Sunday, 10 May 2015

இந்தியாவின் மகள்

"இந்தியாவின் மகள்" (India's daughter) விளக்கப்படம் ஒரு சிறிதளவும் வியப்பளிக்கவில்லை. அதில் பேசிய வழக்கறிஞர்களின் வாதம் தானே நம் ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டு மனசாட்சி. 2012இல் நிர்பயா நிகழ்வை தொடர்ந்து வந்த வானொலி நிகழ்ச்சிகளில் பேசிய மக்களின் வாதங்கள் முகேசின் வாதங்களுக்கு கொஞ்சமும் குறையாதவை. "பெண்கள் எப்படி உடையணிய வேண்டும், மகள்களைப்பெற்ற அப்பாக்கள் எப்படி பொறுப்பின்மையோடு நடந்து கொள்கிறார்கள்" என்று பேசிவிட்டு கூடவே "அந்த 6 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கனும் சார்" என்று பேசி ஓய்ந்தார்கள். பேசியவர்கள் அனைவரும் இந்த சமூகத்தின் மகள்களும் மகன்களும் தான்.
அதில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் பேசியதாவது : "இது அந்த 6 பேரின் தவறோ, பெண்ணின் தவறோ இல்லை. ஒட்டு மொத்த சமூகத்தின் தவறு. குழந்தைகளை வளர்க்கும் போது 'பொண்ணுன இப்படி இருக்கனும். பையன்னா இப்படித்தான் இருக்கனும்' என்று சொல்வதில் தொடங்கும் சிக்கல் இது. "நீ ஆண் எப்படி வேண்டுமானலும் இருக்கலாம்" என்று சொல்லிக்கொடுத்துவிட்டு பின்னாளில் அவர்கள் செய்யும் குற்றத்திற்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் முரண்பட்ட செயல். ஒரு ஆணுக்குள் இருக்கும் மொத்த பெண்மைத்தன்மையையும் சிறு வயதிலேயே பேசி, திட்டி, கேலி செய்து கொன்றுவிட்டு பின்னாளில் பெண்களுக்கு ஆண்களால் தொல்லை என்று சொல்வதும் நியாயமில்லை. மனநிலை மாற்றம் தேவை. அது வீட்டிலும் பள்ளியிலும் தொடங்க வேண்டும்."
இவ்வாறெல்லாம் பேசிய போது நிகழ்ச்சி நடத்தியவர் ஒன்றுமே பதில் பேசவில்லை. எனக்கு அடுத்து பேசிய ஒரு 50 வயது அம்மாள் எனக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். இவர்கள் தானே இந்தியாவின் சராசரி அம்மாக்கள்? இவர்களிடமிருந்தே சிக்கலான மனநிலை தொடங்கும் போது முகேசிடம் வேறு என்ன மனநிலையை எதிர்பார்க்க முடியும்.
"women are so precious" என்று சொல்லும் பலராலும் " men and women are equal" என்று சொல்ல முடிவதில்லை.
"women are so special" என்று சொல்லி பத்து ரூபாய்க்கு மிட்டாய் கொடுத்து பெண்கள் நாள் கொண்டாடுவதோடு முடித்துக்கொள்கிறார்கள்.
யாரும் இங்கு சிறந்தவர்கள் இல்லை; யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை; இதெல்லாம் என்று புரிந்துகொள்ளப்படும்?
ஆண்மை என்பதற்கு மறமும் பலமும் தான் பொருள் என்றால் அது பெண்களிடம் இல்லையா?
பெண்மை என்பதற்கான பொருள் மென்மையும், இரக்கமும் என்றால் அது ஆண்களிடம் இல்லையா?
மனதளவில் அனைவருக்கும் பொதுவான இயல்புகளைக்கொன்றுவிட்டு இதுதான் எங்களது பண்பாடு என்று கண்டதையும் கட்டிக்கொண்டு அழுவதில் பயன் என்ன?
பெண்மை என்பதற்கு மென்மை, தாயுள்ளம், அன்பு எனப்பொருள் கொண்டு அக்குணங்கள் பெற்ற அனைவருக்கும் எனது "பெண்கள் நாள் நல்வாழ்த்துக்கள்."
(மார்ச் 08 2015)

என் மேல் நீ கொண்ட காதல்!!!


என்னைப் பார்க்கும் போதுஉன்
தும்பி விழிகள் இரண்டும்
தூங்கா விழிகளாய் இன்னும் 
கொஞ்சம் விரிகிற போது தெரிகிறதடி
என் மேல் நீ கொண்ட காதல்!!!

(மார்ச் 15 2015)

Wednesday, 14 January 2015

நத்த மண்டலம்: (நெத்த மண்டலம் (அ) இரத்த மண்டலம்)

நத்த மண்டலம்: (நெத்த மண்டலம் (அ) இரத்த மண்டலம்)

வேறொரு திரியில் ஐயா செ. இரா. செல்வக்குமார் அவர்கள் எழுதிய பின்னூட்டத்தைத்தொடர்ந்து நத்த மண்டலம் என்றால் என்னவென்று தேடினேன்.
நத்த மண்டலம் என்பது பாம்பு வகையாம்; விரல் அளவு தடித்து இருக்குமாம்; நல்ல நிறமுடையவர்கள் உள்ளங்கை சிவந்தால் இருக்கும் நிறமாக இருக்குமாம்; "சுண்டுனா ரத்தம் வர அளவுக்கு சிவப்பு" என்று சொல்லும் நிறம் என்றார்கள். சிலர் அது ஒரு சான் தான் வளரும் என்கிறார்கள். ஓரிருவர் அது ஒரு அடி கூட வளரும் என்கிறார்கள். நச்சு தன்மை இருக்கும் பாம்பு. இரண்டாக வெட்டினால் கூட உயிர் போக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளுமாம். சற்று அதிகம் கண்ணில் படாத பாம்பு என்றே சொல்கின்றனர். அதன் மேல் மெலிதாக கறுப்பிலும் வெள்ளையிலும் வரிகள் இருக்கும். பார்க்க மண்டலம் மண்டலமாக தெரிவதால் தான் அதற்கு நத்த மண்டலம் என்று பெயர்.

இது எவ்வகைப்பாம்பு என்று தெரியவில்லை. பார்த்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.

மேலும் கேரளத்தில் கட்டுவிரியனை மண்டலி என்கிறார்கள். கன்னடத்தில் "கொளத்த மண்டலா" என்று ஒரு பாம்பைக்குறிப்பிடுகின்றனர். அது கடித்தால் தசை அழுகிவிடும், பாம்பின் தோலில் மண்டலம் மண்டலமாகத்தெரியும் அதனால் தான் அதற்கு அப்பெயர் என்று கேள்விப்பட்டேன். அது என்ன பாம்பு என்று சரியாகத்தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Saturday, 22 November 2014

காலன் கோழி

இதை மலையாளத்தில் (குறிப்பாக பாலக்காட்டில்) "காலன் கோழி" என்கிறார்கள். இது கத்தினால் வீட்டில் மரணம் நிகழும் என்று நம்பிக்கையுண்டாம். அது காலன் (எமன்) வருவதை உணர்த்துவதற்காக ஒலியெழுப்புவதாகவும் போலாம் போலாம் என்று உயிரை அழைப்பதகாவும் சொல்வர். தமிழில் இதற்கு பொரிப்புள்ளி ஆந்தை என்று பெயர். 
(Mottled Wood Owl)






















PC: Internet

நர்மதா

ஓடிக்கொண்டிருக்கும் நர்மதை நதியின் 
குளிர்ந்த நீர் என்கைகளில் படுகிறது.. 
விழித்துக்கொள்கின்றேன் கனவிலிருந்து... 
குளிர்ச்சி இப்பொழுது இல்லை.. 
குளிர்ச்சியின் நினைவுகள் சுடுகிறது..

Thursday, 2 October 2014

கற்றதனால் ஆனா பயன்??? எதுவுமில்லை!

கற்றலினால் ஆன பயன் என்ன??
நிச்சயம் தெரியவில்லை. ஆனால் இத்தலைப்பில வெளியான கட்டுரையின் பயன் மட்டும் தெரிகிறது.
" நன்றாக ஆறடி உயரம் வளர்ந்த புலியானாலும் நம் கையால் அதன் கண்ணில் அடித்தால் பயந்து ஓடிவிடும்" இதுதான் அக்கட்டுரைவிட்டுச்செல்லும் செய்தி. கட்டுரையில் பல இருக்க இதை ஏன் பிடித்துக்கொண்டாய் என்று கேட்காதீர்கள். சிந்தனைகளின் ஊடே, கருத்துக்களின் ஊடே சொல்லப்படும் செய்திகளும், அறிவியல் சிந்தாங்களும் மக்களை அதிகம் சென்றடைகின்றன. நேற்று தினத்தந்தியின் முகனூல் பக்கத்தில் பலரும் இதைச்சொல்லியிருந்தனர். இச்சம்பவம் நடந்த அன்று இதுபோன்ற பின்னூட்டங்கள் இல்லை என்பதும், இக்கட்டுரை பரவிய பின்பு இக்கருத்து வேரூன்றியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆமாம் புலிகளை அப்படி கண்ணில் தாக்கி விரட்ட முடியுமா? முடியாது. அக்கட்டுரையை முதன்முதலாகப்படித்த நாளில் இருந்து இணையத்தில் புலிகளிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று தேடிப்பார்த்தேன். ஒரு இடத்தில் கூட இந்த முட்டாள் தனமான யோசனையை யாரும் சொல்லவில்லை. எனக்குத்தெரிந்த வனவிலங்கு ஆர்வலர்களிடமும் கேட்டுப்பார்த்தேன். இக்கட்டுரை படித்து அவர்களும் எரிச்சலுற்றார்கள் என்பது புரிந்தது. ஆக மொத்தம் கட்டுரை ஆசிரியர் அக்கருத்தை தாமாகவே எழுதியுள்ளார். அது இன்று மக்களிடையே அதிக தாக்குதலை உண்டாக்கியிருக்கின்றது என்று உணர்ந்தால் அதில் உள்ள பிழையின் தாக்கமும் எவ்வளவு என்று உணர முடியும். இன்று பலரும் பொத்தாம் பொதுவாய் கருத்து சொல்கிறேன் என்று இடையில் அறிவியலுக்கும், அறிவுக்கும் முரண்பட்ட செய்திகளை மக்களிடம் விதைத்துச்செல்கின்றனர். இதை உண்மையென்று நம்பி நாளை நானே ஒரு நாயை கண்ணில் ஓங்கிக்குத்தினால் அது கடிக்காமல் போகுமா என்பது சந்தேகம் தான். கட்டுரை எழுதுபவர்கள் சிந்திப்பார்களா???
இந்திய ஊடகங்கள் மோசத்திலும் மோசம். புலி தாக்கிய படங்களை பரப்பிவிட்டு விட்டு அதே சமயம் "மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்" என்று கொந்தளிக்க வேறு செய்கின்றனர். (இதுவும் தினத்தந்தியில் வெளியானது, வேறு எந்த நாளிதழ்கள் எல்லாம் அப்படி எழுதுகின்றனவோ தெரியவில்லை) அப்படங்களை வைத்து இவர்கள் காசு பார்த்தார்கள் என்பதை மறந்துவிட்டு எழுதுகின்றனர். இதற்கு முன் தான் மக்களுக்கு அறியாமை. அதைப்போக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?? பாம்பைப்பார்த்தால் என்ன செய்வது, புலிவிரட்டினால் என்ன செய்வது என்று அத்துறை சார்ந்த வல்லூநர்களின் உதவியோடு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கட்டுரைகள் வெளியிடாமல் புலிதாக்கிய படத்தை மட்டும் தானே அதிகம் வெளியிட்டீர்கள்.
நாம் மட்டும் என்ன விதிவிலக்கா... இதற்கு முன் பல ஆர்வலர்கள் விலங்குகளைப்பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். அதையெல்லாம் முழுவதும் படித்ததும் இல்லை, மற்றவர்க்குப்பரிந்துரைத்ததும் இல்லை. ஒரு விபத்திற்குப்பின்னாவது தெளிவு பெறவேண்டும்.
ஆமாம் கற்றலினால் ஆன பயன் என்ன? கற்பதால் எப்பயனும் இல்லை. கற்றல் வழி நடப்பதில் தான் பயன். விதிகளைப்பின்பற்றவேண்டும் என்று எல்லாப்பள்ளிகளும் கற்றுக்கொடுக்கின்றன. சாலை விதிகள் தொடங்கி எவ்விதிகளையும் மதிப்பதில்லை. வேலிதாண்டி புலியின் இடத்திற்கு செல்லக்கூடாது என்று கற்றதை நாம் கடைபிடிக்கவில்லை. புலியிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று பள்ளியில் கற்றுக்கொடுத்திருந்தாலும் கடைபிடிப்போமா என்பது சந்தேகம் தான். இப்படியொரு கோரவிபத்து நேர்ந்துவிட்டதால் புலியிடம் கொஞ்சம் தள்ளியிருப்போம், மற்றபடி விதிகளை மீறிக்கொண்டுதானே இருப்போம். ஒரு நாளைக்கு ஆயிரம் விதிகளை மீறுகிறோம். யார் செய்த புண்ணியமோ என்னமோ தப்பித்துக்கொள்கிறோம். ஆனால் சில நேரங்களில் மீறப்படும் விதிகளின் விளைவு மிகவும் பயங்கரமாய் இருக்கும். அதில் ஒன்று தான் புலிதாக்கிய நிகழ்வும். "விதிகள் மீறப்படுவதற்குத்தான்" என்னும் மனநிலை மாறி அவை மதித்து நடப்பதற்கு என்னும் மனநிலை வளர்ப்பதைத்தவிர விபத்துக்களைத்தவிர்க்க வேறு வழியில்லை.

Tuesday, 26 August 2014

கொங்கு மண்டல வட்டார வழக்குச்சொற்கள்.

சமையல் அறை, குளியல் அறை, வரவேற்பறை என்பதெல்லாம் கிட்சென், பாத்ரூம், ட்ராயிங்க் ரூம் போன்றவற்றின் நேரடி தமிழ்மொழிபெயர்ப்பு. இதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்பாட்டில் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத்தொகுக்கும் சிறு முயற்சி.

1. ஆசாரம்

இன்று ஹால், வரவேற்பறை என்றெல்லாம் சொல்லக்கூடிய அந்த நீண்ட முன் பக்க அறைக்குத்தான் ஆசாரம் என்று பெயர். இன்றும் எங்கள் வீட்டில் இந்தச்சொல்லின் பயன்பாடிருக்கிறது.

2. திண்ணை.

இதைப்பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் புறமும் அல்லாமல் அமைந்த ஒரு பகுதி. வருபவர்களை வரவேற்று அமர வைக்கும் பகுதி.

3. சமையக்கட்டு / அடுக்களை / கொட்டம்

சமையலறையை இப்படிப்பல சொற்களால் அழைப்பர்.

பானை, மொடா போன்றவற்றை அடுக்கிவைத்திருந்ததால் அதற்கு அடுக்களையென்ற பெயர் வழக்கில் இருக்கிறது.
வேரொரு அறையோடு இணைந்திருக்கும் சமையலறையை கொட்டம் என்பார்கள். ஆதாவது ஒரு தடுப்பு வைத்து சமைக்கும் இடத்தை மட்டும் பிரித்திருப்பார்கள். அந்த இடத்தைக் கொட்டம் என்பார்கள்.

4. பொடக்காலி 

இன்று குளியலறை என்று சொல்கிறோமோ அதற்கு இணையான தமிழ்ச்சொல் பொடக்காலி.
இது புறக்காணி என்னும் சொல்லின் மரூஉ. வீட்டின் பின்பக்கத்தைப் புறம் என்று சொல்வர். "பொறவுக்கு" என்றால் பின்பக்கம் என்றும், சிறிது நேரம் கழித்து என்றும் பொருள்படும். "பொறகாண்டி" என்ற சொல்லை சதிலீலாவதி படத்தில் நீங்கள் கேட்டிருக்கலாம். அனைத்திற்கும் வீட்டின் பின்புறம் என்றே பொருள்படும். தமிழில் இடக்கரடக்கல் என்னும் ஒரு இலக்கணவகையில் இதுவரும். கைகழுவதல், கால்கழுவுதல் என்பன போன்று இதுவும் குறிப்பால் பொருளுணர்த்தும் ஒரு சொல்.

(நன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும். மேலும் படிக்க: இடக்கரடக்கல் )

5. நடை / நட

இப்பொழுது கேட் என்று சொல்வதின் வழக்குமொழி இது. போன தலைமுறை வரை மதில்சுவர் வைத்த வீடுகளைப்பார்ப்பது கடினம். அப்படி மதில்சுவர் வைத்து அதற்கு ஒரு கதவு போட்டிருந்தால் அந்தக்கதவை நடை/நட என்பார்கள். அத்தகைய வீடுகள் அரிது. அவற்றை "நட வச்ச வூடு" (நடை வைத்த வீடு) என்றழைப்பார்கள்.

இதில் விடுபட்ட சொற்களையும் சேர்த்து வேறொரு நிலைபதிவில் எழுதுகிறேன்.

நன்றி.
சுபாசினி.