Saturday, 31 May 2014

கண்ணீரும்-ஆறும்; அவை கொள்ளும் வண்ணமும்.

வண்ணங்கள் எப்பொழுதும் ஈர்ப்பவையாகவே அமைகின்றன. அறிவியலிலும் கூட வண்ணங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஒவியத்தில் துளி திறமை இல்லாதவர் கூட வண்ணங்களைக் கொட்டி மகிழ்வர்.

இப்படி இலக்கியத்திலும் நிறங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பாரதியின் "காக்கைச் சிறகினிலே" பாடல் தொடங்கி, அலைபாயுதே படத்தின் "பச்சை நிறமே " பாடல் வரை அனைத்திலுமே ஒரு வசீகரம் உண்டு. இப்படி வண்ணம் கலந்த பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட பாடல் இது.

"கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே."

-ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார்,
மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது).
















சங்கப் பாடல்களில் அகப்பொருள் பாடல்களை எடுத்துக் கொண்டால் நம் கண்ணில் அதிகம் படும் சொல் "பசலை". தலவனின் பிரிவால் தலைவியைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் நோய் இது. உடல் மெலிந்து, கலையிழந்து, தோள் தணிந்து காணப்படுவாள்.

இப்படி பசலைக் கண்ட தலைவியைக் கண்டு வேதனைக் கொண்ட தோழி தலைவனிடம் சென்று தலைவி உரைப்பது போல் கூறுகிறாள். என்ன சொல்கிறாள்? " தலைவா! உம்முடைய ஊரில் உள்ள நதியானது குளிர் காலம் என்றால் கலங்கியும், வெயில் காலம் என்றால் மணி நிறம்  கொண்டுள்ளது. ஆனால் என் கண்ணானது நீ விட்டு அகன்றதால் பசலை நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது." இவ்வாறு கூறுகிறாள்.

இது செய்யுள் தரும் நேரடி பொருள் மட்டும் தான். ஆனால் உற்று நோக்கும் போது அது எவ்வளவு அழகிய பொருள் கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

எதற்காக தலைவி நதியை உதாரணம் காட்ட வேண்டும்? அவள் சொல்ல விளைவது இதைத்தான்.

" தலைவா! வண்ணங்கள் என்னைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் என் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை. நீர் கூடப் பல நிறம் கொள்கிறது. உன் ஊரில் ஓடும் நதியானது குளிர் காலத்தில் கலங்கிய நிறமுள்ள நீரையும், வெயில் காலத்தில் மணி நிறமுள்ள நீரையும் கொண்டு தருகின்றது. ஆனால் என் கண்ணீரோ பசலை நிறம் கொண்டுள்ளது. வேறு எந்த நிறமும் தெரியவில்லயே!" என்று வருந்துகிறாள்.

"பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே" என்பது ஆழமான வரிகள். பிரிவினால் எவ்வளவு அவள் அழுதிருந்தால் அவள் கண்ணின் நீரை ஆற்று நீரோடு ஒப்பிட்டு அதன் வண்ணம் பசலை என்பாள். அடடே!!!

பதவுரை:
கூதிர்- குளிர் காலம்
தண்- குளிர்ச்சி
கழில்- கலங்கிய நீர்
வேனில்- வெயில் காலம்
யாறு- நதி

Wednesday, 7 May 2014

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!



















விளைச்சலுக்காய் நீ வரும் போதும்
காய்ச்சல் கண்ட என் கல்லூரி நினைவுகளைத்
தோய்த்தே கொண்டு வந்து கொட்டுகிறாய்...
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!
















உன்னாலே, இழையோடிய சோகம் வந்து
தன்னாலே என்னைப் பற்றிக் கொள்கிறது...
பட்டுச் சேலையிடை தங்க நூலாய்
எட்ட நின்றதை நான் ரசித்தாலும்,
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














மண் தொடும் நின் துளி
என் அறை ஜன்னல் தட்டுமென
ஏனோ பயந்திருந்தேன். நல்லவேளை
தானோ!!! ஜன்னல் இல்லை புது அறையில்... எனினும்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!











உறக்கம் தந்தாலும் உறங்கிடுவேனோ என்ற
பயமும் தருகின்றாய்.. உறங்கினால் எழுவேனோ??
ஐயமும் தருகின்றாய்.. கெஞ்சிடும் என்மேல்
இரக்கம் கொஞ்சமேனும் கொண்டு, இன்று
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














தனிமை வெறுமை என்று பலகொண்டு
மைக்கண் கலங்க வைக்கின்றாய் நீ...
அழுகவும் வேண்டுகின்றாய், பின்னர் என்னை
எழுதவும் தூண்டுகின்றாய்... இருப்பினும் வான்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

-சுபாசினி.

http://isainirai.blogspot.in/2013/02/blog-post_8807.html

Saturday, 26 April 2014

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன ; பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன...

என்னது இப்படி ஒரு பதிவானு யோசிக்காதீங்க.
"அடடே இந்த எழுத்தையெல்லாம் எங்க எப்படி உச்சரிக்கனும்னு எழுதப் போறீங்க , சரியா? " அப்படினு கேட்ட அதுவும் இல்ல. இதெல்லாம் எங்க பயன்படுத்தனும் எப்படிப் பயன்படுத்தனும்னு சொல்றதுக்கு முன்னாடி இதுக்கெல்லாம் என்ன பெயர்னு சொல்லத் தான் இந்த பதிவு. (கலி முத்திடுச்சு).

பள்ளத்துக்கு வர 'ள' , குண்டு 'ல', ஒல்லிக்குச்சி 'ர' , ரெட்டச் சுழி 'ன' (சின்ன வயசுல ரொம்ப சேட்டை செஞ்சதுனால இதுக்கு ரெண்டு சுழியோ!!!)... மூனு சுழி "ண"... (நாலு சுழி போடற தமிழ் ஞானிகள் கூட சில பள்ளிகளில் இருப்பாங்க)... இப்படிப் பல nicknames கேட்டு ரொம்ப நொந்து போய் இதை எழுதுகிறேன்.

இவற்றையெல்லாம் எப்படிக் குறிப்பிட வேண்டும்???
இதோ இப்படித் தான்.

ல - தனி 'ல'கரம். (பாவம் மத்த ழ,ள கூட சேர விடாம வ வந்து இதத் தனியா பிரிச்சுடுச்சு. இதுத் தனியா இருக்கு)
ழ - சிறப்பு 'ழ'கரம். (தமிழுக்கே உரிய சிறப்பு.)
ள- பொது 'ள'கரம்.

ர - இடையியன 'ர'கரம்
ற - வல்லின 'ற'கரம்

ண - டண் 'ண'கரம் ( 'ட'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ந - தந் 'ந'கரம் ( 'த'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ன - றன் 'ன'கரம் ( 'ற'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)

இனிமேல் பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க.. மனசு வலிக்குது.


Sunday, 13 April 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சித்திரை முதலாய் ஒளிரும் தேவி!
சித்திரை நிலவாய் குளிரும் தேவி!

மா வைத்தோம் மானுடம் செழிக்க!
பலா வைத்தோம் பல்லுயிர் ஒம்பிட!
வாழை வைத்தோம் வையம் வாழ!

முக்கனி கனியும் நாளில் பிறந்து
மூவா என்றும் வாழும் தேவி

திங்கள் பன்னிரண்டும் தழைக்க வைப்பாய்!
எங்கள் வாழ்வை செழிக்க வைப்பாய்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி,
சுபாசினி..

Tuesday, 8 April 2014

மயில்விடு தூது!!! (முருகனுக்குத் தலைவி அனுப்பும் தூது)














மலைகளின் மன்னனிடம், திருச்செந்தூர்



அலைகளின் அரசனிடம் எந்தன்
நிலையை எடுத்துரைக்கும் தூதுக்
கலையை நீ அறிவாயோ???

காவல் கடந்தே காதல் சொல்ல,
சேவல் கொடியுடையானை நீ சென்றடைய
ஏவல் புரிந்தேனே! கெஞ்சியே உனக்கு
ஏவல் புரிந்தேனே! உயிர் மெலிந்தேனே.

உணவு துறந்தேன், நல்ல
உடை மறந்தேன், பகலில்
கனவில் தொலைந்தேன், அன்ன
நடையை இழந்தேன்- குமரன்

நினைவு வாட்ட விழிநீர்
மடை திறந்தேன் நானே!!!
துணையாக தூது செல்லாயோ??? உன்
விடையாது மயிலே சொல்லாயோ??



















'சித்தம் குழம்பியதோ? இவளுக்குப்
பித்தோ? பேயோ?' என
ஒத்த நோய்சொல்லி சுற்றம்
நித்தம் புலம்பியதே- அழகனே
மொத்தக் காரணம் என்று
சுத்த மொழியில் நீ செப்பாயோ???

ஒற்றைத் தலைக் காதலால்

சுற்றித் தலை சாய்கிறதே,
நெற்றிக் கண்ணுடையான் மகனைப்
பற்றி மனம் நோகிறதே...

உமையாள் மைந்தனை எண்ணி

இமைகள்  கருக அழுகின்றேன்.
தண்ணீரில் அழும் மீனாய்
கண்ணீரில் நானே கரைகின்றேன்...

அப்பன்சாமி முருகனை என்

சொப்பனத்தில் கண்டே களிக்கின்றேன்.
நேரில் வந்து நில்லானோ?? எனைத்
தேரில் ஏற்றிச் செல்லானோ??

ஆம்பலும் அல்லியும் அங்கே

கூம்பும் நேரம், அவனை
நாடுதே நெஞ்சம் நாளும்
கூடுதேயென்  நெஞ்சின் பாரம்.















மறையாத புகழுடையோன் மேலே
குறையாத காதல் கொண்டேனே!
விரைவாகச் சென்று நீயும்
நிறைவாக இதனை உரைப்பாயே!!

மயிலோன் மீது கொண்டது
மையல் இல்லை காதலென்று,
மயிலாள் நெஞ்சை மின்
மெயிலாய் மயிலே, மொழிவாயே!!!

வெயில் சாயும் முன்பே!
மதியும் காயும் முன்பே!
துயிலெனைக் கொல்லும் முன்பே!
விதியும் உயிர்க் கொள்ளும் முன்பே!

குருதி உள்ளே உறையும் முன்பே!
உறுதியும் கொஞ்சம் குறையும் முன்பே!
கருதிய கருமம் முடிக்கும் அவனையென்
இறுதி நாளுக்குள் வரச் சொல்லேன்!!!

Saturday, 22 March 2014

தமிழிலக்கணம்-3 (மெய்ப்பாடு, வெகுளி)

இன்று இலக்கணப் பதிவிற்கு செல்லும் முன்பு பொதுவான சொல் பயன்பாடு பற்றிப் பார்க்கலாம்.

சின்ன சின்ன தமிழ் வார்த்தைக்குக் கூட பக்கத்துல அதற்குப் புலக்கத்துல உள்ள தமிழ் வார்த்தைய நான் குறிப்பிடக் காரணம் ஒன்றே ஒன்று தான். பல சமயம் நாம் இது தான் பொருள் என்று நினைத்துப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அது பொருளே கிடையாது. புரியலயா???
அடிக்கடி நாம பஸ்ல போகும் போது "ஒரே ரஷ்ஷா இருக்குப்பா" என்போம். உண்மையில் அங்கு பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை crowded-கூட்டமாக இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாம நம்ம தமிழ்நாட்டுல மட்டும் வேற எதோ சொல்லப் பயன்படுத்துறோம்.

இத ஏன் சொல்றேனா தமிழ் மொழியிலும் இப்படி நிறையப் பயன்பாடுகள் இருக்கு. சென்ற பதிவு இட்ட போது வெகுளி- கோபம் என்று சொல்லியிருந்த்தைப் பார்த்து அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார் "வெகுளினா எதார்த்தம் தானே!! நீ ஏன் தப்பா கோபம்னு போட்டுருக்க??".
வெகுளினா கோவம் தாங்க என்று சூடம் அனச்சு சத்தியம் பண்ணுனாலும் அவர் நம்பல. google translator க்கு போய் வெகுளினு அடிச்சாரு. அங்கயும் கோபம்னு காட்டல. அவர் முகத்தில் இப்போது பெருமிதச் சிரிப்பு.

தயவு செஞ்சு தமிழ் இலக்கியத் தேடலுக்கு கூகிள நம்பாதீங்க. அதிக மக்களால் பார்க்கப்பட்ட ஒரு பக்கத்த தான் அது முன்னால காட்டும். அது சரியா தப்பானு யாருக்கும் தெரியாது. translator கூட அப்படித் தான். முன்னாடி யாராச்சும் ஒரு வார்த்தைய தேடிப் பார்த்து அதுக்கு இது பொருள்னு தப்பா எதையாச்சும் add குடுத்துட்டு போயிருந்த அதுவும் தப்பா தான் காட்டும். paper presentation என்பதற்கு காகித வழங்கள் என்று மொழிபெயர்க்கும் அளவுக்கு தான் அது இருக்கிறது.

வெகுளி:

அத விட்டுட்டு வெகுளிக்கு வருவோம். எப்படி அவர நம்ப வைக்கிறது. இருக்கவே இருக்கிறது தொல்காப்பியம். அதுல மொழி பயன்பாடு மட்டுமா, வாழ்க்கை முறை எப்படினு கூட சொல்லியிருக்காங்க. இத சொல்லியிருக்க மாட்டாங்களா??? சொல்லியிருக்காரே தொல்காப்பியர்.
இதோ அந்தப் பாட்டு.

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப" (பொருளதிகாரம் 247)

ஆமா இதெல்லாம் என்னனு கேட்கறீங்களா...ஒரு செய்யுளுக்கு உறுப்பா வரக் கூடிய மெய்ப்பாடுகள். நவரசம்னு சொல்றாங்களே அது தான். ஆனா என்ன தமிழ்ல எட்டு ரசம் தான். சாந்தம்னு ஒன்னு தனியா இல்ல. மனசுல என்ன தோணுதோ அது முகத்துல வெளிப்படும் போது அது மெய்ப்பாடு. மெய்- உடல். இப்ப சொல்லுங்க, உலக மொழியில எந்த மொழியில இந்த வரையறை எல்லாம் இருக்கு??? எந்த அளவு documentation செஞ்சுருக்காங்க. நம்ம tracksheet எல்லாம் சும்மா, தூக்கிப் போட்டறலாம்.















சரி வாங்க நாம பாட்டுக்கு போவோம். இதுல வர வெகுளிக்கு கோபம்னு அர்த்தம். இன்னும் நான் நம்ப மாட்டேன்னு சொன்ன இதையும் படிங்க.

வெகுளி- சினம். சீற்றம்னு கூட வச்சுக்கலாம். இது எப்படி வந்துச்சு???
வேகும்-உள்-இ. = வெகுளி. இப்படி உரியடிகளால பிறந்துச்சு.
சிலர் கோபப்பட்டா என்ன வயித்தெரிச்சலானு கேட்கறோமே, "வயிறு உள்ள வேகுது. (வேகும்- உள்-இ)" அப்ப அது வெகுளி தானா? (என்ன ஒரு புத்திசாலித்தனம், இஞ்சினியரிங்க் படிச்ச புள்ளைக்கு இவ்வளவு அறிவானு நீங்க மனசுக்குள்ள சொல்றது தெரியுது. :P )

ஆனா இப்படி சகட்டுமேனிக்கு வரது எல்லாம் சினமா???  எதுக்கு எடுத்தாலும் கோவப்பட்டா அதுக்கு மாறியாதையில்ல. ஆனா தொல்காப்பியர் இதுக்கு எல்லாம் கோவப்பட்ட தான் அது கோவம், இல்லனா out of syllabus பா அப்படினு ஒரு பட்டியல் சொல்றாரு.

"உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே."

வெகுளி ஏன் வருது? வெறுப்பால தான் வருது. (வெறுப்ப வந்த வெகுளி).
அந்த வெறுப்புக்கு எத்தன காரணம்?? நான்கு.
அந்த நாலு எது??

1. உறுப்பறை- அதாவது உடல் உறுப்புகளை சேதம் செய்றது (சூர்பனகை கோபப்பட்டு அண்ணன் கிட்ட போனதுல என்ன தப்பு?)
2. குடிகோள்- தன்னை சார்ந்து வாழ்பவருக்குத் துன்பம் தருதல் (அண்ணன் தங்கச்சி அழுதத பார்த்து சீதைய கடத்துனது கோபத்துல தான?)
3. அலை- திட்டுதல்
4. கொலை- கொலை செய்றது அல்லது அதற்கு உடந்தையா இருக்கறது.  (கண்ணகி வெகுண்டு மதுரையை அழித்தது)

இந்த காரணத்துக்கு எல்லாம் ஒருவனுக்கு சினம் வரலாம்.

















இதெல்லாம் ஏன் இலக்கணப் பகுதில எழுதறனு கேட்காதீங்க. இதெல்லாம் செய்யுளுக்குரிய மெய்ப்பாடுகளும் அவைத் தோன்றக் காரணங்களும்.

பிற மெய்ப்பாடு பத்தி கொஞ்சம் தெளிவா பொருளியல் வரும் போது பார்க்கலாம்.
இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம்.

நன்றி
சுபாசினி.

Tuesday, 18 March 2014

தமிழிலக்கணம்-2 (அடுக்குத்தொடர்)

லேசா! லேசா! நீ இல்லாம வாழ்வது லேசா!!!

புரிஞ்சுருக்குமே!!! இரட்டைக் கிளவி பார்த்தாச்சு.. அடுத்து என்ன?? இன்னைக்கு அடுக்குத்தொடர் தான்.

அடுக்குத்தொடர்:

இரண்டு சொல் அடுக்கி வரும். தனித்தனியே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கும். அப்படி இருந்தா அது அடுக்குத்தொடர். நான்கு சொல் வர கூட அடுக்கி வரும். அச்சம், வெகுளி (கோபம்), விரைவு (அவசரம்), அவலம் இவற்றைக் குறிக்க அடுக்குத்தொடர் பயன்படும்.

இங்கு 'இவற்றை' என்பதனை தட்டச்சு செய்யும் போது தான் பெரும்பாலானோர் செய்யும் தவறு நினைவுக்கு வந்தது. 'அவைகள், இவைகளை' என்பது எல்லாம் தப்பு. அவை, இவை என்பதே பன்மை தான். (U mean plural??? Yes). இதுல எதுக்கு மறுபடியும் ஒரு "கள்" சேர்த்து அவற்றை மேலும் பன்மையாக்க வேண்டும்?? ஆங்கிலத்திலே "falling down" என்பதை தவறு என்பார்களே. அது போல இதுவும் தவறான பயன்பாடு.
(when there is no gravity how will we fall down?? :P இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. இது சும்மா மொழி பயன்பாட்டிற்கு மட்டும் தான்).

பெரும்போக்கா சொன்ன அடுக்கி வருவது அடுக்குத் தொடர். ஆனால் நன்னூல்ல கொஞ்சம் இறங்கி தேடுனா இது அவ்வளவு எளிமையா முடியற தலைப்பு இல்லனு தெரியும்.

"அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்." இது நன்னூல் சூத்திரம்.

அவ்ளோ தாங்க. அசைநிலை, பொருள்நிலை, இசைநிறைக்கு ஒன்று இரண்டு மூன்றுனு அவ்வை வரிசைபடுத்திப் பாடுன மாறிப் பாடுன அது அடுக்குத்தொடர். இதுல பிரச்சனை என்னனா "அசைநிலை என்றால் என்ன? பொருள்நிலை என்றால் என்ன??" இதுக்கு எல்லாம் மறுபடியும் நாம நிறைய இரண்டு மார்க்கு கேள்விக்கு பதில் படிக்கற மாறி இருக்கும். (ரொம்ம டெக்கினிக்கல் டெர்ம்ஸா இருக்கே!!!).

1. தனியா ஒரு பொருள் உணர்த்தாம பெயர்ச்சொல் கூடயும், வினைச்சொல் கூடயும் சேர்த்து சொல்லப்படுவது அசைநிலை. (அசைநிலை பற்றி பின் ஒரு தனி இடுகை பதிவு செய்கிறேன். இப்பொழுது அடுக்குத் தொடரில் கவனம் செலுத்தலாம்). அடுக்குத்தொடர் அசைநிலையா வரும்.

எடுத்துக்காட்டு : போலும் போலும், வாழிய வாழிய...

2. இதுல மேல சொன்ன " அச்சம், வெகுளி, விரைவு, அவலம்" இதெல்லாம் பொருள்நிலைக்கு கீழ வரும்.

எடுத்துக்காட்டு: தீத் தீ, பாம்பு பாம்பு. 
(ஐயோ!! ஐயோ!! உன் கண்கள் ஐயையோ!!!... இது அவலமா அச்சமானு தெரியலைங்க... ஆனா அடுக்குத் தொடர் தான்... )

3. செய்யுள் மற்றும் பிற இடங்கள்ள ஓசை நிறப்ப அடுக்கி வந்தா அதுவும் அடுக்குத் தொடர் தான். அது இசைநிறiக்குக் கீழ வரும்.
(கவிதை எழுதும் போது எந்த வார்த்தையும் கிடைக்கலனா மானே! மானே! தேனே!! தேனே!! இப்படி போட்டுக்கோங்க.. கேட்ட இசைநிறையின் பொருட்டு வந்த அடுக்குத் தொடர்னு சொல்லி சமாலிச்சுக்கலாம் :P )

எடுத்துக்காட்டு: வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! (எங்கயோ கேட்ட பாட்டு மாறி இருக்குதுல).

இன்னும் கொஞ்சம் இறங்கிப்போய் தொல்காப்பியத்துல தேடுன இந்தப் பாட்டெல்லாம் கிடைக்குது...

"ஏஏ யம்பன் மொழிந்தனள் யாயே"
“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்"
“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ"
(அடுக்குத்தொடருக்கு எடுத்துக்காட்டுகளைக் கூறும் தொல்காப்பியப்பாடல்).

இந்தப் பாடல்களையும் நன்னூல் சூத்தரத்தையும் வச்சுப் பார்க்கும் போது நமக்கு தெளிவா ஒன்னு புரியுது.
அதாவது அசைநிலைக்கு ஒரு சொல் இரண்டு தடவ அடுக்கி வரலாம். பொருள் நிலைக்கு இரண்டு, மூன்று முறை அடுக்கி வரலாம். இசைநிறைக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு முறை கூட அடுக்கி வரலாம்.

" ராமா ராமா!!!" இது அடுக்குத் தொடரா?? இல்லை. இப்படி பெயர்களை தொடர்ந்து விளித்தல் (விளி- அழை) அடுக்குத் தொடர் ஆகாது. இதுவே பயத்தில் "ராமா ராமா" என்று அலரினால் அது அடுக்குத் தொடர்.

இன்னும் தெளிவா சொல்லனும்னா... "கண்டேன் கண்டேன் காதலை" இதுல வருவது அடுக்குத் தொடர். "சோனியா! சோனியா!" இந்தப் பாட்டுல வருவது விளி வேற்றுமை. அடுக்குத்தொடர் இல்லை.


இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்? - கம்பராமாயணம்.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!!! - பாரதியார்.















வாழ்க,வாழ்க பாரத சமுதாயம் - வாழ்கவே - பாரதியார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு. - பெரியாழ்வார்.

(இலக்கியச் சான்றுனு சொல்லிட்டு தசாவதாரம் பாட்ட சொல்லி இருக்கேன்னு நினைக்காதீங்க. இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் திருப்பல்லாண்டு என்னும் பகுதிப் பாடல்)


பி.கு:  இதோடு அடுக்குத்தொடர் பற்றிய குறிப்புகள் முடிகின்றன. இதில் சொல்லப்பட்ட அசைநிலை, இசைநிறை பற்றியெல்லாம் அந்தந்த தலைப்புகளின் கீழ் பிற்பாடு தெளிவாக எழுதுகிறேன்.
இரட்டைக்கிளவி பற்றிப் படிக்க சொடுக்கவும்.

நன்றி,
சுபாசினி.