Sunday 8 September 2013

தமிழர்களுக்கு ஏன் "last name/sur name" இல்லை ?

தமிழர்களுக்கு ஏன் "last name/sur name" என்று சொல்லப்படும் குடும்ப பெயர் இல்லை ? ஒவ்வொரு முறை படிவம் நிரப்பும் போதும் எனக்கு எரிச்சல் வரும். சுபாஷினி, இவ்வளவு தான் என் பெயர். இதில் middle name, last name எல்லாம் கேட்டால் எங்கு போவது?  இல்லாத ஒன்றை எப்படி சேர்ப்பது? அந்த இடத்தை நிரப்பாமலும் விட முடியாது. அதற்காக என் அப்பாவின் பெயரை பின் சேர்த்துக் கொண்டேன்.

எனக்கு மட்டும் இல்லை. பெரும்பாலான தமிழர்களுக்கு இதே நிலை தான். இதற்குக் காரணம் என்ன. இந்த குடும்பப் பெயர் சேர்க்கும் வழக்கம் நம் மொழியில் இல்லை. பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் தான் இருந்திருக்கிறது. இன்னாரின் மகன் இன்னார் என்று தான் சொல்லியிருக்கின்றனர். உப்பூரி குடி கிழான் மகனார் உரித்திரசன்மர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் (இதில் பூதம் தந்தை பெயர்), பெருங்கோழி நாய்க்கன் மகள் நக்கண்ணை. ஆக பெற்றோர் பெயரை தன் பெயருக்கு முன் சேர்த்து அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வழக்கு தான் இருந்திருக்கிறது. அரசர்கள் பட்டத்திற்கு வரும் போது தங்கள் பெயரோடு தங்கள் அரச வம்சத்தின் பெயரை சேர்த்திருக்கின்றனர். இப்படி பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் பதினெட்டாம் நூற்றாண்டிலும் இருந்திருக்கிறது. அன்று எழுதப்பட்ட ஆவணங்களிலும் தந்தை அவரின் தந்தை என பெயர்களை முன் சேர்த்தே எழுதியுள்ளனர். சமீபத்தில் கூட ஒருவர் மறுபதிவு ஒன்றில் "என் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்கள் என் குடும்பத்தின் நூறாண்டு வரலாற்றைக் குறிக்கும்" என்று சொன்னார், இப்படி பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் இப்பொழுதும் இருக்கிறது என்பது அவர் வாயிலாக அறியலாம்.
தங்கள் சாதிப் பெயரை பின் சேர்க்கும் வழக்கும் பிற்கால வட மொழி ஆதிக்கத்திலிருந்த வந்திருக்க வேண்டும். எனினும் அதை குடும்பப் பெயர் எனக் கொள்ள முடியாது.
முன் என் அப்பா பெயரை சேர்க்காமல், எழுத்தை மட்டும் சேர்த்து, பின்னர் அதையும் பின்னால் இட்டு, இப்பொழுது இந்த உலகமயமாக்கலால் அப்பா பெயரை பின் சேர்த்தது வேதனையாகத் தான் உள்ளது.