Friday 3 February 2017

கடவுளர் எத்தனை பேர்?

அண்ணன் இராஜராஜன் இப்படி ஒரு கேள்வியை பதிவிட்டிருந்தார். நியாயமான கேள்வி. ஆமாம் கடவுளர் எத்தனை பேர்?
கொஞ்ச நூற்றாண்டுகள் வரை "நீ பெருசா நான் பெருசா" என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மதங்கள் சைவமும், வைணவமும். மகாபாரத இராமாயணக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு தோன்றியது ஒன்று தான், இரு கதைகளிலும் சிவ வழிபாடு செய்யப்பட்டவர்கள் அரக்கர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். இறுதியில் காக்கும் கடவுள் விஷ்ணு வெல்கிறார். ஆனால் இன்று இந்த இரண்டு மதங்களையும் ஒற்றைக் குடையின் கீழ் அடக்கிவிட்டார்கள். கூடவே, மழை கொடுத்த மாரி, மக்களைக் காத்த காளி என அனைவருக்கும் இந்து மதத்தில் அக்கா, தங்கை, பெரியம்மா என்று பதவிகள் கொடுத்துவிட்டனர். எங்கள் குலதெய்வக்கோவில் புனரமைக்கப்பட்ட பின் ஆங்காங்கே முளைத்தது விஷ்ணு பிரம்மா சிலைகள். அப்பொழுது புரிந்தது எனக்கு, நான் எப்படி இந்துவாக மதம் மாற்றப்பட்டேன் என்று. கூடவே போனால் போகுது என்று வீரப்புச்சி எங்க அப்புச்சி என்று இருந்த மூதாதையர் சிலைகளும் இந்துவாக மதம் மாற்றப்பட்டனர். ஆக ஒதுக்கி வைக்கப்பட்ட நாட்டார் மக்களின் தெய்வங்களும் இந்து மதத்தில். அது மட்டுமா, பௌத்த மத இசக்கிகளையும் சேர்த்துக்கொண்டார்கள், அவ்வளவு ஏன் புத்தனே இந்து தான், விஷ்ணுவின் அவதாரம் தான் என்று சொல்லும் கூட்டமும் உண்டு. இன்னும் ஒருபடி மேலே சென்று ஏசு தான் கிருட்டிணன் என்பாரும் உளர். கிரேக்கத்தில் இருந்தது இந்து மதம் என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால், கடவுளர் எத்தனை பேர் இருந்தால் என்ன அவர்கள் அனைவருக்கும் இந்து மதத்தில் இடமுண்டு. முப்பது முக்கோடி தேவர் தொடங்கி, ஐயனார் புத்தர் வரை அனைவருக்கும் இடமுண்டு. அமெரிக்கா போல் விசா பிரச்சனை எல்லாம் வராது. இந்து மதத்தில் நாத்திகருக்கே இடமுண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது ரொம்ப நல்லா இருக்கே என்று நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. என்ன தான் அனைவரையும் உள்ளிழுத்துக்கொண்டாலும் இங்கே அனைவரும் சமம் இல்லை. இந்து மதத்தின் வேத நூலாக பல இந்துக்களால் கொண்டாடப்படும் நூல்களில் அவற்றிற்கு இடமில்லை. நீங்கள் சிலரைவிட கொஞ்சம் என்ன ரொம்பவே கீழே தான் இருக்க வேண்டும்.

பி.கு: கடவுள் எத்தனை பேர் என்ற தர்க்க/ அறிவியல் ரீதியான கருத்துக்களை  நான் முன்வைக்கவேயில்லை. அதற்கு கடவுள் யார் என்ற கேள்வி வரும். ஆனால் கடவுள் எத்தனை பேரானாலும் அவர்களுக்கு இங்கே இடமுண்டு.   I swear upon all old Gods, New Gods, the Seven, Red God, Drowned god, Deep ones and more.... :P

No comments:

Post a Comment