிகழுமா?
நிச்சயம் நிகழும். நம் மொழியில் ஒரு சொல்லுக்கு ஒரு உச்சரிப்பு தான். எழுதுவதைத் தான் படிக்க முடியும். Read- past or present ?? போன்ற ஐயங்கள் எல்லாம் நம் மொழியில் எழாது,
இப்படி இயற்கையாக இருக்கும் ஒரு அமைப்பை புதியன புகுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏன் வேறொன்றைத் திணிக்க வேண்டும்? ஏன் பிழைகளை ஏற்க வேண்டும்? 

Friday, 4 July 2014

"மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொல்லவில்லை

மீண்டும் யாராவது "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகக் கூறினால் நிச்சயம் அவர்களுக்கு உதை தான் விழும். என்று பாரதி அப்படிச் சொன்னார்? ஒரு முறையேனும் பாரதியின் நூலைப் படிக்காத மூடர்கள் தாங்கள் பேசும் போது எழுதும் போது எல்லாம் அந்த வரியைச் சேர்த்துக் கொள்கின்றனர். ஏதோ பாரதி தமிழ் அழிந்துவிடும் என்று சொன்னது போலவும் இவர்கள் தமிழைக் காப்பது போலவும் எழுதி எரிச்சலூட்டுகின்றனர். அந்த பாரதியின் வரிகளை முழுமையாகப் படிக்காதவர்கள் ஒருமுறையேனும் படியுங்கள். தமிழ் அழியும் என்று சொல்வோர்க்குப் பதிலடியாக அவர் எழுதிய கவிதையை இப்படித் திரித்துவிட்டனர்.

அவர் எழுதிய கவிதை இதோ.

"ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் 
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் 
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! 

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ! 
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

தமிழன்னை உரைப்பது போன்ற இந்தக் கவிதை சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் எனும் அவருடைய கவிதைத் தொகுப்பில், “ (1) தேசீய கீதங்கள்” எனும் பிரதான தலைப்பின் கீழ் அடங்கியுள்ள “(2) தமிழ்நாடு”  துணைத் தலைப்பில் இரண்டாவது கவிதையாக “(21) தமிழ்த்தாய்” என்னும் தலைப்பில் உள்ளது.