Showing posts with label Evolution in Tamil. Show all posts
Showing posts with label Evolution in Tamil. Show all posts

Sunday, 2 June 2019

பரிணாமக் கொள்கை - கேள்வி பதில் 5

கேள்வி: உலகில் இருக்கும் உயிரினங்கள் அனைத்துமே இன்னொரு உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவையா?

பதில்:
ஆம். தற்போது உலகில் இருக்கும் உயிரினங்கள் அனைத்துமே இன்னொன்றிலிருந்து பரிணமித்தது தான். சுருக்கமாக சொல்லப் போனால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒற்றை மூதாதை ஒன்று உண்டு.

ஏற்கனவே ஒரு பதிலில் நமக்கும் இந்தியாவில் இன்று வாழும் குரங்குகளுக்கும் எவ்வளவு தலைமுறை தள்ளி உறவு என்பதை எழுதியிருந்தேன். நாமும் சிம்பான்சிகளும் ஒன்று விட்ட சகோதரர்கள், அதாவது காலத்தில் பின்னோக்கிச் செல்லும் போது இவர்களுடைய  ஒருகட்டத்தில் இவர்களுடைய மூதாதை தான் நமக்கும் மூதாதை.  

இப்படி நமக்கும் அவர்களுக்குமான கடைசி பொது மூதாதை இருந்த இடத்தை சந்திக்கும் புள்ளி (Rendezvous point) என்கிறார்கள். நமது இனத்தில் இருந்து பின்னோக்கிப் போனால் ஒன்றாம் புள்ளியில் சிம்பானிசிகளோடு இணைகிறோம். இதே போல இன்னும் பின்னோக்கிப் போனால் ஐந்தாம் புள்ளியில் இந்தியாவில் இன்று வாழும் குரங்குகளோடு இணைகிறோம். இது கிட்டத்தட்ட 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.

இதே போல பின்னோக்கிப் போகும் நாப்பதாம் புள்ளியில் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களோடு இணைகிறோம். அதாவது அங்கு தான் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் கடைசிப் பொது மூதாதையை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கிறோம். இன்று உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுமே அந்தப் பொது மூதாதையின் வாரிசுகள் தான். அதாவது உலகில் இன்று உள்ள அனைத்து உயிரினங்களுமே கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒற்றைச் செல்லில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று கிளைத்து உருவானவையே.

உயிரினங்களை மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கின்றனர் ( Archaea, Bacteria, Eukarya). 23 வகைப் புரதங்கள் இம்மூன்று பிரிவுகளில் உள்ள அனைத்து வகை உயிரினங்களிலும் காணப்படுகின்றன. இம்மூன்று பிரிவுகளுக்கு இடையே மரபணு தொடர்வரிசையில் (DNA sequence ) சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், இந்த 23 புரதமும் இம்மூன்று பிரிவிற்கும் பொதுவானவையே. இந்த 23 புரதமும் தான் செல்களின் அடிப்படைச் செயல்களான மரபணு பிரதியெடுத்தல் போன்ற உலகின் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையான செயல்களைச் செய்கின்றன.

இப்படி உயிர்களுக்குத் தேவையான மிக முக்கியமான 23 புரதங்கள் மூன்று பெரும் பிரிவுகளிலும் காணப்படுவதால், உலகின் அனைத்து உயிர்களுக்கும் பொது மூதாதை ஒன்று இருந்திருக்க வேண்டும். அந்த ஒற்றை மூதாதையிலிருந்து வெவ்வேறு சடுதி மாற்றங்கள் மூலம் இப்பொழுது இருக்கும் புரதங்களும் மரபணு தொடர்வரிசையும் தோன்றியிருக்க வேண்டும்.

ஏன் ஒற்றை மூதாதையில் இருந்து இல்லாமல், ஒவ்வொரு பெரும் பிரிவும் தனித்தனியாகத் தோன்றியிருக்க கூடாதா? இந்த 23 புரதங்களின் ஒற்றுமையும் வெறும் தற்செயலான ஒன்றாக இருக்கக் கூடாதா? இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறார்கள். எவ்வளவு குறைவு தெரியுமா? ஒன்றிற்கு பின் 2680 பூசியங்கள் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு பங்கு தானாம். மனிதர்கள் வேறு எந்த உயிர்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையாமல், தனியாகத் தோன்றியிருக்க எவ்வளவு வாய்ப்பு தெரியுமா? 1 க்கு பிறகு 6000 பூசியம் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு பங்கு தான்.

பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Friday, 31 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 4

கேள்வி: குரங்கிற்கு அறிவு வளர்ந்து மனிதன் ஆவது தானே பரிணாம வளர்ச்சி? (அ) பரிணாம வளர்ச்சி என்பது ஒரு உயிரினம் தன்னை அறிவிலோ உடலமைப்பிலோ மேம்படுத்திக் கொள்வது தானே?
பதில்: பரிணாமக் கொள்கையைப் பற்றிய மிகத்தவறான புரிதல்களுள் இதுவும் ஒன்று. குரங்குகளுக்கும் நமக்கும் உள்ள அறிவு வேறுபாட்டிற்குக் காரணம் நாம் பரிணமித்து மேம்பட்டவர்கள் ஆகிவிட்டோம் என்பதல்ல, அவையும் நாமும் பரிணாம வளர்ச்சியில் வெவ்வேறு விதமாகக் கிளைத்துச் சென்றுவிட்டோம் என்பது மட்டுமே.
பரிணாம வளர்ச்சி என்பது நாம் மேம்பட்ட உயிர்கள் என்று கருதக்கூடியவற்றை உருவாக்குவதை நோக்கியே என்பது தவறான புரிதல்.
பரிணாம வளர்ச்சி என்பது எப்போதுமே சிக்கலான உடலமைப்பைக் கொண்ட உயிர்களை உருவாக்குவதை நோக்கியோ அறிவில் தேர்ந்த உயிர்களை உருவாக்குவதை நோக்கியோ நகர்வது அல்ல. அறிவுள்ளவை பிழைக்கும்; வலியவை பிழைக்கும்; திறமையானவை பிழைக்கும்; என்றெல்லாம் இல்லை. தக்கது தான் பிழைக்கும். அதாவது புறச்சூழலுக்கு எந்த உயிரினத்தால் தாக்குக் கொடுக்க முடிகிறதோ, இனப்பெருக்கம் செய்து தன் வாரிசுகளை விட்டுச் செல்ல முடிகிறதோ அவற்றால் மட்டுமே பிழைக்க முடியும்.
"கண்ணில்லாத உயிரனத்திற்கு கண் கிடைப்பதும், மூளையில்லா உயிரனத்திற்கு மூளை வளர்வதும் தானே பரிணாம வளர்ச்சி" என்று நம்புவீர்களானால் அது மிகவும் தவறு. குகைமீன்கள் (Cavefish) பரிணாம வளர்ச்சியின் போது தங்களது கண்களை இழந்துவிட்டன. காரணம் இருட்டில் அவற்றிற்கு கண்களால் எந்தப் பலனும் இல்லை. அதே போல நிறமிகளையும் இழந்துள்ளன. இருட்டில் கண்களுக்கும் நிறமிகளுக்கும் வேலையில்லாத போது அவற்றால் நன்மைகள் எதுவும் இல்லை, மாறாக அவற்றால் ஆற்றல் தான் விரயமாகும். உணவுத் தட்டுப்பாடு உள்ள ஓரிடத்தில் ஆற்றலை விரயமாக்கும் சிக்கலான உடலுறுப்புகளை இழக்கும் உயிரினங்களே பிழைக்கும் நெருக்கடி இருப்பது தான் அம்மீன்கள் கண்களையும் நிறமிகளையும் இன்னும் சிலவற்றையும் இழந்ததற்குக் காரணம்.
சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு உயிரனத்திற்குப் போட்டியோ தேர்வழுத்தமோ குறைந்திருக்கும் காலத்தில் தான் அது சிக்கலான அதிக ஆற்றல் எடுக்கும் மாற்றங்களை நோக்கி நகர்கின்றன என்று கருதுகிறார்கள். அந்த உயிரனத்திற்குத் தீங்காக அமையக் கூடிய அல்லது பயன் தராத சில சடுதி மாற்றங்கள் களையப்படாமல் பரவ வாய்ப்பு அதிகம். அப்படிப் பரவி அந்த உயிரனத்தின் உடலமைப்பையும் செயற்பாட்டையும் சிக்கலாக்கலாம் (மனிதர்களின் கண்ணுக்கு இந்த complexity மேம்பாடாகத் தெரியலாம்).
ஆனால் தேர்வழுத்தம் அதிகமாக இருக்கும் காலத்தில் இது போன்ற வேண்டாத சடுதி மாற்றங்கள் களையப்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் எளிமையை நோக்கி ஒரு உயிரினம் பயணிக்கும் வாய்ப்பதிகம்.
இதையும் பார்க்கலாம். உணவுப் போட்டியும்  இரையாடிகளின் அச்சுறுத்தலும் குறைந்த பப்புவா நியூ கிணா தீவில் வாழும் பறவைகள் இணையை ஈர்க்க மட்டுமே பயன்படும் உடலமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் பலவற்றைக் கொண்டுள்ளன. இதை மேலே சொன்ன மீன்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புலப்படும்.
மனிதர்கள் மேம்பாடு என்று எதைக் கருதுகிறார்களோ அதை நோக்கி பரிணாம வளர்ச்சி பயணிப்பதில்லை. இந்தப் புரிதல் சரியாக இல்லாத காரணத்தால் தான் 'இன்றைய குரங்கிலிருந்து மேம்பட்ட version தான் மனிதர்கள். இன்றைய குரங்குகள் பரிணமிப்பதை நிறுத்திவிட்டன, பரிணமித்தவை மனிதர்களாகிவிட்டனர்' போன்ற சில தவறான கருத்துகள் நிலவுகின்றன.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Wednesday, 29 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 3

கேள்வி: பரிணாம வளர்ச்சி ஏற்பட பல கோடி ஆண்டுகள் ஆகும் தானே? (அல்லது) இப்போழுதும் பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறதா?
பதில்: இரண்டு கேள்விக்கும் சேர்த்தே பதில் எழுதலாம். பரிணாம வளர்ச்சி என்பது ஏதோ விண்கல் தாக்குவது போல ஒரு நாள் நடந்து முடியும்/முடிந்த நிகழ்வன்று. அது நாள்தோறும், நொடிதோறும் நடந்து கொண்டேயிருக்கும் ஒன்று.
சில ஆண்டுகள் கழித்து உங்கள் நண்பர் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகிறார். வந்து உங்களது மகனைப் பார்த்ததும் 'அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டானா?' என்று வியப்பாகக் கேட்கிறார். ஆனால் உங்களுக்கோ உங்களது நேற்று பார்த்தது போலவே தான் இருப்பான். நேற்று கேட்டிருந்தால் அதற்கு முதல் நாள் இருந்தது போலவே தான் உங்களுக்குத் தெரிந்திருப்பான். உங்களது மகன் நாள் தோறும் மாறிக் கொண்டே தான் இருக்கிறான், ஆனால் பார்த்துக் கொண்டே இருப்பதனால் எதுவும் புதிதாகத் தெரிவதில்லை.

இதே போலத் தான் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துமே தனது சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டு இனப்பெருக்கம் செய்து தனது வாரிசுகளை விட்டுச் செல்லும் உயிர்களே பிழைக்கின்றன. அப்படி மாற்றிக் கொள்ள முடியாமல், இனப்பெருக்கம் செய்து வாரிசுகளை விட்டுச் செல்லாத உயிர்கள் அழிந்து போகின்றன. அதனால் தான் தக்கதே பிழைக்கும்.
உலகின் முதல் உயிர் தோன்றிய நாளில் இருந்து பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு அது நடப்பது தெரியவில்லை என்றாலும் நடக்கும்/நடக்கிறது. உலகில் இவ்வளவு உயிர்கள் எப்படி தனக்கே உரிய தன்மையோடும் உடலமைப்போடும் தோன்றியிருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.
பரிணாம வளர்ச்சிக் கொள்கையைக் கொண்டு மட்டுமே உலகில் உயிர்களின் தோற்றத்தையும் பரவலையும் விளக்க முடியும்.

ஆக பதில் இது தான். பரிணாம வளர்ச்சி என்பது ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலும் நடந்தது, இன்றும் நடக்கிறது, இனப்பெருக்கம் செய்யும் உயிர்கள் உள்ள வரை நடக்கும். அது ஒரு வினைத்தொகை போல முக்காலத்துக்கும் பொருந்தும்.

Monday, 27 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 2

கேள்வி: குரங்கிற்கும் மாந்தருக்கும் அறிவில் ஏன் பெரிய வேறுபாடு?
பதில்: இன்றைய மனிதர்கள் Homo sapiens. நமக்கு வாழும் நெருங்கிய உறவுகள் என்றால் அவை Bonobos மற்றும் Chimpanzees. இப்படிப் புரிந்துகொள்ளலாம், அவை இரண்டும் அண்ணன் தம்பிகள். நமக்கு அவை சித்தப்பா மக்கள் பெரியப்பா மக்கள் போல. அதாவது நாமெல்லாம் ஒரு தாத்தாவின் வாரிசுகள்.
கொரில்லா நமது தாத்தாவின் உடன்பிறந்தவரின் இன்றைய வாரிசு. அதாவது நமக்கும் அதற்கும் தாத்தாவின் அப்பா ஒருவர் தான். இதே போல இன்னொரு தலைமுறை மேலே சென்றால் நம்முடைய தாத்தாவோட தாத்தா Gorilla விற்கும் மூதாதையர். இன்னும் ஒரு தலைமுறை மேலே போனால்  கொள்ளு தாதாவோட தாத்தா Gibbons க்கும் மூதாதையர்.
மீண்டும் ஒரு தலைமுறை மேலே சென்றால் தான் இந்தியாவில் காணப்படும் குரங்குகளின் (Old world Monkeys) மூதாதையர்கள் வந்து இணைகிறார்கள். அதாவது இன்றைய நம்முடைய கொள்ளு தாத்தாவின் கொள்ளு தாத்தா தான் இன்றைய இந்தியக் குரங்குகளுக்கும் மூதாதையர்.
ஆக மொத்தம் நமக்கும் இந்தியாவில் இன்று காணப்படும் குரங்குகளுக்கும் எவ்வளவு தலைமுறை வேறுபாடுகள் என்று பாருங்கள். அதனால் தான் நமது இயல்பும் அவற்றின் இயல்பும் அறிவும் மிகவும் வேறுபடுகின்றன.
நமக்கு நெருங்கிய உறவுகளான சிம்பான்சிகளின் செய்கைகள் நம்மை வியக்க வைப்பாதகவே இருக்கின்றன. கருவிகளைப் பயன்படுத்துதல், குடும்பத்தோட இணக்கமாக இருத்தல் என்று அவற்றிற்கும் நமக்குமான ஒற்றுமைகள் பலவுண்டு.
இன்றைய மனிதன் அளவிற்கு ஏன் அறிவுடைய உறவினர் யாரும் நமக்கில்லை என்கிறீர்களா? முன்னர் இருந்தார்கள் இப்போது அழிந்துவிட்டார்கள். உலகில் இன்னும் வேறு மனித இனங்களும் (Homo neanderthalensis, Homo floresiensis போன்ற மனித இனங்கள்) நம் மூதாதையருடன் வாழ்ந்து வந்தனர். நாமும் இவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல.
நியண்டர்தால்கள் கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயினர். தோராயமாக வேட்டையாடிகளாக இருந்த நம் முன்னோரும் அவர்களும் 4000-5000 ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கின்றனர். நியண்டர்தால் பற்றிய ஆய்வுகள் நிறைய நடக்கிறது. அவர்களின் அழிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நமது மனித இனத்தோடு கலந்தும், நம்மால் வேட்டையாடப்பட்டும் நியண்டர்தால் அழிந்து போயிருக்கலாம்.
நாம் உற்று நோக்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் அறிவு பற்றிய ஆய்வுகள். அவர்களும் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். முன்னர் நமது மனித இனத்தின் ஓவியங்களாகச் சொல்லப்பட்ட சிலவும் அவர்களது ஓவியங்களாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கும் பேசும் திறன் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட நம் இனத்தின் அறிவுக்கு நிகரான அறிவோடு தான் இருந்திருக்கிறார்கள். அக்கட்டத்தில் நம்மை விட அறிவு வளர்ச்சி பெற்றவர்களாகவும் அவர்கள் இருந்திருக்கலாம். அவர்கள் இன்று இல்லை.
ஆக, இந்தக் கேள்விக்கான பதிலின் சாராம்சம் இது தான். மனிதர்களுக்கு நிகரான அறிவுடைய மற்ற மாந்த இனங்கள் இருந்தன, இப்போது இல்லை. அதனால் பெரிய இடைவெளி நமக்கும் இன்று உயிருடன் இருக்கும் நமது நெருங்கிய உறவுகளுக்கும் இருப்பது போல இருக்கிறது.  இன்று இந்தியாவில் வாழும் குரங்கினங்கள் நம் இனத்தின் சற்றே தூரத்து உறவு தான். அவர்களின் பரிணாமம் நம்மிலிருந்து வேறு வகையாகக் கிளைத்துச் சென்று பல தலைமுறைகளானது தான் அதற்குக் காரணம்.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Sunday, 26 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 1

கேள்வி: குரங்கில் இருந்து மனிதன் வந்திருந்தால் குரங்குகள் ஏன் இன்னும் இருக்கின்றன?
பதில்: ஒரு உதாரணம் சொல்கிறேன்.
உங்களது தாத்தா ஊரில் விவசாயம் செய்தவர், கட்டு உடல் கட்டை மீசை என்று இருந்தவர். உங்களது பெரியப்பாவின் மகன் இப்போதும் உள்ளூரில் இருக்கிறார்.
உங்கள் அப்பா ஊரைவிட்டு நகரம் சென்று நீங்கள் வெளிநாடும் சென்றுவிட்டீர்கள். மீசை எல்லாம் எடுத்து கொஞ்சம் தோலும் வெளுத்துவிட்டது.
உங்களையும் உங்கள் பெரியப்பா மகனையும் நிற்க வைத்துப் பார்த்தால் அவர் தான் உங்களைவிட உங்கள் தாத்தாவைப் போல இருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் அனைவரும் உங்களது தாத்தாவைப் பார்த்தது போலவே இருக்கிறது என்கிறார்கள். அப்படிச் சொன்னாலும் உங்கள் பெரியப்பா மகனும் உங்களது தாத்தாவிலிருந்து நிறைய மாற்றங்களை அடைந்திருப்பார். ஆனால் உங்களைப் போன்ற மாற்றாங்கள் இல்லை.
1. பார்க்க உங்களது தாத்தாவைப் போல இருக்கிறார் என்பதற்காக அவர் உங்கள் தாத்தா இல்லை.
2. உங்கள் பெரியப்பா மகன் எப்படி உங்கள் தாத்தாவிற்கு வாரிசோ அதேயளவு நீங்களும் அவருக்கு வாரிசு தான். வெளிநாடு போய்விட்டீர் என்பதற்காக அவர் உங்களது தாத்தா இல்லை என்று ஆகிவிடாது.
3. நீங்களும் உங்களது பெரியப்பா மகனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் தான்.
(இந்த உதாரணத்தை யாரையும் பழிப்பதற்காய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு எளிய புரிதலுக்காகத் தான். உங்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)
நீங்கள் தான் இன்றைய மனிதர்களான Homo sapiens. உங்களது பெரியப்பா மகன் தான் இன்றைய சிம்பன்சி போன்ற மனிதக் குரங்குகள். உங்களது தாத்தா தான் இன்றைய மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் மூதாதை. மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் என்று சொல்வது இன்றைய குரங்குகளில் இருந்து அல்ல. மூதாதைக் குரங்குங்களிடமிருந்து. அந்த மூதாதையர்கள் நம்மைக் காட்டிலும் இன்றைய குரங்குகளோடு கூடுதல் ஒற்றுமை கொண்டிருந்தனர். நாம் இரண்டு காலில் நடப்பது, மரத்தைவிட்டு கீழ் இறங்கியது என்று நிறைய மாறிவிட்டோம், வெளிநாடு போன நீங்கள் மாறியது போல. இன்றைய குரங்குகளும் நமது மூதாதையரிடம் இருந்து நிறைய மாறியிருப்பார்கள்.
1. மனிதர்கள் இன்றைய குரங்குகளிலிருந்து பரிணமிக்கவில்லை.
2. இன்றைய மனிதர்களுக்கும் இன்றைய குரங்குங்களுக்கும் ஒரே மூதாதையர் தான்.
3. நாமும் இன்றைய குரங்குகளும் ஒன்று விட்ட சகோதரர்கள்.
பி.கு: இந்த உதாரணம் 100% விளக்கம் தரவில்லை. இது வெறும் அடிப்படைப் புரிதலுக்கான எடுத்துக்காட்டும் விளக்கமும் மட்டுமே.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Wednesday, 31 October 2018

இதுவும் கதை தான்

நூலகத்தின் மேல் மாடியிலே அடுக்கி வைத்த நூல்கள் நடுவே நடந்து போகிறேன்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம்..
கல்லாதது உலகளவு,
ஒற்றை உலக்கத்தைக்
கற்றல் வேண்டி கையிலேந்தினேன்..
தலைக்கு மேலிருந்த கோடுகள் எல்லாம் வளைந்து நெளிந்து தன்னுள் பிணைந்து வளையாகிக் கொண்டிருந்தன..
கூன் நிமிர்ந்து, ஆயுதம் ஏந்தும் ஒற்றைக் கோட்டு வரலாறு காலாவதியாவது கண்டேன்..
அவர்கள் என்று அவர்கள் ஆனார்கள்?
அவர்களானது அவர்களுக்குத் தெரியுமா?
பின்னரிருந்தவர் அவருலகத்தில் இருந்து சிரித்துக் கொண்டிருந்தார்..
அவரின் உலகத்தைப் பார்க்க ஆசையாய் இருந்தது.
ஆனாலும்..
திரும்பிப் பார்த்தால் தன்னுலகத்தில் இருந்து உலுக்கப்படுவரோ? வேண்டாம்
என்னுலகத்திற்கே திரும்பிச் செல்கிறேன்..
இதோ..கண்டம் விட்டுக் கண்டம் நகர்கிறார்களே,
கழுகுகளால் வேட்டையாடப்படும் விளிம்புநிலை மனிதர்கள்..
மனிதர்களா? அப்பொழுது அவர்கள் சந்திக்கும் இவர்கள் யார்?
இவர்களும் மனிதர்களா?
உம்ம்.. இங்கே கலங்காத மனமுண்டோ?
கலக்காத இனமுண்டோ?
பார்த்த போதெல்லாம் வெட்டிக்கொண்டார்கள்,
சில நேரம் கட்டியும் கொண்டார்கள்.
மோதலில் அழிந்தவர்கள் நியண்டர்தால்கள்..
காதலால் அவர்களின் மிச்சத்தை இவர்கள் மரபணுவில் தூக்கிக் கொண்டு அவர்கள் மீண்டும் நடந்தார்கள்.
என் உலகத்தில் மிதந்து கொண்டே,
ஊர்வதும் நகர்வதும் தெரியாமல்
ஊர்ந்தும் நகர்ந்தும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வந்தடைந்தவர்களைப் போல,
நானும் கீழே வந்தடைந்தேன்.
காலியாய் இருந்த இடத்தில்
இடம்பிடித்தேன்.. இடமும் பிடித்தது..
முன்னர் இங்கு யாரிருந்தார்?
முன்னர் இருந்தே நான்
இங்கு தானே இருக்கிறேன்.
நான் மட்டும் தானே இருக்கிறேன்,
நான் இங்கே மட்டும் தானே இருக்கிறேன்..
நகர்ந்தேனா? நானா?
வந்தவர் கேட்டார் 'தலையைத் தூக்காமல் படிக்கிறாயே, என்ன நூலது?'
காட்டியதும் சொன்னார் 'அறிவியலா? கதையென்று நினைத்தேன்'
ம்ம்ம்.. இதுவும் கதை தான்...
மனிதர்களின் கதை..
"A Brief History of Everyone Who Ever Lived: The Human Story Retold Through Our Genes by Adam Rutherford"

Wednesday, 15 August 2018

வரலாற்றை புரட்டிப்போட்ட கொள்ளைநோய்

உரோமப் பேரரசே ஒரு பாக்டிரீயாவால் தான் அழிந்தது என்றால் அது மிகையாகாது. ஆம்! கொள்ளைநோயொன்று மக்களையும் படைவீரர்களையும் கொத்து கொத்தாகக் கொன்று குவித்தது. அங்கு கி.பி. 541 இலிருந்து ஓரோண்டு காலத்திற்கும் மேலாக நோய் தொற்றி மக்கள் இறந்தனர். இதைப் பற்றி எழுதிய சமகாலத்து  வரலாற்று ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு 10,000 மக்கள் இறந்தனர் எங்கின்றன. அது மிகையென்றாலும் குறைந்தது ஒரு நாளைக்கு 5,000 மக்களாவது இறந்திருப்பர் எங்கின்றனர் இக்காலத்து வரலாற்று ஆசிரியர்கள். எது எப்படியானாலும் உரோமப் பேரரசில் மட்டும் 25 மில்லியன் மக்கள் அக்கொள்ளைநோயிற்கு பலியாகினர்.

அத்தோடு நிற்கவில்லை, தொடர்ந்த ஆண்டுகளில் ஐரோப்பாவில் இறப்புவிகிதம் இரட்டித்தது. உரோமைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி தாண்டி இலண்டன், வட ஆப்பிரிக்கா வரை இந்தக் கொள்ளை நோய் பரவியது. எகிப்தில் கி.பி. 542 இல் ஓர் கொள்ளைநோய் பரவியதாக அக்கால நூல்கள் சொல்கின்றன. அவை குறிப்பிடும் செய்தியைக் கொண்டு அதே கொள்ளைநோய் தான் அங்கும் பரவியிருக்கிறது என்று இனம் காண முடிகிறது. கி.பி. 1348-1350 வரையான காலக்கட்டத்தில் இலண்டனில் மக்கள் கொத்து கொத்தாக இறந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் இறந்திருக்கின்றனர். முன்னர் உரோமப் பேரரசில் நடந்தது போலவே இங்கும் அடுத்து அடுத்த நூற்றாண்டுகளில் நோய் பரவி மக்கள் இறந்திருக்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் 'Black Death' என்பர். கி.பி. 1666 இல் இலண்டனில் ஏற்பட்ட பெருந்தீ விபத்திற்கு பின்னரே இந்தக் கொள்ளை கட்டுக்குள் வந்திருக்கிறது.

என்ன செய்தியென்றால் நவீன மரபணு சோதனைகள் மூலம் நூற்றாண்டுகள் தாண்டி வந்த அத்தனை கொள்ளைநோய்களுமே ஒரே பாக்டீரியாவால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்திருக்கின்றன. ஆம், ஐரோப்பக் கண்டத்தையே கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டிப்படைத்த நோயிற்கு ஒரே பாக்டீரியா தான் காரணம். பல இடங்களில் இந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் புதைகுழியில் மிஞ்சிய மரபணுக்களைக் கொண்டு இதனை உறுதிபடுத்தியிருக்கின்றனர்.

இலண்டனில் இறந்ததில் குழந்தைகள், முதியவர் மட்டுமல்லாது 35 வயதிற்கு உற்பட்டவர்களும் அப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர். அதிலிருந்தே நோய் எவ்வளவு விரைவாக ஆரோக்கியமானவர்களிடமும் பரவி அழித்திருக்கின்றது என்பதை உணர முடிகிறது.

நிற்க! அந்த நோய்க்கிருமியின் பெயர் Yersinia pestis. இது பொதுவாக அணில் போன்ற சிறு பாலூட்டிகளிடம் காணப்படுவது. அவற்றை ஒருவகையான உண்ணிகள் (Oriental rat flea) கடிக்கும் போது அந்த உண்ணிகளின் வயிற்றுக்கு வந்தவுடன் இந்த பாக்டீரியா இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது. அந்த உண்ணியின் உடம்பில் இரத்தத்தை உறையச்செய்து அவற்றிற்கு மேலும் பசியெடுக்க வைக்கிறது. நோய்க்கிருமிகள் தாங்கிய உண்ணிகள் மனிதர்களைக் கடிக்கும் போது தான் சிக்கலே தொடங்குகிறது. மனிதர்களின் உடலுக்குள் வந்தவுடன் செல்களில் தங்களது வேலையைக் காட்டுகின்றது இந்த பாக்டீரியா. இயல்பாகவே நமது உடலில் வெள்ளையணுக்கள் தேவையற்ற போது இறந்துவிடும், ஆனால் அது உடலுக்கு தேவையான போது மட்டுமே. இந்த நோய்க்கிருமி, அக்குறுக்குவழியைப் பயன்படுத்தி வெள்ளை அணுக்களை தற்கொலை செய்து கொள்ள வைத்துவிடும். இப்படித் தான் நோய் தொற்று வந்ததும் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் கண்டு ஒரு சில நாட்களிலிலேயே நோய்வாய்ப்பட்டவர் இறந்துவிடுவார். இறப்பதற்கு முன்னர் இருமல் தும்மல் என்று நோயைப் பரப்பிவிட்டு பரலோகம் போய்விடுவார்.

மீண்டும் கதைக்கு வருவோம். இந்த நோய்க்கிருமி ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது என்று நெடுங்காலமாய் நம்பப்பட்டு வந்தது. உண்மையென்றால் இது சீனாவில் இருந்து பரவியது. ஆனால் இருசியா தாண்டி ஐரோப்பாவிற்குள் நுழைந்த பின்னரே அது கொள்ளைநோயாக உருமாறியிருக்கிறது. உரோமா என்னும் மக்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து போய் ஐரோப்பாவில பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியமர்ந்தவர்கள். சமூக பண்பாட்டு காரணங்களால் உரோமப் பேரரசில் இருந்த ஏனைய ஐரோப்பியர்களுடன் கலந்து இனப்பெருக்கம் செய்யவில்லை. பின்னாளில் அங்கு வாழும் இந்த இரு வகையான மக்களின் மரபணுக்களில் சில இந்த நோயிடமிருந்து தற்காத்துக் கொள்ள சடுதி மாற்றத்திற்கு (Mutations) உள்ளாகியிருக்கின்றன. ஆனால் இக்கிருமியின் பிறப்பிடத்தில் வாழும் சீனர்களிடமோ இந்தியர்களிடமோ இவ்வகை மரபணுக்கள் இல்லை.

இன்றுமே கூட இதே நோய்க்கிருமி உருசியாவில் சிறு பாலூட்டிகளிடம் காணப்படுகிறது. கேள்வி இதுதான், அவ்வகை மரபணுக்கள் இல்லாமல் எப்படி சீனர்களாலும் இந்தியர்களாலும் தங்களைக் காத்துக் கொள்ள முடிந்தது, ஐரோப்பியர்களால் முடியவில்லை? நிற்க! 'நம் முன்னோர்கள்' என்று தொடங்க வேண்டாம். இந்தக் கேள்விக்கான விடை அறியப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கிருமியின் மிக நெருங்கிய உறவினரான Yersinia pseudotuberculosis என்ற மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத ஒரு பாக்டீரியவின் மரபணுவுடன் இந்த நோய்க்கிருமியின் மரபணுவை ஒப்பிட்டு பார்த்ததில் இவை இரண்டும் 5000 ஆண்டுகளுக்கு முன்பே வெவ்வேறு உயிரினங்களாக பிரிந்துவிட்டன என்பது தெளிவாகிறது. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் இந்த நோய்க்கிருமியால் மனிதர்கள் யாரும் இறந்ததாகத் தெரியவில்லை. இந்த நோய்க்கிருமியிடம் இருக்கும் ஒரு புரதம்(Yersinia murine toxin- Ymt) தீங்கில்லாத அதன் உறவினரான இன்னொரு பாக்டீரியாவிடம் இல்லை. இந்தப் புரதத்தின் வேலை என்னவென்றால் இந்த பாக்டீரியா உண்ணியின் வயிற்றிற்குள் இருக்கும் போது அது செரிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வது. இந்த புரதத்தை கிமு 1000 வாக்கில் வேறொரு பாக்டீரியாவிடமிருந்து பெற்றிருக்கிறது. (மனிதர்களைப் போன்ற பாலூட்டிகளிலும் பிற உயிரனங்களிடமும் மரபணு இனப்பெருக்கத்தின் மூலம் மட்டுமே பகிரப்படுகிறது. ஆனால் நுண்ணுயிரிகளால் மற்றொரு நுண்ணுயிரியிடமிருந்தும் மரபணுக்களைப் பெறமுடியும் - lateral gene transfer).

ஆக இதுதான் கதை, அது நாள் வரை மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பே இல்லாமல் இருந்த இந்த பாக்டீரியா தீடிரென்று தன்னை ஒரு உண்ணியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மரபணு மாற்றத்திற்கு உள்ளாகிறது. அது தெரிந்தோ தெரியாமலோ மனிதருக்கு வந்தவுடன் கொள்ளைநோயாக மாறிவிட்டது. அதனால் தான் ஆசியர்களைக் கொள்ளாத அந்த நோய் ஐரோப்பியர்களைக் கொன்றிருக்கிறது. இக்கொள்ளை நோய் பரவியதற்கு திடீரென்று பரவத் தொடங்கிய எலிகள் முதலிய சிறு பாலூட்டிகள் தான் முக்கியக் காரணம். அவை ஏன் திடீரென்று பரவின என்ற கேள்விக்கான பதிலை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.

இந்த நெடிய கதை மூலம் சில பல பாடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை புறந்தள்ளிவிட முடியாது. ஹீலர் பாசுக்கர் போன்றோரின் பரப்புரைகளில் எவ்வளவு பொய் இருக்கிறது என்பதை உணர்வதற்கு இந்த ஒரு கதையைப் புரிந்து கொள்வதே போதுமான இருக்கும். என்ன பாடம் என்று வேறொரு நாள் விவாதிக்கலாம்.

Reference:

A Brief History of Everyone Who Ever Lived: The Stories in Our Genes by Adam Rutherford.