Saturday 10 September 2016

ஆகாச ஊற்று

தாரையிலே அமராவதி ஆற்றங்கரையில் தில்லாபுரி அம்மன் கோயில் அருகே ஒரு சுனை இருப்பதாகவும் அதன் பெயர் ஆகாச ஊற்று என்றும் அங்கு சிறு வயதில் நிறைய முறை சென்றதாகவும் என் வீட்டில் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். நிற்க! அந்த சுனைக்கு ஒரு செவிவழிக்கதையும் உண்டு. மகா பாரதத்தில் வரும் விராடன் என்னும் மன்னன் தான் எங்களது ஊரை ஆண்டானென்றும் அதனால் தான் எங்களது ஊருக்கு விராடபுரம் என்று பெயர் வந்ததாகவும் சொல்வார்கள். அதைப்பற்றி நான் நீட்டி முழக்கி எழுதிய கட்டுரையை படிக்க பின் வரும் இணைப்பை சொடுக்கவும்.
http://isainirai.blogspot.in/2014/06/blog-post_22.html?m=1
சுருக்கமாக பாண்டவர்கள் அன்னியான வாச காலத்தில் தில்லாபுரி அம்மன் கோவிலில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்களாம். அப்பொழுது அங்கு அர்ச்சுனன் அம்பு விட்டு ஒரு சுனையை உருவாக்கினானாம். நான் மேலே சொன்ன அந்த சுனை தான் இந்த சுனை. இப்படி அர்ச்சுனன் காலத்தில் இருந்து இருக்கும் சுனையை பார்க்க வேண்டும் என்று என் வீட்டாரை கடந்த வாரம் நச்சி அழைத்துக்கொண்டு போன போது தான் தெரிந்தது அந்த சுனை வற்றிவிட்டது என்று. நிலத்தடி நீரை உறிஞ்சியது எல்லாம் காரணமில்லை. வேறு ஏதோ காரணம் இருக்கும் என்று சிந்தித்த போது தான் தெரிந்தது. ஆதலால் சகலமானவர்களுக்கும்  நான்  சொல்ல வருவது என்னவென்றால் கலி முத்திடுச்சு. இது என்னடா அர்ச்சுனனுக்கு வந்த சோதனை!

Monday 29 August 2016

புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..

ஒரு நூலின் அட்டைப்படம் அந்நூலை என்னை படிக்கவிடாமல் செய்யும் கதை.
"புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
உடைந்த காதும் உலர்ந்த முகமுமாய்,
மூடிய விழியும் முழு நீள மௌனமுமாய்,
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
குமுறும் எண்ணங்களையும் குழறும் சொற்களையும்
குறுஞ்சிரிப்பில் ஒளித்து வைக்குமொரு
பெண்ணின் மெய்ப்பாட்டோடு
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
பிரபஞ்சனின் நூலின் அட்டைப்படத்தில்
அமர்ந்து சாலை மறியல் செய்யும்
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
எங்கு என் விரல் பட்டு
அமைதி விடுத்து அவன் சொல்லாமல் போனதை சொல்லிவிடுவானோ
எனத் தயங்கி நிற்கிறேன்...
அட்டையை வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு
நூலை ஓரமாய் வைக்கிறேன்..  இன்று
நிறைய படித்துவிட்டேன் என்று.."
சுபா

Wednesday 13 January 2016

போகி (எ) காப்புக்கட்டு

போகம் - விளைச்சல், செல்வம். (முப்போகம் விளைந்தது). அறுவடை காலம் முடிந்து விளைச்சல் எடுத்தவன் கொண்டாடும் விழா. போகம் எடுத்தவன் கொண்டாடுவது போகி. இச்சொல்லின் மூலம் தமிழில்லை(?) நகரங்களில் கொண்டாடப்படும் " பழையன எரித்து புதியன புகுத்தும்" போகிக்கு நாட்டார் வழக்கில் இடமில்லை. சாமி படம் பார்த்து இப்படி தான் போகி கொண்டாடுவாங்களா என்று வியந்தேன். இங்கெல்லாம் காப்புக்கட்டு தான். வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ எல்லாம் சேர்த்துக்கட்டி வீட்டை, தோட்டத்தைச்சுற்றி வைப்பர். வைத்தால் பொங்கல் வந்துவிட்டது. :)
சல்லிக்கட்டு தமிழர் பண்பாடுனா டயர் எரிக்கிறதும் தமிழர் பண்பாடானு கேட்கறவங்க எல்லாம் தங்களது தாத்தா பாட்டி எப்படி போகி கொண்டாடுனாங்கனு போய் கேளுங்க.

Saturday 2 January 2016

கிட்டி - கொங்கு வட்டாரச்சொற்கள்

கிட்டி.
ஆடு கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியின் பெயர் கிட்டி என்பதாகும்.
குறும்பு செய்யும் ஆடுகள் பட்டியைத்தாண்டுவதைத் தடுப்பதற்கு கட்டப்படுவது தான் இந்தக்கிட்டி. வேலியிலுள்ள சிறிய குறுகிய வழியில் ஆட்டால் வெளியில் வரமுடியாமல் இக்கிட்டியானது தடுத்துவிடும்.
இயந்திரங்களில் உலக்கையை உருளையில் இருந்து வெளிவராமல் தடுக்கும் உறுப்புகளுக்கு இப்பெயர் வைக்கலாம் அல்லவா?















இச்சொல்லின் மூலம் தெரியவில்லை. ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் குச்சிகளுக்கு கிட்டியெனப்பெயர் இருக்கலாம். கிடுகிட்டி என்றொரு இசைக்கருவியிருக்கிறது, அதில் இரு இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து கட்டியிருப்பர். படம் கீழே:
(படம்: இணையம்)
எலி பிடிக்கும் பொறி ஒன்றினுக்கும் கிட்டி எனப்பெயருண்டு. அப்பொறியிலும் இரண்டு குச்சிகள் இணைத்துக்கட்டப்பட்டிருக்கும். அதைப்பற்றி தி இந்துவில் வெளியான செய்தியையும் படத்தையும் கிழே காண்க.
இணைப்பு