Saturday 10 September 2016

ஆகாச ஊற்று

தாரையிலே அமராவதி ஆற்றங்கரையில் தில்லாபுரி அம்மன் கோயில் அருகே ஒரு சுனை இருப்பதாகவும் அதன் பெயர் ஆகாச ஊற்று என்றும் அங்கு சிறு வயதில் நிறைய முறை சென்றதாகவும் என் வீட்டில் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். நிற்க! அந்த சுனைக்கு ஒரு செவிவழிக்கதையும் உண்டு. மகா பாரதத்தில் வரும் விராடன் என்னும் மன்னன் தான் எங்களது ஊரை ஆண்டானென்றும் அதனால் தான் எங்களது ஊருக்கு விராடபுரம் என்று பெயர் வந்ததாகவும் சொல்வார்கள். அதைப்பற்றி நான் நீட்டி முழக்கி எழுதிய கட்டுரையை படிக்க பின் வரும் இணைப்பை சொடுக்கவும்.
http://isainirai.blogspot.in/2014/06/blog-post_22.html?m=1
சுருக்கமாக பாண்டவர்கள் அன்னியான வாச காலத்தில் தில்லாபுரி அம்மன் கோவிலில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்களாம். அப்பொழுது அங்கு அர்ச்சுனன் அம்பு விட்டு ஒரு சுனையை உருவாக்கினானாம். நான் மேலே சொன்ன அந்த சுனை தான் இந்த சுனை. இப்படி அர்ச்சுனன் காலத்தில் இருந்து இருக்கும் சுனையை பார்க்க வேண்டும் என்று என் வீட்டாரை கடந்த வாரம் நச்சி அழைத்துக்கொண்டு போன போது தான் தெரிந்தது அந்த சுனை வற்றிவிட்டது என்று. நிலத்தடி நீரை உறிஞ்சியது எல்லாம் காரணமில்லை. வேறு ஏதோ காரணம் இருக்கும் என்று சிந்தித்த போது தான் தெரிந்தது. ஆதலால் சகலமானவர்களுக்கும்  நான்  சொல்ல வருவது என்னவென்றால் கலி முத்திடுச்சு. இது என்னடா அர்ச்சுனனுக்கு வந்த சோதனை!