Friday 5 January 2018

முசுண்டை (பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள்)-3

இலக்கியங்கள் பாடும் முசுண்டை மலர்.


சங்க இலக்கியங்களில் முசுண்டை என்னும் மலர் பற்றிய குறிப்புகள் பரவிக் கிடக்கின்றன. ஆனாலும் இப்பொழுது பேச்சுவழக்கில் முசுண்டை என்னும் சொல் இருப்பதாய்த் தெரியவில்லை. வட்டார வழக்கில் மிஷ்டை /மிசுட்டை/ முசுட்டை என்று அறியப்படும் மலரே முசுண்டை என்பது என் துணிபு.

"அகலிரு விசும்பி னாஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை- மலைபடுகடாம்-100"

இருண்ட வானத்தில் பூக்கும் விண்மீன் போல முசுண்டை மலர் கொடியினில் பூத்திருக்கிறது என்கிறது மலைபடுகடாம். மிசுட்டை மலர் பூத்திருப்பதும் அதே போலத் தான் இருக்கும். மேலும் இங்கு இன்னொன்றும் நோக்கத்தக்கது. மலைபடுகடாம் நன்னன் என்னும் மன்னனையும் அவன் ஆண்ட நவிர மலை என்னும் நாட்டையும் அதன் மக்களைப் பற்றியும் பாடும் நூல். இன்றும் ஒடிசா மாநிலத்தின் கந்தமாள் பகுதிகளில் வாழும் கந்தா/கொந்தா(வேறு சில இனக்குழுக்களும் கூட) மலைவாழ் மக்களின் (திராவிட இனத்தைச்சேர்ந்த பழங்குடியினர்) உணவில் முசுண்டை (Rivea hypocrateriformis) இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

விண்மீனோடு முசுண்டை இன்னும் சில பாடல்களில் கூட ஒப்புமைபடுத்தப்பட்டுள்ளது.
"கரிமுகிழ் முசுண்டை பொதி அவிழ் வான்பூ விசும்பு அணி மீனின் புதல் பிதல் அணிய - அகநானூறு 235-9"


இருளில் பூத்த விண்மீன் போல இருக்கும் முசுண்டை


விக்கியிலும் சில வலைப்பூக்களிலும் Operculina turpethum என்னும் மலரின் படத்தை முசுண்டை என பதிவிடப்பட்டுள்ளது. இது தவறு என்பதற்கு சில காரணங்கள் உண்டு.

Operculina turpethum, Morning glory என்னும் குடும்பத்தை சேர்ந்தது. அக்குடும்பத்தில் பெரும்பாகும் காலையில் மலரும் செடிகள் தான் இருக்கின்றன. ஆனால் முசுண்டையோ மாலையில் மலர்வது. முசுண்டை மாலையில் மலர்வது என்று எங்கும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. சில இடங்களில் முசுண்டை பீர்க்கையோடும் முல்லையோடும் மலர்ந்து கிடந்தது என்ற குறிப்புகள் கிடைக்கின்றன. அதனால் இதுவும் மாலையில் மலரும் செடி என்பது புலப்படுகிறது.

"புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப் பொன்போல் பீரமொடு புதல் புதல் மலர - நெடுநல்வாடை 13"

"வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து கரிமுகிழ் முசுண்டை முல்லைத் தாஅம் - மதுரைக்காஞ்சி 281"

வீட்டு முற்றத்தில் முசுண்டை படர்ந்து நிழல் தந்ததாக புறநானூறு கூறுகிறது.
"முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல் - புறநானூறு - 320"

(இதில் குறிப்பிடப்படும் முஞ்ஞை பற்றி தனியே எழுதுகிறேன்)

இன்றும் வேலிகளில் முசுண்டைக் கொடி கார்காலத்தில் பூத்துக்குலுங்குவதைப் பார்க்கலாம்.


-சுபா

Picture Courtesy: Kaleeswari Sivasubramanian.