Tuesday 27 November 2012

இனியவை நாற்பது-நூற்குறிப்பு


இனியவை நாற்பது
இனிப்பு என்றாலே எல்லோருக்கும் பிடிக்கும். அந்த சுவையில் மட்டுமல்லாது இனிமை இருக்கும் அனைத்துமே பிடித்தமானது. அந்த வகையில் எல்லோரும் விரும்பும் படி வாழ்வது எப்படி? இந்த கேள்விக்கு விடை காண தேடியபோது நமது நீதி நூல்களில் ஒன்றான இனியவை நாற்பது கண்ணில் பட்டது. படிக்கத் தொடங்கினேன் இனிமையை உணர்ந்தேன். அதனை உங்களோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நூற்குறிப்பு 
இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதனை எழுதியவர் பூதந்சேந்தனார். இதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக  நாற்பது பாடல்கள் உள்ளன. இந்த நூலில் உள்ள பாடல்களில் 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் எட்டாவது பாடல் ஒன்று மட்டுமே பஃறொடை வெண்பா. மற்ற  அனைத்தும் இன்னிசை வெண்பா என்ற பாடல் வகையினால் ஆனது ஆகும்.  இதில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் மூன்று மூன்று கருத்துகள் உள்ளன. ஆனால் பாடல்கள்  1, 3, 4, 5  ஆகிய நான்கிலும் நான்கு இனிய கருத்துகள் இடம் பெற்றுள்ளன. உலகில் நல்ல அல்லது இனிமையான கருத்துகளை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல கருத்துகளை எடுத்துக் கூறுகின்றது.

இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.

ஆசிரியர்க் குறிப்பு
     
            இந்நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார். இப் பெயரில் சேந்தனார் என்பது இயற் பெயர். பூதன் என்பது இவர் தந்தையார் பெயர். இவர் தந்தையார் மதுரையில் தமிழாசிரியராய்ச் சிறந்து விளங்கிய காரணத்தால்  மதுரைத் தமிழாசிரியர் என்னும் சிறப்புப் பெயருடன் வழங்கப் பெற்றார். சேந்தன் என்பது முருகனுக்கு உரிய பெயர்களில் ஒன்று ஆகும். பதினோராம் திருமுறையில் திருப்பல்லாண்டு பாடியவர் சேந்தனார் என்பதும், திவாகரம் செய்வித்தவன் சேந்தன் என்னும் பெயர் பெற்றிருத்தலும் இங்குச் சிந்தித்தற்குரியன.  இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனை துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம். அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது.

No comments:

Post a Comment