Wednesday 15 August 2018

வரலாற்றை புரட்டிப்போட்ட கொள்ளைநோய்

உரோமப் பேரரசே ஒரு பாக்டிரீயாவால் தான் அழிந்தது என்றால் அது மிகையாகாது. ஆம்! கொள்ளைநோயொன்று மக்களையும் படைவீரர்களையும் கொத்து கொத்தாகக் கொன்று குவித்தது. அங்கு கி.பி. 541 இலிருந்து ஓரோண்டு காலத்திற்கும் மேலாக நோய் தொற்றி மக்கள் இறந்தனர். இதைப் பற்றி எழுதிய சமகாலத்து  வரலாற்று ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு 10,000 மக்கள் இறந்தனர் எங்கின்றன. அது மிகையென்றாலும் குறைந்தது ஒரு நாளைக்கு 5,000 மக்களாவது இறந்திருப்பர் எங்கின்றனர் இக்காலத்து வரலாற்று ஆசிரியர்கள். எது எப்படியானாலும் உரோமப் பேரரசில் மட்டும் 25 மில்லியன் மக்கள் அக்கொள்ளைநோயிற்கு பலியாகினர்.

அத்தோடு நிற்கவில்லை, தொடர்ந்த ஆண்டுகளில் ஐரோப்பாவில் இறப்புவிகிதம் இரட்டித்தது. உரோமைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி தாண்டி இலண்டன், வட ஆப்பிரிக்கா வரை இந்தக் கொள்ளை நோய் பரவியது. எகிப்தில் கி.பி. 542 இல் ஓர் கொள்ளைநோய் பரவியதாக அக்கால நூல்கள் சொல்கின்றன. அவை குறிப்பிடும் செய்தியைக் கொண்டு அதே கொள்ளைநோய் தான் அங்கும் பரவியிருக்கிறது என்று இனம் காண முடிகிறது. கி.பி. 1348-1350 வரையான காலக்கட்டத்தில் இலண்டனில் மக்கள் கொத்து கொத்தாக இறந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் இறந்திருக்கின்றனர். முன்னர் உரோமப் பேரரசில் நடந்தது போலவே இங்கும் அடுத்து அடுத்த நூற்றாண்டுகளில் நோய் பரவி மக்கள் இறந்திருக்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் 'Black Death' என்பர். கி.பி. 1666 இல் இலண்டனில் ஏற்பட்ட பெருந்தீ விபத்திற்கு பின்னரே இந்தக் கொள்ளை கட்டுக்குள் வந்திருக்கிறது.

என்ன செய்தியென்றால் நவீன மரபணு சோதனைகள் மூலம் நூற்றாண்டுகள் தாண்டி வந்த அத்தனை கொள்ளைநோய்களுமே ஒரே பாக்டீரியாவால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்திருக்கின்றன. ஆம், ஐரோப்பக் கண்டத்தையே கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டிப்படைத்த நோயிற்கு ஒரே பாக்டீரியா தான் காரணம். பல இடங்களில் இந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் புதைகுழியில் மிஞ்சிய மரபணுக்களைக் கொண்டு இதனை உறுதிபடுத்தியிருக்கின்றனர்.

இலண்டனில் இறந்ததில் குழந்தைகள், முதியவர் மட்டுமல்லாது 35 வயதிற்கு உற்பட்டவர்களும் அப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர். அதிலிருந்தே நோய் எவ்வளவு விரைவாக ஆரோக்கியமானவர்களிடமும் பரவி அழித்திருக்கின்றது என்பதை உணர முடிகிறது.

நிற்க! அந்த நோய்க்கிருமியின் பெயர் Yersinia pestis. இது பொதுவாக அணில் போன்ற சிறு பாலூட்டிகளிடம் காணப்படுவது. அவற்றை ஒருவகையான உண்ணிகள் (Oriental rat flea) கடிக்கும் போது அந்த உண்ணிகளின் வயிற்றுக்கு வந்தவுடன் இந்த பாக்டீரியா இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது. அந்த உண்ணியின் உடம்பில் இரத்தத்தை உறையச்செய்து அவற்றிற்கு மேலும் பசியெடுக்க வைக்கிறது. நோய்க்கிருமிகள் தாங்கிய உண்ணிகள் மனிதர்களைக் கடிக்கும் போது தான் சிக்கலே தொடங்குகிறது. மனிதர்களின் உடலுக்குள் வந்தவுடன் செல்களில் தங்களது வேலையைக் காட்டுகின்றது இந்த பாக்டீரியா. இயல்பாகவே நமது உடலில் வெள்ளையணுக்கள் தேவையற்ற போது இறந்துவிடும், ஆனால் அது உடலுக்கு தேவையான போது மட்டுமே. இந்த நோய்க்கிருமி, அக்குறுக்குவழியைப் பயன்படுத்தி வெள்ளை அணுக்களை தற்கொலை செய்து கொள்ள வைத்துவிடும். இப்படித் தான் நோய் தொற்று வந்ததும் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் கண்டு ஒரு சில நாட்களிலிலேயே நோய்வாய்ப்பட்டவர் இறந்துவிடுவார். இறப்பதற்கு முன்னர் இருமல் தும்மல் என்று நோயைப் பரப்பிவிட்டு பரலோகம் போய்விடுவார்.

மீண்டும் கதைக்கு வருவோம். இந்த நோய்க்கிருமி ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது என்று நெடுங்காலமாய் நம்பப்பட்டு வந்தது. உண்மையென்றால் இது சீனாவில் இருந்து பரவியது. ஆனால் இருசியா தாண்டி ஐரோப்பாவிற்குள் நுழைந்த பின்னரே அது கொள்ளைநோயாக உருமாறியிருக்கிறது. உரோமா என்னும் மக்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து போய் ஐரோப்பாவில பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியமர்ந்தவர்கள். சமூக பண்பாட்டு காரணங்களால் உரோமப் பேரரசில் இருந்த ஏனைய ஐரோப்பியர்களுடன் கலந்து இனப்பெருக்கம் செய்யவில்லை. பின்னாளில் அங்கு வாழும் இந்த இரு வகையான மக்களின் மரபணுக்களில் சில இந்த நோயிடமிருந்து தற்காத்துக் கொள்ள சடுதி மாற்றத்திற்கு (Mutations) உள்ளாகியிருக்கின்றன. ஆனால் இக்கிருமியின் பிறப்பிடத்தில் வாழும் சீனர்களிடமோ இந்தியர்களிடமோ இவ்வகை மரபணுக்கள் இல்லை.

இன்றுமே கூட இதே நோய்க்கிருமி உருசியாவில் சிறு பாலூட்டிகளிடம் காணப்படுகிறது. கேள்வி இதுதான், அவ்வகை மரபணுக்கள் இல்லாமல் எப்படி சீனர்களாலும் இந்தியர்களாலும் தங்களைக் காத்துக் கொள்ள முடிந்தது, ஐரோப்பியர்களால் முடியவில்லை? நிற்க! 'நம் முன்னோர்கள்' என்று தொடங்க வேண்டாம். இந்தக் கேள்விக்கான விடை அறியப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கிருமியின் மிக நெருங்கிய உறவினரான Yersinia pseudotuberculosis என்ற மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத ஒரு பாக்டீரியவின் மரபணுவுடன் இந்த நோய்க்கிருமியின் மரபணுவை ஒப்பிட்டு பார்த்ததில் இவை இரண்டும் 5000 ஆண்டுகளுக்கு முன்பே வெவ்வேறு உயிரினங்களாக பிரிந்துவிட்டன என்பது தெளிவாகிறது. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் இந்த நோய்க்கிருமியால் மனிதர்கள் யாரும் இறந்ததாகத் தெரியவில்லை. இந்த நோய்க்கிருமியிடம் இருக்கும் ஒரு புரதம்(Yersinia murine toxin- Ymt) தீங்கில்லாத அதன் உறவினரான இன்னொரு பாக்டீரியாவிடம் இல்லை. இந்தப் புரதத்தின் வேலை என்னவென்றால் இந்த பாக்டீரியா உண்ணியின் வயிற்றிற்குள் இருக்கும் போது அது செரிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வது. இந்த புரதத்தை கிமு 1000 வாக்கில் வேறொரு பாக்டீரியாவிடமிருந்து பெற்றிருக்கிறது. (மனிதர்களைப் போன்ற பாலூட்டிகளிலும் பிற உயிரனங்களிடமும் மரபணு இனப்பெருக்கத்தின் மூலம் மட்டுமே பகிரப்படுகிறது. ஆனால் நுண்ணுயிரிகளால் மற்றொரு நுண்ணுயிரியிடமிருந்தும் மரபணுக்களைப் பெறமுடியும் - lateral gene transfer).

ஆக இதுதான் கதை, அது நாள் வரை மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பே இல்லாமல் இருந்த இந்த பாக்டீரியா தீடிரென்று தன்னை ஒரு உண்ணியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மரபணு மாற்றத்திற்கு உள்ளாகிறது. அது தெரிந்தோ தெரியாமலோ மனிதருக்கு வந்தவுடன் கொள்ளைநோயாக மாறிவிட்டது. அதனால் தான் ஆசியர்களைக் கொள்ளாத அந்த நோய் ஐரோப்பியர்களைக் கொன்றிருக்கிறது. இக்கொள்ளை நோய் பரவியதற்கு திடீரென்று பரவத் தொடங்கிய எலிகள் முதலிய சிறு பாலூட்டிகள் தான் முக்கியக் காரணம். அவை ஏன் திடீரென்று பரவின என்ற கேள்விக்கான பதிலை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.

இந்த நெடிய கதை மூலம் சில பல பாடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை புறந்தள்ளிவிட முடியாது. ஹீலர் பாசுக்கர் போன்றோரின் பரப்புரைகளில் எவ்வளவு பொய் இருக்கிறது என்பதை உணர்வதற்கு இந்த ஒரு கதையைப் புரிந்து கொள்வதே போதுமான இருக்கும். என்ன பாடம் என்று வேறொரு நாள் விவாதிக்கலாம்.

Reference:

A Brief History of Everyone Who Ever Lived: The Stories in Our Genes by Adam Rutherford.

Tuesday 14 August 2018

நமர்

நமது உறவினர், சுற்றத்தினர், நமக்கானவர், நம்முடையவர்கள் எனப் பொருள்படும்படி ஒற்றைச் சொல் இல்லையே என்று நினைத்ததுண்டா?
பிறர் என்கிறோம். யார் அல்லாதோரெல்லாம் பிறர்?
நமரல்லாதோர் எல்லாம் பிறர்.
நமர் என்பது சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொல். நம்மவர் என்னும் பொருளில் வரும் ஒரு சொல்.
நாம் நமது நமர்.
யாவரும் கேளிர் எனப்பட்டதால் நமரெனும் சொல்லே வழக்கில் இல்லாமல் போயிற்றோ என்னவோ.

Sunday 12 August 2018

மேற்கை ஏற்காதே! வீழும் சூரியனே!

தீடிரென்று மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மீது எனக்குக் காதல் பெருக்கெடுக்கிறது.
பாகுபலியில் வரும் 'மேற்கை ஏற்காதே!' பாடலைப் படத்திலும் பின்னர் அதன் காணொளியை சிலமுறையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்பொழுது அப்பாடல் பிடிக்கவில்லை. பாடல் செந்தமிழாயும், காட்சி இந்தி மயமாயும் இருந்ததால் கொஞ்சமும் ஒத்துப்போகவில்லை என்று மனதிற்குப் பிடிக்கவில்லை.
இரண்டு நாட்களாக அப்பாடலின் வரியை மட்டும் கேட்டால் அவ்வளவு அழகான வரிகள். அநியாயமாக ஒரு நல்ல பாடல் அப்படத்தில் வீணடிக்கப்பட்டுவிட்டதே என்று தோன்றியது. கார்க்கியின் கவிதை மீது காதல் பெருக்கெடுக்க அப்பாடல் மட்டும் காரணமில்லை. அதன் தெலுங்கு வடிவத்தைக் கேட்டுப் பார்த்தேன். நுணுக்கமாய் கார்க்கி பாடலில் செய்திருக்கும் மாற்றமே அதற்குக் காரணம்.
தெலுங்குப் பாடலோ மன்னனைப் பார்த்து அடிமையாய் இருக்கும் மக்கள் பாடுவது போல இருக்கிறது. ஆனால் தமிழிலோ தலைவனைப் பார்த்து மக்கள் வாழ்த்துவது போல இருக்கிறது. 'கடவுளைப் போல எங்களைக் காப்பவன்' என்னும் வரிக்குப் பதிலாக 'மழையெனப் பெய்யய்யா!' என்று மாற்றியிருக்கிறார். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று பாடிய தமிழ்ப்புலவர் வழி நின்றல்லவா பாடியிருக்கிறார். 'என் மன்னன் நீயே' எனும்படி வரும் வரியைக் கூட 'என் சிந்தை நீயே' என்று மாற்றிவிட்டார்.
முதல் வரி சொல்லவே வேண்டும். மறைந்துவிட்ட சூரியனை எழச்செய்யும் தெலுங்கு வரிக்கு மாற்றாய் 'மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே' என்று பாடியிருக்கிறார். அப்பாவையும், மகனையும் கூட ஐயா என்றழைப்பர். இப்பாடல் முழுக்க தலைவனை உரிமையாய் பாசத்தோடு அமைந்த வரிகள் தான்.
இப்பொழுது புரிகிறது ஏன் இப்பாடல் அக்காட்சி அமைப்புக்கு ஒவ்வவில்லை என்று. பிற்போக்குத்தனமான பாடலுக்கு முற்போக்கான வரிகள். சொல்லுங்கள் கார்க்கி எந்தத் தலைவனை மனதில் நினைத்து நீங்கள் எழுதிய பாடல் இது? நிச்சயம் பாகுபலி இல்லை.

Saturday 11 August 2018

சங்க இலக்கியக் காதல் - கைகூடிய திருமணம்

சில (8) மாதங்களுக்கு முன்பு 'யாரு மில்லைத் தானே கள்வன்' என்று தொடங்கும் சங்க இலக்கியப் பாடல் ஒன்றைப் பற்றி விரித்து எழுதியிருந்தேன். மறுநாள் என் உற்ற நண்பன் எனக்கு தமிழும் ஆங்கிலமும் கலந்து உணர்ச்சி பொங்க எழுதிய தனிமடலின் சுறுக்கத்தை தமிழில் எழுதுகிறேன்: 'சுபா! குருகு சாட்சிக்கு நின்ற பாடலைப் படித்ததும் மனம் என்னவோ செய்தது. எனது காதலில் என் பக்கச்சிக்கலையே எண்ணிக் கொண்டிருந்தேன். என் காதலி மணம் புரிவதைப் பற்றிப் பேசும் போதெல்லாம் என் சிக்கல்களே கண் முன் வந்து போகும். ஆனால் அப்பாடலைப் படித்த பின்பு தான் அவள் படும் துயர் எவ்வளவு என்று உணர்ந்தேன். அச்செய்யுளின் தலைவிக்காவது சாட்சி சொல்ல குருகு இருந்தது. ஆனால் நான் என் காதலியை மணந்து கொள்ளவதாய்ச் சொன்ன அன்று, அங்கே குருகும் கூட இல்லை. அவளின் துயர் இன்னும் எவ்வளவு பெரிதாய் இருக்கும். அவள் அப்பாவிடம் இன்று தான் பேசினேன், நாளை அவளது வீட்டிற்குச் செல்கிறேன்.'

8 மாதகாலப் போராட்டத்திற்கு பிறகு நேற்று மீண்டும் அழைத்து தனது திருமணம் கைகூடியது என்று அவன் சொன்ன போது கண்கள் கலங்கிவிட்டது. மணம் கூடிய செய்தி அவன் காதலிக்கு எவ்வளவு உவப்பாய் இருந்திருக்கும்!!

இதோ தலைவன் தன் சுற்றத்தை அழைத்துக் கொண்டு மணம் பேச வருகிறான், தன் வீட்டார் சம்மதிப்பரோ என்று ஐயுற்றிருந்த தலைவியிடம் அவளது தோழி 'உன் வீட்டாரும் சம்மதித்தனர்' என்று கூறும் ஒரு குறுந்தொகைப் பாடல்.

'வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
- அம்மூவனார்.'

எளிய உரை:
இங்க பாருடி! உன் ஆளு அவன் சொந்தத்தோட வந்து உன்ன பொண்ணு கேட்டாங்க, உங்க ஆளுங்களும் சரினு சொல்லிட்டாங்க. இனி ஊர்ல யாரு உங்களப் பத்தி பொறணி பேசறாங்கனு பார்ப்போம்.

நீண்ட உரை:

வளையள்கள் அணிந்த பெண்ணே! நான் மகிழ்ந்திருக்கிறேன். ஏன் தெரியுமா? வளையில் வாழும் விரைந்து ஓடும் வலிய கால்களையுடைய நண்டுகள் தங்கள் கூர்மையான நகங்களால் கீறி ஈர மணலில் ஓடும் ஊற்றினை சிதைக்கின்றன, அத்தகைய கரையை உடைய இழும் இழும் என்று பேரொலி எழுப்பும் கடலை உடைய நெய்தல் நிலத் தலைவனுக்கு நம் உறவினர் உன்னை மணம் முடிப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளனர். விரிந்த பூக்களை உடைய புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்த மீன் வாசம் அடிக்கும் ஊரில் வாழும் அவனது நாட்டுப் பெண்கள் எல்லாம் இனியும் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுவார்களோ?

கொஞ்சம் ஆராயலாம்:
பல உரைகள் பலவிதமாய் சொற்களுக்கு பொருள் தருகின்றன. வளை என்பதற்கு வளைந்த என்றும், மலிர் என்பதற்கும் பலவாறு விரித்துப் பொருள் கூறுகின்றன. ஆனால் என்னால் அவற்றோடு உடன்பட முடியவில்லை. அதனால் கொஞ்சம் நான் கொஞ்சம் மாற்றிப் பொருள் கொண்டு படிக்கிறேன்.

"விரைவுறு கொடுந் தாள் அளை வாழ் அலவன்"  அலவன் என்றால் நண்டு. விரைந்து ஓடக்கூடிய வலிமையான கால்களையுடைய வளையில் வாழும் நண்டு. இது தலைவின் நிலையை உணர்த்துகிறது. அவளது மனம் வலிமையாய் இருக்கின்றது, தலைவனை நினைத்து நித்தமும் அலைந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் வீட்டில் (வளையில்) அடைபட்டுக்கிடக்கிறது.

"இழுமென உரும் இசைப் புணரி உடைதரும்" புணரி என்றால் கடல். இழும் இழும் என்று பேரொலியை எழுப்பும் கடலையுடைய நாட்டின் தலைவன். இந்தக் கடலின் இழும் இழும் என்னும் ஒலியைப் போலத் தான் அவளைப் பற்றி அவர்கள் நாட்டு மக்கள் பேசும் வசையும் அவள் காதில் பேரிடியாய் விழுகிறது. அதனால் தான் அவள் மனமும் மேலே சொன்னது போல நண்டாய் அங்குமிங்கும் அலைமோதுகிறது. அப்பெரிய கடலில் இச்சிறிய நண்டு என்ன செய்யும் பாவம்?

"அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய," உகிர் என்றால் நகம். சிறிய நண்டினால் கடலை எதிர்த்தும் அதன் கரையை எதிர்த்தும் என்ன செய்ய முடியும்? அந்த நண்டு தன் கூரிய நகத்தினால் ஓடுகின்ற ஊற்றின் ஈர மணலை வரித்து வரித்தே புரட்சி செய்கிறது. தன்னால் இயன்ற வரை போராடுகிறது. இது தலைவியின் மனநிலையையும், தலைவன் போராடி இருவீட்டாரையும் திருமணத்திற்கு ஒப்புதல் தர வைத்தலையும் குறிப்பாக அழகாகச் சொல்கிறது.

"விரிஅலர்ப் புன்னை"- விரிந்த மலர்களையுடைய புன்னை என்றிருக்கலாம் புலவர். ஆனால் மலர்ந்த என்பதற்கு அலர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அலர் என்பதற்கு காதலர்களைப் பற்றி ஊரில் நான்கு பேர் நான்கு விதமாய்ப் பேசும் வசவு என்ற பொருளும் உண்டு. இவ்வரி அவர்களைப் பற்றிய அலர் பேச்சுக்கள் எப்படி ஊரில் விரிந்து ஓங்கிப் பெருகியிருக்கிறது என்று காட்டுகிறது.

சொல்ல வந்ததை இழுத்து மெதுவாய்ச்சொன்னாலும், தொடக்கத்திலேயே தான் மகிழ்ந்திருப்பதை தோழி சொல்வது, சொல்லி முடிப்பதற்குள் அவள் படப்போகும் துயரைக் குறைப்பதற்கானது. 

ஒவ்வொரு சொல்லிலும் அவ்விணை எவ்வளவு துயரங்களையும் அவப்பேச்சுக்களையும் தாண்டி மணம் புரிகின்றனர் என்பதை ஆழமாய்க் காட்டியிருக்கிறார் புலவர்.

என் நண்பனுக்கு!
உன் திருமணச்செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியினை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பதிவு பிடிக்கவில்லை என்றால் மன்னித்துவிடு!