Monday 18 May 2015

இதோ! இதோ! மழை!

மழைத்துளி விழுகுதே, மங்குல் ஒழுகுதோ? கானெல்லாம் கருகுதே, கங்குல் பெருகுதோ?

பெயல் ஓய்ந்து வெயில் ஓங்குமோ?


















இதோ! இதோ!

கழையின் கானம்

கவிதையாய் இசைக்குதே!
உந்தூழ் குழலொலி
உயிரை அசைக்குதே!



இதோ! இதோ! காரும் முடியுதே! காரிருள் மடியுதே! கவலைகள் வடியுதே! கனவுகள் விடியுதே!























சொற்பொருள்: மங்குல்- மேகம் கங்குல்- இருள் கான்- காடு பெயல்- மழை கழை- மூங்கில் உந்தூழ்- மூங்கில் கார்- கார்காலம்.

படங்கள்- இணையம். கவிதை- நான்

Sunday 10 May 2015

இந்தியாவின் மகள்

"இந்தியாவின் மகள்" (India's daughter) விளக்கப்படம் ஒரு சிறிதளவும் வியப்பளிக்கவில்லை. அதில் பேசிய வழக்கறிஞர்களின் வாதம் தானே நம் ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டு மனசாட்சி. 2012இல் நிர்பயா நிகழ்வை தொடர்ந்து வந்த வானொலி நிகழ்ச்சிகளில் பேசிய மக்களின் வாதங்கள் முகேசின் வாதங்களுக்கு கொஞ்சமும் குறையாதவை. "பெண்கள் எப்படி உடையணிய வேண்டும், மகள்களைப்பெற்ற அப்பாக்கள் எப்படி பொறுப்பின்மையோடு நடந்து கொள்கிறார்கள்" என்று பேசிவிட்டு கூடவே "அந்த 6 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கனும் சார்" என்று பேசி ஓய்ந்தார்கள். பேசியவர்கள் அனைவரும் இந்த சமூகத்தின் மகள்களும் மகன்களும் தான்.
அதில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் பேசியதாவது : "இது அந்த 6 பேரின் தவறோ, பெண்ணின் தவறோ இல்லை. ஒட்டு மொத்த சமூகத்தின் தவறு. குழந்தைகளை வளர்க்கும் போது 'பொண்ணுன இப்படி இருக்கனும். பையன்னா இப்படித்தான் இருக்கனும்' என்று சொல்வதில் தொடங்கும் சிக்கல் இது. "நீ ஆண் எப்படி வேண்டுமானலும் இருக்கலாம்" என்று சொல்லிக்கொடுத்துவிட்டு பின்னாளில் அவர்கள் செய்யும் குற்றத்திற்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் முரண்பட்ட செயல். ஒரு ஆணுக்குள் இருக்கும் மொத்த பெண்மைத்தன்மையையும் சிறு வயதிலேயே பேசி, திட்டி, கேலி செய்து கொன்றுவிட்டு பின்னாளில் பெண்களுக்கு ஆண்களால் தொல்லை என்று சொல்வதும் நியாயமில்லை. மனநிலை மாற்றம் தேவை. அது வீட்டிலும் பள்ளியிலும் தொடங்க வேண்டும்."
இவ்வாறெல்லாம் பேசிய போது நிகழ்ச்சி நடத்தியவர் ஒன்றுமே பதில் பேசவில்லை. எனக்கு அடுத்து பேசிய ஒரு 50 வயது அம்மாள் எனக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். இவர்கள் தானே இந்தியாவின் சராசரி அம்மாக்கள்? இவர்களிடமிருந்தே சிக்கலான மனநிலை தொடங்கும் போது முகேசிடம் வேறு என்ன மனநிலையை எதிர்பார்க்க முடியும்.
"women are so precious" என்று சொல்லும் பலராலும் " men and women are equal" என்று சொல்ல முடிவதில்லை.
"women are so special" என்று சொல்லி பத்து ரூபாய்க்கு மிட்டாய் கொடுத்து பெண்கள் நாள் கொண்டாடுவதோடு முடித்துக்கொள்கிறார்கள்.
யாரும் இங்கு சிறந்தவர்கள் இல்லை; யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை; இதெல்லாம் என்று புரிந்துகொள்ளப்படும்?
ஆண்மை என்பதற்கு மறமும் பலமும் தான் பொருள் என்றால் அது பெண்களிடம் இல்லையா?
பெண்மை என்பதற்கான பொருள் மென்மையும், இரக்கமும் என்றால் அது ஆண்களிடம் இல்லையா?
மனதளவில் அனைவருக்கும் பொதுவான இயல்புகளைக்கொன்றுவிட்டு இதுதான் எங்களது பண்பாடு என்று கண்டதையும் கட்டிக்கொண்டு அழுவதில் பயன் என்ன?
பெண்மை என்பதற்கு மென்மை, தாயுள்ளம், அன்பு எனப்பொருள் கொண்டு அக்குணங்கள் பெற்ற அனைவருக்கும் எனது "பெண்கள் நாள் நல்வாழ்த்துக்கள்."
(மார்ச் 08 2015)

என் மேல் நீ கொண்ட காதல்!!!


என்னைப் பார்க்கும் போதுஉன்
தும்பி விழிகள் இரண்டும்
தூங்கா விழிகளாய் இன்னும் 
கொஞ்சம் விரிகிற போது தெரிகிறதடி
என் மேல் நீ கொண்ட காதல்!!!

(மார்ச் 15 2015)