Wednesday, 20 February 2013

திருக்குறளும் அரும்பதங்களும்-1 (எழிலி)


 திருக்குறள் நூலை புரட்டும் போது நமக்கு நன்கு தெரிந்த குறள்களில் கூட நமக்கு தெரியாத ஒரு சொல் ஒழிந்திருக்கும்.

      அப்படி ஒரு சொல் "எழிலி". மங்குல் போல் இதற்கும் மேகம் என்று பொருள். இந்த சொல்லை வான் சிறப்பு அதிகாரத்தில் காணலாம்.

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பொருள்: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

எழிலி-மேகம்.

Thursday, 14 February 2013

கலாச்சாரம் தமிழ்ச்சொல்லா???


கலாச்சாரம் தமிழ்ச்சொல்லா??? தமிழ் அகராதிகளைப் புரட்டியவரை அதற்கு இணையான தமிழ்ச்சொல் பண்பாடு எனக் காண்கிறோம். இருப்பினும் எல்லா தமிழ்ப் பக்கங்களும் தமிழ் "கலாச்சாரத்தயே" பேசுகின்றனர். பள்ளி கல்லூரிகளும் தமிழ்க் "கலாச்சாரப்" போட்டிகளைத்தான் நடத்துகின்றனர். அவர்களிடமும் இதே கேள்வியைக் கேட்டபோது, "ஏன், கலாச்சாரம் தமிழ்ச்சொல் தானே.. அப்ப அது தமிழ் இல்லையா???" என்று என்னை திரும்ப கேட்கின்றனர். நான் அறிந்த வரை கலை+ஆச்சாரம்=கலாச்சாரம். ஆச்சாரம் எப்படி தமிழ் ஆகும்? நாகரிகம் பண்பாடு என்ற சொற்கள் இருக்கின்றனவே.. ஒரு பிரபல கல்லூரி நடத்திய 'அழகிய தமிழ் மகன்' என்ற போட்டியில் "நாகரீகம்" என்று எழுதியிருந்தனர். இது வேறு புது சொல்லா?? தமிழர் பண்பாட்டில் இவ்வளவு குழப்பங்களா??? குறைந்தபட்சம் இந்த ஒரு வேற்று மொழிச்சொல்லயாவது விட்டொழிக்கலாமா? பெரும்பாலும் தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தாம் இந்த "கலாச்சாரத்தை" பயன்படுத்துகின்றனர். அது தமிழ்ச்சொல் தான் என்பதற்கு விளக்கம் இருந்தால் அதனை கேட்க செவிமடுக்கிறேன். இல்லையேல் இந்த சொல்லை விட்டொழிக்கலாம்.
 நன்றி.
 இவண்,
சுபாசினி.

Tuesday, 12 February 2013

சகோதரி வினோதினிக்காக


தில்லியில் பிறந்ததிருந்தால் உனக்கு
கண்ணீர் அஞ்சலியும், தலைவர்கள்
இரங்கல் அறிக்கையுமாவது கிடைத்திருக்கும்
மாதாவம் செய்த தமிழ்மங்கயே!
அமிலம் வீசியவன் பிழைத்திருக்க
அழகு தமிழச்சி நீ மறைந்தாயே..
பெண்ணுரிமை பேசிய என் மக்களுக்கு
உன்னைப் பிழைக்க வைக்க வழியில்லை..
எங்கோ நடந்திருந்தால் கொடி பிடித்திருப்போம்..
கண்முன் நடந்ததனால் உன்னைக்
கண்டு கொள்ள மறந்துவிட்டோம்...
காலன் வந்து கொண்டுவிட்டான்
கண்ணிரண்டும் கலங்குதம்மா...
கண்ணே உன்னை நினைக்கயிலே...
மௌனம் சாதித்திருப்போம், உன் வரிசையில்
நாங்களும் நாளை நிற்கும்வரை...
மீளாது அங்கு நீ தூங்க
ஒரு தங்கை இங்கு எழுதுகின்றேன்...













(இயலாமையில் இதை மட்டும் தான் செய்ய முடிந்தது
:( சகோதரி வினோதினிக்காக சுபாசினியின் அஞ்சலி)

Tuesday, 5 February 2013

வகுப்பறையில் நான்.

ஒரு கண் நெகிழ
ஒரு கண் நீர்க்க
நான்கு ஆண்டு தனிமை,
முடியப் போகும் நேரம்..
நான்கு ஆண்டை தனிமையில்
முடித்து விட்ட சோகம்...
என்னிரு விழிக்கும் போராட்டம்..
மூளைக்கு எட்டாத வாஸ்து
மூலையில், வகுப்பறையில் நான்.
எழுத வைத்த நாட்கள்
எழுதித் தீர்த்த தூவல்..
எல்லாம் கானல் நீராய்
எந்திர உலகத்தின் எச்சமாக
என் கிறுக்கல்கள் மட்டும்
எஞ்சி நிற்க... எழுதுகிறேன்.
...
சுபாசினி.

மழை


மழை

















என்னே இந்த மழையின் அருமை..
வெளுக்க வைத்தது,
வெளியுலகின் சாயங்களை அல்ல
என்னுடன் பழகியவர்கள்
உளமதன் சாயங்களை... ஏனோ
அழுது அழுது தீர்ந்தபின்னும்
இந்த குளிர்கால இரவுகள் எல்லாம்
கண்ணீரின் கதகதப்பிலேயே விடிகின்றன...

-சுபாசினி.

ஆட்டுக்கல்

குடிமிப்பிடி சண்டை
குழாய் அடியில் இல்லை
ஆட்டுக்கல்லோடு... மின்வெட்டு

காற்றாலை