Monday 7 July 2014

பொன்னியின் செல்வன் நாடகம்- என் பார்வையில்.

பொன்னியின் செல்வன் நூல் நாடமாக நிகழ்த்தப்படுகிறதென்றவுடன் என்னை முதலில் ஆச்சரியம் கொள்ளச்செய்தது "எப்படி இவ்வளவு பெரிய நூலை நாடகமாகப் போடப்போகிறார்கள்" என்பதில்லை. "எப்படி  இவ்வளவு புகழ்பெற்ற நூலை நாடகமாகச் செய்யத் துணிந்தார்கள்" என்பதுதான். பல்லாண்டு காலமாக இந்நூல் மக்களிடையே ஏற்படுத்திய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யமுடியும் என்றெண்ணி இந்நாடகத்தை அரங்கேற்ற வந்ததற்கே அவர்களை நாம் மெச்ச வேண்டும்.

கோவையில் சூலை 6 ஆம் தேதி நடித்த அதே நடிகர்கள் தான் மற்ற இடங்களில் நடித்தார்களாவென்று தெரியவில்லை. இதை நான் அன்று பார்த்த நாடகத்தை மட்டுமே மையமாக வைத்து எழுதுகிறேன்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் அரங்கத்தைச் சென்றடைந்துவிட்டேன். கூட்டம் சேரத் தொடங்கியது. " அம்மா! நாடகம் எனக்கு புரியுமா? ஈசித் தமிழா இருக்குமா?", " புரியற தமிழாத் தான் இருக்கும்" இப்படி அம்மாவிற்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைக் கேட்டு அது என்ன புரியற தமிழ் புரியாத தமிழ், ஏதோ அந்தமிழ் பைந்தமிழ் போல நமக்குத் தெரியாத தமிழாக இருக்கும் என்றெண்ணிக் காத்துக்கொண்டிருந்தேன்.

நாடகம் சொன்ன நேரத்திற்கு ஆரம்பமானது. அரங்கமும் அதில் இருந்த கோட்டை மதிலும் யாளியும் (அங்கும் நான் யாளியைவிட்டு வைக்கவில்ல) நம்மை சோழர் காலத்திற்குக் கூட்டிச்செல்வதாய் இருந்தது. ஆனால் அத்தகைய பிரம்மாண்ட அமைப்புகளுக்கு மேடை போதுமானதாகத் தெரியவில்லை. கோவையில் இதைவிடப் பெரிய அரங்கம் இல்லையே என வருத்தமாக இருந்தது :( கைபேசி வேண்டாம் என்பதற்கு அவர்கள் அறிவித்தவிதமே இரசிக்கும்படி இருந்தது. நாடகம் தொடங்கியது. மூன்றரை மணி நேரத்தில் அது முடிந்தது.

இந்த மூன்றரை மணி நேரத்தில் நான் இரசித்தது இவற்றைத் தான்:

வந்தியத் தேவனாக நடித்தவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நூலைப் படிக்கும் போது நம் கண்முன் வந்து போகும் வந்தியத்தேவன் நாடகத்தில் நடிப்பது போன்றே இருந்தது. கொஞ்சம் குறும்பும் பெண்களைக் காணும் போது கொஞ்சும் காதலுமாய் நெஞ்சை அள்ளிவிட்டார். நாடகத்திற்கு அத்தகை உயிரோட்டத்தை இவர்தான் கொடுத்திருந்தார். எதிர்பார்த்த கதாப்பாத்திரம் எதிர்பார்த்தது போல் இருந்தது வாணர்குல வீரன் தான்.

நான் அவ்வளவாக எதிர்பார்க்காமல் இருந்த ஒரு கதாமாந்தர் நடிப்பால் கவர்ந்திழுத்துத் தன் இருப்பை மக்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார் என்றால் அது பழுவேட்டரயர் தான். கோபம் கர்வம் இரக்கம் என அனைத்துக் குணங்களையும் ஒன்றே கொண்ட ஒருவரைத் தேடிப்பிடித்து அந்தக் கதாபாத்திரமாக நடிக்க வைத்ததைப் போல் இருந்தது.

இவர்கள் இருவருமே அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறியிருந்தனர். தங்களுக்குத் தொடர்பில்லாத ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் போதும், வசனமில்லாமல் சும்மா அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது கூடத் தாங்கள் பூண்ட வேடத்திற்கு உரியவர்களாகவே நடந்துகொண்டனர். இது அவர்களின் தேரிய நாடக அனுபவத்தைப் பறைசாற்றுவது போல இருந்தது.

ஆதித்த கரிகாலனின் அறிமுகம் அட்டகாசம். மதம்கொண்ட யானையாக அவன் உலா வருவதாகக் கற்பனை செய்ததைப் போலவே அவரின் நடிப்பு இருந்தது. கோபம், உணர்ச்சிவசப்படுவது, நந்தினியைப் பார்க்கும் போது கனிந்துருகுவது என நாடகத்தின் இறுதியில் வந்து புயல் மழையாய் அடித்து ஓய்ந்தது ஆதித்த கரிகாலன் என்னும் புயல்.

நந்தினியின் பணிப்பெண்ணாக வந்தவரின் நடிப்பு கொஞ்ச நேரமேயாயினும் அசத்தல். இயற்கையாக நகைச்சுவை வரவழைத்தது.

ஆண்பால் நடிகர்கள் அனைவரும் தமிழ் உச்சரிப்பில் தேரியவர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. அவர்களின் தமிழ் இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது.

செம்பியன் மாதேவி, மதிராந்தகன், இளைய பழுவேட்டரயர், கந்த மாறன், இரவிதாசன் போன்றோர் ஏமாற்றங்களைத் தராமல் சிறப்பாக நடித்திருந்தனர்.

ஆழ்வார்க்கடியானக வந்தவர் அருமையாக நடித்திருந்தார். இருப்பினும் குட்டை உருவமாய் தொப்பையுடன் இருக்கும் அழ்வார்க்கடியானுக்கு உயரமாய் ஒருவரைப் போட்டது ஏதோ போலிருந்தது. இதே போல பார்த்திபேந்தரனாக நடித்தவரை பனைமரத்தில் பாதி உயரத்திற்குக் கற்பனை செய்துவைத்திருந்தேன். குட்டையாக ஒருவர் நடித்ததால் மன ஏற்கவில்லை. மேலும் அவர் சாமியாடியாக வந்ததும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவரின் நடிப்பும் கலைஞர்களுக்கே உரிய ஒன்றாய் இருந்தது. நந்தினியைக் காணும் போது அவர் முகத்தில் காட்டிய மாற்றங்கள் அடேங்கப்பா என்று சொல்லிக் கைதட்டும் அளவு அருமை.

ஆனால் பெரிதும் ஏமாற்றியது நாடகத்தின் பெண்பாற் கதாபாத்திரங்கள் தான். நந்தினியின் நடிப்பும் உச்சரிப்பும் குறைகூறும் வகையில் இல்லை. இருப்பினும் ஒரு நாகம் போலக் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு கதாநாயகிக்கு அவரை வைத்துப் பார்க்க முடியவில்லை.
குந்தவை, பூங்குழலி- இவர்கள் இருவருமே மிகச் சுமாராக நடித்திருந்தனர். குந்தவைக்குத் தொடர் மொழியாக வரும் சொற்களைப் படிக்கும் போது குளறியதும், பூங்குழாலியாய் நடித்தவர் அனைத்து லகர, ளகரத்தையும் ழகரமாக உச்சரித்தமும் நாடகத்தின் தமிழைக் குழைப்பதாய் இருந்தது. நடிப்பிலும் அவர்கள் சொதப்பியிருந்தனர். வந்தியத் தேவன் தேனொழுகக் காதலித்த காட்சியில் குந்தவை பக்கத்திலிருந்து எந்த உணர்வும் வெளிப்படவில்லை :( அதே போலப் பூங்குழலி அருள்மொழியைப் பார்த்த காட்சியில் அவளின் கண்களிலும் குரலிலுல் எந்த உணர்ச்சியும் இல்லை. வானதியாக நடித்தவர் ரொம்பக் கொஞ்சிக் கொஞ்சிப்பேசிக்கொண்டிருந்தார்.

நாடகத்தின் தொடக்கதில் இருந்த நேர்த்தி போகப் போக கொஞ்சம் குறைந்தது. முதற்காட்சியில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் கோட்டை மதிலுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருப்பதைக் காட்டிய விதமெல்லாம் மிகச்சிறப்பு. அதே போன்று இறுதி வரை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வானதி அருள்மொழியைப் பார்த்ததும் மயங்கி விழும் காட்சியை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் வரவில்லை.
மணிமேகலையைக் கதையில் விட்டுவிட்டனர். :(
சேந்தன் அமுதன் முதற்காட்சியிலேயே வாளெடுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஆதித்தகரிகாலனின் இறப்பு நூலில் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு விழுக்காடு கூட நாடகம் ஏற்படுத்தவில்லை.
மேடையின் பின்னால் இருந்த திரையைக் கடலருகில் வரும் காட்சிகளுக்குக் கடல் போல் மாற்றியருக்கலாம்.

பெண் நடிகர்களின் உச்சரிப்பை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நாடகம் மிக அருமை. திருப்தி அளிக்கும் ஒரு அனுபவம்.
திரையுலகத்தினரைவிட இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள் என்பதை நிருபித்துவிட்டனர்.
இதில் நான் கண்ட அதிருப்தி கூடப் பள்ளிப்பருவத்தில் எங்கள் பள்ளியில் நிறைய வரலாற்று நாடகங்கள் பார்த்துப் பழகிவிட்டிருக்கிறபடியால் தோன்றியவை தானே ஒழிய குறை கூறும் அளவிற்கு நாடகமில்லை.

பள்ளி மாணவர்கள் சிலர் நாடகம் பார்க்க வந்திருந்தனர். எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள். மொக்கைடா என்று பேசிக்கொண்டு சென்றது வருத்தமாக இருந்தது. அதே வயதில் நான் கல்கியைப் படிக்க ஆரம்பித்திவிட்டிருந்தேன். அவர்களுக்கு அந்த அனுபவம் கிடைத்தால் அவர்களும் இரசித்திருப்பர் என்று நினைத்துக் கொண்டேன்.

நாடகத்தமிழ் அழியும் விளிம்பில் இருக்கும் இந்தக்காலத்தில் இப்படியொரு நாடகப்புரட்சி செய்த S.S. International Live நிறுவனத்திற்கு நாடகத் தமிழே கடமைப்பட்டிருக்கிறது தான். நாடக்கத்தை மீட்டெடுத்துவிட்டனர். மேலும் பல வரலாற்று நாடங்களை இவர்கள் அரங்கேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பில் அரங்கத்தைவிட்டு வெளியே வந்தேன்.

-சுபாசினி. (06/07/2014)

5 comments:

  1. Even i saw this drama.. Felt good...it was too good except one thing that the persons who played the roles didnt match with the imAgination.. Good try.. Hats off...

    ReplyDelete
  2. மிகவும் பரபரப்பேற்படுத்திய முயற்சி.. சென்னையில் நிகழ்ந்த போது பார்க்க முடிய வில்லை.. இந்தப் பதிவு கைகொடுத்தது. கற்பனை பண்ணியதைக் காட்சிப் படுத்தியதைக் கற்பனை பண்ணிப் பார்த்துக் கொள்கிறாற்போல் :-)

    ReplyDelete
    Replies
    1. இது கூட ஒரு சுக அனுபவம் தான். கற்பனையை எவ்வளவு பூர்த்தி செய்தார்களென்று கற்பனை செய்துபார்ப்பது. மீண்டும் நிச்சயம் ஏதேனும் ஒரு பெருநகரத்தில் அரங்கேற்றுவார்கள். அப்பொழுது சென்று பார்த்துவிடலாம். :)

      Delete
  3. I felt like once again I gone through the novel when I finished going through your review. Nice.

    ReplyDelete