Wednesday, 29 March 2017

மொசலடி (பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள்) - 2

இரண்டாடுகளுக்கு முன்பு நத்தமண்டலம் என்னும் பாம்பைப் பற்றி ஊருக்குள் பலரிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் மாமாவுடன் மாமா சொன்னது இது தான். " முன்பெல்லாம் நத்தமண்டலம் அடிக்கடி வரும். இப்பெல்லாம் அதைக் காணோம். மொசலடி, வரிச்சாளினு வேட்டையாடிகளும் வர்ரது இல்லை. கோழி பத்துக்குஞ்சு பொறிக்கும். மொசலடி தூக்கிடும்னு கண்டா விரட்டுவோம். இப்ப மொசலடியும் காணோம், கோழியும் நாலு அஞ்சு குஞ்சு தான் பொறிக்குது. அன்னைக்கு மொசலடி கிட்ட தப்புன குஞ்சுகளை விட இன்னைக்கு பொறிக்கற குஞ்சுகளே குறைவு தான்" என்றார். அது என்ன மொசலடி என்று கேட்கத் தொடங்கிய போது எனது வாழ்வில் பறவைகள் நோக்கும் படலம் தொடங்கியது. அது வரை எனக்குத் தெரிந்த பறவைகளில் எனது மாமா சொன்னதைப் போன்று எந்தப்பறவையும் இல்லை. அதனால் மொசலடியைத் தேடத்தொடங்கினேன்.

அப்பாவிடம் கேட்டால் " தெரியும் பார்த்திருக்கேன் என்றார்", அம்மா "ஓ! அந்த வார்த்தை தெரியுமே" என்றார். சென்ற தலைமுறையில் யாரிடம் கேட்டாலும் மொசலடி தெரியவில்லை என்றாலும் அச்சொல் பரிச்சயமானது என்பதாகவே பதிலுரைத்தனர். எப்படி ஊருக்குள் மொசலடி என்னும் சொல்லையே அதுவரை கேட்காமல் போனேன் என்று வியப்பாய் இருந்தது. பறவைகள் பார்க்கத் தொடங்கிய பிறகு இது என்ன பறவை என்று எளிதாய் தெரிந்துவிட்டது. ஒருமுறை பறவை பார்த்துக்கொண்டிருந்த போது அப்பா என்னிடம் " அதோ பறக்குது பார். அது தான் மொசலடி" என்றார். Black Winged kite என்னும் வேட்டையாடியைத் தான் இப்பெயர் கொண்டு அழைக்கின்றனர். வேறு எந்த இடத்திலும் அப்பருந்துக்கு மொசலடி என்றோ அதற்கு ஒத்த பெயரோ குறிப்பிடப்படவில்லை. இணைய வெளியில் கேட்ட வரையிலும் யாருக்கும் அது என்ன பறவை என்று உறுதியாகத் தெரியவில்லை. அன்று என் அப்பா காட்டிய போது கூட சற்றே ஐயமாகத் தான் இருந்தது, அடிக்கடி பார்க்க முடிகிற பறவை, அப்படியும் எப்படி இந்தப் பெயர் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது என்று புரியவில்லை. பின்னர் நிறைய முறை ஊரில் பறவைகள் பார்க்கும் போது, சென்ற தலைமுறைக்காரர்கள் எல்லாம் என்னிடம் " அதோ! அங்க மொசலடி பறக்குது பார்" என்பர். பின்னர் தெளிவாகவே மொசலடி என்று அவர்களால் குறிக்கப்பெறுவது Black Winged Kite என்று தெரிந்தது.

Black Winged Kite/ மொசலடி

பெயர்க்காரணம்:

இன்று தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் பெரும்பாலான பறவைகளின் பெயர்கள் அதன் உருவமைப்பையும் நிறத்தையும் பொருத்தே இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல பெயர்கள், இப்படி உருவ அமைப்பைத் தாண்டி அப்பறவையின் (விலங்கின்) பண்பையும் வலிமையையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இது ஒரே நாளில் மொழிபெயர்த்து வழங்கிய பெயராக இருக்க முடியாது, அப்பெயர் மக்கள் வழக்கில் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.
மொசலடி - மொசல் + அடி. மொசல் என்றால் முயல். முயலடி என்பதே மொசலடி என்று திரிந்திருக்கிறது. இப்பறவை உருவத்தில் சிறியது. (35-38 செ.மீ, சராசரியான எடை 291கி). மற்ற வேட்டையாடிகளையும் விட மிகச்சிறியது. கிட்டத்தட்ட சொல்ல வேண்டுமானால் ஒரு முயலின் அளவு தான் இருக்கும், முயலை விடவும் எடை மிகக்குறைவாக இருக்கும். தன்னினும் அதிக எடை கொண்ட முயலை ஒரே அடியில் வேட்டையாடும் திறன் கொண்டது. அதனால் மக்கள் வழக்கில் மொசலடி எனப்பட்டது. அன்றைய மக்களின் அளவுகோல்கள் இவை தான் மழையை உழவால் அளந்தனர். பறவையின் வலிமையை அது இரையாடும் இரையைக் கொண்டு அளந்திருக்கின்றனர். இவ்வகையாக பெயரைக்கொண்டே அப்பறவையின் பண்பையும் உருவையும் வலியையும் இணங்காணுதல் அவர்கட்கு எளிதாய் இருந்திருக்கிறது.

இப்பெயர் பலருக்கும் கேள்விப்படாத பெயராக இருக்கலாம். ஆனால் இவ்வகையான பெயர்கள் வழக்கில் இருந்திருக்கின்றன. தஞ்சை வட்டார வழக்கில் சிறிய வேட்டையாடிகளுள் ஒன்றை "பொறாவடி/ பொறாடி" என்று குறிப்பிடுவதாக பறவை ஆர்வலரான நண்பர் பாண்டியன் ஒருமுறை கூறினார். புறா + அடி = புறாவடி என்பது திரிந்து பொறாவடி என்றாகியிருக்கிறது.

Osprey/ விராலடிப்பான்

அதே போல Osprey எனப்படும் மீன் பிடிக்கும் பறவையை விராலடிப்பான் என்கிறார்கள். இந்த விராலடிப்பான் மீன் வேட்டையாடும் காணொளிகளைப் பார்த்தால் நமக்கு இப்பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துகிறது என்பது தெரியும். பறந்து கொண்டிருக்கும் போதே தன் இரையான மீனைக் கண்டதும் வேகமாக நீரில் பாய்ந்து இருகால்கள் கொண்டு மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்து மேலெழும்பிப் பறக்கும். இப்பறவை மற்ற மீன்களை வேட்டையாடினாலும் குறிப்பாக ஏன் விரால் மீனின் பெயரையொட்டி விராலடிப்பான் என்று பெயர் பெற்றது எனத் தெரியவில்லை. ஆனால் இரைகொண்டு பறவைகளுக்கு இதுபோன்ற பெயர் வைக்கும் வழக்கம் பரவலாக இருந்திருக்கிறது. இலக்கியங்கள் எதிலும் மொசலடி/Black Winged kite பற்றிய குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

Black Winged Kite/ மொசலடி

படங்கள்:
1. பறவை ஆர்வலர் அரவிந்த் அமிர்தராஜ் அவர்கள் எடுத்த மொசலடியின் படம். (Black Winged Kite, Sollinganallur, Chennai)
2. கரீபியத் தீவுகளில் நான் எடுத்த விராலடிப்பானின் படம். (Osprey, CocoCay, The Bahamas)
3. எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் நல்லதங்காள் ஓடை நீர்தேக்கத்தின் அருகில் நான் எடுத்த மொசலடியின் படம். (Black Winged Kite, Nallathangal Check Dam, Dharapuram (Tiruppur Dt))

Tuesday, 28 March 2017

பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள் - 1

இக்கட்டுரையில் குற்றம் குறையிருப்பின் குறிப்பிடுங்கள்.

நாம் இன்று மனித வரலாற்றின் ஒரு முக்கிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம் என்றே தோன்றுகிறது. எத்தகைய காலக்கட்டம் என்றால் நாம் பார்த்து வளர்ந்த பறவைகள், விலங்குகள், செடிகள் கூடவே மொழிகளும் அழியும் காலக்கட்டம். பத்தாண்டுகளுக்கு முன் நம்மில் பலரும் சிட்டுக்குருவி அருகிவிடும் என்று கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால் இன்று பல இடங்களில் அது அற்றுப்போய்விட்டது. கிட்டத்தட்ட பல உயிரனங்கள் நமது பகுதிகளில் அற்றுப்போய் சில ஆண்டுகள் கழித்துத் தான் அவை அற்றுப்போய்விட்டன என்றே நமக்குத் தெரியும். பறவைகள் பற்றி, ஊர்வன பற்றி பேசும் போது பலரும் " ஆமா பா.. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு அடிக்கடி கீறிப்பிள்ளையெல்லாம் வரும். இப்ப அத பார்த்தே ஏழெட்டு வருசம் ஆச்சு" என்பார்கள். நீங்களும் கூட சிந்திக்கலாம், கடைசியாக நீங்கள் உங்கள் வீட்டருகில் ஓணானை என்று பார்த்தீர்கள் என்று. நாளையும் அவற்றைப் பார்ப்போமா? தெரியவில்லை. ஆனாலும் நாம் சில பறவைகளையும் விலங்குகளையும் அதிகமாகப் பார்க்கத்தொடங்கிவிட்டோம். புறாக்கள்.. எலிகள்... தெரு நாய்கள்... இது உயிர்கள் அழியும் காலக்கட்டம் என்பதை விட "பல்லுயிர்த் தன்மை" அழியும் காலக்கட்டம் என்பதே சரி. நிற்க..

நாம் இன்று நமது மொழியின் முக்கியமானதொரு காலக்கட்டத்தில் இருக்கின்றோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. எத்தகைய காலக்கட்டம் என்றால் நாம் கேட்டுப் பழகிய சொற்கள் பலவும் அழியும் காலக்கட்டம். சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் வீட்டில் குளியலறையை நீங்கள் வேறேதேனும் சொல் கூறி வழங்கியிருக்கலாம், காட்டாக, நாங்கள் "பொடக்காலி" என்றோம். உண்மையில் இது தமிழில் தமிழ் இலக்கண மரபையொட்டித் தோன்றிய ஒரு சொல். எவ்வளவு நாட்களாக வழக்கில் இருந்தது என்று தெரியாது. ஆனால் இன்று இல்லை. அது எப்படி வழக்கொழிந்து போனது என்றும் தெரியாது. ஆனால் அது நாகரிகம் கருதி "Bathroom" ஆகி, பின்னர் மொழிப்பற்று கருதி "குளியலறை" ஆகிவிட்டது. இப்படியே போனால் ஆயிரம் நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த சொற்கள் சுவடில்லாமல் அழிந்து போய்விடுமே.

பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் ஐயா ஒருமுறை எழுதியதாவது "பாலூட்டி விலங்குகள் 5,416 உள்ளன. உலகில் ஏறத்தாழ 7000 மொழிகள் உள்ளன... அப்படி அவை இரண்டையும் சுட்டிக்காட்ட ஏதும் உட்பொருள் உள்ளதா எனக் கேட்டால். In the next century or so only about some 100-200 languages would survive, it is said. Even among mammals the numbers can be decimated. I just wanted to point out that these (languages and mammals) are only in just a few thousands and they may dwindle down to a few hundreds (both mammals and human languages). Speakers of each language is a community, just like each mammal with its members. When a language dies, it is like a mammal species had become extinct. Rats may be 7 billion but if all the animals on the planet are only just rats, imagine how it would be. If the only flower on planet earth is rose imagine how it would be. Language diversity, animal and plant diversities are all vital. " அவர் அழிந்து வரும் பாலூட்டிகளையும் மொழிகளையும் ஒப்புமை படுத்தியிருந்தார். இதே போன்றதொரு ஒப்புமையை நான் நமது மொழிச் சொற்களுக்கும் நம் மொழி வழங்கி வரும் பகுதிகளுள் வாழும், வாழ்ந்த உயிர்களுக்கும் ஏற்றிக்கூற நினைக்கிறேன்.

நமது மொழியில், நமது மொழி வழக்கில் இருக்கும் பகுதிகளில் வாழும் உயிரனங்களுக்கெல்லாம் பெயரிருக்கும். பெயரென்றால் சும்மா நாம் இட்டுவிடுவதான பெயர்கள் அல்ல. அவை பல நூற்றாண்டுகள் கழிந்த போதும் மக்கள் வழக்கில் வேரூன்றியவை. சங்க இலக்கியங்களில் வரும் பல விலங்குகளின் பெயர்கள் இன்றும் அவ்வாறே வழக்கில் இருக்கின்றன. இது பல பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் உயிர்களின் தொடர்ச்சியைப் போன்றதொரு தொடர்ச்சி. "இவ்வளவு நாட்கள் வழக்கில் இருந்த சொற்கள் இப்பொழுது மட்டும் எப்படி வழக்கொழியும்? மக்கள் வழக்கில் நில்லாமல் போகும் சொற்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கேட்கலாம். பல பில்லியன் ஆண்டுகள் கோலோச்சிக்கொண்டிருந்த உயிரினங்கள் இன்று மனிதனின் வளர்ச்சி மோகத்தால் அழிந்து வருகின்றன. அதற்குக் காரணம் அவை வாழத் தகுதியற்றவை - தக்கது தானே பிழைக்கும் - என்ற காரணம் அல்ல. மனிதனின் மடத்தனம். அதே போலத் தான் இச்சொற்களும், தமிழர்களின் பிறமொழி மோகத்தாலும், வளர்ச்சி, மொழி மேன்மை பெருகிறது என்ற காரணங்களாலும்அழிந்து வருகின்றன. எப்படி இன்று விட்டால் பல்லுயிர்களை நாளை நாமே நினைத்தாலும் மீட்டெடுக்க முடியாதோ அதே போல இன்று விட்டால் இச்சொற்களைப் பேசுவோர் இல்லாமல் அது அருகி அழிந்துவிடும், மீட்க இயலாது.

இப்படி தமிழ்மொழிச்சொற்களையும் உயிரனங்களையும் ஒப்புமை படுத்த முக்கியக் காரணம், உயிரனங்களுக்கான தமிழ்ப்பெயர் தான். மற்ற சொற்களைக் காட்டிலும் இச்சொற்கள் விரைவாக அழியக் காரணம் அவ்வுயிரினங்களும் அழிவதே. முன்னர் எல்லாம் உயிர்வேலிகள் இருக்கும். அவற்றில் பல செடிகொடிகள் இருந்தன. இன்று உயிர்வேலிகளே அற்றுப்போகும் நிலையில் அவ்வேலியில் இருந்த செடிகளின் பெயர்கள் மட்டும் எப்படி நம் வழக்கில் நிலைத்திருக்க முடியும். மீறிப்போனால் பிரண்டை, மொடக்கத்தான் என்று இரண்டு மூன்று செடிகளின் பெயர்களை நம்மால் சொல்லவியலும். மீதமிருந்தவை? அவற்றின் பெயர்கள்? அதில் சில செடிகளைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு மொழித்தொடர்ச்சி, பல பில்லியன் ஆண்டுகள் உயிர்த்தொடர்ச்சி, இன்று எல்லாமும் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கின்றன.

வேதனை என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூலில் தான் வாழும் நிலம் பற்றியும் எந்த எந்த நிலங்களில் எந்த எந்த பறவைகள் வாழும் என்றும் எழுதி வைக்கப்பட்ட ஒரு மொழியில், நூற்றுக்கும் மேற்பட்ட பூக்களின் பெயர்களைத் தொகுத்து வைக்கப்பட்ட ஒரு மொழியில், அகவாழ்க்கை புறவாழ்க்கை என்று எல்லாவற்றையும் குறிக்கும் போது சுற்றி வாழும் காட்டுயிர்களைப் பற்றியும் சேர்த்து எழுதி வைத்தவர்களின் மொழியில் இன்று அச்சொற்கள் அழிவது தான்.  நான் கேட்டறிந்த சில சொற்களையேனும் பதிந்து வைக்க வேண்டும், பின்வரும் சங்கதிகள் படித்துத் தெரிந்துகொள்ளட்டும் என்று தான் சிலவற்றை சேகரித்து எழுதுகிறேன். உங்களுக்குத் தெரிந்தவற்றையும் பதிவிடுங்கள்..

(எனக்குத் தெரிந்த பறவைகள் விலங்குகளின் தமிழ்ப்பெயர்கள் பற்றி இவ்விழையில் தொடர்ந்து எழுதுகிறேன். ).

Wednesday, 22 March 2017

நீயா நானாவும் திருமணக் கனவுகளும் ஆண்டாளும்.

ஒரு பொண்ணு உலங்குவானூர்தி கேட்டுருச்சுனு என்ன கலாய் கலாய்க்கிறோம். இத விட ஒரு பொண்ணு நிறைய கேட்டிருக்கு. வாங்க அந்தப்பொண்ணையும் கலாய்க்கலாம்.
யாருடா அந்தப் பெண்ணென்று போன்மி (meme) இயக்குனர்கள் எல்லாம் கான்செப்ட் யோசிக்கிறீங்களா? அந்தப் பெண் நம்ம ஆண்டாள் தான். அதாங்க நம்மூர் திருமண அழைப்பிதழ்களில் எல்லாம் ஒரு நாலு வரி எழுதுவாங்களே, அந்தப்பாட்டுல..
"மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்"
இந்த நாலு வரிய திருமண அழைப்பிதழில் பார்த்த ஒருவருக்குக் கூடவா ஆண்டாளின் திருமணக் கனவுகள் பேராசையாகத் தோன்றவில்லை?
ஆரம்பமே அமர்களமா இருக்கும். "வாரணம் ஆயிரம் சூழ" ஆயிரம் யானை சூழ்ந்து தலைவன் வருகிறனாம். Helicopter எல்லாம் சும்மா சுசுப்பி..
அடுத்து கேளுங்கள் "பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்ட" நூறு பவுனுக்கு ஒரு பொண்ணு ஆசைபட்டதுக்கே அசந்துட்டா எப்படி, வெளியில் உள்ள இடங்களில் எல்லாம் பொற்குடம் வைத்து தோரணம் கட்டுவது போல் கனவு காண்கிறாள். "முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்" சும்மா வெறும் தென்னங்கீற்றில் செய்த பந்தல் எல்லாம் இல்லை. முத்தால் அலங்கரிபட்ட பந்தலின் கீழ் தான் தலைவனை அவள் கரம்பிடிக்க கனாக் காண்கிறாள்.
கண்ணகியின் திருமணத்தை ஊராருக்கு அறிவித்த படலத்தை நீங்கள் பள்ளியில் படித்திருப்பீர்கள். ஒரு பக்கம் பண்பாடு " தமிழ் பெண்கள் என்றால் இந்த உடை தான் அணிய வேண்டும்" என்று சொல்லும் பல இளவட்டங்களும், இதெல்லாம் நம் இலக்கியத்தில் இருக்கின்றன என்று கூடத்தெரியாமல் இருக்கின்றனரா?
இது போன்ற திருமணக் கனவுகள் பற்றிய பாடல்கள் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் ஏராளம். கனவு, Fanatsy என்றெல்லாம் சொல்லும் போது இப்படியாகத் தான் பெண்கள் திருமணக் கனவுகள் காண்பதாய் சித்தரித்து வைக்கின்றோம். இந்த நீயா நானா தொடர் கூட அப்படித் தானே தொடங்குகிறது? அவர்கள் கற்பனைக்குதிரைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். உடனே அதில் வந்த வானூர்தியைப் பிடித்துக் கொண்டு அப்பெண்ணைக் கலாயோ கலாய் என்று கலாய்கிறார்கள். இதே கலாய்க்கும் பேருள்ளங்கள் தான் "காற்று வெளியிடை" படத்தின் பாடல்களைப் பார்த்துவிட்டு, வாயைப் பிளந்து கொண்டு "கார்த்தி helicopter ல வந்து அவளைக்கூட்டிட்டு போறாருல.. சூப்பர்ல.. மணி சார் மணி சார் தான்" என்று உருகியது. இயக்குனர்கள் மணிரத்தினமும், சங்கரும் இப்படியெல்லாம் கற்பனை செய்து காசைக்கொட்டி படமெடுத்தால் ஆகா ஓகோ என்பீர்கள். யாரோ ஒரு பெண் நீயா நானாவில் பேசினால் உடனே உலகமே உங்கள் வீட்டு வாசல் முன் தான் அழிவது போல கூப்பாடு போடுவீர்கள்.
இல்லை கேட்கிறேன், உங்களது நட்பு வட்டத்தில் உறவுகளில் இதுவரை ஒரு வேலைக்குப் போகாத பையன் கூட " எனக்கு பைக்கு வாங்கிக் கொடு, கேமரா வாங்கிக்கொடு" என்று பெற்றோரை உயிரை எடுத்துப் பார்த்ததில்லையா. தலைவன் வேலைவெட்டியில்லாமல் வண்டியில் அப்பா காசில் ஊர் சுற்றினால் அது Road Trip, அதெல்லாம் கணக்கில் கூட வராது. ஆனால் ஒரு பெண் அவங்க அப்பா கிட்ட வண்டி கேட்ட உடனே " அவள படிக்க வச்சாங்களே, அப்பா அம்மாவ இப்படியா துயரப்படுத்துவது" என்று கிளம்பிவிட வேண்டியது. அதற்கும் நீயா நானா மாதிரி பொதுவெளியில் கேட்பதா என்று நீங்கள் கேட்டால், மேலே இருந்து நான் எழுதியதை மீண்டும் படியுங்கள். இலக்கியங்கள், திரைப்படங்கள் எல்லாம் பொதுவெளியில் தான் இருக்கின்றன, அவை நம் கண்களை உருத்தாத போது இந்த நிகழ்வில் பேசிய ஒன்றிரண்டு பெண்கள் மட்டும் உங்கள் கண்களை உருத்துகின்றனர் என்றால் உங்களுக்கு ஏதோ " selective meme creating and sharing syndrome" ஆக இருக்கக்கூடும்.
காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியரை சாலையில் வைத்து வெட்டுகிறார்கள், அந்தப்பெண் கதறி அழுகிறாள். அன்று பலரும் சொன்ன வார்த்தை " அவங்க குடும்ப பிரச்சனை. அந்தப் பொண்ணு பெத்தவங்க பேச்சைக் கேட்கனும்ல. அவங்க பொண்ணு அவங்க என்னமோ செய்யட்டும், அதைப்பற்றி நாம என்ன சொல்ல" என்று அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாத உத்தமர்கள் எல்லாம் ஏதோ அந்தப்பெண்கள் உங்களிடம் வந்து உங்கள் காசில் வாங்கிக்கொடுக்க சொன்னது போல குமுறுகிறீர்கள். அவர்கள் பெற்றோர் அவர்கள் பாடு என்று போக வேண்டியது தானே. உடனே இவர்கள் எல்லாம் மற்ற பெண்களுக்கு தவறான எடுத்துக்காட்டுகள் இல்லையா என்று கிளம்பாதீர்கள்.. மேலே சொன்னதை மீண்டும் படியுங்கள். பல திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டதில் இல்லாத எடுத்துக்காட்டா இந்த நீயா நானாவில் இருக்கிறது?
"நல்ல பையன்" வேண்டும் என்று அவர்கள் யாரும் சொல்லவில்லை என்று சிலர் நொந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியின் போக்கே முழுக்க முழுக்க உறவுகள் தாண்டி, கற்பனையில் மிதப்பதைப் போல திருமணம் எவ்வளவு ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பதாக நகர்கிறது. இது அந்த ஓட்டத்திற்காகவே எடுக்கப்பட்ட நிகழ்ச்சி, இதில் பையனின் குண நலங்கள் பற்றியெல்லாம் எப்படி வரும்?
மேலும் இந்த நல்ல பையன் வேண்டும் என்று கேட்டிருக்கலாம் என்று சொல்பவர்கள் "நல்ல பையன்" வேண்டும் என்று சொல்லும் பெண்களுக்கு வேறு சாதி, வேறு மதம், வேறு நாடு, வேறு மொழி எல்லாம் கடந்த நல்ல பையனா, இல்லை அதெல்லாம் தவிர்த்த நல்ல பையனா, பெற்றோர் பார்த்து வைக்கும் நல்ல பையனா, காதலிக்கும் நல்ல பையனா, இதெல்லாம் பெற்றோருக்கும் ஒத்துவருமா என்று விளக்கமாக Disclaimer போட்டு சொல்லிவிட்டால் "நல்ல பையன்" கேட்கும் பெண்களுக்கு வசதியாக இருக்கும்.
இந்த மாதிரி பெண்கள் கேட்பதால் தான் "பல ஆண்களுக்கு பெண் கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை" என்று யாரும் நினைத்துவிட வேண்டும். Chennai Pasanga Daஅட்மின் போன்ற சென்ற தலைமுறை மக்களுள் சிலர் பெண்பிள்ளைகளைக் கருவில் கொன்றதாலும், கள்ளிப்பால் ஊற்றிக்கொன்றதாலும் தான் இன்று திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பதில்லை.
கடைசியாக, நீயா நானா இயக்குனருக்கு! Zee Tamil தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியைப் போல அடுத்தவர்கள் குடும்பங்களை குடைந்து குதறி இப்படி நிகழ்ச்சி எடுத்து சில பெண்களைத் தரைகுறைவாகக் காட்டி TRP ஏற்றாமல் கொஞ்சம் நல்ல நிகழ்ச்சிகளை இயக்கி வழங்குங்கள்.
பி.கு: நான் இந்த பெண்களை தரகுறைவாக எழுதும் மீமி இயக்குனர்களுக்கும் அதைப் பகிர்பவர்களுக்கும் மட்டும் தாங்க எழுதுனேன், மற்றபடி எனக்கு நாச்சியார் திருமொழி பிடிங்குங்க.

Tuesday, 21 March 2017

குழம்பிய தலைவன், குழப்பத்தைக் குழப்பமாகவே விட்டுவிட்ட கவிஞன்

காதலை ஒருவன் ஒன்றே முக்கால் அடியில் சொல்லக் கிளம்புகிறான். அவனுக்கு மொழியென்பது எவ்வளவு கைகூட வேண்டும்! அவன் பயன்படுத்தும் சொற்கள் எவ்வளவு பொருள் பொருந்தியதாக இருக்க வேண்டும். சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு ஒரு கவிதை எழுதிட முடியுமா.. ஆழ்ந்த பொருள் தரும் சொல் தேடி எழுத வேண்டுமே.. வள்ளுவன் எழுதுகிறான்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

தலைவன் புலம்புகிறான்.. அவன் நெஞ்சு யாரைக் கண்டு மயங்குகிறது என்றே தெரியாமல் தலைவன் புலம்புகிறான். " சரிப்பா தம்பி யாரைப் பார்த்து உன் நெஞ்சு மயங்குது?" என்று கேட்டாலும் அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் சொல்ல முற்படுகிறான்.

"அணங்கு  போன்றவளோ, மயில் போன்றவளோ, ஆடும் காதணிகள் அணிந்த அழகிய பெண் போன்றவளோ, சொல்லத்தெரியவில்லையே?" என்கிறான்.  " என்னப்பா சொல்லத்தெரியாமயா இப்படி 'கவித கவித' என்று சொல்லும்படி அடுக்கிக்கொண்டிருக்கிறாய்?" என்று அவனைப் பார்த்து கேட்கலாம் என்றால் அது முடியவில்லை. காரணம் அவன் 'அணங்கு' என்று சொல்லிவிட்டான். இங்கு தான் தெளிவாகக் குழம்பியிருக்கிறான் தலைவன் என்று தெரிகிறது. 'அணங்கு' என்று சொல்கிறான்; அணங்குதல் என்பதற்கு விரும்புதல் வருத்துதல் என்று முரண்படுவதாக இரண்டு பொருளுண்டு. அணங்கு என்பவள் அழகிய அமைதி தெய்வமாகவும் இருக்கலாம், பிடுத்து வருத்தும் பெண் தெய்வமாகவும் இருக்கலாம்.

தோழன்: டேய் அணங்குனா, என்ன பொருள்ளடா சொல்லுற? வருத்துறாளா? இல்ல விரும்ப வைக்குறாளா?
தலைவன்: தெரியலையே மச்சி. தெரிஞ்சா ஏன் அவள அணங்குனு சொல்லப் போறேன்.
தோழன் : இவன் எப்படியும் லவ் பண்ணி அந்த பொண்ணோட அப்பாகிட்ட அடி வாங்கப் போறான்.

ஆமாம், அவன் சொல்வது நியாயம் தானே, அவன் கண்டு மயங்கியாது யாரை என்று தெரிந்திருந்தால் அவன் ஏன் அணங்கோ என்று புலம்பப்போகிறான்?

இப்படியான முரண்களால் அழகு பெற்ற பல திரையிசைப்பாடல்கள் இருக்கின்றன. கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் அப்படி முரண்களால் அமைந்த ஒரு பெண்குழந்தை பற்றிய பாடல். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளுவன் இப்பாடலில் இருக்கின்றான். கவிதையில் அவன் பாடும் பெண்ணை மட்டுமல்ல முதற்சொல்லையே தலைவன் கண்டு மயங்கி குழம்பியிருக்கிறான் என்பதற்கு அழகாய் தெரிவு செய்திருக்கிறான்.

நமக்கு இதெல்லாம் பிடித்த குணங்கள், இதெல்லாம் பிடிக்காத பண்புகள் என்று முன்முடிவுகள் எப்பொழுதும் இருக்கும், ஆனால் அவற்றைத் தகர்க்கும் விதமாய் ஒரு சிலரைப் பார்க்கும் போது மட்டும் மனம் குழம்பிக்கிடக்கும், அப்படி ஒருத்தியைப் பார்க்கும் போதும் தலைவன் இப்படித் தான் குழம்பியிருப்பான், தலைவியைப் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று தெரியாமல் இப்படித் தான் புலம்பியிருப்பான். அணங்கு என்ற சொல்லைப் புலவர் கையாண்டாதால் இப்படி அவன் படும்பாட்டைப் புரிந்துகொள்ள பல காரணங்களைக் கற்பிக்க முடிகிறது. பரிமாண வளர்ச்சி என்பது தமிழுக்கும் பொருந்தும். சொல் ஒவ்வொன்றும் வெறும் வெற்றான பொருள் கொள்ளாமல் மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் இருக்கின்றன. அத்தனை காதலையும் ஒன்னேமுக்கால் அடியில் சொல்லக்கிளம்பியவனுக்கு அணங்கு என்னும் ஒற்றைச் சொல் போதுமானதாய் இருக்கிறது.

பின்குறிப்பு:
நண்பரொருவர் எழுதிய பதிவில் நான் இட்ட மறுமொழியை அடுத்து எழுதிய விளக்கம் இது. கல்லூரிக்காதலர்கள் எப்படி குறளைப் படித்தால் உணர்வார்கள் என்று இரசிக்க வேண்டுமானால் காமத்துப்பால்- kaamathupaal அவரின் பக்கத்தை சென்று பார்க்கலாம்.Thursday, 16 March 2017

பாரதத்தையும் இராமயணத்தையும் வெறும் கதைகள் என்ற அளவில் விட்டுவிடலாம்.

ASOIAF தொடர் படித்திருக்கிறீர்களா?  நான் GoT நாடகத்தொடர் பற்றி சொல்லவில்லை. அதன் மூல நூலைப் பற்றிச் சொல்கிறேன். முதல் நூலில் ஒரு கதை மாந்தரை நீங்கள் நேசித்திருப்பீர்கள். இரண்டாம் நூலில் அவரை நீங்கள் வெறுக்கத் தொடங்கியிருக்கலாம். மீண்டும் மூன்றாம் நூலில் அவரை நேசிப்பீர்கள். கெட்டது செய்பவர்கள் மீது கூட துளி ஈவு வரும் நமக்கு. இத்தனைக்கும் மார்டின் தனது கதைமாந்தர்கள் செய்யும் தவறுகளை ஒருவிடத்தில் கூட நியாயப்படுத்தி இருக்க மாட்டார். இன்னார் புனிதர் இன்னார் தீயவர் என்று வெளிப்படையாய் யாரையும் கொண்டாடியும் தூற்றியும் இருக்க மாட்டார். என்னால் ஒரு கதைமாந்தராக அதில் யாரை வேண்டுமானாலும் இரசிக்க முடியும், அவர்கள் செய்யும் தவறுகளை தவறு என்று உரைக்கவும் முடியும். அவர்களின் தவற்றை நியாயப்படுத்தாமல் படித்துவிட்டு கடந்து செல்ல முடியும். இதையே தான் நான் பாரதக்கதை, இராமயணக்கதை படிக்கும் போதும் எதிர்பார்க்கிறேன். தருமன் தவறு செய்கிறான், இராமன் தீங்கிழைக்கிறான்... இவர்களை நியாயப்படுத்த வேண்டிய தேவையென்ன? அவர்களின் தவற்றோடு சேர்த்து அவர்களை அப்படியே புனிதர்களாக அவர்களைப் போல வாழ வேண்டும் என்று மதப்பரப்புரை செய்ய வேண்டிய தேவையென்ன?

பாண்டவர்கள் ஒரு பெண்ணை பிச்சையென்கிறார்கள், மூத்தவன் அவளைப் பணையம் வைக்கிறான்; அவள் துகிலுரிக்கப்படும் போது சபையே வேடிக்கை பார்க்கிறது.. இது ஒரு கதைக்களம், படிக்கலாம், இரசிக்கலாம், அழுகலாம்.. ஆனால் இவர்களை எனது வரலாறாகவும் தெய்வங்களாகவும் ஏற்க வேண்டிய தேவையென்ன?
ஊரில் இருக்கும் பெண்களிடம் எல்லாம் அத்துமீறி விளையாடுபவன் ஒரு பெண்ணுக்கு சேலை கொடுத்ததும் தெய்வம் ஆகிவிடுகிறான். இது ஏதோ ஒரே போராட்டத்தில் பாலாஜி புனிதனானது போலவல்லவா இருக்கிறது. இருக்கட்டும். கதையில் அவன் தலைவனாக இருக்கட்டும், இரசிக்கலாம், கண்ணனை நினைத்து உருகிப் பாடிய பாடல்களை நானே இரசித்திருக்கிறேன்.. ஆனால் இவர் தான் என் கடவுள் என்று ஏற்க வேண்டிய தேவையுமில்லை, அவன் செய்த தவறுகளை நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
சிக்கல் எங்கு தொடங்கிறது என்றால், கருவுற்ற தன் மனைவியை காட்டுக்கு அனுப்பும் இராமனை போன்று ஆண்மகன்கள் இருக்க வேண்டும் என்று சித்தரிக்கப்படுவதில் இருந்து தான். அவன் செய்த இந்த செயல் தவறு என்று கூடப்பலருக்கும் தோன்றுவதில்லை. காரணம் வீட்டுப் பெண்கள் என்பவர்கள் தியாகம் செய்யப்பட வேண்டியவர்கள், கன்னிகா தானம் என்று சொல்லி பிச்சையாக கொடுக்கப்படும் பொருட்கள் என்று பல காலம் இவை நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றன.
இக்கதைகள் எல்லாம் அவை எழுதப்பட்ட காலத்தில் சிறந்த நூல்கள், கற்பனைகள், பொழுதுபோக்க வேறு வழியில்லாத மக்களுக்கு நல்ல பொழுதுபோக்குகள். அவற்றோடு நிறுத்திக்கொள்ளலாம்.

பங்காளி சண்டைக்காக பொதுமக்களை போரில் கொன்று வீழ்த்தியவர்களின் ஆட்சியைப் போன்றதொரு ஆட்சியமைய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அவ்வாட்சியில் திரவுபதிகளுக்கும் ஏகலைவன்களுக்கும் இடமில்லை, கோபியர்கள் எல்லாம் போக்கத்தவர்கள்.. அது அருச்சுனன் கண்ணன் போன்ற மேட்டுக்குடிகளுக்கும் ஆண்களுக்குமான சிறப்பு சலுகைகள் கொண்ட ஆட்சி அவ்வளவு தான். அதில் உங்களுக்கும் எனக்கும் கீழினும் கீழான இடம் தான் கிடைக்கும், அப்படி ஒரு இடத்தில் நம்மை வைப்பதை ஊழின் பெயரையும் தியாகத்தின் பெயரையும் கொண்டு செய்வார்கள்.

நான் ஐந்தாம் வகுப்பில் இருந்து பாரதக் கதையை விரும்பி படித்துள்ளேன், கதையளவில் எத்தனை முறையானாலும் படிக்கலாம், ஆனால் அதை வரலாறாகவோ, எனது மத போதனையாகவோ ஏற்க முடியாது! பாரதத்தையும் இராமயணத்தையும் வெறும் கதைகள் என்ற அளவில் விட்டுவிடலாம்.

Thursday, 9 March 2017

Wild Things, Wild Places வாசிப்பு அனுபவம்

Wild Things, Wild Places (by Jane Alexander)
நான் இந்த நூலை எப்படி வாசிக்கத் தொடங்கினேன் என்பதே வியப்பு தான். நூலகத்திற்கு சென்று தேடித்தேடி சில நூல்களை எடுத்தேன். கிளம்பும் பொழுது தான் "இன்று நூலகத்திற்கு புதிதாக வந்த நூல்கள்" என்று சில நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன, அதில் இந்த நூலைப் பார்த்தேன். நூலின் அட்டைப்படத்தில் இருந்த காண்டாமிருகம் என் கண்ணைக் கவரவே நூலை எடுத்து வந்தேன். நூலைத் திருப்பிக்கொடுக்க வேண்டிய நாள் வரும் வரை அதனை கையிலே கூட எடுக்கவில்லை. கடைசி நாள் நூலை எடுத்து அங்கும் இங்குமாக கொஞ்சம் பார்த்த போது நூலின் ஆசிரியர் பறவைகள் மேல் ஈடுபாடு கொண்டவர் என்று தெரிந்தது. அதனால் மீண்டுமொரு முறை நூலை எடுத்து வந்து வாசித்தேன். நான் எதிர்பார்த்தது போல சிறிதளவும் இந்த நூல் இல்லை. உண்மையில் நான் அதை வாசிக்கத்தொடங்கும் போது எதையும் எதிர்பார்க்கவேயில்லை. அதனாலோ என்னவோ அது எனக்கு மிகவும் பிடித்துப் போனது.

நூல் ஆசிரியை அவரின் பயணங்கள் பற்றி விவரிக்கிறார். ஆசுகார் விருதுக்கு இருமுறை பரிந்துரைக்கப்பட்ட நடிகை இவர். நிறைய இலக்கியங்கள் வாசிப்பவர். அதன் தாக்கம் நூல் நெடுகிலும் தெரிகிறது. விலங்குகள் பறவைகள் பற்றிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நூலானாலும் அதை அவர் கொண்டு செல்லும் விதம் வேறு மாதிரியாக இருக்கிறது. அவர் மற்ற நூல்களில் படித்த செய்திகளை, வேறு தளங்களில் புரிந்த கொண்ட தகவல்களை நமக்கு அவரின் பயணக் கதைகளுக்கு ஊடே எளிமையாகத் தெரியக் கொடுக்கிறார். பல நாடுகளையும் மக்களையும் பண்பாட்டையும் பற்றி போகிற போக்கில் தொட்டு விட்டுச்செல்கிறார். ஆனால் யாருடைய பழக்க வழக்கத்தையும் "இது சரி, அது தவறு" என்ற முன்முடிவுகளோடு அவர் அணுகவில்லை. இத்தகைய முதிர்ச்சியான எழுத்தைப் படிப்பதே ஓர் ஆனந்தம் தான். தென் அமெரிக்காவில் யாகுவார் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் ஆலன் தொடங்கி இந்தியாவில் புலிகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கும் உல்லாசு கரந்த் வரை தான் சந்தித்த அனைத்து விலங்குகள் ஆய்வாளர்கள் பற்றியும் எழுதியிருக்கிறார். அவர்களின் நூல்களைப் பற்றியும் அறியக் கொடுக்கிறார். அழிந்து வரும் விலங்குகள் பறவைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே நூல் செல்கிறது. நீங்கள் புதிதாக விலங்குகள் பறைவகள் பற்றி ஆர்வம் கொண்டிருக்கிறீர்களா, அடுத்து என்ன நூல் வாசிக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா, பதின்ம வயதில் இருக்கும் நண்பர்களுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறீர்களா, இது உங்களுக்கான நூல் என்று நினைக்கிறேன்.
நூலின் இறுதியில் தனக்கு உதவிய அறிவியலாளர்களின் பெயர்களையும் மேலும் படிக்க வேண்டிய நூல்களையும் பட்டியலிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட நூல்களின் பட்டியல் அது. பறவைகள் விலங்குகள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இயக்கங்கள்  பட்டியல் ஒன்றையும் தருகிறார். நூலகத்தில் இந்த நூலைக் கண்டால் விட்டுவிடாதீர்!

ஓர் உழவு மழை

"எங்கபா.. நேத்து மழை பெஞ்சுது.. ஓரொழவு மழையாச்சும் பெய்யும்னு பார்த்தா.. வந்த மழை வாசலைக் கூட நனைக்கலையே பா.."
இப்படி பேசி நீங்கள் கேட்டதுண்டா?
அது என்ன ஓரொழவு மழை?
சிலர் அதற்கு கொடுக்கும் விளக்கம் இப்படியாக அமையும்..
" மழைத்தண்ணி நேரே வேறு எந்த பொருள் மீதும் விழாமல், ஓர் பெரிய செக்கையோ உரலையோ நிறைக்குமானால் அது தான் ஓர் அளவு மழை"
நான் பல நாள் இப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் ஊரில் இருந்த செக்கைக் காட்டி இக்கதையை என்னிடம் சொன்னதாக நினைவு.. பிறகு ஒரு நாள் என் அம்மா என்னிடம் திருத்தமாக அது தவறு என்று சொன்னார்.
" அது ஓர் அளவு மழையில்லை.  ஓர் உழவு மழை. மழை பெய்து முடித்த பிறகு, நிலத்தை உழும் போது ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அது ஓர் உழவு மழை".
இப்படித் தான் மழையின் அளவைக் குறித்திருக்கிறார்கள். அது பின்னால் ஓரொழவு என்று ஓரளவு என்று திரிந்திருக்கிறது..
இதில் நோக்க வேண்டியது என்னவென்றால் இன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு ஒன்றை மொழிபெயர்க்கும் பலரும் "ஒரு" என்ற சொல்லை "ஓர்" என்ற சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்துவது எப்படி நம் மரபு மொழிக்கு சற்றும் ஒத்துப்போகாமல் அன்னியமாய் இருக்கிறது என்று.

பிற்சேர்க்கை:
வாசல் நனைக்கும் மழை, வாசத்தண்ணி வெளிய போகும் அளவு மழை, உழவு மழை, காட்டுத் தண்ணி வெளிய போகும் அளவு மழை - என்ற வழக்காடல்களும் உண்டு.
மழையை ஒட்டிய வழக்காடல்கள் பற்றி இந்து நாளிதழில் ஓர் தொடர் வந்தது.

Wednesday, 8 March 2017

வனவிலங்கு பாதுகாப்பு பற்றிய துணுக்கு செய்திகள்

(முகநூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, வனவிலங்கு பாதுகாப்பு பற்றி நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு)

Wild Things, Wild Places என்னும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். தற்போதைய அமெரிக்கர்கள் அமெரிக்க கண்டத்தில் குடியேறும் முன் அக்கண்டம் முழுவதும் பரவலாகக் காணப்பட்ட ஒரு விலங்கு அமெரிக்கக் காட்டெருமை (American Bison). அந்த நாட்டின் தொல்குடிகளைப் போல் அல்லாமல் ஐரோப்பியர்கள் குடியேற்றத்திற்கு பின் காட்டெருமைகளை கொன்று அழித்தனர். அதில் பெரும் பங்கு அமெரிக்க இராணுவத்தைச் சேரும். கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் 2,80,000 காட்டெருமைகள் வேட்டையாடப்பட அவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். 40 இலட்சத்திற்கும் அதிகமாய் இருந்த காடெருமைகளின் எண்ணிக்கை 1884ல் வெறும் ஓராயிரமாக (1000) குறைந்தது. அதன் பின் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக அமெரிக்க காட்டெரிமை நலனிற்காக சங்கமொன்றை உருவாக்கி அவற்றை காக்கத் தொடங்கினர். (American Bison Society). அந்த மீதமிருந்த 1000 காட்டெருமைகளின் வழிவந்த காட்டெருமைகள் தாம் இப்பொழுது வட அமெரிக்காவில் காணப்படும் காட்டெருமைகள், கிட்டத்தட்ட அழிந்துவிட்ட விலங்கினத்தை மீட்டெடுத்தனர்
அமெரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் காட்டு விலங்குகள் அழிக்கப்பட்ட பின் அவற்றை மீட்டெடுக்க தேசிய ஆடுபன் சங்கம் (National Audubon Society) போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காடுகளையும் விளைநிலங்களையும் வாங்கி அவற்றைக் காடுகளாகவே பராமரிக்கின்றனர். அங்கு வாழும் பறவைகளையும் விலங்குகளையும் காக்கின்றனர். அற்றுப்போன விலங்குகளை மீண்டும் அவ்விடங்களில் மீட்க முயல்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இரண்டு மதக்கும்பல் (ஈசா, காருண்யா) போட்டி போட்டுக்கொண்டு பல்லுயிர் வாழும் காட்டு பகுதியை அழித்து வருகின்றன. அதற்கு அரசாங்கம் ஒத்து வேறு ஊதுகிறது. இதில் விருது ஒரு கேடு. எப்படி இப்படி அமைப்புகளாலும் அரசாலும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ள முடிகிறது என்றே தெரியவில்லை. இந்த மத அமைப்புகளும் அவற்றை ஆதரித்து காட்டுயிர்களின் வாழ்விடங்களை அழிக்கும் அரசும் நாசமாய் போகட்டும்.


தாய்லாந்தில் பௌத்த மதத்தைத் தழுவிய மக்கள் சிலர் பாம்பினை உயிருடன் சமைப்பராம். கேட்டால் "பௌத்தம் உயிர்களைக்கொல்லக்கூடாது என்கிறது, பிறகு எப்படி நாங்கள் பாம்பினைக் கொல்வது, அதுதான் உயிருடன் சமைக்கிறோம்" என்பார்களாம். காட்டு விலங்குகளை வேட்டையாடி சீனாவிற்கு விற்றும்விட்டு, புலியைக்கண்டால் புத்தர் என்றும் வணங்குவராம். இவ்வளவு தான் மக்களின் மதப்புரிதல்கள். ஆதிமனிதனின் கடவுள் இயற்கை, என்றைக்கு இந்த Organized Religions என்று சொல்லக்கூடிய மதங்கள் வந்தனவோ அன்றைக்கே இயற்கை தன் மதிப்பை இழந்துவிட்டது. யானைகளைக்கொன்று விட்டு அங்கு பிள்ளையாருக்கு சிலை வடிப்பர், புலிகளைக் கொன்றுவிட்டு ஐயப்பனுக்கு விரதம் இருப்பர், இயேசு மனிதனிக்குத்தான் அனைத்தையும் படைத்தார் என்று விவிலியத்திலிருந்து ஆதாரம் கொடுப்பர். இவர்களின் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டதே இவர்களின் செயல்பாடுகள்.
இங்கு ஒரு காடு வெட்டி சித்தர், மன்னிக்கவும், காடு வெட்டி யோகி காட்டை அழித்துவிட்டு நாட்டில் ஆயிரம் மரங்களை நடுகிறார். இது எதற்கு? காட்டுயிர்களை அழித்துவிட்டு மனிதனும் அவன் வளர்க்கும் நாயும் பூனையும் கிளியும் மட்டும் உண்டு வாழவா?


மாயன் நாகரிகத்தில் நிலங்களை உடைமையாக்கும் வழக்கமில்லை. பல ஆண்டுகளாகக் காட்டில் வாழ்ந்தவர்கள். பட்டா பற்றி எல்லாம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. 1970 களில் திடீரென்று பெலீசு (Belize) நாட்டில் வாழும் மாயர்களில் சிலர் அரசிடம் நிலப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களைத் தூண்டி விட்டது கிறித்தவ அமைப்புகள். பாவம் செய்தவர்கள் நரகத்தில் அழிவர் என்று சொல்லி அவர்களை மனம் மாற்றி கிறித்துவ தேவாலயம் ஒன்றை எழுப்புவதற்காக காடுகளை மாயர்களின் பேரில் பட்டா போட்டு வாங்க சொன்னார்கள். அது யாகுவார் (Jaguar) சிறுத்தைகள் வாழும் வனப்பகுதி, அவற்றை தெய்வமாக வழிபட்டு போற்றி வந்தவர்கள் மாயர்கள். காட்டை அழித்து தேவலாயம் அமைக்கத்தூண்டியது புதிதாய் வந்த மதம்.
இதைப்புரிந்து கொள்ளுதல் மிக எளிது. தேவாலயம் எழுப்பட்டிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? காடுகளை பெரும்பணக்கார்கள் வாங்குவதைவிட பட்டா போட்ட நிலத்தை வாங்குவது எளிது. காட்டுப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றிவிட்டு வனவிலங்கு சரணாலயங்கள் அமைப்பது போன்று எளிதல்ல அங்கிருக்கும் தேவாலயங்களையும் கோவில்களையும் இடித்து விட்டு வனவிலங்குகளைக் காப்பது.
இன்று ஈசாவிலும் இது தான் நடக்கிறது. இனி யாரும் அங்கிருக்கும் சிலையை நீக்க முடியாது, அங்கு போகும் மனிதர்களை தடுக்க முடியாது. மீறி பேசினால் மதங்கள் தான் பதில் சொல்லும். " இந்துக்களுக்கு மட்டும் இந்த நிலையா? ஐயோ இந்துக்களுக்கு இந்த நாட்டில் இருக்க இடமேயில்லையா!" என்று ஒரு கும்பல் மக்களைத் தூண்டிவிடும். ஆனால் எந்த இந்து இந்த ஈசாவால் பயன் அடைகிறான் என்பது அந்த ஈசனுக்குத் தான் வெளிச்சம்.
காடுகளில் கல்லூரி கட்டுவதைக் காட்டிலும் பேராபத்தானது கோவில் கட்டுவது. அதிலும் பேராபத்து இந்த கார்ப்பரேட்டுத் தனமான பணக்காரர்கள் ஞானம் தேடும் கோவில்கள். ஏனென்றால் இவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது.


(படங்கள்: இணையம்)