Monday, 6 May 2013

திருக்குறள் சொல்லும் நாகரிகம்


நாகரிகம் என்பது என்ன??
திருக்குறளில் நாகரிகம் என்னும் சொல் வரும் இடம் இதுதான்.

"பெயக்கண்டு நஞ்சுண் டமையவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் " - குறள் 580
அதிகாரம் 58. கண்ணோட்டம்.


நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.

இதனை இக்காலாத்திற்கு பொருத்திப் பார்ப்போம் ஆயின் இப்படி எடுத்து கொள்ளலாம். ஒரு குழந்தை பிறந்த தினத்திற்கு இனிப்பு கொண்டு வருகிறது. நமக்கோ நீரிழிவு நோய். இனிப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனால் வேண்டாம் என்று சொல்லாமல் அந்த குழந்தைக் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக அதனை எடுத்து உண்கிறோம். இனிப்பு எனக்கு நஞ்சு என்று தெரிந்தும் பிறர் மனம் நோகக் கூடாது என்று எண்ணி உண்கிறோமே அது தான் நாகரிகம். (பர்வீன் சுல்தானா அவர்கள் அரசினர் தொழில்நுடபக் கல்லூரி, கோவை, சங்கமம் விழா பட்டிமன்றத்தின் போது ஆற்றிய உரையிலிருந்து கொள்ளப்பட்டது)

சான்றோர் விளக்கம்:
'நயத்தக்க நாகரிகம் 'என்றதனாலும் , 'அமைவர் ' என்றதனாலும் , நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால் , இப்பொருட்பாலில் அரசர்க்குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ்வதிகாரத்தின் இவ்விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும் , அறிந்து கொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும் ,நட்புப் பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும் , அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க ' என்னும் அடைபெற்றதென்றும் , அறியப்படும் . அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர் செயலாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல்.



நாகரிகம் என்பது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை , கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிகமெனப் பட்டது.

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்"

என்பது நற்றிணை(355).பெய்தும் என்னாது 'கண்டும் 'என்றதனால் , உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.

Saturday, 30 March 2013

புதுக்கவிதை

இயைபும் மோனையும் இழுத்தடிக்க
எதுகையும் முரணும் முகஞ்சுழிக்க
பாவகை நாலும் பறந்தோட
கருத்தும் எங்கோ கட்டவிழ
கிடைத்த சொல்லில் கிறுக்கிவைக்க
புதுக்கவிதை என்றும், அதனை
ஹைக்கூ என்றும், அய்யோ
போற்றுது மக்கள் மனமே!!!!

Wednesday, 27 March 2013

விக்கல்....

விக்கல் வரும் போதெல்லாம் 
உன் நினைவு...

என் தலையைத் தட்டி
நீ தண்ணீர் குடித்த நினைவு...

அதிர்ச்சி வைத்தியம் என்று
அசட்டுத்தனம் நீ செய்த நினைவு...

"நினைக்க நான் இருக்க
நினைத்தது யார் உன்னை??"
என்று நித்தமும் நீ சண்டையிட்ட நினைவு...

இன்று...
நினைத்தது நீ இல்லை... தெரிந்தும்
நினைத்திருக்க மாட்டோயோ... என
ஏங்குகிறேன்.. 
விக்கல் வரும் போதெல்லாம்...

(நினைத்து நினைத்து எழுதியது
சுபாசினி. :P)

Wednesday, 6 March 2013

சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?"


சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?" நூலைப் படித்தேன். uncertainity principle, quantum theory, E=mc2 அனைத்தும் படித்தது தான். இருந்தும் அவர் காட்டியது புதிய கோணம். எதற்கு என்று தெரியாமல் சேர்த்த பள்ளிக் கல்வித் துறை, மதிப்பெண்ணிற்கு விரட்டிய பள்ளி, அறிவியல் கோட்படிகளின் பின்னனி தெரியாமல் நடத்திய ஆசிரியர்கள்... இப்படியே படித்து பழகிய விதிகளை அவர் விளக்கிய விதம் அருமை. ஒரு வாசகன் என்பதைத் தாண்டி ஒரு பொறியியல் மாணாக்கரின் மனதில் இடம்பிடிக்கும் நூல். கடவுள் இருக்கிறாரா??? It depends....

Monday, 25 February 2013

Sunday, 24 February 2013

மாடக்குழி

நாட்டார் வழக்கில் இருந்து இதோ ஒரு அழகிய தமிழ் சொல்.. "மாடக்குழி". shelf என்னும் ஆங்கில சொல்லுக்கு பல மொழியாக்கங்கள் இருக்கின்றன. அலமாரி என்று அகராதிகள் சொல்லும் போதும், அலமாரி தமிழ் சொல் இல்லை, கிழக்கிந்திய நிறுவனங்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு அவர்களோடு வந்த சொல். 'அடுக்கு' என்றும் சொல்லலாம். இது கூட ஆங்கில மொழிபெயர்ப்பே அன்றி, இணையான தமிழ் சொல் என்று கொள்ள முடியாது. எனவே யூரோப்பிய மொழிகளின் வருகைக்கு முன் தமிழர்கள் அதை எப்படித் தான் வழங்கியிருப்பர்?? இதோ இப்படியும் வழங்கியிருக்கின்றனர். "மாடக்குழி".. விளக்கு மாடம், திண்ணை மாடம் என்னும் வரிசையில் இதுவும் இருந்திருக்கின்றது

Thursday, 21 February 2013

இணையமும் படாத பாடுபடும் தமிழ் மொழியும்

தமிழ் ஆர்வளர்கள் இடையே புலக்கத்தில் இருக்கும் மற்றொரு பிற மொழிச்சொல் "நாவல்". நாவல் பழம், மரம் எல்லாம் தமிழ் தான், ஆனால் குறுங்காவியத்திற்கு "புதினம்" என்பதே தமிழ்ச் சொல். ஆங்கிலம் நங்கு தெரிந்தவர்கள் அதனை ஆங்கிலச் சொல் என்று தெரிந்தும் அதற்கு இணையான தமிழ்சொல் தெரியாத காரண்த்தினாலோ என்னவோ அதனைப் பயன்படுத்துகின்றனர். இதைக்கூட ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். ஆனல் தமிழ் புதினங்களைப் பற்றி தூய தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய பலரும் "நாவலை" ஏதோ தூய தமிழ்ச்சொல் போன்று பயன்படுத்தியது தான் எரிச்சல் ஊட்டுகிறது. குறைந்தபட்சம் தூய தமிழ்க் கட்டுரைகளிலாவது அந்த சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். 

இணையத்தில் தமிழைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ அதைவிட அதிகமாக தமிழ் மொழி சார்ந்த தவறான தகவல்களையும் பரப்பலாம். அப்படி இன்று நான் கடந்து வந்த ஒரு தகவல் தமிழின் வரலாற்றுப் புதினங்கள் பற்றியது. வர்ணனைக்காக அப்பட்டமாக தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்' என்று சோடித்திருந்தனர். பெரும்பாலனோர் படித்த ஒரே வரலாற்றுப் புதினம் அது மட்டும் தான். அதற்காக அதற்கு முன் வரலாற்றுப் புதினங்கள்இயற்றப்படவேயில்லை என்று கூறக் கூடாது. கல்கியின் முதல் வரலாற்றுப் புதினம் "பார்த்திபன் கனவு". தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் 1895 ஆம் ஆண்டில் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரால் எழுத்தப்பட்ட "மோகனாங்கி" என்னும் நூலே ஆகும். இணையத்தில் தமிழை வளர்க்கும் நண்பர்களே, குறைந்தபட்சம் விக்கிப்பீடியாவிலாவது தேடுங்கள்....