Saturday, 22 November 2014

காலன் கோழி

இதை மலையாளத்தில் (குறிப்பாக பாலக்காட்டில்) "காலன் கோழி" என்கிறார்கள். இது கத்தினால் வீட்டில் மரணம் நிகழும் என்று நம்பிக்கையுண்டாம். அது காலன் (எமன்) வருவதை உணர்த்துவதற்காக ஒலியெழுப்புவதாகவும் போலாம் போலாம் என்று உயிரை அழைப்பதகாவும் சொல்வர். தமிழில் இதற்கு பொரிப்புள்ளி ஆந்தை என்று பெயர். 
(Mottled Wood Owl)






















PC: Internet

நர்மதா

ஓடிக்கொண்டிருக்கும் நர்மதை நதியின் 
குளிர்ந்த நீர் என்கைகளில் படுகிறது.. 
விழித்துக்கொள்கின்றேன் கனவிலிருந்து... 
குளிர்ச்சி இப்பொழுது இல்லை.. 
குளிர்ச்சியின் நினைவுகள் சுடுகிறது..

Thursday, 2 October 2014

கற்றதனால் ஆனா பயன்??? எதுவுமில்லை!

கற்றலினால் ஆன பயன் என்ன??
நிச்சயம் தெரியவில்லை. ஆனால் இத்தலைப்பில வெளியான கட்டுரையின் பயன் மட்டும் தெரிகிறது.
" நன்றாக ஆறடி உயரம் வளர்ந்த புலியானாலும் நம் கையால் அதன் கண்ணில் அடித்தால் பயந்து ஓடிவிடும்" இதுதான் அக்கட்டுரைவிட்டுச்செல்லும் செய்தி. கட்டுரையில் பல இருக்க இதை ஏன் பிடித்துக்கொண்டாய் என்று கேட்காதீர்கள். சிந்தனைகளின் ஊடே, கருத்துக்களின் ஊடே சொல்லப்படும் செய்திகளும், அறிவியல் சிந்தாங்களும் மக்களை அதிகம் சென்றடைகின்றன. நேற்று தினத்தந்தியின் முகனூல் பக்கத்தில் பலரும் இதைச்சொல்லியிருந்தனர். இச்சம்பவம் நடந்த அன்று இதுபோன்ற பின்னூட்டங்கள் இல்லை என்பதும், இக்கட்டுரை பரவிய பின்பு இக்கருத்து வேரூன்றியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆமாம் புலிகளை அப்படி கண்ணில் தாக்கி விரட்ட முடியுமா? முடியாது. அக்கட்டுரையை முதன்முதலாகப்படித்த நாளில் இருந்து இணையத்தில் புலிகளிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று தேடிப்பார்த்தேன். ஒரு இடத்தில் கூட இந்த முட்டாள் தனமான யோசனையை யாரும் சொல்லவில்லை. எனக்குத்தெரிந்த வனவிலங்கு ஆர்வலர்களிடமும் கேட்டுப்பார்த்தேன். இக்கட்டுரை படித்து அவர்களும் எரிச்சலுற்றார்கள் என்பது புரிந்தது. ஆக மொத்தம் கட்டுரை ஆசிரியர் அக்கருத்தை தாமாகவே எழுதியுள்ளார். அது இன்று மக்களிடையே அதிக தாக்குதலை உண்டாக்கியிருக்கின்றது என்று உணர்ந்தால் அதில் உள்ள பிழையின் தாக்கமும் எவ்வளவு என்று உணர முடியும். இன்று பலரும் பொத்தாம் பொதுவாய் கருத்து சொல்கிறேன் என்று இடையில் அறிவியலுக்கும், அறிவுக்கும் முரண்பட்ட செய்திகளை மக்களிடம் விதைத்துச்செல்கின்றனர். இதை உண்மையென்று நம்பி நாளை நானே ஒரு நாயை கண்ணில் ஓங்கிக்குத்தினால் அது கடிக்காமல் போகுமா என்பது சந்தேகம் தான். கட்டுரை எழுதுபவர்கள் சிந்திப்பார்களா???
இந்திய ஊடகங்கள் மோசத்திலும் மோசம். புலி தாக்கிய படங்களை பரப்பிவிட்டு விட்டு அதே சமயம் "மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்" என்று கொந்தளிக்க வேறு செய்கின்றனர். (இதுவும் தினத்தந்தியில் வெளியானது, வேறு எந்த நாளிதழ்கள் எல்லாம் அப்படி எழுதுகின்றனவோ தெரியவில்லை) அப்படங்களை வைத்து இவர்கள் காசு பார்த்தார்கள் என்பதை மறந்துவிட்டு எழுதுகின்றனர். இதற்கு முன் தான் மக்களுக்கு அறியாமை. அதைப்போக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?? பாம்பைப்பார்த்தால் என்ன செய்வது, புலிவிரட்டினால் என்ன செய்வது என்று அத்துறை சார்ந்த வல்லூநர்களின் உதவியோடு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கட்டுரைகள் வெளியிடாமல் புலிதாக்கிய படத்தை மட்டும் தானே அதிகம் வெளியிட்டீர்கள்.
நாம் மட்டும் என்ன விதிவிலக்கா... இதற்கு முன் பல ஆர்வலர்கள் விலங்குகளைப்பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். அதையெல்லாம் முழுவதும் படித்ததும் இல்லை, மற்றவர்க்குப்பரிந்துரைத்ததும் இல்லை. ஒரு விபத்திற்குப்பின்னாவது தெளிவு பெறவேண்டும்.
ஆமாம் கற்றலினால் ஆன பயன் என்ன? கற்பதால் எப்பயனும் இல்லை. கற்றல் வழி நடப்பதில் தான் பயன். விதிகளைப்பின்பற்றவேண்டும் என்று எல்லாப்பள்ளிகளும் கற்றுக்கொடுக்கின்றன. சாலை விதிகள் தொடங்கி எவ்விதிகளையும் மதிப்பதில்லை. வேலிதாண்டி புலியின் இடத்திற்கு செல்லக்கூடாது என்று கற்றதை நாம் கடைபிடிக்கவில்லை. புலியிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று பள்ளியில் கற்றுக்கொடுத்திருந்தாலும் கடைபிடிப்போமா என்பது சந்தேகம் தான். இப்படியொரு கோரவிபத்து நேர்ந்துவிட்டதால் புலியிடம் கொஞ்சம் தள்ளியிருப்போம், மற்றபடி விதிகளை மீறிக்கொண்டுதானே இருப்போம். ஒரு நாளைக்கு ஆயிரம் விதிகளை மீறுகிறோம். யார் செய்த புண்ணியமோ என்னமோ தப்பித்துக்கொள்கிறோம். ஆனால் சில நேரங்களில் மீறப்படும் விதிகளின் விளைவு மிகவும் பயங்கரமாய் இருக்கும். அதில் ஒன்று தான் புலிதாக்கிய நிகழ்வும். "விதிகள் மீறப்படுவதற்குத்தான்" என்னும் மனநிலை மாறி அவை மதித்து நடப்பதற்கு என்னும் மனநிலை வளர்ப்பதைத்தவிர விபத்துக்களைத்தவிர்க்க வேறு வழியில்லை.

Tuesday, 26 August 2014

கொங்கு மண்டல வட்டார வழக்குச்சொற்கள்.

சமையல் அறை, குளியல் அறை, வரவேற்பறை என்பதெல்லாம் கிட்சென், பாத்ரூம், ட்ராயிங்க் ரூம் போன்றவற்றின் நேரடி தமிழ்மொழிபெயர்ப்பு. இதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்பாட்டில் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத்தொகுக்கும் சிறு முயற்சி.

1. ஆசாரம்

இன்று ஹால், வரவேற்பறை என்றெல்லாம் சொல்லக்கூடிய அந்த நீண்ட முன் பக்க அறைக்குத்தான் ஆசாரம் என்று பெயர். இன்றும் எங்கள் வீட்டில் இந்தச்சொல்லின் பயன்பாடிருக்கிறது.

2. திண்ணை.

இதைப்பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் புறமும் அல்லாமல் அமைந்த ஒரு பகுதி. வருபவர்களை வரவேற்று அமர வைக்கும் பகுதி.

3. சமையக்கட்டு / அடுக்களை / கொட்டம்

சமையலறையை இப்படிப்பல சொற்களால் அழைப்பர்.

பானை, மொடா போன்றவற்றை அடுக்கிவைத்திருந்ததால் அதற்கு அடுக்களையென்ற பெயர் வழக்கில் இருக்கிறது.
வேரொரு அறையோடு இணைந்திருக்கும் சமையலறையை கொட்டம் என்பார்கள். ஆதாவது ஒரு தடுப்பு வைத்து சமைக்கும் இடத்தை மட்டும் பிரித்திருப்பார்கள். அந்த இடத்தைக் கொட்டம் என்பார்கள்.

4. பொடக்காலி 

இன்று குளியலறை என்று சொல்கிறோமோ அதற்கு இணையான தமிழ்ச்சொல் பொடக்காலி.
இது புறக்காணி என்னும் சொல்லின் மரூஉ. வீட்டின் பின்பக்கத்தைப் புறம் என்று சொல்வர். "பொறவுக்கு" என்றால் பின்பக்கம் என்றும், சிறிது நேரம் கழித்து என்றும் பொருள்படும். "பொறகாண்டி" என்ற சொல்லை சதிலீலாவதி படத்தில் நீங்கள் கேட்டிருக்கலாம். அனைத்திற்கும் வீட்டின் பின்புறம் என்றே பொருள்படும். தமிழில் இடக்கரடக்கல் என்னும் ஒரு இலக்கணவகையில் இதுவரும். கைகழுவதல், கால்கழுவுதல் என்பன போன்று இதுவும் குறிப்பால் பொருளுணர்த்தும் ஒரு சொல்.

(நன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும். மேலும் படிக்க: இடக்கரடக்கல் )

5. நடை / நட

இப்பொழுது கேட் என்று சொல்வதின் வழக்குமொழி இது. போன தலைமுறை வரை மதில்சுவர் வைத்த வீடுகளைப்பார்ப்பது கடினம். அப்படி மதில்சுவர் வைத்து அதற்கு ஒரு கதவு போட்டிருந்தால் அந்தக்கதவை நடை/நட என்பார்கள். அத்தகைய வீடுகள் அரிது. அவற்றை "நட வச்ச வூடு" (நடை வைத்த வீடு) என்றழைப்பார்கள்.

இதில் விடுபட்ட சொற்களையும் சேர்த்து வேறொரு நிலைபதிவில் எழுதுகிறேன்.

நன்றி.
சுபாசினி.

Sunday, 24 August 2014

குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் - 1

உறவினர்களின் குழந்தைகளுக்குப்பெயர் தேடிய போது எழுதிவைத்த பெயர்கள். ( புலவர்கள், மன்னர்கள் பெயர்களும், பூக்கள் பெயரும், உவமைத்தொடர்களும் இன்னும் பிறவும் இதில் அடங்கும். )

1. அமிழ்து
2. அமிழ்தினி
3. அமிழ்தன்
4. அதியன் (புலவர் பெயர்)
5. அனிச்சம் (பூப்பெயர்)
6. அஞ்சான்
7. அமுதக்கனல்
8. அலையொலி
9. அமுதமொழி
10. அம்மூவன் (புலவர் பெயர்)


















தொடர்ந்து எழுதுகிறேன்....


படத்திலுள்ள குழந்தை - நண்பர் கவின் அவர்களின் குழந்தை. 

Tuesday, 22 July 2014

போதையனார் பாடலையும் பித்தோகோரஸ் தேற்றத்தையும் ஒப்புமை படுத்தாதீர்கள்

அரிசிமாவு புளிக்குமென்றும் புளித்தபின் அதனை தோசையாகச்சுட்டால் நன்றாகயிருக்குமென்று என் பாட்டிக்குத் தெரிந்திருந்தது. அதற்காக "புளித்துப்போவதற்குக் காரணம் பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிரிகள்" என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார் என்று சொல்லும் போது என்னை முட்டாள், வெற்றுப்பெருமை பேசுபவள் என்றெல்லாம் நீங்கள் சொல்வது நியாயமே. இது போதையனார் பாடலுக்கும் பொருந்தும். புளிக்கும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பதற்குப் பகுத்தறிவு (Common sense) என்று பெயர். அது ஏன் புளித்துப்போகிறது என்று ஆராய்ந்து உண்மைப்பொருளைக் கண்டறிவதற்குப்பெயர் தான் அறிவியலறிவு. போதையனார் பாடல் பகுத்தறிவு. ஆனால் பித்தோகரஸ் கண்ட "பை" என்னும் மாறிலி ஏன் என்ற கேள்வியின் பதிலாகத் தோன்றிய விடை. இரண்டிற்கும் வேறுபாடிருக்கிறது. - இதைச் சொன்னால் நான் தமிழ்த்துரோகி, மேற்கத்திய அறிவியலின் அடிமை, தமிழ் நாஜ்ஜி என்றெல்லாம் வைவார்கள்.

Sunday, 20 July 2014

உங்கள் குழந்தைக்குத் தமிழ்ப்பெயர்தான் சூட்டுகிறீர்களா?

சமீபத்தில் என் உறவினர் ஒருவர் தன் மகனுக்குச் சூட்ட ஒரு நல்லதமிழ்ப் பெயர் கேட்டிருந்தார். ஆனால் அவர் போட்ட "CONDITION"ல் ஒன்று பெயர் "அன்" என்று முடியக்கூடாது. அதற்கு அவர் கூறிய காரணம் "அன்ல முடிஞ்ச மரியாதய இருக்காது". எனக்குப் புரியவேயில்லை. ஆண்பாற்பெயர்கள் அன் விகுதிகொண்டுமுடிவதும், பெண்பாற்பெயர்கள் ஆள் விகுதிகொண்டு முடிவதும் இயல்புதானே. இதில் என்ன மரியாதைக்குறைவு இருக்கிறது? ஒருமுறை என் தோழி கட்டுரைப்போட்டி ஒன்றில் தீரன் சின்னமலைக்குப் பதிலாகத் தீரர் சின்னமலை என்று எழுதியிருந்தாள். தீரன் என்றால் மரியாதையாக இராது என்ற எண்ணத்தில் எழுதியிருந்தாள். தமிழாசிரியை அவளிடம் "அது ஆவரின் அடைமொழி, அன் விகுதிகொண்டு ஆண்பாற்பெயர்கள் முடிவதில்லை தவறில்லையென்று கூறினார். இந்த நிகழ்வு தான் என் நினைவிற்கு வந்தது. இது தெரியாமலேயே தமிழ்மக்கள் தமிழ்ப்பெயர்கள் தேடுகிறார்களா? மற்றொரு உறவினர் தன் மகளுக்குத் தமிழ்ப்பெயர் வேண்டுமென்று கேட்டார். தேடி ஒரு பட்டியல் போட்டுக்கொடுத்தால் வடமொழிப்பெயர் என்று பெயர்வைத்திருந்தார். கேட்டால் அது தமிழ்ப்பெயர்தானே என்றார். என்ன பதில் சொல்வது? இன்னும் சிலர் தமிழ்ப்பெயர்களை "க்,த்,ப்" போன்ற பெய்யெழுத்துகள் கொண்டுமுடிக்கின்றனர். இவ்வெழுத்துக்கள் மொழிக்குக் கடையாக வாராவென்று படித்த நினைவு. பிறகு அழைக்கும் போது அந்தப்பெயரின் ஒரு உகரத்தைச் சேர்த்து அழைப்பார்கள். காரணம் விளிச்சொல்லை அந்த எழுத்துக்களைக் கொண்டு முடிப்பது கடினம். இன்னும் ஒருவர் வஞ்சியம்மனை வழிபடுவதால் தன் குழந்தைக்கு "வஞ்சித்" எனப் பெயரிட்டிருந்தார். உண்மையிலேயே இவர்களுக்கு இதன் பொருள் தெரியவில்லையா இல்லை இதுதான் trend என நினைத்துவைக்கிறார்களாத் தெரியவில்லை. இணையத்தில் தேடினால் அதைவிடக்கொடுமை. வடமொழிப்பெயர்களையெல்லாம் தமிழ்ப்பெயர்ப் பட்டியலில் காட்டுகிறது. கிரந்தயெழுத்துக்கள் சேர்த்தபெயரையும் அவர்கள் தமிழில் சேர்த்ததுதான் வேதனையாகயிருக்கிறது. உங்கள் குழந்தை உங்கள் விருப்பம்போல் பெயர்வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் வைத்தபெயரையெல்லாம் தமிழ்ப்பெயரென்று சொல்லாதீர்கள்.