Tuesday, 18 March 2014

தமிழிலக்கணம்-2 (அடுக்குத்தொடர்)

லேசா! லேசா! நீ இல்லாம வாழ்வது லேசா!!!

புரிஞ்சுருக்குமே!!! இரட்டைக் கிளவி பார்த்தாச்சு.. அடுத்து என்ன?? இன்னைக்கு அடுக்குத்தொடர் தான்.

அடுக்குத்தொடர்:

இரண்டு சொல் அடுக்கி வரும். தனித்தனியே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கும். அப்படி இருந்தா அது அடுக்குத்தொடர். நான்கு சொல் வர கூட அடுக்கி வரும். அச்சம், வெகுளி (கோபம்), விரைவு (அவசரம்), அவலம் இவற்றைக் குறிக்க அடுக்குத்தொடர் பயன்படும்.

இங்கு 'இவற்றை' என்பதனை தட்டச்சு செய்யும் போது தான் பெரும்பாலானோர் செய்யும் தவறு நினைவுக்கு வந்தது. 'அவைகள், இவைகளை' என்பது எல்லாம் தப்பு. அவை, இவை என்பதே பன்மை தான். (U mean plural??? Yes). இதுல எதுக்கு மறுபடியும் ஒரு "கள்" சேர்த்து அவற்றை மேலும் பன்மையாக்க வேண்டும்?? ஆங்கிலத்திலே "falling down" என்பதை தவறு என்பார்களே. அது போல இதுவும் தவறான பயன்பாடு.
(when there is no gravity how will we fall down?? :P இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. இது சும்மா மொழி பயன்பாட்டிற்கு மட்டும் தான்).

பெரும்போக்கா சொன்ன அடுக்கி வருவது அடுக்குத் தொடர். ஆனால் நன்னூல்ல கொஞ்சம் இறங்கி தேடுனா இது அவ்வளவு எளிமையா முடியற தலைப்பு இல்லனு தெரியும்.

"அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்." இது நன்னூல் சூத்திரம்.

அவ்ளோ தாங்க. அசைநிலை, பொருள்நிலை, இசைநிறைக்கு ஒன்று இரண்டு மூன்றுனு அவ்வை வரிசைபடுத்திப் பாடுன மாறிப் பாடுன அது அடுக்குத்தொடர். இதுல பிரச்சனை என்னனா "அசைநிலை என்றால் என்ன? பொருள்நிலை என்றால் என்ன??" இதுக்கு எல்லாம் மறுபடியும் நாம நிறைய இரண்டு மார்க்கு கேள்விக்கு பதில் படிக்கற மாறி இருக்கும். (ரொம்ம டெக்கினிக்கல் டெர்ம்ஸா இருக்கே!!!).

1. தனியா ஒரு பொருள் உணர்த்தாம பெயர்ச்சொல் கூடயும், வினைச்சொல் கூடயும் சேர்த்து சொல்லப்படுவது அசைநிலை. (அசைநிலை பற்றி பின் ஒரு தனி இடுகை பதிவு செய்கிறேன். இப்பொழுது அடுக்குத் தொடரில் கவனம் செலுத்தலாம்). அடுக்குத்தொடர் அசைநிலையா வரும்.

எடுத்துக்காட்டு : போலும் போலும், வாழிய வாழிய...

2. இதுல மேல சொன்ன " அச்சம், வெகுளி, விரைவு, அவலம்" இதெல்லாம் பொருள்நிலைக்கு கீழ வரும்.

எடுத்துக்காட்டு: தீத் தீ, பாம்பு பாம்பு. 
(ஐயோ!! ஐயோ!! உன் கண்கள் ஐயையோ!!!... இது அவலமா அச்சமானு தெரியலைங்க... ஆனா அடுக்குத் தொடர் தான்... )

3. செய்யுள் மற்றும் பிற இடங்கள்ள ஓசை நிறப்ப அடுக்கி வந்தா அதுவும் அடுக்குத் தொடர் தான். அது இசைநிறiக்குக் கீழ வரும்.
(கவிதை எழுதும் போது எந்த வார்த்தையும் கிடைக்கலனா மானே! மானே! தேனே!! தேனே!! இப்படி போட்டுக்கோங்க.. கேட்ட இசைநிறையின் பொருட்டு வந்த அடுக்குத் தொடர்னு சொல்லி சமாலிச்சுக்கலாம் :P )

எடுத்துக்காட்டு: வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! (எங்கயோ கேட்ட பாட்டு மாறி இருக்குதுல).

இன்னும் கொஞ்சம் இறங்கிப்போய் தொல்காப்பியத்துல தேடுன இந்தப் பாட்டெல்லாம் கிடைக்குது...

"ஏஏ யம்பன் மொழிந்தனள் யாயே"
“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்"
“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ"
(அடுக்குத்தொடருக்கு எடுத்துக்காட்டுகளைக் கூறும் தொல்காப்பியப்பாடல்).

இந்தப் பாடல்களையும் நன்னூல் சூத்தரத்தையும் வச்சுப் பார்க்கும் போது நமக்கு தெளிவா ஒன்னு புரியுது.
அதாவது அசைநிலைக்கு ஒரு சொல் இரண்டு தடவ அடுக்கி வரலாம். பொருள் நிலைக்கு இரண்டு, மூன்று முறை அடுக்கி வரலாம். இசைநிறைக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு முறை கூட அடுக்கி வரலாம்.

" ராமா ராமா!!!" இது அடுக்குத் தொடரா?? இல்லை. இப்படி பெயர்களை தொடர்ந்து விளித்தல் (விளி- அழை) அடுக்குத் தொடர் ஆகாது. இதுவே பயத்தில் "ராமா ராமா" என்று அலரினால் அது அடுக்குத் தொடர்.

இன்னும் தெளிவா சொல்லனும்னா... "கண்டேன் கண்டேன் காதலை" இதுல வருவது அடுக்குத் தொடர். "சோனியா! சோனியா!" இந்தப் பாட்டுல வருவது விளி வேற்றுமை. அடுக்குத்தொடர் இல்லை.


இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்? - கம்பராமாயணம்.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!!! - பாரதியார்.வாழ்க,வாழ்க பாரத சமுதாயம் - வாழ்கவே - பாரதியார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு. - பெரியாழ்வார்.

(இலக்கியச் சான்றுனு சொல்லிட்டு தசாவதாரம் பாட்ட சொல்லி இருக்கேன்னு நினைக்காதீங்க. இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் திருப்பல்லாண்டு என்னும் பகுதிப் பாடல்)


பி.கு:  இதோடு அடுக்குத்தொடர் பற்றிய குறிப்புகள் முடிகின்றன. இதில் சொல்லப்பட்ட அசைநிலை, இசைநிறை பற்றியெல்லாம் அந்தந்த தலைப்புகளின் கீழ் பிற்பாடு தெளிவாக எழுதுகிறேன்.
இரட்டைக்கிளவி பற்றிப் படிக்க சொடுக்கவும்.

நன்றி,
சுபாசினி.

5 comments:

 1. நல்ல முயற்சி.. சுவாரசியமான விளக்கங்கள். நானும் நிறையக் கற்றுக் கொள்கிறேன் .. வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா.. இணைந்தே இருங்கள். தொடர்ந்து கருத்துக்களைப் பகிருங்கள்.

   Delete
 2. வீட்டில் குழந்தைகளுக்கு சொல்லித் தர மிகவும் உதவுகிறது பகிர்வுகள்... நன்றிகள் பல...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. அருமை அருமை. [இது அடுக்குத் தொடரா ?] வாழ்த்துக்கள் ! நானும் கற்றுக்கொள்ள வரிசையில் சேருகிறேன்.

  ReplyDelete
 4. Hi! One question. What do you call these type of words:

  கணவன் மனைவி
  அண்ணன் தம்பி
  அம்மா அப்பா

  Thank you!

  ReplyDelete