Tuesday 26 August 2014

கொங்கு மண்டல வட்டார வழக்குச்சொற்கள்.

சமையல் அறை, குளியல் அறை, வரவேற்பறை என்பதெல்லாம் கிட்சென், பாத்ரூம், ட்ராயிங்க் ரூம் போன்றவற்றின் நேரடி தமிழ்மொழிபெயர்ப்பு. இதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்பாட்டில் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத்தொகுக்கும் சிறு முயற்சி.

1. ஆசாரம்

இன்று ஹால், வரவேற்பறை என்றெல்லாம் சொல்லக்கூடிய அந்த நீண்ட முன் பக்க அறைக்குத்தான் ஆசாரம் என்று பெயர். இன்றும் எங்கள் வீட்டில் இந்தச்சொல்லின் பயன்பாடிருக்கிறது.

2. திண்ணை.

இதைப்பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் புறமும் அல்லாமல் அமைந்த ஒரு பகுதி. வருபவர்களை வரவேற்று அமர வைக்கும் பகுதி.

3. சமையக்கட்டு / அடுக்களை / கொட்டம்

சமையலறையை இப்படிப்பல சொற்களால் அழைப்பர்.

பானை, மொடா போன்றவற்றை அடுக்கிவைத்திருந்ததால் அதற்கு அடுக்களையென்ற பெயர் வழக்கில் இருக்கிறது.
வேரொரு அறையோடு இணைந்திருக்கும் சமையலறையை கொட்டம் என்பார்கள். ஆதாவது ஒரு தடுப்பு வைத்து சமைக்கும் இடத்தை மட்டும் பிரித்திருப்பார்கள். அந்த இடத்தைக் கொட்டம் என்பார்கள்.

4. பொடக்காலி 

இன்று குளியலறை என்று சொல்கிறோமோ அதற்கு இணையான தமிழ்ச்சொல் பொடக்காலி.
இது புறக்காணி என்னும் சொல்லின் மரூஉ. வீட்டின் பின்பக்கத்தைப் புறம் என்று சொல்வர். "பொறவுக்கு" என்றால் பின்பக்கம் என்றும், சிறிது நேரம் கழித்து என்றும் பொருள்படும். "பொறகாண்டி" என்ற சொல்லை சதிலீலாவதி படத்தில் நீங்கள் கேட்டிருக்கலாம். அனைத்திற்கும் வீட்டின் பின்புறம் என்றே பொருள்படும். தமிழில் இடக்கரடக்கல் என்னும் ஒரு இலக்கணவகையில் இதுவரும். கைகழுவதல், கால்கழுவுதல் என்பன போன்று இதுவும் குறிப்பால் பொருளுணர்த்தும் ஒரு சொல்.

(நன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும். மேலும் படிக்க: இடக்கரடக்கல் )

5. நடை / நட

இப்பொழுது கேட் என்று சொல்வதின் வழக்குமொழி இது. போன தலைமுறை வரை மதில்சுவர் வைத்த வீடுகளைப்பார்ப்பது கடினம். அப்படி மதில்சுவர் வைத்து அதற்கு ஒரு கதவு போட்டிருந்தால் அந்தக்கதவை நடை/நட என்பார்கள். அத்தகைய வீடுகள் அரிது. அவற்றை "நட வச்ச வூடு" (நடை வைத்த வீடு) என்றழைப்பார்கள்.

இதில் விடுபட்ட சொற்களையும் சேர்த்து வேறொரு நிலைபதிவில் எழுதுகிறேன்.

நன்றி.
சுபாசினி.

Sunday 24 August 2014

குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் - 1

உறவினர்களின் குழந்தைகளுக்குப்பெயர் தேடிய போது எழுதிவைத்த பெயர்கள். ( புலவர்கள், மன்னர்கள் பெயர்களும், பூக்கள் பெயரும், உவமைத்தொடர்களும் இன்னும் பிறவும் இதில் அடங்கும். )

1. அமிழ்து
2. அமிழ்தினி
3. அமிழ்தன்
4. அதியன் (புலவர் பெயர்)
5. அனிச்சம் (பூப்பெயர்)
6. அஞ்சான்
7. அமுதக்கனல்
8. அலையொலி
9. அமுதமொழி
10. அம்மூவன் (புலவர் பெயர்)


















தொடர்ந்து எழுதுகிறேன்....


படத்திலுள்ள குழந்தை - நண்பர் கவின் அவர்களின் குழந்தை.