Wednesday 27 September 2017

மலை (மல) - பெரிய என்னும் மற்றொரு பொருள்.

மலை (பேச்சு வழக்கில் மல) என்னும் முன்னொட்டிற்கு மா என்னும் உரிச்சொல் போலவும் ஆளப்படுகிறது. மலை என்பதும் உரிச்சொல் தான் என்பது என் எண்ணம்.

சிறுவயதில் மலைப்பாம்பு என்று கேட்கும் போதெல்லாம் அதை மலையில் காணப்படும் பாம்பு என்றே நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது அது பெரிய பாம்பு என்னும் பொருளிலேயே மலைப்பாம்பு என்னும் பெயர் பெற்றது.

இருளர் இனத்தைச் சேர்ந்தவர் அமெரிக்கர்களுக்கு பாம்பு பிடிப்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கும் காட்சி.



மலைவேம்பும் அப்படித் தான். அதன் இலைகளும் பூவும் வேம்பை விடப் பெரியதாய் இருக்கும். மா, பெரிய போன்ற பொருளில் மலை- வேம்பு என்னும் பொருளில் மலைவேம்பு எனப்பட்டது.
அதே போன்று இன்னொரு மரவகை மலங்கிலுவை. கிலுவை மரத்தின் இலைகளை விட இதன் இலைகள் பெரியதாய் இருக்கும். அதனால் இது மலங்கிலுவை.
மலைவேம்பு


மலநெல்லிக்கா என்று நாம் அழைக்கும் மலைநெல்லிக்காய் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிலர் அதைப் பெரிய நெல்லி என்பார்கள்

மலைநெல்லி

பெரிய வகைக் கழுகுகளை மலங்கழுகு என்பார்கள். கருடன் என்று நாம் சொல்வதெல்லாம் பருந்து வகை ( கழுகு கிடையாது).  அவை உருவத்தில் சிறியவை. கழுகு என்பதே பருந்துகள், வல்லூறுகளை விடவும் பெரியது. மலங்கழுகு என்றால் கழுகளில் மிகப்பெரிய கழுகைத் தான் குறிக்கும். பெரியா பாட்டி சொல்லக் கேட்ட பெயர் இது. ஊரில் எப்பொழுதாவது தான் பார்க்க முடியும் என்றார். இராசாளி போன்ற ஒரு பெரிய கழுகைக் குறிக்கத் தான் இது பயன்பட்டிருக்க வேண்டும். White bellied sea Eagle, Black Eagle, Bonelli's Eagle, Indian spotted Eagle  போன்ற பெருங்கழுகுகளைப் பொதுவாகக் குறிக்கவோ இல்லையேல் அவற்றுள் ஒன்றின் பெயராகவோ மலங்கழுகு என்னும் சொல் பயன்பட்டிருக்கிறது.

"மலமாடு மாதிரி வளந்திருக்க" என்பார்கள் ஊர்ப்பக்கம். இதுவுமே மலைமாடு என்னும் குறிப்பிட்ட மாட்டு இரகத்தைக் குறிக்காமல் பெரிய மாடு என்னும் பொருளில் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். காங்கேயம், புளியகுளம் வகைகள் மலைமாடு என்னும் வகையை விட உருவத்தில் பெரியவை. மாட்டு இரகங்களை உவமாயகக் கூறவேண்டும் என்றால் காளையென்றோ, கங்கேய மாடு என்றோ அல்லது அந்த அந்த பகுதியில் இருக்கு இரகங்களை வைத்தோ தான் சொல்லியிருக்க வேண்டும். இது நிச்சயம் மாட்டு இரகத்தைக் குறிக்கவில்லை.

இன்னும் நிறைய சொல்லாடல்களில் மலை என்னும் சொல்லொட்டு இயல்பாய் பயின்று வந்து பெரிய என்னும் பொருள் தருவதைப் பார்க்கலாம். மலம்பூண்டு/மலப்பூண்டு, மலவாழை இப்படி நிறைய சொற்கள் இருக்கின்றன.

மலம்புழா என்னும் ஆற்றின் பெயர் கூட பெரிய புழா ( ஆறு) என்னும் பொருள் பெற்றிருக்கலாம். ( நான் மலையாளம் அறியேன். அதனால் இது ஒரு ஊகமே).

அதேபோல இன்னொன்று மலையில் மட்டுமே காணப்படும் ஆட்டு வகையை மலையாடு என்பதில்லை. மிகத்தெளிவாக பொருள் மயக்கமே வராதது போன்று வரையாடு என்றே சொல்கிறோம். சங்க இலக்கியங்களும் அச்சொல்லாட்சியையே பயன்படுத்துகின்றன. 

மக்கள் பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் ( இன்னும் எழுத்தில் ஏற்றப்படாத சொற்களை) சொற்களைப் பார்த்தால் வலிமிகவில்லை. இனமிகலே இருக்கிறது. மலைக்கழுகு இல்லை. மலங்கழுகு, மலம்பூண்டு, மலங்கிளுவை. பேச்சு வழக்கில் மலவேம்பு, மலநெல்லி என இருப்பவை எழுத்திற்கு வரும் போது முறையே மலைவேம்பு மலைநெல்லி என்று எழுதப்பட்டன. எனக்கென்னவோ இவை மிகைதிருத்தம் போலத் தெரிகின்றன. மலம்பாம்பு தான் மிகைதிருத்தப்பட்டு மலைப்பாம்பாகியிருக்க வேண்டும். (இன்றும் கிராமங்களில் எப்படி உச்சரிக்கிறார்கள் என்று உற்று நோக்கினால் மலம்பாம்பு என்று இருக்க வாய்ப்புள்ளது) மலம்புழா என்பதும் பொருந்தி வருகிறது. இன்னும் ஒரு அடி மேலே போய் எனக்குத் தோன்றுவது மல என்பது தான் உரிச்சொல். செல்வா ஐயா ஒருமுறை எழுதியிருந்தது: சிலம்பு ( வளை) என்னும் பொருளின் அடியிலேயே வெற்பு என்பதற்கு அப்பெயர் வந்தது. அதே போல மல- பெரிய என்னும் அடியில் வெற்பு என்பதற்கு மலை என்னும் பெயர் வந்திருக்கலாம். மலையில் இருந்து மல தோன்றாமல், மலவில் இருந்து மலை தோன்றியிருக்கலாம்.

புதிதாய் பறவைகளுக்கு பெயரிடும் நண்பர்கள் Great, large, greater போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே மொழிபெயர்க்காமல் இடத்திற்கு தகுந்தவாறு மலை, மல என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
(படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)

No comments:

Post a Comment