Friday, 7 December 2012

இனியவை நாற்பது..பாடல் 4


4. யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
  ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
  கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
  மான முடையார் மதிப்பு.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 
யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
மானம் உடையார் மதிப்பு.
பதவுரை 
யானையுடைய படை - யானைகளையுடைய சேனையை
காண்டல்அமைத்துக் கொள்வது 
முன் இனிது - முற்பட வினிது
ஊனை தின்று - தசையைத் தின்று 
ஊனைப்பெருக்காமை - உடம்பை வளர்க்காமை
முன் இனிது.
கான் - காடு 
யாற்று அடை கரை ஊர்- ஆற்றின் கரையில் உள்ள ஊர் 
இனிது
ஆங்குஅவை போல
மானம் உடையார் - மானமுடையவரது,
மதிப்பு -  கொள்கை
இனிது.
தெளிவுரை 
அந்த காலங்களில் அரசர்கள் நால்வகை படைகள் (காலாட்படை, குதிரைப்படை,தேர்ப்படை,யானைப்படை) வைத்திருப்பர். இதில் மிகவும் வலிமையுடைய படை யானைப்படை. யானைப்படை கொண்டு பகைவரை எளிதில் வென்றுவிடலாம். எனவே தான் யானைப்படையை இனிமை என்றார். இக்காலத்திற்குச்  சொல்வதானால் வலிமையுடைய ராணுவத்தினை வைத்திருப்பது இனிமையானது. நம் உடலை வளர்ப்பதற்காக பிற உயிர்களைக் கொன்று உண்ணாமல் இருப்பது இனிமையானது. சுருக்கமாக கூறினால்  சைவ உணவுகளை உண்பது இனிமையானது. மரங்கள், செடிகள், மலர்கள், பறவைகள், பட்டுப் பூச்சிகள் , விலங்குகள் என இருக்கிற காட்டில் ஓடுகிற ஆறு எவ்வளவு இயற்கை அழகாய் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீட்டில் வாழ்வது இனிமையானது. இயற்கை அழகை ரசித்து வாழ்வதைக் கூறுகிறார். அவை போல மதிப்புடைய மனிதர்களின் கொள்கைகள், கருத்துகள்வழிகாட்டுதல்கள் இனிமையானது. மதிப்புடையவர்கள் என்பவர் பணம் படைத்தவர் இல்லை. நல்ல மனம் படைத்தவர். சிறந்த குணம் உள்ளவர். சினம் அற்றவர். அன்னை தெரசா, அண்ணல் காந்தி, தந்தை பெரியார், விவேகானந்தர், பாரதி போன்றோரை மதிப்புடையவர் என்ற பட்டியலில் சேர்க்கலாம்

Wednesday, 5 December 2012

இனியவை நாற்பது.. பாடல் 3


3. ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே
   நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே
   ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே
   தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 
ஏவது மாறா இளங் கிளைமை முன் இனிதே;
நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே;
ஏருடையான் வேளாண்மைதான் இனிது; ஆங்கு இனிதே,
தேரின், கோள் நட்புத் திசைக்கு.
பதவுரை 

ஏவது மாறா - வேலைகளைக் கூறிய படிச் செய்யும் (ஏவுதல் மாறாத )
இளங்கிளைமை - பணியாட்களைக் கொண்டிருத்தல் 
முன்இனிது - முற்பட இனிது ;
நவை போகான் - குற்றங்களிற் செல்லாதவனாய்,
நாளும் கற்றல் - நாள்தோறும் கற்றல்,
மிக இனிது -;
ஏர் உடையான் - (தனக்கென) உழுமாடுகளையுடையானது,
வேளாண்மை - பயிர்த்தொழில்
இனிது -;
ஆங்கு - அதுபோல ,
தேரின் - ஆராயின்,
திசைக்கு - தான் செல்லும் திசையில்,
கோன் நட்பு - நட்புக்கொள்ளுதல்,
இனிது -

தெளிவுரை 
      சொன்ன வேலைகளைச்சொன்னபடியே தெளிவாய் மாற்றமில்லாமல் முடிக்கிற வேலைகரைகளைப் பெற்றிருப்பது இனிமையானது. எந்த குற்றங்களிலும் ஈடுபடாமல் கற்றலில் கவனம் செலுத்துவது அதைவிட இனிமையானது. உழவுத் தொழில் செய்பவர் தனக்கென சொந்தமாக ஏர் கலப்பை மற்றும் உழு மாடுகள் போன்ற தேவையானவற்றைக் கொண்டிருப்பது இனிமையானது. ஆராய்ந்து  பார்த்தால்  செல்கிற இடங்களில் நன்கு பழகி மக்களை நண்பர்களாக்கிக் கொள்வது  மிக இனிமையானது.
இங்கே பணியாட்கள் திறமையனவ்ர்களாய் இருப்பதும் குற்றங்களில் ஈடுபடாமல் நன்கு படிப்பதும் தொழில் செய்பவருக்குத் தேவையான கருவிகள் சொந்தாமாக இருப்பதும் எங்கு சென்றாலும் அன்பாகப் பழகி நட்பு கொள்வதும் இனிமை தருவன என்று உணர்த்துகிறார் பூதஞ்சேந்தனார். 

Monday, 3 December 2012

இனியவை நாற்பது.. பாடல் 2


2. உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
  மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
  நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
  தலையாகத் தான்இனிது நான்கு.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 

உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.
பதவுரை 
உடையான்செல்வம் உடையவன் (பணம் உடையவன்)
வழக்குஈகை(இல்லாதவருக்குக் கொடுப்பது)
இனிது
ஒப்ப முடிந்தால்மனைவியும் கணவனும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒரு மனம் உடையவர்களானால் 
மனை வாழ்க்கைகுடும்ப வாழ்க்கை 
முன் இனிது - முற்பட இனிது 
மாணாதாம் ஆயின் - அவ்வாறு ஒன்றுபடாவிட்டால் 
நிலையாமை நோக்கி - உடல் முதலானவை  நிலையில்லாதவை என்பதை உணர்ந்து 
நெடியார்தாமதியாதவராய்
துறத்தல் - ஆசைகளை  விடுதல்
தலையாக நன்கு இனிது - தலைப்பட மிக இனிது

தெளிவுரை 
      பணம் உடையவர்கள் அதிகமாக  பொருளைச் சேமித்து வைப்பதை விட துன்பப்படும் ஏழைகளுக்குக் கொடுப்பது இனிமையானதுகணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருமனம் உடையவர்களாய்த் தங்கள் வாழ்க்கையை வாழ்வது மிகவும் இனிமையானது. அவ்வாறு மனம் ஒன்றுபட்ட வாழ்வினை அமைத்துக் கொள்ள முடியாதவர்கள் உடல் முதலியவை நிலையில்லாதவை என்பதை உணர்ந்து  உடல்மேல் உள்ள ஆசை, பொருள்மேல் உள்ள ஆசை, உலகின்மேல் உள்ள ஆசை அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு நொடி கூட தாமதியாமல் துறவியாக   மாறுவதே தலைசிறந்த இனிமையாகும்.
      இப்பாடல் பிறருக்குக் கொடுப்பதில் உள்ள இனிமையையும் குடும்ப வாழ்வில் மற்ற பொருத்தங்களை விட முக்கியமானது மனப் பொருத்தமே என்பதையும் அதில் உள்ள இனிமையையும் மனம் ஒன்றுபடாதவர்கள் இணைவதைவிட தனியாளாய் துறவியாக வாழ்வதே சிறப்பானது என்பதையும் உணர்த்துகிறது.