Friday 24 May 2019

கழுகு இரண்டின் காதல் கதை ❤️

கழுகுகளுக்கு வயதானதும் இறக்கையின் எடை கூடிவிடும், அதன் நகங்களும் அலகும் மிகப்பெரிதாகி அதனால் வேட்டையாட இயலாமல் போய்விடும். அது உடனே நகத்தையும் அலகையும் உடைத்து விட்டு, இறக்கையைப் பிய்த்துவிட்டு 5 மாதம் மலையுச்சியில் பட்டினியாய் தவமிருந்து, அலகும் நகமும் இறகும் வளர்ந்த பிறகு வேட்டையாடும். பிறகு 100 ஆண்டுகள் வாழும்.

மேலே சொன்ன அனைத்துமே கட்டுக்கதை. இது இணையம் முழுதும் உலா வருகிறது. மேலாண்மை வகுப்பு என்ற பெயரில் இந்தக் கழுகு போல இருங்கள் என்று வேறு சொல்லிக் கொடுப்பார்கள். உண்மையில் இதெல்லாமே பொய்.

இந்தக் கதையை வெண்டலைக் கழுகுகளுக்கும் சில சமயம் பிணந்தின்னிக் கழுகுகளுக்கும் ஏற்றிக் கூறுவார்கள். அதெல்லாமே கட்டுக் கதை தான். வெண்டலைகள் அதிகப்படியாக 27 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன, இதுவே அதிகம் தான். பிறகு ஏன் இப்படிக் கட்டுக் கதைகள் சோடிக்கப்படுகின்றன என்று கேட்கிறார்களா? அதெல்லாம் content கிடைக்காத பட்டிமன்றப் பேச்சாளர்கள் சொல்லி வைத்தது.

ஐயோ! இயற்கையில் இப்படி கதைகளே இருக்காதா, என் வாழ்க்கையே பொய்யா என்றெல்லாம் வருத்தப்பட வேண்டாம்.

வடகிழக்கு அமெரிக்கப் பறவையாளர்களையும், அமெரிக்கத் தலைநகர வாசிகளையும் இந்த ஆண்டு காதலர் நாளன்று இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு நகம் கடிக்க வைத்தக் காதல் கதை ஒன்று இருக்கிறது. 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அல்ல அல்ல' என்று சொன்ன காதல் கதை.

கழகு இரண்டின் காதல் கதை ❤️

அமெரிக்கத் தலைநகரில் கழுகுக் கூடொன்று இருக்கிறது. அங்கு தான் நீதியும் (Justice) விடுதலையும் (Liberty) வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் சொந்த ஊர் அதுவல்ல. ஒரு வகைப் பூச்சிக்கொல்லியால் அமெரிக்காவில் பெரும்பாலன இரையாடிப் பறவைகள் அழிவிளிம்பை எட்டின. அப்பூச்சிக்கொல்லிக்கு தடைவிதித்து இரையாடிகளை அமெரிக்கா மீட்டெடுத்தது. தலைநகரில் வெண்டலைக் கழுகுகள் இல்லாமல் போனதால் வடக்கே வேறொரு மாநிலத்தில் இருந்து கழுகுகள் கொண்டு வரப்பட்டு இங்கே விடப்பட்டன.

அப்படி வந்தவர்களின் வழித்தோன்றல் தான் நீதியும் விடுதலையும். 14 ஆண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு வாசிங்கடனில் கூடிகட்டிக் குடியமர்ந்தனர். அன்றிலிருந்து பிரியாத இணையாக இருந்த அவர்கள் ஆண்டுதோறும் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களை நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்து மக்களும் மகிழ்ந்திருந்தனர்.

கடந்த பிப் 9 ஆம் தேதி மீண்டும் இணை சேர்ந்தது இந்த இணை. அடுத்த நாளே விதி வீட்டுக்குள் கபடி விளையாடியது. நீதி திடீரென்று காணமற் போனது. இந்த நேரத்தில் விடுதலை இரண்டு முட்டைகளையும் வைத்தது. இன்னும் குளிர் காலம் முடிவடையாத நேரத்தில் உறையும் பனியில் முட்டையையும் அடைகாத்துக் கொண்டு மீனும் பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது விடுதலை.

இந்த நேரத்தில் தான் இன்னொரு இளம் வெண்டலை விடுதலையின் கூட்டுக்கு வந்தது. அதன் காலில் இருந்த சிறு காயங்களை வைத்து ஒரு வேளை நீதிக்கும் இதற்கும் ஏற்பட்ட சண்டையில் நீதி தோற்று எங்கேயோ அடிபட்டு ஓடிவிட்டதோ என்ற ஐயம் பறவையாளர்களுக்கு வரத் தொடங்கியது. விடுதலைக்கு வந்த புதியவனைப் பிடிக்கவில்லை. அவனைக் கண்டுகொள்ளவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்ட மக்கள் நீதியைத் தேட தொடங்கினார்கள். 'யாராவது பார்த்த சொல்லுங்க' என்று முகநூலிலும் செய்தித்தாளிலும் எழுதி தலைநகர மக்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் விடுதலையும் தன் கூட்டைவிட்டு போய்விட்டது. இரண்டு நாட்கள் வரவில்லை. முட்டைகள் இரண்டும் குளிரில் வீணாய்ப்போயின. மீண்டும் விடுதலை வந்ததும் இன்னொரு இளம் வெண்டலை அதன் கூட்டிற்கு வந்தது. இது முன்னதை விட இன்னும் கொஞ்சம் கரிசனத்தோடு நடந்து கொண்டது, முட்டையை அமர்ந்து அடையெல்லாம் காத்தது. நீதி வராது என்று முடிவு செய்தோ என்னமோ இந்த வெண்டலையோடு பறந்து சென்றது விடுதலை.

இப்படி இருக்க 19 நாட்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் கூடு திரும்பியது நீதி. விடுதலையில்லாத போது கூட்டுக்கு வந்து காத்திருந்தது. விடுதலை வந்தால் என்ன செய்யும்? ஏற்குமா ஏற்காதா?

விடுதலை வரும்போது கூட்டிற்கு பக்கத்தில் கிளையில் அமர்ந்து கொண்டது நீதி. விடுதலை கூட்டுக்குத் திரும்பி வந்தது. நீதியை எங்க வந்த என்பது போலப் பார்த்துவிட்டு, தான் பிடித்து வந்த மீனை உண்ணத் தொடங்கியது விடுதலை.
சரி நம்ம விடுதலை தான என்பது போல மீனில் கை வைக்கப் போனது நீதி. 'மீன்ல கைய வச்ச, வச்ச கைய வெட்டிருவேன்' என்பது போல உறுமிவிட்டு தன் மீனைத் தான் மட்டுமே தின்று கொண்டிருந்தது விடுதலை.

பெரியதாய் ஏதாவது தப்பு செய்ததற்கு மனைவி சண்டைக்குப் போனால் 'நான் வேணும்னா காப்பி போட்டுக் கொடுக்கவா' என்று கேட்கும் கணவனைப் போல, நீதியும் கூட்டில் இருந்த குச்சியை அடுக்குவது போல பாவனை செய்தது.

இதே நாடகம் இன்னும் சில நாள் அரங்கேறிய பின்பு 'சரி போ, இந்த ஒரு தடவ மன்னிக்கிறேன்' என்று விடுதலை நீதியை ஏற்றுக் கொண்டது. மீண்டும் இணை சேர்ந்தனர் இருவரும். மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் மக்கள்.

இருவரும் இல்லாத நாளில் இரண்டு முட்டைகளையும் (பொரிக்கவே போகாத முட்டைகள் தான்) ரக்கூன் ஒன்று வந்து தின்றுவிட்டுச் சென்றது. நீதியை விட்டுட்டு மக்கள் ரக்கூனைத் திட்ட தொடங்கினர். இனி இந்த ஆண்டு அவை குஞ்சு பொரிக்கா.

14 ஆண்டுகள் சேர்ந்திருந்த இணை அடுத்தாண்டு சேர்ந்திருக்குமா? இல்லை நீதியின் போக்குப் பிடிக்காமல் விடுதலை விடுதலை பெருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment