Monday 6 May 2013

திருக்குறள் சொல்லும் நாகரிகம்


நாகரிகம் என்பது என்ன??
திருக்குறளில் நாகரிகம் என்னும் சொல் வரும் இடம் இதுதான்.

"பெயக்கண்டு நஞ்சுண் டமையவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் " - குறள் 580
அதிகாரம் 58. கண்ணோட்டம்.


நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.

இதனை இக்காலாத்திற்கு பொருத்திப் பார்ப்போம் ஆயின் இப்படி எடுத்து கொள்ளலாம். ஒரு குழந்தை பிறந்த தினத்திற்கு இனிப்பு கொண்டு வருகிறது. நமக்கோ நீரிழிவு நோய். இனிப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனால் வேண்டாம் என்று சொல்லாமல் அந்த குழந்தைக் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக அதனை எடுத்து உண்கிறோம். இனிப்பு எனக்கு நஞ்சு என்று தெரிந்தும் பிறர் மனம் நோகக் கூடாது என்று எண்ணி உண்கிறோமே அது தான் நாகரிகம். (பர்வீன் சுல்தானா அவர்கள் அரசினர் தொழில்நுடபக் கல்லூரி, கோவை, சங்கமம் விழா பட்டிமன்றத்தின் போது ஆற்றிய உரையிலிருந்து கொள்ளப்பட்டது)

சான்றோர் விளக்கம்:
'நயத்தக்க நாகரிகம் 'என்றதனாலும் , 'அமைவர் ' என்றதனாலும் , நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால் , இப்பொருட்பாலில் அரசர்க்குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ்வதிகாரத்தின் இவ்விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும் , அறிந்து கொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும் ,நட்புப் பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும் , அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க ' என்னும் அடைபெற்றதென்றும் , அறியப்படும் . அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர் செயலாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல்.



நாகரிகம் என்பது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை , கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிகமெனப் பட்டது.

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்"

என்பது நற்றிணை(355).பெய்தும் என்னாது 'கண்டும் 'என்றதனால் , உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.

No comments:

Post a Comment