Thursday 28 September 2017

Bald Eagle- வெண்டலைக் கழுகு.

Bald Eagle- வெண்டலைக் கழுகு.
Haliaeetus leucocephalus

அமெரிக்கரிக்கர்கள் ஆங்கிலத்தில் இதைச் சொட்டைக்கழுகு என்று அழைக்கிறார்கள். வெந்நிறமாய் இருக்கும் அதன் தலை சொட்டை போன்று தோன்றுவதால் அதனை இப்படி அழைக்கிறார்கள். தமிழில் இதனை வெண்டலைக் கழுகு என்றே அழைக்கலாம் என நினைக்கிறேன்.

இதுவொரு மலங்கழுகு. அதாவது கழுகளிலியே மிகப்பெரிய வகைக் கழுகு. இது Fish Eagle வகையைச் சேர்ந்தவொரு கழுகு. இதன் முக்கிய உணவு மீன் என்றாலும் மற்றவற்றையும் உண்ணும்.

அமெரிக்கா வரும்போதே பார்த்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில் இருந்த பறவையிது. பார்ப்பதற்காக அடித்துப்பிடித்து மேரிலாந்திம் டெலாவர் தீபகற்பத்தில் இருக்கும் "BlackWater Wildlife Refuge" சென்றோம். அங்கு இதற்கும் விராலடிப்பானிற்கும் (Osprey) 'Raptor Cam' என்று சொல்லப்படும் இரையாடிப் பறவைகளின் கூடுகளை நேரடி ஒலிபரப்பு செய்யும் வசதியிருக்கிறது. அதனால் எப்படியும் வெண்டலையைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் பார்க்க முடியவில்லை. அங்கு சந்தித்த ஓர் அமெரிக்கப் பறவை ஆர்வலர் தம்பதியினர் எங்களுக்கு வேறு எங்கு பார்க்க முடியும் என்று சொன்னார்கள்.

அடுத்த சில நாட்களிலேயே அடித்துப்பிடித்து அவர்கள் சொன்ன கானோவிங்கோ அணைக்கு (Conowingo Dam) சென்றால் அங்கே திரும்பிய இடமெல்லாம் வெண்டலைகள் தான். 17 கழுகுகளை அன்று பார்த்தோம். அங்கிருந்த இன்னொரு பறவையாளர் சொன்னார் " இது என்ன பிரமாதம், நவம்பர் மாதம் வாருங்கள். கனடாவில் இருந்து வலசை வரும் வெண்டலைகளும் இங்கே இருக்கும். நூற்றுக்கும் அதிகமானவை மீன் வேட்டை செய்வதைப் பார்க்கலாம்" என்றார். ஆம், உலகெங்கும் இருந்து எண்ணற்ற புகைப்படக்காரர்கள் அந்த அணைக்கு நவம்பரில் படையெடுத்து வருவார்களாம். நவம்பரில் சென்று பார்த்துவிட்டு மேலும் அதைப் பற்றி எழுதுகிறேன்.

அமெரிக்காவின் தேசியப்பறவை என்பதால் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு அமெரிக்கப் பறவை இது எனலாம். சாமானிய அமெரிக்கர்கள் இதனைத் தங்கள் சின்னமாகக் கொள்வதில் பெருமிதங்கொண்டாலும், பறவைகளில் ஆர்வம் மிகுந்த அமெரிக்கர்கள் இதனை சின்னம் என்று சொல்லும் போதே முகம்சுழிக்கத் தான் செய்கிறார்கள். காரணம் கேட்டால் "Moral values" அற்ற பறவையைப் போய் சின்னமாகக் கொள்வதா என்றும் வருத்தமும் தெரிவிப்பார்கள்.

ஆம், இதன் செயல்கள் நாம் நற்பழக்கம் என்று போதிப்பவைக்கு எதிரானவை. இவை இரையாடுவதை விட இரையைத் திருடுவதை அதிகம் விரும்புவ. விராலடிப்பான் மிகுந்த சிரமத்திற்குப் பின்பு பிடித்து வரும் மீங்களை இவை தங்கள் உடல்பலத்தை வைத்து வழிப்பறி செய்து விடும். சில சமயங்களில் அவற்றின் கூட்டில் இருந்து திருடுவது, கூட்டையே திருடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடும். ஆனால் அதன் குணம் அது என்று மனிதர்களின் கருத்தியல்களை அதன் மீது ஏற்றாமல் இரசித்துவிட்டுப் போக வேண்டும் நாம்.

இவை நீண்ட காலம் வாழ்பவை. 28 வருடம் வரை வாழ்ந்த கழுகுகளும் உண்டு. அதே போல இவற்றின் கூடுகளும் புகழ்பெற்றவை. புளோரிடாவில் இருக்கும் ஒரு வெண்டலைக் கூடு 10 அடி அகலமும், 20 அடி ஆளமும் இருக்கிறது. ஓகாயோவில் இருக்கும் ஒரு வெண்டலைக் கூடு 34 ஆண்டுகளுக்கு மேலாகவும் பயன்பாட்டில் இருக்கிறது. அந்தக்கூட்டின் எடை மட்டும் இரண்டு மெட்ரிக் டன், அதாவது 2000 கிலோ.

அமெரிக்க நண்பர்கள் பூங்காக்களுக்குச் செல்லும் போது அடிக்கடி மேலே பாருங்கள், வெண்டலை பறந்தால் எளிதாய் இனங்காண முடியும்.

Bald Eagle -Connowingo Dam, Maryland

No comments:

Post a Comment