Thursday 6 April 2017

பேரழிவுகளின் பெருங்கதை- 1 (எங்கள் வீட்டுத் தையற்சிட்டு)

தையற்சிட்டு/Common tailorbird















இது எங்கள் வீட்டில் கூடு கட்டி முட்டை வைத்த தையற்சிட்டு (Common tailorbird). முட்டை மட்டும் தான் வைத்தது. குஞ்சு பொரிக்கவில்லை.

அம்மா பக்கத்து தோட்டத்து குப்பைக்குழியில் ஒரு கத்தரிச்செடியைக் கண்டதும் எடுத்து வந்து வீட்டி வளர்த்தார். செடி நன்கு காய்த்தது. எந்த உரமும், மருந்தும் இல்லாமல் இயற்கையாகவே நன்கு காய்த்தது அச்செடி. ஒரு நாள் அங்கு இந்த தையற்சிட்டு இணை அடிக்கடி வருவது கண்டு என்னவென்று பார்த்த போது அது கத்தரி செடியில் கூடு கட்டத் தொடங்கியது தெரிந்தது. அன்றிலிருந்து நானும் அம்மாவும் அதை கவனித்துக் கொண்டே இருந்தோம்.
அழகாக இரண்டு இலைகளை இணைத்துத் தைத்து கூடு கட்டும், அதற்குள் பஞ்சு போன்ற மென்மையான பொருட்களை வைத்து பின்பு அதன் மேல் முட்டையிடும். கூடு கட்டி முடித்து முட்டையிடுவதையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தோம். குஞ்சு பொரித்து அதனை தாய்க் குருவி பறக்க பழக்கும் காட்சி அழகாய் இருக்கும் என்று வலைப்பூ ஒன்றில் படித்திருந்தேன், அதனால் அந்த நாளிற்கு ஆவலாய் காத்திருந்தோம். ஆனால் ஒரு நாள் காலை பார்த்த போது கூடிருந்த அந்த இலைகள் பழுத்து கீழே விழுந்துவிட்டுருந்தன. அதோடு உள்ளிருந்த முட்டையும் பரலோகம் போய்விட்டது. மிகுந்த வருத்தம்.

தையற்சிட்டு/Common tailorbird
(கூடு கட்ட பொருள் கொண்டு வருகிறது/it brings nesting material)

















சில வாரங்கள் கழித்து அதே இணை மீண்டும் கூடு கட்டியது. முன்னர் நடந்த அதே கதை தான். இம்முறையும் குஞ்சு வெளிய வரும் நாட்களுக்கு முன் கூடு விழுந்திருந்தது. அம்மா புலம்பிவிட்டு போகிற போக்கில் " அறிவு கெட்ட குருவி. பழுத்து விழப்போகிற இலையிலையா கூடு வைக்கும். தெரிய வேணாம் அதுக்கு" என்று திட்டிவிட்டு சென்றார். அடுத்த முறை அது கூடு வைக்கும் போது எந்த இலையில் வைக்கிறது என்று பார்த்த போது அது நன்றாக இருந்த இலையில் தான் வைத்திருந்தது தெரிந்தது. ஆனாலும் அது குஞ்சு பொரிக்கும் முன் இலை பழுத்துவிட்டது.

மேற்படி நான் படித்த செய்திகளை கருத்தில் கொண்டு பார்த்த போது எனக்கு புலப்பட்டது இது தான்:
பொதுவாக கத்தரிச்செடியில் தையிற்சிட்டு கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் என்பது கேள்விப்பட்டது. ஆக இந்தக் கத்தரிச்செடியில் மட்டும் குஞ்சு பொரிக்கும் முன் இலை கீழே விழுந்ததற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இது ஏதேனும் அதிக விளைச்சல் தரும் கலப்பின கத்தரி வித்தாக இருக்க வேண்டும். சீக்கிரம் காய்த்து சீக்கிரம் அழிந்து போகும் வித்தாக இருக்க வேண்டும். எந்தப் பறவையும் விலங்கும் சரி ஏதோ போகிற போக்கில் இனப்பெருக்கம் செய்துவிட்டுப் போவதில்லை. கடலாமைகள் இனப்பெருக்கம் செய்ய பல்லாயிரம் கல்தொலைவுகள் பயணிக்கின்றன. எங்கு அவை பொரித்து வெளியே வந்தனவோ அதே கடற்கரை நோக்கி இனப்பெருக்கம் செய்யப் பயணிக்கின்றன. வேறு பறவையின் கூட்டில் முட்டையிடும் குயில் போன்ற பறவைகளிடமும் இப்படி தான் வெளிவந்த அதே பறவையினத்தின் கூட்டில் சென்று முட்டையிடும் பண்பைக் காண முடியும். இதை அறிவியற் காரணம் கொண்டும் நிருவியிருக்கிறார்கள்.

தக்கது பிழைக்கும். அதே தான் இந்த தையற்சிட்டின் கதையும். சில காலம் முன்பு வரை, நம்மூர் கத்தரிச்செடியின் இலை செழுத்திருந்து பின்னர் பழுத்து விழும் காலமானது தையற் சிட்டு கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்தை ஒத்திருக்க வேண்டும். தங்களின் அடைக்காலத்திற்கு ஒத்த தன்மை கொண்டிருந்ததால் தான் கத்தரிச்செடியில் கூடு வைப்பதை வழக்கமாகி தையற்சிட்டுகள் கொண்டிருக்கின்றன. ஒருவேளை இப்படி காலம் ஒத்துப் போகாமல் சீக்கிரம் பழுத்து விழும் வேறொரு செடியில் கூடி கட்டினால் குஞ்சு வெளி வருவதற்குள் கூடு விழுந்துவிடும். அப்படி தவறான செடியினத்தைத் தேர்ந்தெடுத்த சிட்டின் வாரிசுகள் பெருகா. சரியான செடியைத் தேர்ந்தெடுத்த சிட்டுகளின் வாரிசுகள் பெருகும். அவை மீண்டும் அந்த சரியான செடியிலேயே சென்று முட்டையிடும்.
இப்படி தையற்சிட்டு சரியான செடி என்று கண்டு (அவை சிந்தித்து அதை உணரவில்லை) கூடு கட்டி வந்த கத்தரிச்செடியின் இலைகள் இன்று அவை கூடு கட்டும் முன்பே பழுத்துவிடுகின்றன. இதற்குக் காரணம் மனிதன் கொண்டு வந்த மாற்றங்கள் தான். விளைச்சல் அதிகம் வேண்டி அவன் செய்த மாற்றத்தை இன்னும் உணரவில்லை அச்சிட்டுகள். தக்கது தான் பிழைக்கும். அச்சிட்டுகள் இனி அற்றுப்போக வாய்ப்பிருக்கிறது.

நீங்கள் கேட்கலாம் " தக்கது தானே பிழைக்கும். அக்குருவி அழிந்து போனால் அதன் தவறு தானே?". இங்கு தான் சிக்கல். இயற்கையாக நிர்ணயிக்கப் பட வேண்டிய விதிகளை மனிதன் மாற்றுகின்றான். சிக்கல் அது மட்டுமல்ல. மாற்றம் மிக வேகமாய் நிகழ்கிறது, அந்த வேகத்திற்கு இச்சிட்டுகளால் மட்டுமல்ல நிறைய உயிரனங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. அவை பரிணமிக்கத் தேவையான காலவெளியை மனிதன் செய்யும் மாற்றங்கள் தருவதில்லை. கூட இட வெளியையும். வேறு ஏதேனும் செடியில் முட்டை வைக்கவும் அச்சிட்டுக்கு வாய்ப்பு இல்லாமல் செய்துவிட்டோம். "இதெல்லாம் புல், புதர். இதெல்லாம் நமக்கு விளைச்சல் தராது" என்று அழித்துவிட்டோம். விதிப்படி அவை அழிந்து போக நேரும். சில வாரங்களிலேயே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கக் கூடிய இச்சிட்டுகளுக்கே இந்த நிலையென்றால், நீண்ட பேருகாலம் கொண்ட யானைகளை நினைத்துப் பாருங்கள். இனப்பெருக்கம் செய்வதற்கே இவ்வளவு இடையூறு. குட்டிகளும், குஞ்சுகளும் வெளியே வந்து சந்திக்கும் (மனிதன் ஏற்படுத்தி வைத்த) இடையூறுகள் ஏராளம். நமது வளர்ச்சியின் பாதையில் ஏகப்பட்ட உயிர் இனங்களை அழித்து விட்டுச் செல்கிறோம் என்பதை புரிந்து கொள்வோம்.

பி.கு:
மேலே சொன்னது அனைத்தும் நான் படித்தது பார்த்தது வைத்து நானே சொந்தமாக நிறுவியது. கத்தரி-தையற்சிட்டு இடையேயான உறவு பற்றி வேறு ஏதேனும் தகவலோ அறிவியற் கட்டுரைகளோ இருந்தால் அறியக் கொடுக்கவும். நன்றி.

படங்கள்:
1. தாராபுரத்தில் எனது வீட்டில் நான் எடுத்த தையற்சிட்டு. (முருங்கை மரத்தில் இருக்கும் போது எடுத்த படம்) 25-12-2015
2. தாராபுரத்தில் எனது வீட்டில் நான் எடுத்த தையற்சிட்டு. (கூடு கட்ட பொருள் கொண்டு வரும் போது எடுத்த படம்) 12-07-2015