Showing posts with label கதை நேரம். Show all posts
Showing posts with label கதை நேரம். Show all posts

Friday, 5 July 2013

இயல்பை மாற்ற வேண்டாம்

இதுவும் எங்கள் பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. என்னை பாதித்தவைகளில் ஒன்று.

பாம்பு ஒன்று ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து வந்தது. அந்த வழியாக யார் சென்றாலும் அவர்களைக் கொத்துவது அதன் இயல்பு. அந்தப் பாம்பிற்கு பயந்த மக்கள் அந்த வழியைத் தவிர்த்தனர். அதனிடம் ஒரு பயமும் மரியாதையும் வைத்திருந்தனர். அந்த வழியாய் ஒரு துறவி சென்றார், பாம்பு அவரையும் தீண்ட வந்தது. அவர் அதனிடம் " நீ எவ்வளவு உயிர்களைப் பலி கொண்டாய் உன்னால் ஒன்றையேனும் திருப்பிக்கொடுக்க முடியுமா, அதனால் இனி யாரையும் தீண்டாதே" என்று சொன்னார். அதனை அந்த பாம்பும் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கொத்துவதை விட்டு விட்டு சாதுவாக மாறியது. கொஞ்ச நாளில் பாம்பு யாரையும் கொத்துவதில் இல்லை என்ற செய்தி மக்களிடம் பரவியதும் அந்த வழியை மக்கள் பயன்படுத்தினர். இன்னும் சில நாட்கள் செல்ல செல்ல அந்தப் பாம்பை கல்லால் அடிப்பது, வாலை இழுப்பது போன்ற செயல்களை செய்து துன்புரித்தினர். மீண்டும் ஒரு முறை அதே துறவி அந்த வழியாக வந்த போது அந்த பாம்பு மிகவும் அடிபட்டு சாகும் தருவாயில் இருப்பதைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டார். " இவ்வளவு நாட்களும் கடித்துக்கொண்டிருந்தேன், மதித்தனர். உங்கள் பேச்சைக் கேட்டு, இப்பொழுது யாரையும் தீண்டுவதில்லை, அமைதியாக இருக்கிறேன், அதனால் எனக்கு சக்தியில்லை என்று எண்ணி என்னை சாகும் நிலையில் கொண்டுவிட்டனர்" என்று அந்த பாம்பு பதிலளித்தது.

அதற்கு அந்த துறவி " உன்னை தீண்ட வேண்டாம், உயிரைக் கொள்ள வேண்டாம் என்று மட்டும் தான் சொன்னேன். அதற்காக உன் உயிரை மாய்த்துக் கொள்ள சொல்லவில்லை, சீறு அவர்கள் பயப்படுவார்கள், ஆனால் அவர்களாய்த் தீண்டாதே, உன் இயல்பை பிறரைத் துன்படுத்தாத அளவு மட்டும் மாத்திக்கொள், ஆனால் பிறர் உன்னைத் துன்பப்படுத்த இடம் கொடுக்காதே."

Thursday, 4 July 2013

துன்ப மூட்டை

இது ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி வழிபாட்டுக்குக் கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. இது எந்த ஞானியால் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை, பலரும் இதைக் கேட்டிருப்பார்கள்.

" ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றனர்,  அவனுக்கு அது இருக்கிறது எனக்கு இல்லை' இவ்வாறு சொல்லிக்கொண்டே இருந்தனராம்.. அவரும் பொருமையிழந்து மக்கள் அனைவரையும் வரவழைத்து, " உங்கள் துன்பத்தை எல்லாம் நாளை ஒரு மூட்டையில் கட்டி இந்த இடத்திற்கு எடுத்து வாருங்கள், அவற்றைப் போக்குகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மறுநாள் மக்கள் அனைவரும் அவரவர் துன்ப மூட்டையை எடுத்துக்கொண்டு கடவுளைப் பார்க்க சென்றனராம். கடவுள் அவர்களிடம் " உங்கள் துன்ப மூட்டையை இங்கு வைத்துவிட்டு வேறு யாருடைய துன்ப மூட்டையாவது எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டார். மக்களும் அவரவர் மனதில் யாரெல்லாம் 'மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், நமக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா' என்று எண்ணி ஏங்கி கொண்டிருந்தனரோ அவர்களது துன்ப மூட்டையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக சென்றுவிட்டனராம். இரண்டே நாட்களில் மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பி வந்து " எனக்கு என் பழைய துன்ப மூட்டையையே கொடுங்கள், அது இதற்கு பரவாயில்லை, குறைந்தது அது எனக்கு பழகிப் போன துன்பம் , இது மிகவும் கடுமையாக இருக்கிறது" என்று சொல்லி தன் பழைய துன்ப மூட்டையே கேட்டனராம்..."

என்னை ஆழமாக பாதித்த கதை இது... உண்மையும் கூட....