Sunday, 22 November 2015

இராஜா இராணி திரைப்படத்தில் இடம்பெற்ற கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம்.

பத்மினி: சுவையான கதையொன்றை சொல்லுங்கள் அத்தான்!

சிவாஜி: சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந்தான், அந்த சேரனுக்கோர் செல்வன் பிறந்தான், செல்வன் இந்தச்சிலையை மணந்தான்.

பத்மினி: தெரிந்த கதை தானேயிது!

சிவாஜி: நடந்த கதையும் கூட.

பத்மினி: நடக்காத கதையொன்றைச்சொல்லுங்கள் அத்தான்.

சிவாஜி: சுவைக்காது கண்ணேயது!

பத்மினி: ஆ! காதல் கதையொன்று

சிவாஜி: ஆகா! இதோ புறநானூற்றில் .
பத்மினி: போதும். வீரக்கதை தானே?
சிவாஜி: வீரத்தை மணந்த காதல் கதை. தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண்ணொருத்தி தன் மகனையும் போர்க்கு அனுப்பிய புறக்காட்சி வெண்பா. கொஞ்சம் கேளேன். நானே எழுதியிருக்கிறேன் புதியநடையில்.

காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்துச் சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்துக் கலசமதில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்நாளில்  போர்க்களத்தில் தாய்நாடு காக்க தாவிப் பாய்ந்து செத்தார் தந்தையென்ற செய்தி  கேட்டு அனல் வீழ் மெழுகானாள் தமிழகத்து கிளியொருத்தி.

அனல் போலும் கண்ணோடு அயலூர் சென்றிருந்த அவள் கணவனும் வந்திட்டான்; புனல் போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்; தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்திட்டாய் என்றான்; இல்லை அன்பா! முல்லை சூழ் இந்நாட்டுப் படையிலோர் வீரர் குறைந்திட்டால் நல்ல உடையிலோர் கிழிசல் வந்தது போலன்றோ? இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன் அடைபட்ட கண்ணீர் அணையுடைத்ததத்தான் என்றாள்.

அவன் குடைவிட்டுக் கிளம்பும் ஒரு புலியென, புகைவிட்டுக்குமுறும் எரிமலையென பகைவெட்டிச் சாய்க்கும் வாளெடுத்தான்; சூளுரைத்தான் சுடர்முகம் தூக்கினான்; சுக்கு நூறுதான் சூழ்ந்துவரு பகையென்றான்; நாடு மீட்காமல் வீடு திரும்பேனென்றான்.

பார்! பார்! பார்! அந்த பைங்கிளியில் உரிமையாளன் பகைவர்மீது பாய்ந்து கொல்லும் வீரம் பாரென்று பட்டாளத்து தோழரெல்லாம் வியந்துரைத்தார். அந்த கட்டாணி முத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள் களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுக்காய் குவிந்துவரும் வெற்றிகளைக்கேட்டுவிட்டு.

கோட்டைகள் விடுபட்டன;எதிரியின் குதிரைக்கால்கள் உடைபட்டன; வேலாட்படை முறிபட்டது வேல்கள் பொடிபட்டன. எம் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியெனக் கேட்குது கேட்குது எனக்குதித்திட்டாள், புதுப்பண் அமைத்திட்டாள்.

வீரர்கள்  வந்தனர்;வெற்றி உன் கணவனுக்கே என்றனர். வேந்தனின் தூதுவர் வந்தனர்; வாழ்த்துக்கள் வழங்கினர். வீட்டோரத்து தோழிகள் வந்தனர்; வெற்றி மீட்டோனை வாழித்து மகிழ்ந்தனர். அந்த அழகி ஆனந்தக்கண்ணீர் பொழிந்தாள்.

அப்போது ஏனந்த மனிதன் வந்தானோ இழவுச்செய்தி கொல்வதற்கு. என்னருமை பெண்பாவாய் கண்ணல்ல கலங்காதே, களச்செய்தி கடைசிச்செய்தி கேளென்றான். அந்தோ மாவிலை தோரணங்கட்டி மணவிழா மேடைதன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன சொன்ன கணவர் மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டார் ஆவிதான் போனதின்னும் உயிர்வாழும் ஆரணங்கு, அச்சடித்த தமிழ்ப்பதுமை கூவியழுதாள். கொத்தான மலரிந்தக்குடும்பம், அதைக்கொத்திவிட்ட கொடுஞ்சாவை பழித்தாள் இழித்துரைத்தாள், இனியென்ன மிச்சமென்றும் கனியழுகிப்போனதென்ன்றும் கதறியழுதாள். பனிவெல்லும் விழிகாட்டி பனைவெல்ல மொழியுரைத்து பள்ளியறை கவிபாடும் நாளெல்லாம் மண்தானோ, இனி இது தூங்காத கண்தானோயென அழுதாள். அத்தான் பிணங்கிடக்கும் களம் நோக்கித்தொழுதாள்.

சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள் காதில் வெற்றி வேகத்தில் பகைவர் தட்டும் போர்முரசம் பட்டதுதான் தாமதம், கெட்டது நம்குடி முழுவதுமே பட்டொழிந்து போகட்டுமென எழுந்தாள். மட்டில்லா புகழ்கொண்ட நாட்டிற்கேயன்றி வீட்டிற்கோ வாழ்வேனென்றாள். பக்தியினால் நாடுபார்க்கும் விதங்கண்ட தமிழ்னாட்டு மாதரசி தொட்டிலிலேயிட்டு தான் வளர்த்த தூயசெல்வன் அட்டியின்றி கல்விகற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவுகொண்டாள், அங்கு சென்றாள்.

அம்மாவெனப் பாய்ந்தான் அழகுமிகு மொழி அன்புத்தங்கம். அப்பா தாத்தா ஊர்திரும்பினாரோ என்றான். திரும்பி வந்து சாவூர் சென்றுவிட்டார், கரும்பே! நீயும் வாவென அழைத்தாள்.  என்ன வாங்கிவந்தார் என்றான். மானம்! மானம்! அழியாத மானம்! என்றாள். அதைச்சுவைக்க நீயும் பருகு என்றாள். வந்துவிட்டான் குலக்கொழுந்து. குடும்பவிளக்கு எரிந்துகொண்டே கூறுகின்றாள் எதிரிகளின் படையெடுப்பால் நம் குடும்பம் தளையுதிர்த்துவிட்ட மரமாக போனதடா தம்பி, கவலையில்லை, களம் சென்றார் மாண்டார் ஆனால் இந்த நிலமுள்ளவரையில் மானம் காத்தார் என்ற பெயர்கொண்டார். மகனே நீயும் உன் தோளிலே பலமுள்ளவரையில் பகையைச்சாடு, பரணி பாடு, இது உன் தாய்த்திருநாடு உடனே ஓடுயென உடனே தாவியணைத்து தளிர்மகன் தன்னை சீவிமுடித்து சிங்காரித்து இரத்தக்காவிபடிந்த வாள்கொடுத்து சென்றுவா மகனே தெருமுனை நோக்கியென வாழ்த்திவிட்ட திருமனத்துக்காட்சிதன்னை பாடாதோருண்டா திருமகளே நீ சூளுரை!
...................................................................................................................................................................
பார்க்க:  https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

3 comments:

  1. மிக அருமை மேடம்...

    ReplyDelete
  2. A captivating story delivered in less than 7 mins. I wonder how they bring in all those description in so precise and riveting manner. There underlies the power of language, I suppose. Thanks for sharing the video and lots of love for providing transcript :)

    ReplyDelete