Tuesday, 4 February 2014

சுடச்சுடரும் பொன்!!!

ஒருவருக்கு துன்பம் மேல் துன்பம் வர வர அவர்கள் தங்கள் நற்தன்மையை மேன்மேலும் காட்டுவர் என்னும் பொருளிலும், எப்பொழுதும் நல்ல ஒழுக்கத்துடன் இருப்பவருக்கு சூடு மேல் சூடாய் துன்பம் வரும் என்னும் பொருளிலும் இந்த சொற்றொடரைக் கொள்ளலாம். எவ்வாறாயினும் சூடு தான் பொன்னை மிளிரச் செய்கிறது. அது போல் துன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த உவமை பின்வரும் திருக்குறளில் காணப்படுகிறது.

"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (குறள்-267)."




Monday, 27 January 2014

திருக்குறளும் அரும்பதங்களும்-3 (எச்சம்)

அகழ்வாய்வில் எச்சம் என்பது ஒரு Fossils என்னும் சொல்லின் தமிழாக்கமாக அமைந்தாலும் , திருக்குறளில் எச்சம் என்னும் சொல் புகழைக் குறிக்கிறது. எஞ்சி நிற்கும் இசை, புகழ் என்னும் பொருள்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (குறள்- 114)

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. (குறள்- 112)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. (குறள்- 1075)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. (குறள்- 1012)

எச்சம் - புகழ்

Thursday, 23 January 2014

ஏறுபோல் பீடு நடை!!!


ஏறுபோல் பீடு நடை!!!
என்ன ஒரு அழகான சொற்றொடர். நிமிர்ந்து நடக்கும் காளை போல் பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து வாழும் ஒரு நிலையைக் குறிக்கும் வரி. இது இடம்பெற்ற நூல் வேறு எதுவும் இல்லை. நம்  திருக்குறள் தாம்.
காங்கேயம் காளை படையப்பா படத்தில் நடந்து வருவது போன்ற ஒரு காட்சி கண் முன் தோன்றுகிறது அல்லவா??



(புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. குறள் - 59)

Saturday, 18 January 2014

திருக்குறளும் அரும்பதங்களும்-2 (விசும்பு)

வானம் என்னும் சொல்லுக்கு நமக்கு தெரிந்த தமிழ் சொற்கள் பல உண்டு. அதில் வழக்கில் இல்லாத ஒரு சொல் விசும்பு.

விசும்பு - வானம்.

குறள்:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.

(வான்சிறப்பு, குறள்: 16)

விளக்கம்:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.

கூடுதல் தகவல்: 
"விசும்பு" ஜெயமோகன் எழுதிய 12 அறிவியல் புனைகதைகளின் தொகுதி. இக்கதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை.

Sunday, 8 September 2013

தமிழர்களுக்கு ஏன் "last name/sur name" இல்லை ?

தமிழர்களுக்கு ஏன் "last name/sur name" என்று சொல்லப்படும் குடும்ப பெயர் இல்லை ? ஒவ்வொரு முறை படிவம் நிரப்பும் போதும் எனக்கு எரிச்சல் வரும். சுபாஷினி, இவ்வளவு தான் என் பெயர். இதில் middle name, last name எல்லாம் கேட்டால் எங்கு போவது?  இல்லாத ஒன்றை எப்படி சேர்ப்பது? அந்த இடத்தை நிரப்பாமலும் விட முடியாது. அதற்காக என் அப்பாவின் பெயரை பின் சேர்த்துக் கொண்டேன்.

எனக்கு மட்டும் இல்லை. பெரும்பாலான தமிழர்களுக்கு இதே நிலை தான். இதற்குக் காரணம் என்ன. இந்த குடும்பப் பெயர் சேர்க்கும் வழக்கம் நம் மொழியில் இல்லை. பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் தான் இருந்திருக்கிறது. இன்னாரின் மகன் இன்னார் என்று தான் சொல்லியிருக்கின்றனர். உப்பூரி குடி கிழான் மகனார் உரித்திரசன்மர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் (இதில் பூதம் தந்தை பெயர்), பெருங்கோழி நாய்க்கன் மகள் நக்கண்ணை. ஆக பெற்றோர் பெயரை தன் பெயருக்கு முன் சேர்த்து அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வழக்கு தான் இருந்திருக்கிறது. அரசர்கள் பட்டத்திற்கு வரும் போது தங்கள் பெயரோடு தங்கள் அரச வம்சத்தின் பெயரை சேர்த்திருக்கின்றனர். இப்படி பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் பதினெட்டாம் நூற்றாண்டிலும் இருந்திருக்கிறது. அன்று எழுதப்பட்ட ஆவணங்களிலும் தந்தை அவரின் தந்தை என பெயர்களை முன் சேர்த்தே எழுதியுள்ளனர். சமீபத்தில் கூட ஒருவர் மறுபதிவு ஒன்றில் "என் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்கள் என் குடும்பத்தின் நூறாண்டு வரலாற்றைக் குறிக்கும்" என்று சொன்னார், இப்படி பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் இப்பொழுதும் இருக்கிறது என்பது அவர் வாயிலாக அறியலாம்.
தங்கள் சாதிப் பெயரை பின் சேர்க்கும் வழக்கும் பிற்கால வட மொழி ஆதிக்கத்திலிருந்த வந்திருக்க வேண்டும். எனினும் அதை குடும்பப் பெயர் எனக் கொள்ள முடியாது.
முன் என் அப்பா பெயரை சேர்க்காமல், எழுத்தை மட்டும் சேர்த்து, பின்னர் அதையும் பின்னால் இட்டு, இப்பொழுது இந்த உலகமயமாக்கலால் அப்பா பெயரை பின் சேர்த்தது வேதனையாகத் தான் உள்ளது.

Thursday, 22 August 2013

சிலம்பு கழி நோன்பு

ஒரு பையனும் பொண்ணும் வீட்டு விட்டு ஓடிப் போறாங்க... இப்பவா இருந்த அத பார்க்கறவங்க அரசியல் பிரச்சனை ஆக்கி இருப்பாங்க.
ஆனா சங்க காலத்தில அவங்க படும் துயரத்த பார்த்து பரிதாப பட்டுருக்காங்க.

"வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையில் கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னி யோரே."

குறுந்தொகை பாடல்-7, பெரும்பதுமனார், பாலை திணை- கண்டோர் சொன்னது.

(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)

விளக்கம்:
வாகை மரங்களின் நெற்றுகள் (முதிர்ந்து காய்ந்த காய்) நிறைந்தது அந்தப் பாலைப் பகுதி. அதிலே நடக்கும் போது அந்த நெற்றுகள் உடைந்து சத்தம் எழுப்புகின்றன. அந்த ஒலியானது ஆரியக் கூத்து ஆடுபவர்கள் கயிற்றின் மீது நடக்கும் போது அடிக்கும் பறையைப் போன்று இருக்கிறது.
அந்தப் பகுதியிலே தலைவி தலைவனுடன் உடன் போக்கு மேற்கொள்கிறாள். ஆனால் அவர்கள் இருவருக்கும் மணம் ஆகவில்லை. அதனைத் தலைவி பெற்றோர் தனக்கு அணிவித்த காற்சிலம்பைக் கழற்றாமலேயே இருக்கிறாள் என்பதைக் கொண்டே பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். தலைவனோ வில்லை உடைய வீரக் கழல் அணிந்த ஆண்மகன், தலைவியோ மென்மையான அடி எடுத்து நடப்பவள். அவளால் அந்த பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும்??? அவர்களைப் பார்த்த நல்லோர் (முக பாவங்களைக் கொண்டு அவர்கள் படும் துயரை அறியக்கூடியவர்கள்) இந்த இருவரும் யாரோ என்று இரங்குகின்றனர்.

பின் குறிப்பு:

மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; "நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லி னெவனோ... பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’ (ஐங்.311) என்பதனால் அந் நோன்பு மணத்திற்கு முன்பு செய்யப்படும் என்று தெரிகின்றது.
ஆரியர்-ஆரிய நாட்டில் உள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும்கூத்து ஆரியக் கூத்து எனப்படும்; 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்’ என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்; விலக்குறுப்பின் வகையாகிய பதினான்கனுள் ஒன்றாகிய சேதமென்பது இரு வகைத்தென்பதும் அவ்விரண்டினுள் ஆரியக் கூத்து ஒன்று என்பதும் சிலப்பதிகார உரையால் அறிந்த செய்திகள்; "ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்’’ (சிலப்.3:12-25,அடியார். மேற்.) அக்கூத்தர் கழையை நட்டுக் கயிறு கட்டி அக்கயிற்றின் மேல் ஆடுவர். "ஆடியற் பாணிக்கொக்கு மாரிய வமிழ்தப் பாடற், கோடியர்’’ (கம்ப. கார்காலப்.33) என்று கம்பரும் இக் கூத்தரைப் பற்றிக் கூறியுள்ளார்.

உடன்போக்கின்கண் நேரும் இடையூறுகளை நீக்கற் பொருட்டு வில்லுடையனாதலின் தலைவனை வில்லோனென்றார்;உதயணன் வாசவத்தையைக் கொண்டு செல்லுகையில் வராகன் என்பவனது கையில் இருந்த வில் முதலியவற்றைப் பெற்றுச் சென்றானென்றும்,பின் தன்னை வளைத்த சவரர் புளிஞரை அவற்றால் வென்றான் என்றும்பெருங்கதையிற் காணப்படும் செய்தி இங்கே அறியற்பாலது. கழல,் வீரத்திற்கும் வென்றிக்கும் தனித்தனியே கட்டப்பட்டனவாதலின் காலனவென்று பன்மையாற் கூறினார்; போர்தோறும் வென்று கட்டின என்பது மாம்; “காலன புனைகழல்” (புறநா. 100:1, விசேடவுரை); " கெழுதகையம்பர் கிழவோன் சேந்தனில், விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய, கழலே யாடவர் கான்மிசை யணிவடம்’’ என்பது திவாகரமாதலின், கொடையின்பொருட்டும் வீரத்தின் பொருட்டும் புனைந்த கழல்கள் என்றலுமாம்.

சொற்பொருள் விளக்கம்
வில்லோன்-வில்லையுயை தலைவன், காலன கழலே- காலில் அணிந்துள்ளது கழல், தொடியோள்- தொடியணிந்த பெண், மெல்லடி – மென்மையான, மேலவும் சிலம்பே - மேலே இருப்பது சிலம்பு, நல்லோர் – நல்லவராய் இருப்போர், யார்கொல் – யாரோ? அளியர் தாமே – இரங்கத்தக்கவர்களே, ஆரியர்-ஆரியர், கயிறாடு பறையில்- கயிற்றில் ஆடுகின்றபோது அடிக்கின்ற பறைபோல, கால்பொரக் கலங்கி – காற்று அலைப்ப நிலை கலங்கி, வாகை வெண் நெற்று – வாகை மரத்தின் வெண்மையான நெற்று, ஒலிக்கும் – ஒலி எழுப்பும், வேய்பயில் - மூங்கில்கள் நெருங்கிய, அழுவம் – பாலைநிலம், முன்னியோரே – முற்பட்டு எழுந்தோர்.

Monday, 19 August 2013

Mahabharatha vs LOTR

மஹாபாரதப் போர் முடிந்ததும் தர்மர் ஒரு நாள் நகர்வலம் போனாராம். அப்ப ஒரு விவசாயி அவரோட கலப்பையை பத்திரம வீட்டுக்குள்ள எடுத்து வச்சத பார்த்து "இது என்ன டா புது பழக்கமா இருக்கே, இவ்வளவு நாளும் மக்கள் யாரும் இப்படி செய்யலயே" அப்படினு நினைச்சுட்டே விவசாயி கிட்ட காரணம் கேட்டாராம். திருடர்கள் பயம்னு அவர் சொன்னத கேட்டு தர்மருக்கு வியப்பு. இதே போல பல இடத்துல மக்கள் தங்கள் பொருட்களையெல்லாம் என்னைக்கும் இல்லாம இப்ப பாதுகாக்கறத பார்த்து அவருக்கு கலியுகம் ஆரம்பம் ஆகிடுச்சு. இனி நாம, தேவர்கள் எல்லாம் இங்கு வாழ முடியாது, சொர்க்கதுக்கு போயிடனும்னு முடிவு செய்து எல்லாரும் கிளம்பிட்டாங்க. இது சின்ன வயதில் நான் படித்த மஹாபாரத துணைக் கதைகளில் ஒன்று.

After the War of the Rings the Frodo accompanied by Bilbo, Gandalf and Elves sails from the Grey Havens west over the Sea to the Undying Lands leaving the middle earth for men... and thus ends the Third age of Middle earth..
I couldnt stop wondering about the similarities between the stories..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்.... வென்றுவிட்டு அமைதி தேடி வேறு இடம் செல்லும்...