Thursday 7 March 2019

நவீன இலக்கியங்களில் பெண்கள்

பெண்கள் நாளன்று இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.  தொடர்ந்து மீமிகைக் கற்பனை கொண்ட நூல்களை வாசித்து வருகின்றேன். அவற்றில் பெண்களுக்கான இடமென்பது மிகக்குறைவு, அப்படியே இருந்தாலும் ஒரிரு பெண்களை மட்டுமே அவை கொண்டாடுகின்றன. நான் இங்கு சொல்ல வருவது அதையும் தாண்டியது.
J.R.R Tolkien இன் நூல்களில் (The Lord of Rings) பெண்களே இல்லை என்பதால் ஒதுக்கிவிடலாம் (ஐயோ இரண்டு மூன்று பேர் இருக்கிறார்களே என்று சொல்ல வேண்டும், அவர்கள் இருந்தும் கதைக்கு என்ன பயன்).
J.K. Rowling இன் நூலில் (Harry Potter) பெண்களுக்கு அதிக இடமுண்டு. ஆனால் கதையில் இரண்டு தோழிகளுக்கோ சகோதரிகளுக்கோ இடையேயான அன்பை, இணக்கத்தை அவர் காட்சிப்படுத்தவே இல்லை. தோழர்கள், சகோதரர்கள் என்றே தான் கதை முழுவதும் பரவிக் கிடக்கும். அதற்கும் மேலே சகோதரிகள் சண்டையிட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். Lily & Petunia, Lestrange சகோதரிகள் என பெண்கள் ஒருவருக்கு ஒருவர் பெரும்பாலும் எதிரணியிலேயே நிற்பார்கள். ஆனால் ஆண்களை மட்டும் கூட்டமாக இயங்கவல்லவர்களாகவும், சகோதரத்துவத்தைப் போற்றுபவர்களாகவுமே காட்டியிருப்பார்கள்.

George.R.R. Martin இன் நூல்களில் பெண்களுக்கு அதிக இடமுண்டும். (A song of Ice and Fire aka Game of Thrones) அனைத்து வகையான பெண்களும் இருப்பார்கள். ஆனாலும் அவர் கதையிலும் மேலே சொன்ன சிக்கல் சிலவிடங்களில் உண்டு தான். சகோதரிகளுக்குள் இணக்கம் இருக்காது, தோழிகளுக்கான இடமே இல்லை. இந்தக் கதை அமைந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு நிரந்தரத் தோழிகள் கிடைக்க மாட்டார்கள் தான், பெண்கள் எப்படி அதை இழக்கிறார்கள் என்ற காட்சிப்படுத்துவதால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சகோதரிகளிக்கு இடையேயான இணக்கம் ஏன் காட்டப்படவில்லை. Oberyn Martell இன் மகள்கள் இணக்கமாகவும், சேர்ந்து செயல்படுவது போலவும் தான் காட்சிகள் இருக்கும், ஐந்தாவது நூலில் தான் அவர்கள் கதை வருவதால் அடுத்த இரு நூல்கள் வெளி வந்ததும் படித்துவிட்டுத் தான் அதைப் பற்றி மேலே சொல்ல முடியும். தொலைக்காட்சித் தொடர் அவர்கள் கதையை ஓரங்கட்டிவிட்டது, பெண்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் இருக்கும் காட்சிகளே முக்கியத்துவம் பெற்றது.

Ursula Kroeber Le Guin இன் நூல்களில் பெண்கள் வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள், ஆனாலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கான இணக்கம் என்பது இடம்பெறவில்லை.

எனக்குத் தெரிந்து பெண்கள் சகோதரிகளாகவும், ஒருவரை ஒருவர் நம்புபவர்களாகவும், ஒருவருக்கு ஒருவர் உதவுபவர்களாகவும் காட்டப்பட்டது Robert Jordan இன் The wheel of time நூல்களில் மட்டும் தான்.

இவற்றை எழுதக்காரணம் ஒன்றே ஒன்று தான். மீண்டும் மீண்டும் கதைகளானாலும் சரி நாள்தோறும் நடக்கும் சிறு உரையாடல்களானாலும் சரி பெண்களுக்கு இடையிலான நட்பையும், சகோதரித்துவத்தையும்(!) ஓரங்கட்டிவதையும் சில சமயம் எள்ளி நகையாடுவதையும் பார்க்க முடியும். இரண்டு பெண்கள் சேர்ந்தாலே குழாயடிச் சண்டை போடுவார்கள், புறம் பேசுபவர்கள், இணக்கமாக இருக்க மாட்டார்கள், 'என்னத்த பெருசா' என்பன போன்ற கருத்தாக்கங்களை மீண்டும் மீண்டும் பரப்பி பெண்கள் சகோதரிகளாகவும் தோழிகளாகவும் இணைந்து செயல்படவிடாமல் பார்த்துக் கொள்வது ஏற்புடையது அல்ல. இவற்றை நாம் கடந்தே ஆக வேண்டும்.

பெண்களுக்கு தோளுக்கு தோளாக நிற்கும் அனைத்துப் பெண்களுக்கும் என் பெண்கள் தின நல்வாழ்த்துகள் ❤️❤️