Friday, 5 January 2018

முசுண்டை (பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள்)-3

இலக்கியங்கள் பாடும் முசுண்டை மலர்.


சங்க இலக்கியங்களில் முசுண்டை என்னும் மலர் பற்றிய குறிப்புகள் பரவிக் கிடக்கின்றன. ஆனாலும் இப்பொழுது பேச்சுவழக்கில் முசுண்டை என்னும் சொல் இருப்பதாய்த் தெரியவில்லை. வட்டார வழக்கில் மிஷ்டை /மிசுட்டை/ முசுட்டை என்று அறியப்படும் மலரே முசுண்டை என்பது என் துணிபு.

"அகலிரு விசும்பி னாஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை- மலைபடுகடாம்-100"

இருண்ட வானத்தில் பூக்கும் விண்மீன் போல முசுண்டை மலர் கொடியினில் பூத்திருக்கிறது என்கிறது மலைபடுகடாம். மிசுட்டை மலர் பூத்திருப்பதும் அதே போலத் தான் இருக்கும். மேலும் இங்கு இன்னொன்றும் நோக்கத்தக்கது. மலைபடுகடாம் நன்னன் என்னும் மன்னனையும் அவன் ஆண்ட நவிர மலை என்னும் நாட்டையும் அதன் மக்களைப் பற்றியும் பாடும் நூல். இன்றும் ஒடிசா மாநிலத்தின் கந்தமாள் பகுதிகளில் வாழும் கந்தா/கொந்தா(வேறு சில இனக்குழுக்களும் கூட) மலைவாழ் மக்களின் (திராவிட இனத்தைச்சேர்ந்த பழங்குடியினர்) உணவில் முசுண்டை (Rivea hypocrateriformis) இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

விண்மீனோடு முசுண்டை இன்னும் சில பாடல்களில் கூட ஒப்புமைபடுத்தப்பட்டுள்ளது.
"கரிமுகிழ் முசுண்டை பொதி அவிழ் வான்பூ விசும்பு அணி மீனின் புதல் பிதல் அணிய - அகநானூறு 235-9"


இருளில் பூத்த விண்மீன் போல இருக்கும் முசுண்டை


விக்கியிலும் சில வலைப்பூக்களிலும் Operculina turpethum என்னும் மலரின் படத்தை முசுண்டை என பதிவிடப்பட்டுள்ளது. இது தவறு என்பதற்கு சில காரணங்கள் உண்டு.

Operculina turpethum, Morning glory என்னும் குடும்பத்தை சேர்ந்தது. அக்குடும்பத்தில் பெரும்பாகும் காலையில் மலரும் செடிகள் தான் இருக்கின்றன. ஆனால் முசுண்டையோ மாலையில் மலர்வது. முசுண்டை மாலையில் மலர்வது என்று எங்கும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. சில இடங்களில் முசுண்டை பீர்க்கையோடும் முல்லையோடும் மலர்ந்து கிடந்தது என்ற குறிப்புகள் கிடைக்கின்றன. அதனால் இதுவும் மாலையில் மலரும் செடி என்பது புலப்படுகிறது.

"புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப் பொன்போல் பீரமொடு புதல் புதல் மலர - நெடுநல்வாடை 13"

"வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து கரிமுகிழ் முசுண்டை முல்லைத் தாஅம் - மதுரைக்காஞ்சி 281"

வீட்டு முற்றத்தில் முசுண்டை படர்ந்து நிழல் தந்ததாக புறநானூறு கூறுகிறது.
"முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல் - புறநானூறு - 320"

(இதில் குறிப்பிடப்படும் முஞ்ஞை பற்றி தனியே எழுதுகிறேன்)

இன்றும் வேலிகளில் முசுண்டைக் கொடி கார்காலத்தில் பூத்துக்குலுங்குவதைப் பார்க்கலாம்.


-சுபா

Picture Courtesy: Kaleeswari Sivasubramanian.

Thursday, 7 December 2017

சங்க இலக்கியக் காதல் - புதரும் குருகும் காதலர்களும்

தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். தலைவன் திரும்பத் தலைவியைப் பார்க்க வரவில்லை. புலம்பத் தொடங்குகிறாள் தலைவி. "ஐயோ. சாட்சிக்கு கூட யாரும் இல்லையே. அன்னைக்கு ஒரு குருகு பார்த்துச்சே. அதுக்கு தெரியும் நாங்க காதலிச்சது" என்பாள். ஆமாங்க பள்ளியில் படித்த கபிலரின் பாடல் தான்.

குறுந்தொகை 25:

யாரு மில்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தா ளன்ன சிறுபசுங் காலஒழுகுநீ ராரல் பார்க்கும்குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.

குறிஞ்சி - தலைவி கூற்று
கூற்று: வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பாடியவர்: கபிலர்

விளக்கம்:
அன்று வேறு யாருமே இல்லை. அவன் மட்டும் தான் இருந்தான்,  கள்வனும் அவன் தான் ( குற்றம் சாட்டப்பட்டவன்). அவன் பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன். நாங்கள் மணந்த அன்று ஒரு குருகு மட்டுமே இருந்தது.

"அதுக்கு இப்ப என்ன? அதான் பள்ளிக்கூடத்தில் படிச்சது தானே" என்கிறீர்களா?
ஆம். இந்தப் பாடலைப் படிக்கும் போது பள்ளியில் என் மனக்கண் முன் விரிந்த காட்சி இப்படி இருக்கும் : பிரபலப் பத்திரிக்கைகளில் வரும் அந்தக் காலத் தலைவிகளைப் போல இந்தத் தலைவியும் ஓர் தடாகத்தின் அருகில் அமைந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருப்பாள். நீரின் அருகே ஓர் குருகோ கொக்கோ நாரையோ நிற்கும், நீரில் இரண்டு தாமரை இருக்கும். மற்றபடி அது வால்பேப்பர் படம் போல பளிச்சென்று இருக்கும்.

ஆனால் இன்று அந்தப் பாடலைப் படிக்கும் போது கண்முன் விரியும் காட்சி வேறு.

ஏன் குருகுகள்? கிளியோ மயிலோ குயிலோ சாட்சிக்கு வராதா? இல்லை அவர்கள் சந்தித்த இடங்களில் அப்பறவைகள் இல்லையா?
பொதுவாக இந்தக் குருகுகள் புதர்களுக்கு இடையே இருக்கும், காண்பதற்கு அரிதான இடத்தில் மறைந்து இருக்கும். நிற்க. இப்பொழுது பாட்டை நோக்குங்கள். அன்றைய தலைவனும் தலைவியும் இப்படி யாரும் இல்லா புதர்கள் நிறைந்த பகுதிகளில் (புதர்களிலும்) தான் சந்தித்திருக்கிறார்கள்.
இன்னொன்று குருகுகள் எப்படி மறைந்து மறைந்து பயந்து பயந்து வாழ்கிறதோ தலைவனும் தலைவியும் அப்படித் தான் மறைந்து பயந்து காதலித்திருக்கிறார்கள். அதனால் தான் அவளுக்கு குருகின் நினைவு வருகிறது.

திடீரென்று ஏனோ வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்த காதல் புறாக்களின் நினைவு வருகிறது. 2000 வருடங்களாக எத்தனை காதலர்களை வெள்ளோட்டுக் குளம் பார்த்திருக்கும்.

#சங்கஇலக்கியக்காதல்
#அன்றும்இன்றும்

Tuesday, 28 November 2017

Lyanna Stark & Rhaegar Targaryen- சங்க இலக்கியத்தோடு சேர்த்த புனைவுக்காதல் கதை

(A Song of Ice and Fire என்ற நூலில் வரும் நிகழ்வை சங்க இலக்கியக் காதலோடு சேர்த்து ஓர் புனைவு. ஆமாங்க அதான் Fanfiction.)

அவன் அன்று தான் கண்ட அழகியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். பேரழகிகளுக்கென வரையறுக்கப்பட்டவை எதுவுமே இல்லாத ஓர் பேரழகி, காட்டுரோஜா இல்லை இல்லை பொங்கி வரும் காட்டாறு. கூதிர் காலம் மட்டுமே கொண்ட வடப்புலத்தின் முல்லை நிலத் தலைவி அவள். இவன் நெருப்பு கக்கும் டிராகன் வம்சம், இருந்தும் என்ன. அந்தக் குளிர் நாட்டு ஓநாய்க்குட்டி அவனை ஓர் நொடியில் ஆட்கொண்டுவிட்டாள்.

Lyanna Stark

அவன் யாழ் எடுத்து மீட்டளானான். நேற்றும் யாழ் மீட்டும் போது தானே அந்தப் பேரழகி இவன் பாடலுக்கு மனமுறுகி கண்ணீர் வடித்தாள். யாழ் மீட்டிக் கொண்டே மனதில் வந்த பாவை பாவையை நினைத்துப் பாடத் தொடங்கினான்.

"மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே."


'தூய அருவியைப் போன்ற பல வெள்ளை மலர்கள் - இங்கு அவள் நாட்டில் பொழியும் பனியே வெள்ளைமலர்- பூக்கின்ற நாட்டுத் தலைவனின் சிறிய பெண் இவள். தீயென இருந்த என்னை நீராய் வந்த அவள் ஒன்றும் இல்லாமல் செய்கிறாளே!' என்று எண்ணி எண்ணி யாழ் மீட்டினான்.

Rhaegar playing his Harp

அடடே! அவனுக்கும் அவளுக்கும் எவ்வளவு வேறுபாடு. அவன் தெற்கு அவளோ வடக்கு, அவன் சுட்டெரிக்கும் நெருப்பு அவளோ உறைய வைக்கும் கொடும்பனி, அவன் வார்த்த வெள்ளியைப் போன்ற முடியையும் நீலக் கண்களையும் கொண்ட தேவலோகத்து அழகைக் கொண்டவன், அவளோ கருங்கூந்தலும் கருவிழியும் கொண்ட மாந்தர் குலத்து அழகி. கனவிலும் சேர முடியாத இணை.

அவன் தான் பட்டத்து இளவரசன் ரேகார் தார்கேரியன் (Rhaegar Targaryen). இருந்தும் என்ன செய்ய. அவள் முல்லை நிலத் தலைவனின் மகள் இலயான்னா இசுடார்க்(Lyanna Stark). அவனது தந்தையின் பேரரசிற்கு உட்பட்டவர்கள் தான். ஆனாலும் தனியே குலப்பெருமை கொண்டவர்கள். 300 ஆண்டுகளுக்கு முன்பு டிராகன்கள் இருந்த காலத்தில் தன் மக்களைக் காப்பதற்காக அவளது முன்னோர் அவனது முன்னோரை மன்னனாக ஏற்றனர். இன்றும் அவளது அப்பா "ம்ம்" என்று ஒரு வார்த்தை சொன்னால் மறவர் கூட்டம் தலைநகருக்குப் படையெடுத்து வரும். அவளின் நாட்டைப் போலவே அவளுக்கும் அவனுக்குமான இடைவெளி கடக்க முடியாத கொடும்பாதை என்று நினைக்க நினைக்க இன்னும் அவள் அவனிடமிருந்து எட்டாத தூரத்திற்கு செல்வதாகவே அவனுக்குத் தோன்றியது. தன் நெஞ்சை நொந்து கொண்டே இன்னொரு பாட்டெடுத்துப் பாடலானான்.

"குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே." 

'கிழக்குக் கடலோரம் வாழும் பறக்க முடியாத நாரை மேற்குக் கடலில் வாழும் அயிரை மீனிற்கு ஆசைப்பட்டது போலல்லவா அவளை நான் அடைய நினைக்கும் ஆசையும்?' ஏங்கினான். 'நான் பறக்க முடியாத நாரை அல்ல. ஓர் டிராகன். அவள் வடக்கில் இருந்தால் என்ன ஒரு நொடியில் பறந்து சென்று கவர்ந்து வரத் தன்னால் முடியும்' என்று நெஞ்சிற்கு ஆறுதல் சொன்னான். ஆனாலும் கூடப் பறக்க அவள் தயாரா?

-தொடரும்.

..................................................................................................................................................................
Prince Rhaegar Targaryen was the eldest son and heir to King Aerys II Targaryen. His house Sigil is a three headed dragon and his house words are "Fire and blood". He is from South, a land which has Summer throughout the year.

Lyanna Stark was the only daughter of Rickard Stark. Her house Sigil is a running grey direwolf, on an ice-white field and her House words are "Winter is coming". She is from far North where it is always winter.

மூலக் கதையில் ரேகார் யாழ் மீட்டுவதில் வல்லவன். அவன் யாழ் மீட்டுவது கண்டு மயங்காதவர் யாரும் இல்லை. இலயான்னாவும் அதற்கு விதிவிலக்கல்ல. 
இங்கு சங்க இலக்கியப் பாடல்கள் அவர்கள் இருவருக்கும் எவ்வளவு அழகாய் பொருந்தி வருகிறது பாருங்கள். அவள் நீர் (பனி), அவன் தீ. அவர்களுக்கு இடையையேயான இடைவெளியை அந்தக் கதைக்கு ஏற்றாற் போன்ற உவமைகளோடே சங்க இலக்கியப் பாடல்கள் அமைந்திருப்பது படிக்கப் படிக்க எவ்வளவு உவப்பை ஊட்டுகின்றது. 

பாடல் 1: 
குறுந்தொகை 95

மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.

தலைவன் கூற்று.
பாடியவர்: கபிலர்.
உரை:
தோழனே, பெரிய மலையிலிருந்து விழும் தூய வெண்மையான அருவி,  பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கின்ற, பல மலர்களையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரிய தோளையுடைய இளம்பெண்ணின் நீரைப் போன்ற மென்மை, தீயைப் போன்ற என் வலிமையைக் இழக்கச் செய்தது.

பாடல் 2:
குறுந்தொகை 128

குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.

தலைவன் கூற்று.
பாடியவர்: பரணர்.
உரை: நெஞ்சே! கிழக்குக் கடலலைக்குப் பக்கத்தில் இருந்த, சிறகை இழந்த நாரை, திண்ணிய தேரையுடைய சேரமன்னனாகிய பொறையனது மேற்குக் கடற்கரையில் உள்ள தொண்டி நகரின் ஆறு கடலோடு கலக்கும் துறைமுகத்தில் உள்ள அயிரைமீனாகிய அரிய உணவைப் பெறுவதற்குத் தலையை மேலே தூக்கிப் பார்ப்பது போல, தொலைதூரத்தில் உள்ளவளும் எளிதில் அடைய முடியாத  அரியவளுமாகிய தலைவியை நீ அடைய நினைக்கிறாய். நீ துன்புறுவதற்கான ஊழ்வினையைப் பெற்றுள்ளாய்! அதனால்தான், இவ்வாறு நீ வருந்துகிறாய்.


-சுபா

படங்கள்: இணையம்
செய்யுள் உரை: முனைவர். பிரபாகரன்.
https://www.andrill.in/

Wednesday, 22 November 2017

சங்க இலக்கியக் காதல்- தேடல்

அவன்: Heatset காணோம் தேடித்தானு சொன்னேனே! கிடைச்சுதா?
அவள்: அதுவா? தரையை உடைத்துக் கொண்டும் புகுந்திருக்காது, சுவற்றை ஊடுருவியும் போயிருக்காது, காலதர் வழி வெளியேவும் குதித்திருக்காது. வீட்டில் ஒவ்வொரு அங்குலமாய் நீங்கள் தேடினால் கிடைக்காமலா போய்விடும்?
அவன்: கவித கவித! ஆமாம் இந்த எங்கிருந்து சுட்ட? குறுந்தொகையா?
அவள்: ஆமாம்! எப்படி சரியா சொன்ன?
அவன்: இது கூடத் தெரியாதா? நீ மட்டுந்தான் குறுந்தொகையெல்லாம் படிச்சிருக்கியா? நாங்கெல்லாம் படிக்க மாட்டோமா என்ன?

அவள்: பார்ரா! சரி அது என்ன பாட்டு?
அவன்: இப்படி பொசுக்குனு கேட்டா? மறந்திடுச்சு. 400 பாட்டையுமா மானப்பாடம் செஞ்சு வைக்க முடியும்? எங்க ஐம்பதாவது பாட்டு என்னனு நீ சொல்லு பார்ப்போம்.
அவள்: எனக்குத் தெரியாது சாமி. நீங்க தான் ஏதோ படிச்சேனு சொன்னீங்க. சரி பாட்டோட பொருளாச்சும் சொல்லு.
அவன்: ஒரு நாள் கணவன் எதையோ தேடிட்டு இருந்தானாம். அப்ப தலைவிய கூப்பிட்டானாம். உடனே அவளும் தண்ணீ சேந்தறத விட்டுட்டு ஓடி வந்து அதைத் தேடிக்கொடுத்தாளாம். அந்த வாளியோ அவ விட்டுட்டு போன இடத்துலயே இருந்துச்சாம். அந்தக் கதை தானே?
அவள்: வாளிய கிணத்து மேட்டுல விட்டுட்டு போனா அங்கயே தான் இருக்கும். ஆமாம் நான் சொன்ன பொருளுக்கும் இந்தக் கதைக்கு என்ன சம்பந்தம்.
அவன்: சம்பந்தப்படுத்திக்கிட்டேன். அப்படி ஓடி வந்தவ தேடும் போது கணவனுக்கு போர் அடிக்கக் கூடாதுனு ஒரு பாட்டு பாடுனா. அந்தப் பாட்டு தான் இது.

அவள்: அடப்பாவி! வள்ளுவன் வாசுகி கதை, வெள்ளிவிதீயார் கதையெல்லாம் சேர்த்து புதுக் கதை சொல்லிட்டு இருக்கியே!
அவன்: அடப்போடி! நீ தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு, தமிழனின் மூழ்கிப் போன வரலாறு அப்படினு எல்லாம் உலா வருகிற கதையெல்லாம் படிச்சது இல்லையா? போன தடவ குறுந்தொகை பாட்டு விளாக்கம் எழுதுன தானே? எத்தனை பேர் படிச்சாங்க?
அவள்: நூறு பேர் இருக்கும்.
அவன்: தெரியுமே! பத விளக்கம், அருஞ்சொற்பொருள் அப்படி இப்படினு மொக்கைய போட்டுருப்ப. நான் சொல்ற மாதிரி செய். இந்த மாதிரி நாலு கதைய சேர்த்து "தெரியுமா உங்களுக்கு! தமிழனாய் இருந்தால் சேர் செய்யவும்" அந்த மாதிரி எதாச்சும் எழுதி, இடையில உன் குறுந்தொகை விளக்கத்தை சேர்த்து எழுது. அப்புறம் பார் எத்தனை பேர் படிக்கறாங்கனு.
அவள்: (சிரித்துவிட்டு) சரி சாமி. இனிமேல் அப்படியே செய்கிறேன்!

அவன்: சரி சரி. அது என்ன பாட்டு? அந்த அம்மா எதை தேடுனாங்க. ஊசியா நூலா?
அவள்: கணவன்.
அவன்: என்னது கணவனையா? மேல சொல்லு. நில்லு நில்லு. கூட ஒரு பின்னணி இசை வச்சுருப்பியே. அதை மொதல்ல பாடு.
அவள்: "கண்கள் இரண்டும் இனி உம்மைக் கண்டு பேசுமோ... காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ"
அவன்: ரொம்ப பழையா பாட்டா இருக்கும் போல. என்ன படம்.
அவள்: மன்னாதி மன்னன். அச்சம் என்பது மடமையடா பாட்டு வருமே அந்தப் படம்.
அவன்: ஓ!

அவள்: இந்தப் பாட்டுலையும் கணவனைக் காணாத அந்த அம்மா எப்படி எல்லாம் தேடுவேன்னு பாடியிருப்பாங்க. அதே போலத் தான் குறுந்தொகைல வெள்ளிவீதியாரும் இந்தப்பாட்டுல தன் கணவனைத் தேடுனதைப் பற்றி எழுதியிருப்பாங்க.
"என் தலைவன் எங்கே சென்றிருப்பான். நிலத்தைத் தோண்டி உள்ளேயும் புகுந்திருக்க முடியாது. வானத்தைத் தாண்டி வெளியேயும் சென்றிருக்க முடியாது. கடலைக் காலாலும் கடந்திருக்க முடியாது. அப்படியென்றால் ஒவ்வொரு நாடாக, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊராக, வீடு வீடாகத் தேடினால் கிடைத்துவிடுவான் தானே?" அப்படினு ரொம்ப அப்பாவியா எழுதியிருக்காங்க.

அவன்: "தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளைத் தேடிப் பார்பதென்று மெய் தேடல் தொடங்கியதே!" பாவம். இப்பவா இருந்த "காணவில்லை"நு முகநூலில் ஒரு பதிவு போட்டு தேடலாம். அப்ப அதெல்லாம் முடியாதே. அவங்க கணவரைத் தான் தேடுனாங்களா? சும்மா கவிதைக்காக எழுதியிருக்க மாட்டாங்களா. கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கே.
அவள்: அவங்க கணவனைத் தேடி அலைந்ததா அகநானூற்றிலையும் பாடல்கள் இருக்கு. ஆதிமந்தி மாதிரி இவங்களும் கணவனைத் தேடி அலைந்திருக்காங்க. "கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே" அப்படி பாடிட்டே கணவனைத் தேடி அலைந்த பெண்கள் இருக்கத் தான் செய்யுறாங்க.
அவன்: ம்ம்ம். அவங்க கொண்டது மட்டுந்தான் காதலா என்ன? கணவன் தொலைத்த headset தேடி அலைந்து கண்டுபிடித்த பெண்களும் இருக்கிறார்கள். அவர்களின் காதல் இன்னும் மேன்மையானது. தெரியாதா உனக்கு?
அவள்: ???

பாடல்: குறுந்தொகை 130

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே. 

பாடியவர்: வெள்ளிவீதியார்
கூற்று – 1: பிரிவிடை அழிந்த (வருந்திய) தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. ”நீ அவர் பிரிந்தரென்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன். நின் ஆற்றாமை நீங்குக”, எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

கூற்று – 2: தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையாற் கூறியதூஉமாம்.

விளக்கம்:
இப்பாடல் எளிய தமிழில் இன்றும் நாம் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தமையால் பதவுரையையும் செய்யுள் விளக்கமும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மன்னாதி மன்னன் படபாட்டுக்கும் இதுக்கும் இன்னொரு தொடர்பு கூட இருக்கிறது. தூது போகவா என்று கேட்கும் தோழிக்கு தலைவி சொல்லும் பதில் தான் இந்தப் பாடல். "சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்" என்று வருகிற வரிகளை இந்தப் பாட்டின் தலைவி சொல்லாமல் மனதிற்குள் குமுறும் வரிகளாய் இட்டுக் கேளுங்களேன்! " எங்க நீ தூது போறேன்னு தான் சொல்லுற. ஆனா சேதி மட்டுந்தான் சொல்ற. எல்லாரும் இப்படித் தான்." என்று பொருந்துவதாகவே வரும்.

சுபா

Wednesday, 8 November 2017

ஆருடம்-ஆரூடம் தென் அமெரிக்க பழங்குடியினரின் சொல்லும் தமிழ்ச்சொல்லும்

எக்குவடோர்(Ecuador) பெரு பகுதிகளில் வாழும் தென் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒன்று சூவார் (Shuar). அம்மக்களிடையே ஓர் நம்பிக்கை உண்டு. அவர்களை இறைவழிபாடே அற்ற அரக்கர்கர்கள் என்று ஐரோப்பியர்கள் நினைத்தார்கள். ஆனால் அம்மக்களின் நம்பிக்கை காடுகளைவிட்டு வெகுதொலைவில் வாழும் நகரவாசிகளால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

அவர்கள் ஓர் ஆன்மா(Spirit) இருப்பதாகக் கருதுகிறார்கள். எப்படித் தமிழின் அறம் என்ற சொல்லையும், வடமொழியின் தர்மம் என்ற சொல்லையும் அச்சொற்களோடு சேர்ந்து வரும் கருத்தியலையும் பிறமொழிகளில் அப்படியே மொழிபெயர்க்க முடியாதோ மொழிபெயர்த்தாலும் அதன் முழுப்பொருள் விளங்கும்படி சொல்லவியலாதோ அது போலத் தான் அவர்களது இந்த நம்பிக்கையும். ஆன்மா, Spirit என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம் ஆனால் அம்மக்கள் புரிந்துகொள்ளும் அதே பொருளிலும், நம்பிக்கையிலும், கருத்தியலிலும் அதனை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது.

இந்தக் கடவுளுக்கு நிகரான ஒன்றை நாம் ஒருவாறு புரிந்துகொள்ள முயலலாம். அதற்கு மனித உருவும் இல்லை, அது மனிதனும் இல்லை. அதுவே காட்டை இணைக்கும், காக்கும் புள்ளி என நம்புகிறார்கள். மனிதன், அனகோண்டா, யாகுவார் என அனைத்திலும் அந்த சக்தி நிறைந்திருக்கிறது என்கிறார்கள். கிட்டத்தட்ட நமது இயக்கி (இசக்கி) வழிபாடு போல. தமிழரிடத்தே இருக்கும் பெண்தெய்வ வழிபாடும், முனியடித்தல் போன்ற நம்பிக்கைகளுக்கும் இணையான ஒன்று இது.

இதனைத் தேடி அலைந்து அதன் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது அவர்களது வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அப்படிப் பெற்றால் தான் அந்தக் காட்டில் தங்களால் உயிரோடு இருக்க முடியும், அதுவே தங்களைக் காக்கும், இறப்பிற்கு பின்னும் அதனுடையே தான் கலக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அனகோண்டா, யாகுவார் என எல்லாமே அது தான் என்கிறார்கள். சரி எப்படி அதனைத் தேடுகிறார்கள் என்று பார்த்தால் பல வழிகளில் தேடல் நடக்கிறது.

சரி அதற்கென்ன இப்பொழுது என்கிறீர்களா? அந்த ஆற்றலின் ஆன்மாவின் இயக்கத்தின் பெயர் ஆருடம். ஆங்கிலத்தில் இப்படி இருந்தாலும் அவர்களின் மூல மொழியின் பலுக்கலானது ஏறுடம் என்பதைப் போன்று இருக்கின்றது. (ஆங்கிலத்தில் றகரமில்லை என்பதனால் அவர்கள் ஆருடம் என்பது போல ஒலிக்கிறார்கள்) ஆ, ஏ என்ற இரு உச்சரிப்புக்கு இடையே அமைந்த ஒன்று.

இதை எப்படிக் கண்டடைகிறார்கள் தெரியுமா? காட்சிகளின் மூலம். ஆமாம் ஆருடம் காட்சியளிக்கிறான். வயது வந்த மகனை புயல் நாளில் தந்தை ஆருடத்தைக் கண்டு (உணர்ந்து) அதனிடமிருந்து ஆற்றலைப் பெறச்சொல்கிறார். மகனும் ஈட்டியோடு செல்கிறேன், ஆருடம் வந்தால் அதன் முன் எதிர்த்து அஞ்சாதவனாய் நிற்கிறான், அதன் ஆற்றலைப் பெருகிறான். அன்று அதனை எதிர்த்து நில்லாமல் விட்டால் அவனுக்கு அழிவு தான் என நம்புகிறார்கள். இது கிட்டத்தட்ட நமது ஊரில் நாம் கேள்விப்படும் முனியடித்தல் போல இருக்கிறதல்லவா?

சிலர் ஓர் அருவிக்கு சென்று அங்கு சில செடிகளை உண்டு பிறகு ஆருடத்தின் காட்சிக்காக காத்திருக்கிறார்கள். ஐயவுசுக்கா சாமான் பற்றி எல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதன் மூலமும் காட்சிகள் காணக்கிடைக்கிறது அவர்களுக்கு. இந்த செயலினை ஏற்றம் என்றே சொல்கிறார்கள். ஆருடனும் ஏறி வந்து காட்சிகளைத் தருகிறான். அந்தக் காட்சிகளே கூட ஆருடம் தான். பாம்புகளும் யகுவார்களும் இன்னும் பல காட்டோடு தொடர்புடைய காட்சிகளுமாய் வரும் அந்த ஆற்றலின் வெளிப்பாடே இந்த ஆருடம்.

தமிழில் இந்த ஆரூடம் என்னும் சொல்லுக்கு ஏறுயது என்றும் பொருள். இதுவொரு வகையான சோதிடம் தான். ஆனால் தொடக்கத்தில் எந்த வகையான கணிப்புகள் இதில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஏறி வந்து குறிப்புகள் தந்திருக்க வேண்டும், இல்லையேல் குறி கேட்டவர்கள் ஏறிச்சென்று குறி கேட்டிருக்க வேண்டும். ஆனால் எது ஏறி வந்தது, இல்லை எதில் ஏறிச்சென்றார்கள் என்ற தகவல்கள் எல்லாம் இல்லை. தமிழில் ஏறுதல் என்பதன் அடியில் பொருளில் பிறந்தது தான் ஆரூடம் என்று இராம்கி ஐயா அவர் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.பி.கு: எப்படி இந்த இரு சொற்களுக்கும் அவை நுட்பமாய் உணர்த்தும் பொருளுக்கும் தொடர்பிருக்கிறது என நான் அறியேன். ஞாலத்தின் முதல்மொழி தமிழ் என்று சொல்பவர்களுக்கு கொம்பு சீவி விடவும் நான் இதையெழுதவில்லை. தமிழின் சொற்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்துப் பொருளைக் கொணர்ந்து பிறமொழிச்சொற்களுக்கு பொருத்திக் காட்ட முடியும். அதை இங்கு இணைய வெளியில் பலரும் செய்கிறார்கள். நான் இங்கு அதைச் செய்யவில்லை. இருக்கும் சொல்லையும் அதன் பொருளையும் பின்புலத்தையும் அப்படியே கொடுத்திருக்கிறேன். அவ்வளவே!

http://agarathi.com/word/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
http://www.minelinks.com/ecuador/arutam_1.html
http://valavu.blogspot.in/2006/11/blog-post.html

சங்க இலக்கியக் காதல் - மோர்க்குழம்பு

சமையற்கட்டில் அவள் கையைக் கழுவிவிட்டு தன் ஆடையிலேயே கையைத் துடைக்கிறாள்.

அவன்: ஏய்! இது என்ன புதுப் பழக்கம். கழுவிட்டு வேற துணில தானே கையைத் துடைப்ப!
அவள்: புதுப்பழக்கமா? இது தான் நம்ம பாரம்பரியம். அவங்க அவங்க சமைச்சுட்டே கையை போட்டுருக்குற துணியில தான் துடைப்பாங்களாம். நான் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கேன். நம்ம முன்னோர் ஒன்னும் முட்டாள் இல்லைங்க.
அவன்: அடிப்பாவி! விட்ட நீ செஞ்ச தப்ப மறைக்க சங்க இலக்கியத்துலையே இதப்பத்தி பாடியிருக்காங்கனு சொல்லுவ போல.
அவள்: ஆமாம். சங்க இலக்கியத்துல பாட்டு இருக்கே!
அவன்: இதையெல்லாமா பாடியிருக்காங்க? அடிச்சுவிடு அடிச்சுவிடு!
அவள்: அட உண்மையா தான்.
அவன்: பாட்டை சொல்லு பார்ப்போம்.

அவள்: லா லா லா.. லாலா லா லா லா...
அவன்: ஏய்! சங்க இலக்கியப் பாட்டைப் பாட சொன்னா நீ என்ன சூரிய வம்சம் படப்பாட்டை பாடுற!
அவள்: என்ன அவசரம்? பின்னணி இசையோட ஆரம்பிக்கிறேன். அந்தப் படத்துல வந்த இட்லி உப்புமா காட்சி நியாபகம் இருக்கா?
அவன்: என்னது? அந்தக்காலத்துல இட்லி உப்புமா எல்லாம் செஞ்சாங்கனு மட்டும் சொல்லிடாத. என் சின்ன நெஞ்சு பிஞ்சு பிஞ்சு உடைஞ்சு போயிடும்.
அவள்: (சிரித்துவிட்டு) இல்ல, இல்ல. சங்க இலக்கியத்துல மோர்க்குழம்பா மாத்திட்டாங்க.
அவன்: என்னது மோர்க்குழம்பா? ஐயோ அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியக் கொடுக்குறாளே! போதும்! இத்தோட நிப்பாட்டிட்டு பாட்டை சொல்லு.

அவள்: சூரியவம்சம் படத்துல வர்ரது போலத் தான். சரத்குமார்-தேவயானி போல நம்ம தலைவனோடு தலைவி உடன்போகிவிடுகிறாள்.
அவன்: யூ மீன் ஓடிப்போதல்? அருமை அருமை. மேல சொல்லு.
அவள்: அந்த சூரியவம்சம் தேவையானி போலவே நம்ம தலைவியும் நல்ல செல்வாக்கான வீட்டில் பிறந்து வளார்ந்தவள். வீட்டு வேலை எதுவும் செய்யத் தெரியாதவள். ஆனால் இப்பொழுது தலைவனோடு தனியே வாழ்கிறாள். அந்தப் படத்தில் வரும் அப்பாவைப் போலவே தலைவின் அம்மாவுக்கும் ஒரே வருத்தம். " ஐயோ பொண்ணு என்ன செய்யுறாளோ! எப்படி துன்பப்படுறாளோனு" ஒரே கவலை தான் அவளோட அம்மாவிற்கு.
அவன்: அடிப்பாவி! அப்படியே சந்தடி சாக்குல உன் கதையை உள்ள கொண்டுவரியே.
அவள்: கதை கேப்பியா மாட்டியா? எல்லாக் காலத்துலையும் அம்மா பொண்ணுனா அப்படித் தான். அதுவும் மாறவேயில்லை.
அவன்: சரி சரி. மேல சொல்லு.

அவள்: இப்படி அவள் அம்மா புலம்பிக் கொண்டு இருக்கும் போது தலைவியின் ஊருக்குப் போய்விட்டு வந்த செவிலித்தாய் தலைவியைப் பற்றி சொல்கிறாள். தேவயானியின் அப்பா இட்லி உப்புமா சாப்பிட்டுவிட்டு வந்து "உன் பொண்ணு என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா?" என்று பெருமையாகச்சொல்வாரே! அதே போன்ற காட்சி தான் இதுவும்.
செவிலித்தாய் சொல்கிறாள் " அட நீ ஏன் புலம்பிட்டே இருக்க. உன் பொண்ணு அங்க என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா? அன்னைக்கு அப்படித் தான் மோர்குழம்பு சமைத்திருந்தாள். எங்க நேரம் ஆகிடுமோனு தயிரைப் பிசைந்துவிட்டு அந்தக் கையைக் கூட கழுவாம அப்படியே அதை ஆடையில துடைச்சிக்கிட்டு, அவள் கணவனுக்கு மோர்க்குழம்பு செய்து கொடுத்தான். அவனோ அது புளிப்பாய் இருந்தாலும் " இனிமையா இருக்கே!" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்"
அவன்: அவன் ரொம்ப நல்லவன்னு நினைக்கிறேன். நல்லா இல்லாத சோறக் கூட ரொம்ப நல்லா இருக்குனு சாப்பிட்டுருக்கான். காதலுக்கு கண்ணு மட்டுந்தான் இல்லைனு நினைச்சேன்.
அவள்: சரி சரி. கதை முடிஞ்சுருச்சு. கதையில சொல்லாத அடுத்த காட்சியை சொல்லவா?
அவன்: என்ன?
அவள்: சாப்பிட்டுவிட்டு தலைவன் பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு அன்பு மனைவியிடம் சொல்கிறான் " அன்பே! இனி தினமும் நானே உனக்கு உதவி செய்கிறேன்"
அவன்: போச்சுடா. கதை கேட்டது ஒரு குத்தமா???
...................................


பாடல்: குறுந்தொகை 167
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 
திணை: முல்லை.
பாடியவர்: கூடலூர் கிழார்
கூற்று: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது. 

பதவுரை:
கடிநகர் - தலைவனும் தலைவியும் மணம்புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் மனை.
கலிங்கம்- ஆடை
குய் புகை- தாளிப்பினது புகை.


விளக்கம்:
காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தலைவிக் கட்டித் தயிரைப் பிசைந்துவிட்டு அதனைத் தன் ஆடையில் துடைத்துக் கொண்டும், துடைத்த ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டும், குவளை மலர் போன்ற அவள் கண்களில் தாளித்த புகை அடித்திருந்தாலும் அவள் தானே துழாவிச்சமைத்த புளித்த மோர்க்குழம்பை அவளது கணவன் "இனிமை இனிமை" என்று சொல்லிக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து அவள் முகம் மலர்ந்திருக்கிறது.Tuesday, 17 October 2017

சங்க இலக்கியக் காதல் - ஒரு முன்னோட்டம்

சங்க காலத்திலும் காதலர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

தலைவியும் தலைவனும் காண்கிறார்கள், களிக்கிறார்கள். ஆனால் களித்திருந்த காலங்களிலும் கூடத் தலைவி "திக் திக்" என்றே இருக்கிறாள். எங்கே அவன் விட்டுவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் மிகுதியாகவே இருக்கிறது. புலம்பித் தீர்க்கிறாள். இருவரும் பழகுவது ஊருக்குத் தெரிந்து அவர்கள் பங்கிற்கு கண்டதையும் பேசுகிறாள். தலைவிக்கு மேலும் பயமும் கவலையும் அதிகரிக்கிறது.

தலைவனிடம் நேரே கேட்கக் கூட பயமும் தயக்கமும் அவளுக்கு இருக்கிறது. அதனால் தோழியும் அவளும் தலைவன் காதில் விழும்படி சாடை மாடையாக காதல், திருமணம், ஊரார் பேச்சு என்றெல்லாம் கதைக்கிறார்கள். தலைவன் திரும்பி வரவேயில்லை என்றால் குருகையும் கூழையையும் சாட்சிக்கு வருவார்கள் என்று பிதற்றுகிறாள்.

ஒருவேளை தலைவன் திருமணத்திற்கு இசைந்தாலும் அதன் பிறகு இன்னும் சிக்கல்கள் தான். அந்தக் காலத்திலும் காதல் பட அப்பாக்கள் தான் அதிகம் போல. தலைவியை சிறை வைக்கிறார்கள், காதலை எதிர்க்கிறார்கள். தலைவனுக்கோ திருமணத்திற்கு பொருள் வேண்டும். பொருள் ஈட்டச் செல்கின்றான். அப்பொழுது தலைவிக்கு பயம் இன்னும் கூடிக் கொண்டே போகிறது. தலைவனின் பிரிவு, அவன் வருவான என்ற பயம், வீட்டுக்காவல், ஊரார் பேச்சு என்று தாங்க முடியாமல் உடல் மெலிந்து போகிறாள்.

தலைவன் வந்துவிட்டாலும் பெற்றோர் ஒன்றும் ஏற்பதாயில்லை. வேறு வழியில்லாமல் உடன்போக்கு மேற்கொள்கிறார்கள். தோழி உதவுகிறாள். அட உடன்போக்கு என்ன அவ்வளவு எளிதாகவா இருக்கிறது, போகிற வழியெல்லாம் சிக்கல் தான்.

ஒரு வழியாக தலைவனுடன் வாழத் தொடங்குகிறாள். அப்பாடா என்று இருக்கலாம் என்று பார்த்தால் தலைவன் பரத்தி வீட்டிற்குப் போகிறான். மீண்டும் புலம்பல் தொடங்குகிறது. எல்லாம் முடித்து மக்கட்செல்வம் வரும் போது தலைவி தாயாகும் போது அவளது மகள் உடன்போக்கு மேற்கொள்கிறார்கள். அப்பொழுதும் மகளை நினைத்துப் புலம்புகிறாள்.

தலைவனின் வாழ்க்கை கொஞ்சம் வேறு மாதிரி. இப்பொழுது இருப்பது போலத் தான். தலைவியைப் பார்க்கிறான், காதலிக்கிறான். தலைவியும் ஏற்றால் களவொழுக்கும், இல்லையேல் " ஏத்துக்குவியா இல்லைனா கைய அறுத்துக்குவா" என்று கேட்கிறான். இல்லை இல்லை. அப்பொழுது கையை அறுக்கும் பழக்கம் இல்லை. அதனால் மடலேறுகிறான். ஊருக்கே இவனின் ஒருதலைக் காதல் தெரிய வருகிறது. ஊர் அவனை மட்டுமா பேசும் அவளையும் சேர்த்தே பேசும். தலைவிக்கு அப்பொழுதும் சிக்கல் தான், அதனால் வீட்டில் பிரச்சனை வேறு.

தலைவனும் தலைவியும் பார்த்தவுடன் தலைவியை வீட்டுக் காவலில் வைக்கிறார்கள். தலைவி வர முடியவில்லை என்று சொல்ல வந்த தோழியிடம் " அவள வர சொல்லுறியா இல்ல போலீச கூப்பிடவா" என்று கேட்கிறான் தலைவன். ஆமாம் தலைவி வரவில்லையென்றால் அரசனிடம் முறையிடுவேன் என்கிறேன்.

தலைவியும் அவனும் திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்து பொருளீட்டச் சென்றால் அங்கும் அவனுக்குத் தலைவியின் நினைப்பு தான்.

2000 ஆண்டுகள் ஆனாலும் காதல் மட்டும் இன்று இருப்பது போலவே இருக்கிறது. காதலி காதலை ஏற்க மாட்டாள், விட்டுவிடுவாள் என்ற நினைப்பு வரும் போதே காதலன் தடாலடி முடிவெடுத்து தலைவியை சிக்கலில் மாட்டிவிட நினைக்கிறேன். ஆனால் தலைவியோ தோழியிடமும் பறவைகளிடமும் புலம்பிக் காலத்தைக் கழிக்கிறாள். இன்றும் இதே நிலை தானே..