Friday, 24 May 2013

மிட்டாய்கள் நாணயங்களாய் மாறிப்போனது ஏன்???

கடையில் எது வாங்கினாலும் கூட இரண்டு மிட்டாய் இலவசம்.. கேட்ட சில்லரை இல்லை என்று சொல்லுவார்கள்…
பணப்புழக்கம் உள்ள இடங்களான அஞ்சலகங்களில் கூட ‘சில்லரை இல்லாம ஏன்ய வறீங்க’ என்று கேட்கும் நிலை. பேருந்துகளில் மிகவே மோசம், என் கிட்ட சில்லரை இருந்த கொடுக்க மாட்டேனாப்பா என்று நடத்துனர் சில்லரகளே இல்லாத பையைக்காட்டும் போது தர்ம சங்கடம் தான். மருந்துகமோ அடுமனையோ எங்கு போனலும் மிட்டாய் கொண்டு பை நிறைக்கும் நிலை வரக்காரணம் என்ன??
என்ன இந்த திடீர் சில்லரைத் தட்டுப்பாடு பெரும் பூதமாகிவிட்டது, இதன் பாதிப்புகள் என்ன? ஏன் இந்த தட்டுப்பாடு என்று கொஞ்சம் அலசிப்பார்போம்..

ுதலாவதாக நமக்கு எழும் கேள்வி, நாணயமடித்தல் குறைந்துவிட்டதா? தேவைக்கு ஏற்றபடி நாணயங்கள் அடிக்கப் படுவதில்லையா?? என்பவை தான். தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியாக பெறப்பட்டத் தகவலின் மூலமாக மனோரஞ்சன் ராய் " பத்து ஆண்டுகளுக்கு முன்பாக அடிக்கபட்டதை விட தற்பொழுது இரண்டு மடங்காக ஒரு ரூபாய் நாணயங்களை அடிக்கும் பணி அதிகரித்துள்ளது. அதே போலவே ஐந்து ரூபாய் நாணயங்களும் அதிக அளவில் அடிக்கப்படுகின்றன. இரண்டு ரூபாய் நாணயங்கள் அடிக்கும் பணி 3.5 மடங்கு உயர்ந்துள்ளது. அதே போல் 2001-02 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 1,547 கோடி ஒரு ரூபாய் நாணயங்களையும், 1,1064 கோடி இரண்டு ரூபாய் நாணயங்களையும், 2,025 கோடி ஐந்து ரூபாய் நாணயங்களையும், வெளியிட்டுள்ளது. ஆக 1970 ல் இருந்து 2012 வரைக்கும் இந்திய ரிசர்வ் வங்கி 1,02,640 கோடி 1,2,5 மற்றும் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒரு நாணயத்தின் ஆயுட்காலம் 25-30 ஆண்டுகள் என்று கொண்டாலும் இன்றைக்கு நிலைக்கு ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் 100 நாணயங்கள் இருக்க வேண்டும். இதெல்லாம் எங்கே போயிற்று?"
இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி கூறும் போது, " நாணயங்கள் அடிப்பது குறைந்துவிட்டதால் இந்த தட்டுப்பாடு எழவில்லை. நாணயங்களை வெளியிடுவதில் உள்ள நடை முறை சிக்கல்களை சிலர் சாதகமாக பயன்படுத்திக்கொள்வது தான் இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம். இதைத் தடுக்க நாடு முழுவது நாணயங்களை மாற்றிக்கொள்ள வசதியாக மையங்கள் அதிகரிக்கப்படும் "  என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆக இப்பொழுது அச்சாகி வெளிவரும் நாணயங்கள் என்ன ஆகின்றன என்பது தான் கேள்வி.

1. இந்திய ரிசர்வ் வங்கி தலைமையக வாசலில் தினசரி முதல் ஆளாக சென்று ரூபாய் தாள்களுக்கு இணையாக நாணயங்களைப் பெற்றுக்கொள்ளும் இந்த கும்பல் அதை வியாபாரிகளிடம் 12-13 % இலாபதிற்கு விற்கின்றனர். நாணயங்களை முடக்கி வைப்பதின் மூலம் இந்த கும்பலுக்கு இலாபம் கூடுகின்றது. பெரு நகரங்களிள் ஏற்படும் சில்லரைத் தட்டுப்பாட்டிற்கு இது முக்கிய காரணம்.

2. சில ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி செய்திகளில் பேசப்பட்ட செய்தி இது.  சவர அலகு (RAZOR BLADE) செய்வதற்காக நாணயங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது தான். நாணயங்களை உருக்கிவார்த்து செய்யப்படும் இந்த சவர அலகுகள் நாணாயங்களின் மதிப்பை விட அதிகம். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெருத்த இலாபம் கிடைக்கிறது. இதனைத் தடுக்கத் தான் நாணயங்களின் அளவைச் சிறியதாக்கியது.
எடையக் குறைப்பதன் மூலம் இந்த குற்றம் சிறிதளவு குறைந்துள்ளதே தவிர இது முற்றிலுமாக ஒழிக்கப்படாவில்லை. இன்றும் அதனால் இலாபம் இருக்கத்தான் செய்கிறது.

3. இது தான் மிக முக்கியக் காரணம். அங்காடி நடத்துபவர்கள் தங்கள் சொந்த இலாபதிற்காக சில்லரை இல்லை என்று வேண்டுமென்றே கூறுகின்றனர். ஐந்து ரூபாய் மீதம் தர வேண்டுமென்றால் இரண்டு ரூபாய் நாணயமும் கூட மூன்று ரூபாய்க்கு கடலை மிட்டாயும் கொடுப்பதனால் அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு நூறு ரூபாய் இலாபம் கிடைக்கிறது. மளிகைக்கடைத் தொடங்கி பல்பொருள் அங்காடி வரை சில்லரை இல்லை என்று கூட சொல்லாமல் விற்றுப் போகாத பழைய மிட்டாய்களை நம் தலையில் கட்டிவிடுகின்றனர்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படிகிறது. மக்கள் நாம் நினைப்பதவிட அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தொடர்வண்டிகளில் இந்த சில்லரைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க கட்டனங்களை ஐந்தின் பெருக்காக மட்டும் மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. இது சிறு வணிகர்களிடமும் காணப்படுகிறது. நான்கு ரூபாய் பெருமானம் உடைய பொருட்களை சில்லரைத் தட்டுப்பாட்டால், ஐந்து ரூபாய்க்கு விற்கின்றனர். வாடிக்கையாளர்களுக்கு நட்டம் தான்.


போனது போகட்டும் இந்த சில்லரைத் தட்டுப்பாட்டைத் தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுக்கட்டும். அதுவரை இதிலிருந்து தப்ப என்ன வழி???

1. கூடிய மட்டும் நாம் சில்லரைகளை எடுத்துச் சென்று சரியான சில்லரை கொடுத்து பொருள் வாங்கலாம்.
2. சில்லரைக்குப் பதிலாக நாம் வாங்கும் பொருள்களை கொஞ்சம் சேர்த்து வாங்கலாம், அல்லது அதியாவசிய பொருட்களான எழுதுகோள் போன்றவற்றை வாங்கலாம்


 இல்லை மிட்டாய் தான் கொடுப்பேன் என்று அடம் பிடிக்கும் கடைக்காரர்களுக்கு பதிலுக்கு நாமும் மிட்டாய்களையே சில்லரையாக கொடுக்கலாம். கொடுத்துப் பாருங்கள்.. முகம் மாறிவிடும் அவர்களுக்கு, உடனே சரியான சில்லரை உங்களுக்குக் கிடைக்கும்...

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

-----
என்றும் அன்புடன்,
சுபாசினி.
தாராசுரம் கோயில் படங்கள்


இந்தப் படங்கள்


தாரசுரம் ஐராவிதேசுவரர் கோயிலில் எடுக்கப்பட்டது...

மரத்திலும் உலோகத்திலும் சின்னதாய் ஒரு சாளாரம் செய்யவே பல சிரமும் உண்டு. ஆனால் கல்லில் சாளரம் அமைத்தது நம் தமிழகத்தில் மட்டும் தான் சாளாரம் கல்லில் செய்தனர்... இல்லை இல்லை அதனை கல்லில் செதுக்கினர்... கல்லிலே கலை வண்ணம் கண்டார்..

குறிப்பு: சாளரம்=ஜன்னல்.


Thursday, 23 May 2013

தஞ்சைபெரியகோயிலும் அரிய தகவலும்-2 (நந்தி)பெரிய கோயிலில் பக்தர்கள் இப்போது தரிசிக்கும் மகாநந்தி, இராசராசன் காலத்தியது அல்ல. அந்த நந்தி இப்போது தென்மாளிகைச் சுற்றில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் நந்தியை கி.பி. 1550 களில் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து எழுப்பியுள்ளனர்.

பதினாறு கால் மண்டபத்தில் மாபெரும் உருவமாக அமைந்துள்ளது இந்த நந்தி. துல்லியமாக பத்தொன்பதரை அடி நீளமும், எட்டே கால் அடி அகலமும், பன்னிரெண்டடி உயரமும் உடைய மகாநந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.

Sunday, 19 May 2013

தஞ்சை பெரிய கோவிலும் அரிய தகவல்களும்-1, (அறிஞர் ஹீல்ஷின் பங்கு)


200 ஆண்டுகளுக்கு முன்பு வரைத் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் யாரென்றே தெரியாத நிலை நிலவியது. 'கிருமி கண்ட சோழன்' எனப்படும் கரிகாலன் குஷ்டநோயால் தவித்ததாகவும், இந்தக் கோயிலைக் கட்டி, இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் அவனுக்கு இருந்த குஷ்டநோய் நீங்கியதாகவும் 'பிரகதீஸ்வர மகாத்மியம்', 'தஞ்சைபுரி மகாத்மியம்' ஆகிய நூல்கள் சொல்லுகின்றன. இது போதாதென ஜி.யு. போப்பும் தன் பங்கிற்கு 'காடுவெட்டிச் சோழன்' என்பவனே பெரிய கோயிலைக் கட்டியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1888 இல் தான் ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞரை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக நியமித்தது சென்னை அரசாங்கம். கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்த அவர் தான் "இக்கோயிலைக் கட்டியவன் மாமன்னன் இராசராசன்" என்று அறிவித்தார்.

Friday, 17 May 2013

கடைசி நாள் கல்லூரி... GCT !!!


GCT !!!
சிறகுகள் முளைக்கக் காத்திருந்தேன்
பறக்கக் கட்டளையும் வந்ததும்...
சிறகுகள் ஏனோ சுமையானது...
பிரிவின் பாரமோ இது???
தாங்காத போதிகளுடன் மனம்
தள்ளாடி நகர்கிறது...
தெரிந்த முடிவு...
தெரிந்தும் தாழவில்லை...
நினைவுகள் மட்டும் நிலைத்திருக்க
நாளையோடு எல்லாம் வேறாகிப் போகும்...

கடைசி நாள் கல்லூரி...
பேருந்தின் ஜன்னல் நனைக்கும் மழைத்துளி..
கண்களின் ஓரம் ஏனோ நீர்த்துளி...
முன்நோக்கி நகரும் தினத்தில்,
பின்நோக்கி நகருது மனது....

இங்கு மீண்டும் ஒருமுறை பயில்வேனோ,
பக்கங்களைத் திருத்தி எழுத முயல்வேனோ,
முடியாமல் போகுமின் அமைதியில் துயில்வேனோ??

பிடிபடாத எண்ணங்கள் சிறைபிடிக்க
பிடிவிலகிப் போகிறேன் நான்....
கூடுடைத்து சிறகொடிந்த பட்டாம்பூச்சியாய்
படபடத்து செல்கிறேன் நான்...

அணுவெல்லாம் காதல்...(ATOMIC LOVE)

இதயத்தில் அணு அளவும் இடமில்லயே
என் அணுவில் கூட இடமில்லயே..

போசோன்கள் லெப்டான்கள் துரத்திவிட்டாய்
நியூட்ரான் எலெக்ட்ரான் இடை
வெற்றிடம் கூட நிரப்பிவிட்டாய்..
என் அணுவில் கூட இடமில்லயே..

ிச்சயமில்லா கொள்கை அதனாலும்
என் காதலை விளக்கிட முடியலயே..
ியூட்டன் ஐன்ஸ்டைன் விதிகள்
எதுவும் இங்கே பொருந்தலயே..

உனை பார்க்கையிலே உயிருக்குள்
போட்டான்கள் பிறக்கிறதே..
ாறிலி எல்லாம் மாறியதே..
கடவுள் துகள் கூட
ாற்றில் இப்போ தெரிகிறதே...

நீ பார்கையிலே, எனக்கு
ஒளியின் வேகம் குறைகிறதே
காலங்கள் யாவும் நீள்கிறதே
என் காதல் விசையினிலே
வெளியும் இங்கே வளைகிறதே...

ெண்ணே! அடி பெண்ணே!
அணு ஆயுதம் நீ தானோ??  உன்
சோதனைக் கூடம் நான் தானோ??

காதல் என்னும் பெயரினிலே
அணுப்பிளப்பு என்னுள் நிகழ்கிறதே...
ஆற்றல் யாவும் இழந்தேனே..
பௌதிகம் முதலிய மறந்தேனே..

விழுந்துவிட்டேன் உன் விழியாலே
விளக்கிவிட்டேன் அதனை மொழியாலே..
என் அணுவில் கூட இடமில்லயே..
உன்னைத் தவிர எதுவும் நினைவில்லையே..

-சுபாசினி.

Sunday, 12 May 2013

என்னோடு நீ வேண்டும்...


என்னோடு நீ வேண்டும்...

என் மலருக்கு மரமாக
மரத்துக்கு வேராக
என்னோடு நீ வேண்டும்...

என் அம்புக்கு வில்லாக
வில்லுக்கு நாணாக..
என்னோடு நீ வேண்டும்...

என் வானத்து மழையாக
மழைக்குக் குடையாக..
என்னோடு நீ வேண்டும்...

என் நகரத்து ஆறாக
ஆற்றுக்கு நீராக
என்னோடு நீ வேண்டும்...

என் நாவுக்கு மொழியாக
மொழிக்குத் தமிழாக
என்னோடு நீ வேண்டும்...

என் கவிதைக்கு சொல்லாக
சொல்லுக்குப் பொருளாக
என்னோடு நீ வேண்டும்..

என் வாழ்க்கைக்கு மெய்யாக
மெய்க்கு உயிராக..
என்னோடு நீ வேண்டும்..

சுபாவிற்கு நினைவாக
கலையாத கனவாக..
என்னோடு நீ வேண்டும்...


Monday, 6 May 2013

திருக்குறள் சொல்லும் நாகரிகம்


நாகரிகம் என்பது என்ன??
திருக்குறளில் நாகரிகம் என்னும் சொல் வரும் இடம் இதுதான்.

"பெயக்கண்டு நஞ்சுண் டமையவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் " - குறள் 580
அதிகாரம் 58. கண்ணோட்டம்.


நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.

இதனை இக்காலாத்திற்கு பொருத்திப் பார்ப்போம் ஆயின் இப்படி எடுத்து கொள்ளலாம். ஒரு குழந்தை பிறந்த தினத்திற்கு இனிப்பு கொண்டு வருகிறது. நமக்கோ நீரிழிவு நோய். இனிப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனால் வேண்டாம் என்று சொல்லாமல் அந்த குழந்தைக் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக அதனை எடுத்து உண்கிறோம். இனிப்பு எனக்கு நஞ்சு என்று தெரிந்தும் பிறர் மனம் நோகக் கூடாது என்று எண்ணி உண்கிறோமே அது தான் நாகரிகம். (பர்வீன் சுல்தானா அவர்கள் அரசினர் தொழில்நுடபக் கல்லூரி, கோவை, சங்கமம் விழா பட்டிமன்றத்தின் போது ஆற்றிய உரையிலிருந்து கொள்ளப்பட்டது)

சான்றோர் விளக்கம்:
'நயத்தக்க நாகரிகம் 'என்றதனாலும் , 'அமைவர் ' என்றதனாலும் , நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால் , இப்பொருட்பாலில் அரசர்க்குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ்வதிகாரத்தின் இவ்விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும் , அறிந்து கொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும் ,நட்புப் பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும் , அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க ' என்னும் அடைபெற்றதென்றும் , அறியப்படும் . அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர் செயலாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல்.நாகரிகம் என்பது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை , கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிகமெனப் பட்டது.

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்"

என்பது நற்றிணை(355).பெய்தும் என்னாது 'கண்டும் 'என்றதனால் , உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.

Wednesday, 1 May 2013

புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்தது ஏன்??


நம்மிடம் வாசிக்கும் ஆர்வம் குறைந்து கொண்டேபோவதற்கான காரணங்கள் என்ன என்ன.. 

பெரும்பாலானோர் தங்களின் புத்தக ஆர்வத்தை குங்குமம், பொன்னியின் செல்வன் என நிருத்திக்கொள்கின்றனர். நமக்கு முந்தைய தலைமுறையினரிடம் இருந்த அளவு வாசிக்கும் பழக்கம் கூட நம்மிடையே இல்லை. அவர்கள் குறைந்தபட்சம் சமயம் சார்ந்த நூல்களை வாசிக்கும் பழக்கத்தையாவது வைத்திருந்தனர். நம்மிடையே அதுவும் குன்றிவிட்டது.  


இதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி தான் காரணம் என்று பொதுப்படையாய் சொல்லிவிட முடியாது. இணையத்தில் புத்தகம் வாசிக்கும் ஒரு கூட்டமும் உள்ளது. நானும் அந்த கூட்டத்தின் ஒரு அங்கம் தான். அதனால் என்னால் இந்த கருத்தை ஏற்க முடியவில்லை.

சிலர் சோம்பல்பட்டுக் கொண்டு வாசிப்பது இல்லை. அவர்களால் நிச்சயம் இதை முழுவதுமாக படிக்க இயலாது.

காதல் கதைகளையும், சராசரி புதினங்களையும், புதுக்கவிதைகளையும் வாசிப்பதில் மெச்சிக்கொள்கிற அளவுக்கு ஒன்றும் இல்லை. அதற்காக நான் இங்கு எல்லா புதினங்களையும், கவிதைகளையும், கதைகளையும் பற்றி சொல்லவில்லை. அவற்றால் ஒரு நன்மையேனும் இருக்க வேண்டும். அறிவு விசாலம் அடைதல், மொழியறிவை வளர்த்தல், சமூகத்தைப் பற்றியோ, ஒரு செய்தியைப் பற்றியோ புதியதொரு பார்வையைக், கண்ணோட்டத்தைத் தருதல், என அந்த நூல் ஏதேனும் காரணத்தைத் தன்னகத்தேக் கொண்டிருத்தல் வேண்டும். நாம் வாசிக்கும் நூல்களுக்கு இத்தகைய அம்சங்கள் உண்டா???

வாசிக்கும் பழக்கம் இந்த தலைமுறையிடம் குன்றியதற்கு சில காரணங்களை நான் குறிப்பிடுகிறேன். 
முதலாவது நம் கல்வி முறை.வாசித்தலை வெறுக்கும் அளவிற்கு மனனம் செய்தலை மாணவர்களிடையே புகுத்திவைத்திருக்கிறது. திருக்குறள் போன்றதொரு அருமையான நூல் இருக்க முடியுமா? ஆனால் பள்ளி மாணவர்கள் அதனை வெறுக்கக் காரணம் என்ன? நாற்பது குறள்களைக் கொடுத்து, அதில் இருபது குறள்களை மனப்பாடப் பகுதியில் சேர்த்துவிட்டு தெரிந்தோ தெரியாமலோ மாணவர்களின் இலக்கிய ஆர்வத்தைக் கெடுத்துவிட்டனர். பாடப் புத்தகத்தைக்காட்டிலும் சுஜாதா எழுதிய குறுந்தொகை விளக்கம் எளிதாய் இருப்பதன் காரணமும் இது தான். இலக்கியதிற்கு மட்டும் அல்ல தமிழகத்தில் அறிவியலுக்கும் இதே நிலை தான். 

நாம் சிறு வயதில் படித்த சிறுவர்களுக்கான புத்தகங்கள் அளவு இன்று வெளிவரும் புத்தகங்கள் இல்லை என உறுதியாகக் கூறலாம். அதற்கு மேல் இன்றைய குழந்தைகள் நிகழ்ச்சிகள் ஒரு சாபக் கேடு என்றே சொல்லலாம். ஒரு நிகழ்ச்சியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்புகின்றனர். அதில் தான் குழந்தைகள் தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். பெற்றோரும் அதனை ஒரு பொழுதுபோக்காக அனுமதிக்கின்றனர். இங்கு வாசிக்கும் பழக்கம் முழுவதுமாக அடிபட்டுப் போகிறது.

அடுத்ததாக ஒரு பொறியியல் படிக்கும் மாணவியாக இளைய சமூகத்திடம் வாசிக்கும் பழக்கம் இல்லாததற்கு நான் பார்த்த சிலவற்றைக் கூறுகிறேன். 
பொதுவாக வாசித்தலை, வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களை எள்ளிநகையாடும் ஒரு கூட்டம் உண்டு. அவர்களுக்குப் பயந்தோ, அதுதான் பெருமை என்று நினைத்தோ சிலர் வாசிப்பதே இல்லை. இதனைக் கல்லூரி மாணவர்கள் கண்கூடாகப் பார்க்கலாம்.  சிலர் நேரவிரயம் எனவும் கருதுகின்றனர். அவர்களுக்கு வேறு தலையாய கடமைகள் இருக்கும், அதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது. 

இன்னும் சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பதைப் பெருமையாக எண்ணித் தமிழ் நூல்களை வாசிப்பதில்லை. அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக்கொள்கிறேன், எந்த மொழியாயினும் அது வாசிக்கும் நூலின் தரத்தைப் பொருத்துதான் அமைகிறது. வாசிப்பதற்கு மொழியினால் பெருமையோ சிறுமையோ கிடையாது. 

வாசிக்கும் பழக்கம் இல்லை ஆனால், வாசிக்கும் ஆர்வம் இருக்கிறது என்றால், தங்களின் பழக்கத்தை மிக எளிமையான நூலில் இருந்து தொடங்கலாம். இல்லையேல் அது கடினமாய்த் தான் இருக்கும். பிறருக்கு பரிசாய் நூல்களைக்கொடுக்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு நூல்களைப் பரிசளியுங்கள்.

எவன் ஒருவன் அதிகம் வாசிக்கிறானோ அவனால் தான் சபையில் சிறந்த முறையில் பேசவோ, சிறந்த நூல்களை எழுதவோ முடியும். இவ்விரண்டு ஆசைகள் உள்ளவர்கள் கட்டாயம் அதிகம் வாசியுங்கள்.

விதிவிலக்குகள் எல்லாம் எடுத்துக்காட்டுகள் ஆக. இது சராசரி தமிழ் மக்களின் நிலையினைக் கருத்தில் கொண்டு எழுதியது. 
மேற்கூறியவற்றைப் பற்றிய கருத்துக்களை விமர்சங்கங்களை வரவேற்கிறேன். 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

நன்றி.