Wednesday, 9 July 2014

இலக்கணம் தேவையா? 2

"தமிழிலக்கணம் கற்றான்", "தமிழ் இலக்கணம் கற்றான்." இவ்விரண்டிற்குமான பொருள் வேறுதான். இதனைப் படிப்பவரின் அவாவிற்கேற்றாற் போல படிக்க இயலுமே தவிரப் பொருள் தெளிவு கிடைக்காது. எளிமையென்பது எழுதுவதில் மட்டுமில்லை. படிப்பதிலும் சொன்ன பொருளையே புரிந்துகொள்வதிலும் கூட இருக்க வேண்டும். இலக்கணமென்பது எப்படி எழுத வேண்டுமென்று கற்பிப்பதைவிட எப்படி வாசித்துப் பொருள்கொள்ள வேண்டுமென்று கற்பிக்கிறது. தனிமொழியாய் எழுதுவது பொருள் மயக்கம் தராதவரை நல்ல மாற்றம் தான். ஆனால் புணர்ச்சிவிதிகளைப் பயன்படுத்தினால் கணினிமயமாக்கல் எளிது. இதையே ஒருவர் கூகிளில் மொழிபெயர்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இலக்கணவிதிகளைப்படி அதனால் எளிதாக சரியான மொழிபெயர்ப்பைத் தரவியலும். " He is learning Tamil grammar", "Tamil is learning grammar". Tamil grammar has a mathematical structure which makes it easier to computerize. When all are trying to make a formula for randomly working things, we are moving from a well defined structure to a randomness.

ஊருக்குப்போறேன்- இப்படித் தான் பேசுகிறோம். இதே எழுதும் போது- ஊருக்கு போறேன்- என்று எழுதுகிறோம். இந்த முரண்பாடு ஏன்? வட்டார வழக்கில் எழுதுவது தவறில்லை, பேச்சுவழக்கை எழுதுவதும் சரிதான். பேச்சில் நமக்கு இயல்பாக வருகின்ற ஒன்றை எழுத்தில் விடுவதுதான் இடிக்கிறது. நம் பேச்சில் இன்னும் ஒற்று வாழ்கிறது. புணர்ச்சி வாழ்கிறது. வயித்துவலி- வயிற்றுவலி என்பதன் பேச்சு வழக்கு, இதே எழுதும் போது பல வயிறு வலி என்று எழுதுகின்றனர். இதை எப்படித் தானாக நிகழும் மாற்றம் என்று கூறுவது? எழுத்துவழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் ஒவ்வாத ஒரு தட்டச்சு வழக்கு சரியில்லை.

உற்று நோக்கும்போது ஏதோ பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் ஒத்துப் போவது இன்றைய காலகட்டத்திற்கு புணர்ச்சியிலக்கணங்கள் தான். இதை எழுத்து வழக்கை(தட்டச்சு வழக்கு) எளிமை படுத்துவதாக நினைத்து பல நேரங்களில் சோம்பல் கொண்டு எழுதுவதை இயல்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாமாவென்று தெரியவில்லை. ஒரு மாற்றம் நிகழும் போது அது இயல்பானது தானா என்று பார்க்க வேண்டும். இயல்பு தானென்றால் அது எல்லாவிடங்களிலும் நிகழ வேண்டும். இங்கு எழுத்து வழக்கில் மட்டும் நிகழ்கிறது. இது இயல்பா இல்லையா என்று தெரியவில்லை
என் கருத்து இப்பொழுதும் நம்மால் இலக்கணத்தைப் பின்பற்ற முடியும். ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் எழுத்தில் இல்லாத பிழைகள் நம் எழுத்தில் வருகிறதே.  இதை வெறுமனே மாற்றம் என்று ஏற்றுக்கொண்டுவிட முடியவில்லை.


மொழியில்லா ஒரு நிலை->எப்படி பேசுவது என்ற வரைமுறைகள்-> பேச்சு வழக்கு மொழி->எழுத்து வழக்கு->இலக்கணங்கள். இப்படி நம் மொழி உருவானதாக எண்ணுகிறேன். இதற்கு முன்னர் நடந்த மாற்றங்கள் எல்லாம் மெதுவாக நடந்தது. உதாரணமாக வடிவு- அழகு, இந்தப் பொருள் மாறி வடிவு-வடிவம், இந்தப் பொருளில் வழங்குகிறது. பாவினங்களில் சேராக் கவிதைகள் வந்துவிட்டன. இது இயல்பான மாற்றம். ஒரு நீண்ட நெடிய காலக்கட்டத்திற்கு பின்பு தானாகவே நடந்த மாற்றம். ஆனால் இப்பொழுது நிகழும் இம்மாற்றம் இயல்பானதா? இதுவே என் கேள்வி. முன்னர் நடந்த மாற்றங்களில் ஒரு சேர அனைவரும் பயணித்தோம். ஆனால் இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பயணிக்க முற்படுகிறோம். இதன் விளைவு குழப்பம் தான் (chaos).


சரி இம்மாற்றம் பேச்சு வழக்கிலும் நிகழ்கிறதா? இல்லையே. நாம் மாற்றம் இயல்பானதும் அதை ஏற்றுக்கொள்வது முறை என்று சொல்வதற்கும் அடிப்படை ஒன்று தான். "பேச்சு வழக்கு எழுத்து வழக்கானது;அதன் தன்மை ஆராய்ந்து இலக்கணம் இயற்றப்பட்டது;கடிய இலக்கணத்தால் மக்களை மூச்சுத் திணறச்செய்யக்கூடாது". இதை நன்கு கவனத்தால் நான் சொன்னது போல அண்மை காலமாக நம் பேச்சு வழக்கில் இருக்கும் இலக்கணங்கள் அல்லது அதன் அமைப்பு எழுத்து வழக்கிற்கு வரும்போது அடிபடுகிறது. பேசுவது ஒன்றையும் எழுதுவது ஒன்றையுமாகச் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி ஏதோ ஒரு உந்துசக்தியால் நிகழும் திடீர் மாற்றமானது குழப்பத்தைத் தான் தரும். சில காலம் கழித்து பேசுவதற்கு பொருந்தாத ஒரு எழுத்துவழக்கு இலக்கணத்தை நாம் கடைபிடுத்துக்கொண்டிருப்போம்.

2 comments:

  1. இயல்பான மாற்ற விளக்கம் உட்பட அலசல் மிகச் சரி ஐயா...

    ReplyDelete
  2. உண்மையில் தெரிந்தோ தெரியாமலோ பேச்சுவழக்கில் சரியாகப் பயன்படுத்தப்படுவதுகூட, எழுத்து வழக்கிற்கு வரும்போது சற்றுத் திணறத்தான் செய்கிறது. பேச்சுவழக்கின் வளர்ச்சி செவிவழிச் செய்தியாகவாவது நிலைத்துநிற்கிறது. எழுத்து வழக்கிற்குப் பேச்சுவழக்கினும் மிகுந்த மொழிப்பயிற்சி தேவை.

    ReplyDelete