Thursday, 27 August 2015

நான் ஏன் சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறேன்.

முன் குறிப்பு:
இதில் கீழ்சாதி மேல்சாதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது சமூகத்தின் கண்ணோட்டத்திலே தான். என் பார்வையில் அல்ல.

சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு கீழ்சாதி பெண்ணொருவர் வந்திருந்தார். சிறுவயதில் இருந்து நெருக்கமானவர். பேசிக்கொண்டிருக்கும் போது அவர் கூறிய சில கருத்துக்கள் இன்னாளில் உற்று நோக்கத்தக்கவை.

1.  இவரது மகன் எட்டாவது படித்துக்கொண்டிருக்கிறான். பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடும் போது மேல்சாதிப்பையன் ஒருவனிடம் " அந்த பந்த எடுத்து போடுடா" என்றி கூறியிருக்கிறான். அதற்கு அந்த பையன் " டேய். நீ SC டா. நீ எப்படி என்ன டா போட்டு கூப்படலாம்?" என்று சண்டைபிடித்துள்ளான். அன்றிரவே அந்த மேல்சாதிப்பையனின் அப்பா இவர்களது வீட்டிற்கு சென்றிருக்கிறார். " என்னடா உன் பையனுக்கு மரியாதை சொல்லிக்கொடுத்து வளர்க்க மாட்டயா?" என்று மேல்சாதிக்காரர் கேட்க. " ஐயோ சாமி மன்னிச்சுடுங்க. சின்ன பையன் தெரியாம ஏதோ பேசிட்டான் " என்று இவர்கள் கெஞ்சி இருக்கிறார்கள். " ஏதோ உன் பையன்னு சும்மா போறேன்" என்று மிரட்டிவிட்டு சென்றிருக்கிறார். இதனை அவர் பரிதாபம் தேடிக்கொள்ள எங்களிடம் சொல்லவில்லை. " என் பையன் இப்படியே தினமும் வம்பு இழுத்துட்டு வராங்க. பாவம் எங்க ஊட்டுக்காரர். இவனால அவருக்கு பிரச்சனை. இப்பொழுது சொல்லுங்கள். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நீக்கும் அளவிற்கு அவர்களது வாழ்க்கையில் என்ன முன்னேற்றத்தை நீங்கள் கண்டீர்கள்? எட்டாம் வகுப்பு பையனுக்கு ஏற்பட்ட மன உளைச்சளுக்கு நீங்கள் தரும் நஷ்டயீடு என்ன? மேல்தட்டு வர்க்க குழ்ந்தைகள் சாதியினால் பாதிக்கபடவில்லை என்பதால் சாதியக்கொடுமைகள் இல்லையென்று ஆகிடுமா? கூனிக்குருகி நிற்கும் தன் அப்பாவை பார்த்து அந்த குழந்தையின் மனம் என்ன பாடுபடும்? இப்படி சமூகத்தில் எந்த சமவுருமையும் தரப்படாத ஒரு குழந்தையை தேர்வில் மட்டும் சமதளத்தில் போட்டியிடச்சொல்வது தான் நியாயமா?

2. இவர்களது வளவில் வீடு கட்டும் அளவிற்கு இடமில்லை. மேல்சாதிக்காரர் ஒருவர் அவரது நிலத்தை விற்பதாய் சொன்னதன் பேரில் அந்த இடத்திற்கு முன்பணம் கொடுத்திருக்கின்றனர். அந்த மேல்சாதிக்காரரின் உறவினர் ஒருவர் "கீழ்சாதிக்காரன கொண்டு வந்து குடிவச்சா நாங்க எல்லாம் காட்டுல விவசாயம் செய்ய வேணாமா?" என்று சண்டையிழுத்ததில் அந்த இடவிவகாரமும் முடங்கிவிட்டது. தன் உழைப்பால் சேமித்த பணத்தைக்கொட்டி வாங்க நினைத்தால் அவர்களுக்கு இடம் தர ஆளில்லை. இது தான் சிறு நகரங்களின் இன்றைய நிலை. சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்தும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரித்தும் பேசி வரும் அன்பு நெஞ்சங்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? சாதியைக்காட்டி பொருளாதார முன்னேற்றம் அடைவதையும் நம் சமூகம் தடைபோட்டுக்கொண்டே வருகிறது. "பணக்கார வீட்டு பையன் எல்லாம் சாதி அடிப்படையில் சீட்டு வாங்கறான்" என்ற வாதத்தை முன்னெடுக்காதீர்கள். பணக்கார தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் விழுக்காடு மிக மிகக் குறைவு. அந்த ஒன்று இரண்டு விழுக்காட்டு மக்களுக்காக பெரும்பான்மை சமூகத்தை முன்னேற்றம் அடையவிடாமல் தடுப்பது சரியில்லை. நெல்லுக்கு விட்ட நீர் புல்லுக்கும் கொஞ்சம் பாய்ந்துவிட்டுப்போகிறது.

3. " இப்ப பனியன் கம்பெனிக்கு தாங்க வேலைக்கு போறேன். அங்க பெரிய மேனேஜர் கூட குட் மார்னிங் சொல்லுவாங்க. இனிமேல் காட்டு வேலைக்கு போறதில்லைனு முடிவு பண்ணிட்டேன்". என்னதான் தனியார் நிறுவனங்களை பழித்தாலும் சாதிய தட்டுகளைத்தாண்ட அவை வழிவகுக்கின்றன. இப்படிப்பட்ட சமத்துவம் எல்லா இடங்களிலும் இருக்குமாயின் அடுத்த தலைமுறையில் இடஒதுக்கீட்டை எதிர்க்கலாம். சாதியை ஒழிக்காமல் சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மட்டும் எதிர்ப்பது உண்மையில் மனிதனின் ஆழ்மனதில் இருக்கும் சாதிய வன்மத்தைத்தான் காட்டுகிறது. " நான் எல்லாம் பெரிசா படிச்சு கூகுள் CEO ஆகியிருக்க வேண்டியவன். பாழாப்போன இடஒதுக்கீட்டால தான் இப்படி இருக்கேன்" என்று சொல்லி போன தலைமுறையின் சாதியப்பெருமையை இப்பொழுது வெட்டிப்பெருமையாய் காட்டிக்கொண்டு இடஒதுக்கீட்டை எதிர்க்கவேண்டியதில்லை.

போன தலைமுறைகளில் சாதிய கொடுமைகளை அனுபவிக்காமல், இப்பொழுது தங்களை பிற்படுத்தபட்ட சாதிகளாக அறிவித்துக்கொண்டு இடஒதுக்கீட்டை உருசிக்கும் மக்களுக்கு கிடைக்கும் இடஒதுக்கீட்டை நான் ஆதரிக்கவில்லை. இன்றும் சாலையில் குப்பை அள்ளும் மக்களின் சாதியைக்கேட்டுப்பாருங்கள். பின்னர் அவர்களுக்கான இடஒதுக்கீடு அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுமா இல்லையா என்று சிந்தனை செய்து சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டிற்கு உங்களது எதிர்ப்பை எடுத்துவையுங்கள். 

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இன்னும் சாதி பிரிவினை தமிழகத்தில் மேலோங்கி இருப்பது வேதனை தருகிறது.பிறப்பால் ஒன்றுபட்ட மனிதர்களை ஏன் குலத்தால் வெறுக்கிறார்கள் என்று புரியவில்லை.....
    ஆனால் கல்வியில் இட.ஒதுக்கீடு வழங்குவது சரியல்ல....
    சாதிகள் இல்லையென போதித்துவிட்டு அவர்களுக்குள் இடஒதுக்கீ ட அறிமுகப்படுத்தும் போது அது அவர்களுக்குள்ளேயே ஒரு முரணை தோற்றுவித்து விடுகிறது.ஏற்கனவே கல்வியின் தரம் கேள்விக்குறி ஆனது, இத்தக ய முரண்களால் அவை தெளிவாக வெளிப்படுத்தப்படுகின்றன :(

    ReplyDelete