Monday, 19 October 2015

சிலப்பதிகாரமும் குழந்தைகள் பெயர்களும்

சிலப்பதிகார நூலில் வரும் சொற்களையும் சொற்றொடர்களையும் வைத்து அமைக்கக்கூடிய பெயர்களை இங்கு தொகுத்துள்ளேன். விரும்பினால் தங்கள் குழந்தைக்கு இதில் ஏதேனுமொன்றை பெயராக சூட்டலாம். 

கண்ணகி
மாதவி
கோவலன்
திங்கள் செங்கதிர் திகழொளி பொழில் நன்மொழி வடிவேல் பஃறுளி தென்னவன் முதல்வன் பெருவளன் தென்னன் மாமறை காவிரி கண்மணி கொற்றவன் வெங்கதிர் வேந்தன் முல்லை குறிஞ்சி கோமான் பூங்கொடி அண்ணல் பொய்கை வெண்ணிலா பணிமொழி பாவை வேங்கை பூம்பொழில் மேரு இமயம் புகழுடை வடிவு மதி செவ்வேள் நித்திலம் கோதை அருந்ததி செம்பியன் கயமலர் மயன் ஆம்பல் தாமரை தாழை சண்பகம் தென்றல் வேனில் கதிர் மல்லிகை கோமான் சுடர் மஞ்ஞை அன்னம் பசுங்கிளி யாழ் குழல் அமிழ்து அகில் முத்து மணி அருள் கவி சித்திரன் எழினி பூங்கோதை பசும்பொன் விரிகதிர் அணிநிலா வெண்பிறை மேகலை சந்தனம் செழுமலர் பைந்தளிர் சந்தரம் திலகம் பால்நிழல் பூவிலை வெந்திறல் வெற்றி வெற்றிவேந்தன் திருமாவளவன் அவந்தி மரகதம் அரசு பண்யாழ் நன்மொழி திருமகள் செழும்பதி செழும்பரிதி பாரதி உமை இமயவன் செம்பொன் காந்தள் கரிகால்வளவன் மரகதமணி மணிக்காந்தள் வளன் வெண்மதி நிறைமதி நறுமலர் திருமொழி முழுமதி சோலைமயில் இளநகை வெய்யோன் பூங்கானல் நித்திலம் கதிரவன் புதுமதி நிறைநிலா செவ்வழி விளரி யாழ் யாழிசை வஞ்சி இளவேனில் மாரன் குயிலோன் மதுரம் கீதம் செங்கோல் வசந்தம் ஆயிழை செந்தாமரை வளவேல் மென்பூ மாலதி இளங்கொடி தேவந்தி மணிவண்ணன் பன்மலர் இலவந்திகை எயில் செம்மல் பொய்கை கடல்வளன் செங்கயல் ஒளியோன் இசைமொழி மேகலை நீலி வேங்கை அகமலர் பகலொளி பாற்கதிர் பைந்தளிர் பானிலா பார்மகள் கௌசிகன் தீதிலன் செழியன் பொற்கொடி மேலினி வெண்மழை செம்பொன் தகைமலர் நகுல் மாதரி செங்கயல் மெய்மொழி குழலி ஞாயில் கவின் அசோதை நம்பி கருண்மொழி பூங்கோதை வேம்பன் இந்திரன் இளங்கோ நாவலன் பாரரசு மாயவன் ஆயவன் வாழ்வேந்தன் பொன்னன் கோச்சேரன் வளவஞ்சி வாசுகி வானவன் பொழிகதிர் மறவேல் செம்பொற்கொடி கோப்பெருந்தேவி பொன்னி செழியன் கோமகள் மாமகள் நாமகள் வார்த்திகன் கார்த்திகை சங்கமன் பரதன் நெடுஞ்செழியன் எழில் சரவணம் வேலன் வெற்பன் மலைமகள் இமயவரம்பன் வினைஞர் சஞ்சயன் பாலகுமரன் கனகன் விசயன் உத்தரன் செங்குட்டுவன் சீவகர் இளவரசு நெடுமதி மீமிசை தண்மதி மகரக்கொடி உமையவள் உமையொருபாகன் அகப்பா பேரிசை ஆயிழை மேலும் தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர்களை பின்வரும் செய்யுள் வரிகளில் காணலாம். விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் றுனுத்தரன் சிவேதன் அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன் பொருளன் புனிதன் புராணன் புலவன் சினவரன் தேவன் சிவகதி நாயகன் பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன் தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன் குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள் விண்ணவன் வேத முதல்வன்....

Thursday, 27 August 2015

நான் ஏன் சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.

முன் குறிப்பு:
இதில் கீழ்சாதி மேல்சாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது சமூகத்தின் கண்ணோட்டத்திலே தான். என் பார்வையில் அல்ல.

சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு கீழ்சாதி பெண்ணொருவர் வந்திருந்தார். சிறுவயதில் இருந்து நெருக்கமானவர். பேசிக்கொண்டிருக்கும் போது அவர் கூறிய சில கருத்துக்கள் இன்னாளில் உற்று நோக்கத்தக்கவை.

1.  இவரது மகன் எட்டாவது படித்துக்கொண்டிருக்கிறான். பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது மேல்சாதிப்பையன் ஒருவனிடம் " அந்த பந்த எடுத்து போடுடா" என்றி கூறியிருக்கிறான். அதற்கு அந்த பையன் " டேய். நீ SC டா. நீ எப்படி என்ன டா போட்டு கூப்படலாம்?" என்று சண்டைபிடித்துள்ளான். அன்றிரவே அந்த மேல்சாதிப்பையனின் அப்பா இவர்களது வீட்டிற்கு சென்றிருக்கிறார். " என்னடா உன் பையனுக்கு மரியாதை சொல்லிக்கொடுத்து வளர்க்க மாட்டயா?" என்று மேல்சாதிக்காரர் கேட்க. " ஐயோ சாமி மன்னிச்சுடுங்க. சின்ன பையன் தெரியாம ஏதோ பேசிட்டான் " என்று இவர்கள் கெஞ்சி இருக்கிறார்கள். " ஏதோ உன் பையன்னு சும்மா போறேன்" என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். இதனை அவர் பரிதாபம் தேடிக்கொள்ள எங்களிடம் சொல்லவில்லை. " என் பையன் இப்படியே தினமும் வம்பு இழுத்துட்டு வராங்க. பாவம் எங்க ஊட்டுக்காரர். இவனால அவருக்கு பிரச்சனை. இப்பொழுது சொல்லுங்கள். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நீக்கும் அளவிற்கு அவர்களது வாழ்க்கையில் என்ன முன்னேற்றத்தை நீங்கள் கண்டீர்கள்? எட்டாம் வகுப்பு பையனுக்கு ஏற்பட்ட மன உளைச்சளுக்கு நீங்கள் தரும் நஷ்டயீடு என்ன? மேல்தட்டு வர்க்க குழ்ந்தைகள் சாதியினால் பாதிக்கபடவில்லை என்பதால் சாதியக்கொடுமைகள் இல்லையென்று ஆகிடுமா? கூனிக்குருகி நிற்கும் தன் அப்பாவை பார்த்து அந்த குழந்தையின் மனம் என்ன பாடுபடும்? இப்படி சமூகத்தில் எந்த சமவுருமையும் தரப்படாத ஒரு குழந்தையை தேர்வில் மட்டும் சமதளத்தில் போட்டியிடச்சொல்வது தான் நியாயமா?

2. இவர்களது வளவில் வீடு கட்டும் அளவிற்கு இடமில்லை. மேல்சாதிக்காரர் ஒருவர் அவரது நிலத்தை விற்பதாய் சொன்னதன் பேரில் அந்த இடத்திற்கு முன்பணம் கொடுத்திருக்கின்றனர். அந்த மேல்சாதிக்காரரின் உறவினர் ஒருவர் "கீழ்சாதிக்காரன கொண்டு வந்து குடிவச்சா நாங்க எல்லாம் காட்டுல விவசாயம் செய்ய வேணாமா?" என்று சண்டையிழுத்ததில் அந்த இடவிவகாரமும் முடங்கிவிட்டது. தன் உழைப்பால் சேமித்த பணத்தைக்கொட்டி வாங்க நினைத்தால் அவர்களுக்கு இடம் தர ஆளில்லை. இது தான் சிறு நகரங்களின் இன்றைய நிலை. சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரித்தும் பேசி வரும் அன்பு நெஞ்சங்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? சாதியைக்காட்டி பொருளாதார முன்னேற்றம் அடைவதையும் நம் சமூகம் தடைபோட்டுக்கொண்டே வருகிறது. "பணக்கார வீட்டு பையன் எல்லாம் சாதி அடிப்படையில் சீட்டு வாங்கறான்" என்ற வாதத்தை முன்னெடுக்காதீர்கள். பணக்கார தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் விழுக்காடு மிக மிகக் குறைவு. அந்த ஒன்று இரண்டு விழுக்காட்டு மக்களுக்காக பெரும்பான்மை சமூகத்தை முன்னேற்றம் அடையவிடாமல் தடுப்பது சரியில்லை. நெல்லுக்கு விட்ட நீர் புல்லுக்கும் கொஞ்சம் பாய்ந்துவிட்டுப்போகிறது.

3. " இப்ப பனியன் கம்பெனிக்கு தாங்க வேலைக்கு போறேன். அங்க பெரிய மேனேஜர் கூட குட் மார்னிங் சொல்லுவாங்க. இனிமேல் காட்டு வேலைக்கு போறதில்லைனு முடிவு பண்ணிட்டேன்". என்னதான் தனியார் நிறுவனங்களை பழித்தாலும் சாதிய தட்டுகளைத்தாண்ட அவை வழிவகுக்கின்றன. இப்படிப்பட்ட சமத்துவம் எல்லா இடங்களிலும் இருக்குமாயின் அடுத்த தலைமுறையில் இடஒதுக்கீட்டை எதிர்க்கலாம். சாதியை ஒழிக்காமல் சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மட்டும் எதிர்ப்பது உண்மையில் மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் சாதிய வன்மத்தைத்தான் காட்டுகிறது. " நான் எல்லாம் பெரிசா படிச்சு கூகுள் CEO ஆகியிருக்க வேண்டியவன். பாழாப்போன இடஒதுக்கீட்டால தான் இப்படி இருக்கேன்" என்று சொல்லி போன தலைமுறையின் சாதியப்பெருமையை இப்பொழுது வெட்டிப்பெருமையாய் காட்டிக்கொண்டு இடஒதுக்கீட்டை எதிர்க்கவேண்டியதில்லை.

போன தலைமுறைகளில் சாதிய கொடுமைகளை அனுபவிக்காமல், இப்பொழுது தங்களை பிற்படுத்தபட்ட சாதிகளாக அறிவித்துக்கொண்டு இடஒதுக்கீட்டை உருசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீட்டை நான் ஆதரிக்கவில்லை. இன்றும் சாலையில் குப்பை அள்ளும் மக்களின் சாதியைக்கேட்டுப்பாருங்கள். பின்னர் அவர்களுக்கான இடஒதுக்கீடு அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுமா இல்லையா என்று சிந்தனை செய்து சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டிற்கு உங்களது எதிர்ப்பை எடுத்துவையுங்கள். 

Monday, 17 August 2015

அட்டாலி

காலை திடீரென்று கோபத்தில் ஒரு சொற்றொடர் நினைவிற்கு வந்தது. " உனக்கு எல்லாம் கொஞ்சம் செல்லம் கொடுத்தா, போய் அட்டாலில உக்காந்துப்ப". முன்னர் ஒருமுறை "வைதல் பாட்டு" என்று இதுபோன்ற சொற்றொடர்களை ஒரு பதிவாக எழுதிய நினைவு வந்தது. அதில் இத்தொடர் விடுபட்டுவிட்டது. அது என்ன அட்டாலி?

"பரண்" இதைத்தான் எங்கள் ஊரில் அட்டாலி என்பார்கள். வேண்டிய வேண்டாத பொருட்களையெல்லாம் போட்டுவைக்கும் இடம்.

"கொஞ்சம் இடம் குடுத்தா தலைல உக்காந்துக்காதா" என்பார்களே, அதே பொருள் கொண்ட தொடர் தான் இது. 

Monday, 18 May 2015

இதோ! இதோ! மழை!

மழைத்துளி விழுகுதே, மங்குல் ஒழுகுதோ? கானெல்லாம் கருகுதே, கங்குல் பெருகுதோ?

பெயல் ஓய்ந்து வெயில் ஓங்குமோ?


















இதோ! இதோ!

கழையின் கானம்

கவிதையாய் இசைக்குதே!
உந்தூழ் குழலொலி
உயிரை அசைக்குதே!



இதோ! இதோ! காரும் முடியுதே! காரிருள் மடியுதே! கவலைகள் வடியுதே! கனவுகள் விடியுதே!























சொற்பொருள்: மங்குல்- மேகம் கங்குல்- இருள் கான்- காடு பெயல்- மழை கழை- மூங்கில் உந்தூழ்- மூங்கில் கார்- கார்காலம்.

படங்கள்- இணையம். கவிதை- நான்

Sunday, 10 May 2015

இந்தியாவின் மகள்

"இந்தியாவின் மகள்" (India's daughter) விளக்கப்படம் ஒரு சிறிதளவும் வியப்பளிக்கவில்லை. அதில் பேசிய வழக்கறிஞர்களின் வாதம் தானே நம் ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டு மனசாட்சி. 2012இல் நிர்பயா நிகழ்வை தொடர்ந்து வந்த வானொலி நிகழ்ச்சிகளில் பேசிய மக்களின் வாதங்கள் முகேசின் வாதங்களுக்கு கொஞ்சமும் குறையாதவை. "பெண்கள் எப்படி உடையணிய வேண்டும், மகள்களைப்பெற்ற அப்பாக்கள் எப்படி பொறுப்பின்மையோடு நடந்து கொள்கிறார்கள்" என்று பேசிவிட்டு கூடவே "அந்த 6 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுக்கனும் சார்" என்று பேசி ஓய்ந்தார்கள். பேசியவர்கள் அனைவரும் இந்த சமூகத்தின் மகள்களும் மகன்களும் தான்.
அதில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நான் பேசியதாவது : "இது அந்த 6 பேரின் தவறோ, பெண்ணின் தவறோ இல்லை. ஒட்டு மொத்த சமூகத்தின் தவறு. குழந்தைகளை வளர்க்கும் போது 'பொண்ணுன இப்படி இருக்கனும். பையன்னா இப்படித்தான் இருக்கனும்' என்று சொல்வதில் தொடங்கும் சிக்கல் இது. "நீ ஆண் எப்படி வேண்டுமானலும் இருக்கலாம்" என்று சொல்லிக்கொடுத்துவிட்டு பின்னாளில் அவர்கள் செய்யும் குற்றத்திற்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைப்பது முற்றிலும் முரண்பட்ட செயல். ஒரு ஆணுக்குள் இருக்கும் மொத்த பெண்மைத்தன்மையையும் சிறு வயதிலேயே பேசி, திட்டி, கேலி செய்து கொன்றுவிட்டு பின்னாளில் பெண்களுக்கு ஆண்களால் தொல்லை என்று சொல்வதும் நியாயமில்லை. மனநிலை மாற்றம் தேவை. அது வீட்டிலும் பள்ளியிலும் தொடங்க வேண்டும்."
இவ்வாறெல்லாம் பேசிய போது நிகழ்ச்சி நடத்தியவர் ஒன்றுமே பதில் பேசவில்லை. எனக்கு அடுத்து பேசிய ஒரு 50 வயது அம்மாள் எனக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். இவர்கள் தானே இந்தியாவின் சராசரி அம்மாக்கள்? இவர்களிடமிருந்தே சிக்கலான மனநிலை தொடங்கும் போது முகேசிடம் வேறு என்ன மனநிலையை எதிர்பார்க்க முடியும்.
"women are so precious" என்று சொல்லும் பலராலும் " men and women are equal" என்று சொல்ல முடிவதில்லை.
"women are so special" என்று சொல்லி பத்து ரூபாய்க்கு மிட்டாய் கொடுத்து பெண்கள் நாள் கொண்டாடுவதோடு முடித்துக்கொள்கிறார்கள்.
யாரும் இங்கு சிறந்தவர்கள் இல்லை; யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை; இதெல்லாம் என்று புரிந்துகொள்ளப்படும்?
ஆண்மை என்பதற்கு மறமும் பலமும் தான் பொருள் என்றால் அது பெண்களிடம் இல்லையா?
பெண்மை என்பதற்கான பொருள் மென்மையும், இரக்கமும் என்றால் அது ஆண்களிடம் இல்லையா?
மனதளவில் அனைவருக்கும் பொதுவான இயல்புகளைக்கொன்றுவிட்டு இதுதான் எங்களது பண்பாடு என்று கண்டதையும் கட்டிக்கொண்டு அழுவதில் பயன் என்ன?
பெண்மை என்பதற்கு மென்மை, தாயுள்ளம், அன்பு எனப்பொருள் கொண்டு அக்குணங்கள் பெற்ற அனைவருக்கும் எனது "பெண்கள் நாள் நல்வாழ்த்துக்கள்."
(மார்ச் 08 2015)

என் மேல் நீ கொண்ட காதல்!!!


என்னைப் பார்க்கும் போதுஉன்
தும்பி விழிகள் இரண்டும்
தூங்கா விழிகளாய் இன்னும் 
கொஞ்சம் விரிகிற போது தெரிகிறதடி
என் மேல் நீ கொண்ட காதல்!!!

(மார்ச் 15 2015)

Wednesday, 14 January 2015

நத்த மண்டலம்: (நெத்த மண்டலம் (அ) இரத்த மண்டலம்)

நத்த மண்டலம்: (நெத்த மண்டலம் (அ) இரத்த மண்டலம்)

வேறொரு திரியில் ஐயா செ. இரா. செல்வக்குமார் அவர்கள் எழுதிய பின்னூட்டத்தைத்தொடர்ந்து நத்த மண்டலம் என்றால் என்னவென்று தேடினேன்.
நத்த மண்டலம் என்பது பாம்பு வகையாம்; விரல் அளவு தடித்து இருக்குமாம்; நல்ல நிறமுடையவர்கள் உள்ளங்கை சிவந்தால் இருக்கும் நிறமாக இருக்குமாம்; "சுண்டுனா ரத்தம் வர அளவுக்கு சிவப்பு" என்று சொல்லும் நிறம் என்றார்கள். சிலர் அது ஒரு சான் தான் வளரும் என்கிறார்கள். ஓரிருவர் அது ஒரு அடி கூட வளரும் என்கிறார்கள். நச்சு தன்மை இருக்கும் பாம்பு. இரண்டாக வெட்டினால் கூட உயிர் போக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளுமாம். சற்று அதிகம் கண்ணில் படாத பாம்பு என்றே சொல்கின்றனர். அதன் மேல் மெலிதாக கறுப்பிலும் வெள்ளையிலும் வரிகள் இருக்கும். பார்க்க மண்டலம் மண்டலமாக தெரிவதால் தான் அதற்கு நத்த மண்டலம் என்று பெயர்.

இது எவ்வகைப்பாம்பு என்று தெரியவில்லை. பார்த்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.

மேலும் கேரளத்தில் கட்டுவிரியனை மண்டலி என்கிறார்கள். கன்னடத்தில் "கொளத்த மண்டலா" என்று ஒரு பாம்பைக்குறிப்பிடுகின்றனர். அது கடித்தால் தசை அழுகிவிடும், பாம்பின் தோலில் மண்டலம் மண்டலமாகத்தெரியும் அதனால் தான் அதற்கு அப்பெயர் என்று கேள்விப்பட்டேன். அது என்ன பாம்பு என்று சரியாகத்தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.