Friday, 24 May 2019

கழுகு இரண்டின் காதல் கதை ❤️

கழுகுகளுக்கு வயதானதும் இறக்கையின் எடை கூடிவிடும், அதன் நகங்களும் அலகும் மிகப்பெரிதாகி அதனால் வேட்டையாட இயலாமல் போய்விடும். அது உடனே நகத்தையும் அலகையும் உடைத்து விட்டு, இறக்கையைப் பிய்த்துவிட்டு 5 மாதம் மலையுச்சியில் பட்டினியாய் தவமிருந்து, அலகும் நகமும் இறகும் வளர்ந்த பிறகு வேட்டையாடும். பிறகு 100 ஆண்டுகள் வாழும்.

மேலே சொன்ன அனைத்துமே கட்டுக்கதை. இது இணையம் முழுதும் உலா வருகிறது. மேலாண்மை வகுப்பு என்ற பெயரில் இந்தக் கழுகு போல இருங்கள் என்று வேறு சொல்லிக் கொடுப்பார்கள். உண்மையில் இதெல்லாமே பொய்.

இந்தக் கதையை வெண்டலைக் கழுகுகளுக்கும் சில சமயம் பிணந்தின்னிக் கழுகுகளுக்கும் ஏற்றிக் கூறுவார்கள். அதெல்லாமே கட்டுக் கதை தான். வெண்டலைகள் அதிகப்படியாக 27 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன, இதுவே அதிகம் தான். பிறகு ஏன் இப்படிக் கட்டுக் கதைகள் சோடிக்கப்படுகின்றன என்று கேட்கிறார்களா? அதெல்லாம் content கிடைக்காத பட்டிமன்றப் பேச்சாளர்கள் சொல்லி வைத்தது.

ஐயோ! இயற்கையில் இப்படி கதைகளே இருக்காதா, என் வாழ்க்கையே பொய்யா என்றெல்லாம் வருத்தப்பட வேண்டாம்.

வடகிழக்கு அமெரிக்கப் பறவையாளர்களையும், அமெரிக்கத் தலைநகர வாசிகளையும் இந்த ஆண்டு காதலர் நாளன்று இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு நகம் கடிக்க வைத்தக் காதல் கதை ஒன்று இருக்கிறது. 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அல்ல அல்ல' என்று சொன்ன காதல் கதை.

கழகு இரண்டின் காதல் கதை ❤️

அமெரிக்கத் தலைநகரில் கழுகுக் கூடொன்று இருக்கிறது. அங்கு தான் நீதியும் (Justice) விடுதலையும் (Liberty) வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் சொந்த ஊர் அதுவல்ல. ஒரு வகைப் பூச்சிக்கொல்லியால் அமெரிக்காவில் பெரும்பாலன இரையாடிப் பறவைகள் அழிவிளிம்பை எட்டின. அப்பூச்சிக்கொல்லிக்கு தடைவிதித்து இரையாடிகளை அமெரிக்கா மீட்டெடுத்தது. தலைநகரில் வெண்டலைக் கழுகுகள் இல்லாமல் போனதால் வடக்கே வேறொரு மாநிலத்தில் இருந்து கழுகுகள் கொண்டு வரப்பட்டு இங்கே விடப்பட்டன.

அப்படி வந்தவர்களின் வழித்தோன்றல் தான் நீதியும் விடுதலையும். 14 ஆண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு வாசிங்கடனில் கூடிகட்டிக் குடியமர்ந்தனர். அன்றிலிருந்து பிரியாத இணையாக இருந்த அவர்கள் ஆண்டுதோறும் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களை நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்து மக்களும் மகிழ்ந்திருந்தனர்.

கடந்த பிப் 9 ஆம் தேதி மீண்டும் இணை சேர்ந்தது இந்த இணை. அடுத்த நாளே விதி வீட்டுக்குள் கபடி விளையாடியது. நீதி திடீரென்று காணமற் போனது. இந்த நேரத்தில் விடுதலை இரண்டு முட்டைகளையும் வைத்தது. இன்னும் குளிர் காலம் முடிவடையாத நேரத்தில் உறையும் பனியில் முட்டையையும் அடைகாத்துக் கொண்டு மீனும் பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது விடுதலை.

இந்த நேரத்தில் தான் இன்னொரு இளம் வெண்டலை விடுதலையின் கூட்டுக்கு வந்தது. அதன் காலில் இருந்த சிறு காயங்களை வைத்து ஒரு வேளை நீதிக்கும் இதற்கும் ஏற்பட்ட சண்டையில் நீதி தோற்று எங்கேயோ அடிபட்டு ஓடிவிட்டதோ என்ற ஐயம் பறவையாளர்களுக்கு வரத் தொடங்கியது. விடுதலைக்கு வந்த புதியவனைப் பிடிக்கவில்லை. அவனைக் கண்டுகொள்ளவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்ட மக்கள் நீதியைத் தேட தொடங்கினார்கள். 'யாராவது பார்த்த சொல்லுங்க' என்று முகநூலிலும் செய்தித்தாளிலும் எழுதி தலைநகர மக்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் விடுதலையும் தன் கூட்டைவிட்டு போய்விட்டது. இரண்டு நாட்கள் வரவில்லை. முட்டைகள் இரண்டும் குளிரில் வீணாய்ப்போயின. மீண்டும் விடுதலை வந்ததும் இன்னொரு இளம் வெண்டலை அதன் கூட்டிற்கு வந்தது. இது முன்னதை விட இன்னும் கொஞ்சம் கரிசனத்தோடு நடந்து கொண்டது, முட்டையை அமர்ந்து அடையெல்லாம் காத்தது. நீதி வராது என்று முடிவு செய்தோ என்னமோ இந்த வெண்டலையோடு பறந்து சென்றது விடுதலை.

இப்படி இருக்க 19 நாட்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் கூடு திரும்பியது நீதி. விடுதலையில்லாத போது கூட்டுக்கு வந்து காத்திருந்தது. விடுதலை வந்தால் என்ன செய்யும்? ஏற்குமா ஏற்காதா?

விடுதலை வரும்போது கூட்டிற்கு பக்கத்தில் கிளையில் அமர்ந்து கொண்டது நீதி. விடுதலை கூட்டுக்குத் திரும்பி வந்தது. நீதியை எங்க வந்த என்பது போலப் பார்த்துவிட்டு, தான் பிடித்து வந்த மீனை உண்ணத் தொடங்கியது விடுதலை.
சரி நம்ம விடுதலை தான என்பது போல மீனில் கை வைக்கப் போனது நீதி. 'மீன்ல கைய வச்ச, வச்ச கைய வெட்டிருவேன்' என்பது போல உறுமிவிட்டு தன் மீனைத் தான் மட்டுமே தின்று கொண்டிருந்தது விடுதலை.

பெரியதாய் ஏதாவது தப்பு செய்ததற்கு மனைவி சண்டைக்குப் போனால் 'நான் வேணும்னா காப்பி போட்டுக் கொடுக்கவா' என்று கேட்கும் கணவனைப் போல, நீதியும் கூட்டில் இருந்த குச்சியை அடுக்குவது போல பாவனை செய்தது.

இதே நாடகம் இன்னும் சில நாள் அரங்கேறிய பின்பு 'சரி போ, இந்த ஒரு தடவ மன்னிக்கிறேன்' என்று விடுதலை நீதியை ஏற்றுக் கொண்டது. மீண்டும் இணை சேர்ந்தனர் இருவரும். மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் மக்கள்.

இருவரும் இல்லாத நாளில் இரண்டு முட்டைகளையும் (பொரிக்கவே போகாத முட்டைகள் தான்) ரக்கூன் ஒன்று வந்து தின்றுவிட்டுச் சென்றது. நீதியை விட்டுட்டு மக்கள் ரக்கூனைத் திட்ட தொடங்கினர். இனி இந்த ஆண்டு அவை குஞ்சு பொரிக்கா.

14 ஆண்டுகள் சேர்ந்திருந்த இணை அடுத்தாண்டு சேர்ந்திருக்குமா? இல்லை நீதியின் போக்குப் பிடிக்காமல் விடுதலை விடுதலை பெருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Thursday, 25 April 2019

Fire and Blood (300 years before Game of Thrones) - நூல் விமர்சனம்.

ஏதேவது ஒரு விசேச நாளில் வீட்டில் அம்மா தடபுடலாக பத்து பதினைந்து வகையான உணவு சமைத்துக் கொண்டிருப்பார். நிறைய சமைப்பதால் நேரம் ஆகிக் கொண்டே இருக்கும். நமக்கோ அப்போது தான் பசி வயிற்றைக் கிள்ளும். சமையற்கட்டில் இருந்து ஆளைத் தூக்கும் வாசம் வேறு வரும். 'அம்மா பசிக்குது. அம்மா பசிக்குது' என்று புலம்பும் போது, அவரும் அய்யோ பாவம் என்று மதியம் வைத்த குழம்பை முறுக்குத் தொட்டு சாப்பிடச் சொல்வார். சும்மா நாளில் காயை ஒதுக்கி வைத்து முறுக்கோடு சாப்பாடு சாப்பிடும் நமக்கு அன்றைக்கு அது உள்ளே இறங்கவே இறங்காது.

நிற்க!
இதே போலத் தான் இந்த நூலைப் படிக்கும் போதும் இருந்தது. A song of ice and fire (Game of thrones series) நூல் தொடரின் ஆறாவது நூலிற்காக 6 வருடத்திற்கும் மேலாக வாசகர்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்க, தொலைக்காட்சித் தொடரும் நூலை முந்திக் கொண்டு எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க, மார்டின் அவர்களோ இன்னும் 6 ஆவது நூலை வெளியிடவில்லை.

தொடர்ந்து அவரை வாசகர்கள் நச்சிக் கொண்டே இருக்க அவரும், முன்கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிட்டுக் கொண்டே இருந்தார். குறிப்பாக டார்கேரியன்களின் வரலாற்றை நூலாகவே வெளியிட்டுவிட்டார்.
'என்ன ஆறாவது நூலை எழுதாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறார்' என்று சிலரும் 'எதாச்சும் வெளியிட்டிருக்கிறாரே' என்று பந்திக்கு முன்னால் முறுக்கு என்பது போல சிலரும் உணர்கிறார்கள்.

நான் இரண்டாவது வகை.

இந்த நூல் மிக முக்கியமான ஒன்று. தொடர் மிகப்பிரபலம் ஆகிவிட்ட காரணத்தால் நிறைய மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக பலரும் டிராகன்களையும் டேனரிசையும் டார்கேரியன்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்கும் இந்த வேளையில் டார்கேரியன்கள் பற்றி நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல பல செய்திகளைத் தரும் நூல். நூல் படித்தவர்கள் ஏற்கனவே ஊகித்த தகவல்கள் தான் என்றாலும், ஆசிரியரே உறுதிபடுத்தியது இன்னும் மகிழ்ச்சி.

1. Targaryens and Dragons are not immune to fire. (We already knew this from the main series and prequels)
2. Danearys' dragon eggs came from the Targaryen clutch.  (Theory confirmed)
3. Dragons are pure evil.
4. We get some insight about doomed Valyria.

இது போக வேறு பல  ஊகங்களுக்கும் நூல் இடம் தருகிறது. ஆக மொத்தம் ஆறாவது நூல் வரும் வரை படிப்பதற்கு மற்றுமொரு நூல்.
அடுத்து ஆறாவது நூல் வெளியாகுமா இல்லை இந்த நூலின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்பது மார்டினுக்கே வெளிச்சம். 

Thursday, 7 March 2019

நவீன இலக்கியங்களில் பெண்கள்

பெண்கள் நாளன்று இதை எழுத வேண்டும் என்று தோன்றியது.  தொடர்ந்து மீமிகைக் கற்பனை கொண்ட நூல்களை வாசித்து வருகின்றேன். அவற்றில் பெண்களுக்கான இடமென்பது மிகக்குறைவு, அப்படியே இருந்தாலும் ஒரிரு பெண்களை மட்டுமே அவை கொண்டாடுகின்றன. நான் இங்கு சொல்ல வருவது அதையும் தாண்டியது.
J.R.R Tolkien இன் நூல்களில் (The Lord of Rings) பெண்களே இல்லை என்பதால் ஒதுக்கிவிடலாம் (ஐயோ இரண்டு மூன்று பேர் இருக்கிறார்களே என்று சொல்ல வேண்டும், அவர்கள் இருந்தும் கதைக்கு என்ன பயன்).
J.K. Rowling இன் நூலில் (Harry Potter) பெண்களுக்கு அதிக இடமுண்டு. ஆனால் கதையில் இரண்டு தோழிகளுக்கோ சகோதரிகளுக்கோ இடையேயான அன்பை, இணக்கத்தை அவர் காட்சிப்படுத்தவே இல்லை. தோழர்கள், சகோதரர்கள் என்றே தான் கதை முழுவதும் பரவிக் கிடக்கும். அதற்கும் மேலே சகோதரிகள் சண்டையிட்டுக் கொண்டே தான் இருப்பார்கள். Lily & Petunia, Lestrange சகோதரிகள் என பெண்கள் ஒருவருக்கு ஒருவர் பெரும்பாலும் எதிரணியிலேயே நிற்பார்கள். ஆனால் ஆண்களை மட்டும் கூட்டமாக இயங்கவல்லவர்களாகவும், சகோதரத்துவத்தைப் போற்றுபவர்களாகவுமே காட்டியிருப்பார்கள்.

George.R.R. Martin இன் நூல்களில் பெண்களுக்கு அதிக இடமுண்டும். (A song of Ice and Fire aka Game of Thrones) அனைத்து வகையான பெண்களும் இருப்பார்கள். ஆனாலும் அவர் கதையிலும் மேலே சொன்ன சிக்கல் சிலவிடங்களில் உண்டு தான். சகோதரிகளுக்குள் இணக்கம் இருக்காது, தோழிகளுக்கான இடமே இல்லை. இந்தக் கதை அமைந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு நிரந்தரத் தோழிகள் கிடைக்க மாட்டார்கள் தான், பெண்கள் எப்படி அதை இழக்கிறார்கள் என்ற காட்சிப்படுத்துவதால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சகோதரிகளிக்கு இடையேயான இணக்கம் ஏன் காட்டப்படவில்லை. Oberyn Martell இன் மகள்கள் இணக்கமாகவும், சேர்ந்து செயல்படுவது போலவும் தான் காட்சிகள் இருக்கும், ஐந்தாவது நூலில் தான் அவர்கள் கதை வருவதால் அடுத்த இரு நூல்கள் வெளி வந்ததும் படித்துவிட்டுத் தான் அதைப் பற்றி மேலே சொல்ல முடியும். தொலைக்காட்சித் தொடர் அவர்கள் கதையை ஓரங்கட்டிவிட்டது, பெண்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் இருக்கும் காட்சிகளே முக்கியத்துவம் பெற்றது.

Ursula Kroeber Le Guin இன் நூல்களில் பெண்கள் வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள், ஆனாலும் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கான இணக்கம் என்பது இடம்பெறவில்லை.

எனக்குத் தெரிந்து பெண்கள் சகோதரிகளாகவும், ஒருவரை ஒருவர் நம்புபவர்களாகவும், ஒருவருக்கு ஒருவர் உதவுபவர்களாகவும் காட்டப்பட்டது Robert Jordan இன் The wheel of time நூல்களில் மட்டும் தான்.

இவற்றை எழுதக்காரணம் ஒன்றே ஒன்று தான். மீண்டும் மீண்டும் கதைகளானாலும் சரி நாள்தோறும் நடக்கும் சிறு உரையாடல்களானாலும் சரி பெண்களுக்கு இடையிலான நட்பையும், சகோதரித்துவத்தையும்(!) ஓரங்கட்டிவதையும் சில சமயம் எள்ளி நகையாடுவதையும் பார்க்க முடியும். இரண்டு பெண்கள் சேர்ந்தாலே குழாயடிச் சண்டை போடுவார்கள், புறம் பேசுபவர்கள், இணக்கமாக இருக்க மாட்டார்கள், 'என்னத்த பெருசா' என்பன போன்ற கருத்தாக்கங்களை மீண்டும் மீண்டும் பரப்பி பெண்கள் சகோதரிகளாகவும் தோழிகளாகவும் இணைந்து செயல்படவிடாமல் பார்த்துக் கொள்வது ஏற்புடையது அல்ல. இவற்றை நாம் கடந்தே ஆக வேண்டும்.

பெண்களுக்கு தோளுக்கு தோளாக நிற்கும் அனைத்துப் பெண்களுக்கும் என் பெண்கள் தின நல்வாழ்த்துகள் ❤️❤️

Monday, 11 February 2019

செந்தோட்பருந்து Red-shouldered Hawk.

எங்கள் மாநிலத்தில் அதிகம் காணப்படும் இரையாடி இது எனலாம். 20 நிமிடங்கள் பறவை பார்க்க வெளியே சென்றாலும் இதைப் பார்க்காமல் வீடு திரும்ப மாட்டோம் என்னும் அளவிற்கு இப்பறவை மேரிலாந்தில் நிறைந்திருக்கிறது. பொதுவாகவே வட அமெரிக்கா முழுவதுமே காணப்படும் பறவை தான் இது. 

எங்கள் குடியிருப்புப் பகுதியில் இரண்டு செந்தோட்பருந்துகள் இருக்கின்றன. பெரும்பாலும் சிறு பாலூட்டிகளையும் தவளைகளையுமே உண்டு வாழ்ந்தாலும் இவை அவ்வப்பொழுது சிறு பறவைகளையும் வேட்டையாடுவதால் பலருக்கும் இவற்றைப் பிடிப்பதில்லை.

முன்னர் அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே வாழ்ந்து வந்த பறவையினமாகினும் தற்பொழுது நகரமயமாதலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு, மரங்கள் நிறைந்த புறநகர்ப்பகுதிகளை தன் வாழிடமாக மாற்றிக் கொண்டிருக்கிறது இப்பருந்து. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாலையோரத்தில் இவை தென்படுவதில்லை.

இதற்குப் பாடும் பருந்து என்னும் பெயரும் உண்டு. காரணம் இனப்பெருக்க காலத்தில் இவை எழுப்பும் ஒலி மிகவும் பெயர்போனது.

எனது வீட்டிற்கு அருகே இருக்கும் பூங்காவில் பார்த்த செந்தோட்பருந்தின் படம் இது.

Feb 03,2019
செந்தோட்பருந்து Red-shouldered Hawk.

Wednesday, 19 December 2018

கலாயோப்பி ஓசனிச்சிட்டு - Calliope Hummingbird

வட அமெரிக்காவில் பலவகை ஓசனிச்சிட்டுகள் வாழ்கின்றன. அவையெல்லாமே குளிர்காலத்தில் தெற்கே வலசை போய்விடும். அக்டோபர் மாதத்தில் வீட்டில் பறவைக்குத் தீணி வைப்பவர்கள் எல்லாம் ஓசனிச்சிட்டுகளுக்கு வைத்த குடுவைகளை மனமில்லாமல் எடுத்து உள்ளே வைத்துவிடுவார்கள். சிலர் மேலும் இரண்டு வாரம் வெளியே வைத்து ஏதேனும் ஓசனிச்சிட்டு இன்னும் பொட்டியைக் கட்டாமல் சுற்றிக் கொண்டிருக்கிறதா என்ற நப்பாசையில் காத்துக் கொண்டிருப்பர். குளிர் அதிகமாக அதிகமாக குடுவை விரிசல் விட்டுவிடும் அபாயமும் இருப்பதால் ஒரு கட்டத்தில் வேறு வழியேயில்லாமல் குடுவையை அகற்றிவிடுவர். 

இப்படியெல்லாம் இருக்க திசம்பர் மாதத்தில் ஒற்றை ஓசனிச்சிட்டு மட்டும் மேரிலாந்தில் ஒருவரின் வீட்டுப் பின்புறத்தில் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றால் வியப்பு தானே? நிற்க. அதைவிட வியப்பு என்னவென்றால் இது வட அமெரிக்காவின் மேற்குக் கரையோர மாகாணாஙகளில் மட்டுமே காணப்படும் ஓர் ஓசனிச்சிட்டு. வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரம் உள்ள மாகாணாத்தில் அதுவும் திசம்பர் மாதக் கடுங்குளிரில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

வட அமெரிக்காவின் மேற்கில் இருந்து தெற்கே கிளம்பிய இந்த ஓசனிச்சிட்டு வழி தவறி மேரிலாந்திற்கு வந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்னர் வெளியே தொங்கிய குடுவையில் இந்த ஓசனிச்சிட்டு உணவருந்திக் கொண்டிருந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளருக்கு ஒரே வியப்பு. என்ன ஏதேன்று பார்த்து பறவையாளார்களை அழைத்துக் காட்டி, அதை கலாயோப்பி ஓசனிச்சிட்டு தான் என்று உறுதி செய்திருக்கின்றர். இது போல ஓசனிச்சிட்டுகள் வழிதவறி மேரிலாந்து வருவது இது ஆறாவது முறை. 

இந்தச் செய்தி பரவியதும் நியூயார்க்கு, ஜார்கியா என பல்வேறு மாநிலங்களில் பறவையார்வலர்களும் பார்வையாளர்களும் அந்த வீட்டுக்குப் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். என்னடா ஒற்றைப் பறவைக்காக இவ்வளவு தொலைவிலிருந்து வருகிறார்களே என்று வியந்த வீட்டு உரிமையாளர், வருபவர்களையும் வரவேற்று பறவையை காத்திருந்து பார்க்க அனுமதிக்கின்றனர். 




















Calliope Hummingbird
கலாயோப்பி ஓசனிச்சிட்டு
18 Dec 2018
Anne Arundel, Maryland.

நாமும் பறவையார்வலர் ஆயிற்றே, பார்க்காமல் இருக்க முடியுமா? கிளம்பிச்சென்ற கிளிக்கிவிட்டு வந்த படமிது. உங்களுக்கும் செல்லவிருப்பமென்றால் கிழே உள்ள இணைப்பில் இருக்கும் குழுவில் சேர்ந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

https://www.facebook.com/groups/2265553710368336/

Monday, 3 December 2018

வெண்டலைக் கழுகு.

வெண்டலைக் கழுகு.
Bald Eagle

என்னடா தலை வெள்ளையாகவே இல்லை, இதற்குப் போய் வெண்டலைக் கழுகு என்று பெயர் வைத்திருக்கிறார்களே என்று சிந்திக்கிறீர்களா? இது இன்னும் வயது வராத கழுகு. வெள்ளைத் தலையோடு ஒய்யாரமாக அமெரிக்க நாட்டின் சின்னமாக இருக்கும் வெண்டலைக் கழுகு முதல் நான்கு ஆண்டுகள் இப்படித் தான் இருக்கும். சென்ற நூற்றாண்டில் இப்படி வயது வராமல் வெண்டலையில்லாமல் இருந்த கழுகுகளைத் தனியொரு பறவையினம் என்று பலரும் நினைந்திருந்தனர்.

கானோவிங்கோ என்றொரு அணை மேரிலாந்தில் இருக்கிறது. அங்கே ஆண்டு முழுவதும் இந்த வெண்டலைகளைப் பார்க்கலாம். நவம்பர் மாதத்தில் கனடாவில் இருந்து வலசை போகும் வெண்டலைகளையும் இங்கே பார்க்கலாம். பொதுவாகவே 200 கழுகுகள் நவம்பர் மாதத்தில் அந்த அணையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும். இந்த ஆண்டு அடித்துப் பிடித்து அங்கே சென்றோம். ஆனால் இந்த ஆண்டோ அங்கே ஐம்பத்தி சொச்சம் கழுககள் தான் வலசை வந்திருந்தன. ஏன் என்ற காரணம் தெளிவாகத் தெரியவில்லை.




திரண்டு வரும் புகைப்படக்கலைஞர்களுக்கும் பறவை ஆர்வலர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றம் தந்தாலும், காண வந்தவர்களை ஏமாற்றாமல் காட்சி தந்தது இந்த அம்மணி மட்டும் தான். ஆம், அசுர வேட்டை நடத்தும் ஒரு இளம் வெண்டலை (பெட்டை என்பது கூடுதல் சிறப்பு). இவளுக்கு Scoter என்ற செல்லப்பெயர் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அரை மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் நின்று எதுவும் நடக்காததால் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். அடுத்த நிமிடமே சுற்றியிருந்தவர்கள் எல்லாம் பதற்றம் அடையவே என்ன என்று திரும்பிப்பார்த்தால் அம்மணி மீன் வேட்டையாடிக் கொண்டிருந்தார். மீனையும் பிடித்துவிட்டார், ஆனால் உடனே வேறொரு வெண்டலை அதனிடம் வழிப்பறி செய்ய முயன்றுகொண்டிருந்தது. பார்ப்பதா படம் எடுப்பதா என்று புரியாமல் இரண்டையும் கோட்டைவிட்டுவிட்டு, 'இதுக்கு தான் கொஞ்சமாச்சும் பொறும வேணும்' என்று எங்களை நாங்களே சபித்துக் கொண்டு, பக்கத்திலிருந்தவர்களின் புகைப்படங்களையெல்லாம் எட்டிப் பார்த்துக் கொண்டே நடக்கலானோம்.

வழியில் பார்த்தால் யாரையும் சட்டை செய்யாமல் அம்மணி வேட்டையாடிய மீனை உண்டுகொண்டிருந்தார். 'இப்பயாச்சும் ஒழுங்கா ஒரு படத்தை எடுத்துத் தொலை' என்பது போல என்னைப் பார்த்துவிட்டு பறந்துவிட்டாள்.

Conowingo Dam, MD.
Nov 17, 2018.

Wednesday, 28 November 2018

The Eye of the World நூல் விமர்சனம்

The Eye of the World by Robert Jordan.

சமீபத்தில் Mono myth, The Hero's journey வகைக் கதைகளின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு அவற்றைப்  படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரே வகைக் கதையைக் கதையை ஒவ்வொரு ஆசிரியரும் எப்படிக் கையாண்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த வாசிப்பு.

The Wheel of Time தொடரின் முதல் நூலை வாசித்து முடித்திருக்கிறேன். Tolkien (The Lord of the rings) எழுத்தின் தாக்கமும் உர்சுலாவின் (Earthsea series) எழுத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதே போல இந்த நூலின் தாக்கத்தை மார்ட்டினின் நூல்களிலும் (A song of ice and fire) ரவுலிங்கின் நூல்களிலும் (Harry Potter) பார்க்க முடிகிறது.

LOTR படித்தவர்களுக்குத் தெரியும் அந்த நூலைப் படிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று. அதே பொறுமையோடு தான் இந்த நூலையும் படிக்க முடியும். கிட்டத்தட்ட தொல்கீனின் கதைக்கு நிகரான கதைதான், தீயனவற்றை வெல்லப் போராடும் கூட்டத்தின் கதை. ஆனால் அவரைப் போல அல்லாமல் உர்சுலாவையும் மார்ட்டினையும் போல நன்மை தீமையை கருப்பு வெள்ளையாகக் காட்டாமல், எல்லா மனிதர்களுக்கும் உரிதாகக் காட்டியிருக்கிறார்.

அனைத்தையும் தாண்டி இந்த நூலில் என்னை ஈர்த்தது பெண்களுக்கு தரப்பட்ட இடம். தொல்கீனின் கதைகளில் பெண்களுக்குப் பெரிய இடமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மற்ற ஆசிரியர்களின் கதைகளிலுமே கூட ஓரிரு பெண்கள் தனித்துவம் பெறுவார்கள், மற்றபடி கதை நிகழும் அச்சமூகத்தில் பெண்களுக்கான அங்கீகாரம் என்று எதுவுமே இருக்காது.

ஆனால் இந்த நூல் அப்படியில்லை. பெண்களுக்கான இடம் இதில் முக்கியம் பெருகிறது. கதையில் சில தாய்வழிச் சமூகங்கள், அதாவது தாயிற்கு பின்னர் மகளுக்கு அரச கட்டில் கிடைக்கும்; சில சமூகங்களில் பெண்களும் போருக்குப் போவார்கள்;
கிட்டத்தட்ட கதையில் வரும் எல்லாச் சமூகங்களிலும் நாடுகளிலும் பெண்களுக்கு நிர்வாகத்தில் பங்குண்டு. சில சமயம் முடிவெடுக்கும் இடத்தில் ஆண்களை விட
தகுதிவாய்ந்த பெண்களே இருக்கிறார்கள்.

மிக சிக்கலான காலக் கட்டத்தில் ஒரு குழு துன்பமிகு பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்கள். அதில் ஒருவன் தான் விரும்பும் பெண்ணைப் பார்த்து 'நீ வர வேண்டாம்' என்கிறான். தான் விரும்பும் ஒருவன் அதைச் சொன்ன போதும் அப்பெண் கான்ணியமாக அதை மறுத்துவிட்டு 'என் பயணத்தை நான் தான் தீர்மானிக்க வேண்டும். நீயல்ல' என்கிறாள்.
'உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்' என்று அவன் சொல்லும் போதும் 'நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்' என்கிறாள்.

முதிர்ச்சியடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு மெல்லிய காதல். அவளோ நிமிர்ந்த நடையும் தெளிவும் கொண்ட பெண். ஒரு கட்டத்தில் அவளது காதலைத் தன் கண்ணியமும் தெளிவும் குறையாமல் விரும்பியவனிடம் சொல்கிறாள். அவனது சூழல் அவனால் அக்காதலை ஏற்கமுடியாது, அதனால் அவன் நிராகரிக்கிறான். ஆனால் அதையும் கூட அவளின் மதிப்பிற்கு இழுக்கு வாராமல் கண்ணியத்தோடே முடியாது என்கிறான்.
"I will hate the man you choose because he is not me, and love him if he makes you smile. No woman deserves the sure knowledge of widow's black as her brideprice, you least of all"

இது போன்ற mono myth கதைகளில் இதெல்லாம் வியப்பு தான். இந்த ஒற்றைக் காதலுக்காகவே இந்தத் தொடர் முழுவதும் படிப்பது என முடிவு செய்துவிட்டேன்.
கொஞ்சம் தேவையில்லாத வருணனைகளைக் குறைத்திருந்தால் இன்னும் நூல் அருமையாக இருந்திருக்கும்.
இருந்தாலும் பரவாயில்லை, கதையில் வரும் பெண்களுக்காக வாசிக்கலாம்.