Sunday 15 June 2014

'யாளி' நூல் - படித்ததும் அதை நான் வெறுத்தமும்

எனக்கு யாளி மேல் தீராத ஒரு பாசம். கோவிலுக்குச் சென்றால் அதை மட்டும் தான் பார்த்து இரசிப்பேன். யாளி பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது 2010 ல் வெளியான இந்த நூல் என் கண்ணில் பட்டது. அன்றிலிருந்து
மூன்று ஆண்டுகளாக இந்த நூலை படிக்க எண்ணியிருந்தேன். ஏதோ ஒரு தளத்தில் இதுக் கற்பனை வளம் மிகுந்த நூல் என்றும் Harry Potter, Lord of the Rings போன்ற நூல்களுக்கு ஒத்தது என்று விமர்சனம் எழுதியிருப்பதைப் படித்தேன். இந்த மாதம் தான் இணையதளத்தில் இந்த நூல் இருந்தது கண்டு உடனே வாங்கினேன். பெருத்த ஏமாற்றம். நூலைப் பற்றி நீண்ட நெடிய குறைக் கடிதம் எழுத வேண்டும்.

ஏன் தான் இப்படி இத்தனை பிழைகளோடு நூல் எழுதியுள்ளாரோ தெரியவில்லை.. அச்சிடும் முன்பு ஒரு தமிழ் ஆசிரியரிடம் கொடுத்துச் சரி பார்க்கவாவது செய்திருக்கலாம். ஒரு சிவப்பு மை பேனா கொண்டு நூலில் உள்ள எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை, கருத்துப் பிழை ஆகியவற்றைக் கோடிட்டு நூலாசிரியருக்கே அனுப்ப வேண்டும் போலுள்ளது. அடேங்கப்பா பிழைகளைக் குறித்து வைத்துக்கொண்டே வந்தால் ஒரு நூலே வெளியிடலாம் போல. திரு. மணி தணிகை குமார் B.E. !!! நீங்கள் முன்னுரையில் தங்களுக்கு மொழி அறிவும் எழுத்துப் பயிற்சியும் இல்லை என்று குறிப்பிட்டுருக்கத் தேவையேயில்லை. தங்களின் நூலைப் படிக்கும் போது எங்களுக்கே தெரிகிறது. அனைத்துப் பிழைகளையும் ஏற்றுக் கொள்ளலம், ஆனால் 'தென்னை சோலை' என்று எழுதியதைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 ஓரிரு ஒற்றுப் பிழைகள் அச்சுப்பிழைகளை ஏற்றுக்கொள்ளலாம், தவறுவது இயல்பு. ஆனால் இந்த நூல் முழுமையும் பிழை மயம். இலக்கணப் பிழைகளைக் குறித்து வைக்க ஆரம்பித்தேன் ஆனால் எரிச்சல் அடைந்து விட்டுவிட்டேன். எவ்வளவு குறிப்பு தான் எடுப்பது. இத்தனைக்கும் இது இரண்டாம் பதிப்பு. யாருமே இவருக்குப் பிழைகள் குறித்துக் கடிதம் எழுதவில்லை போலும். " அவைகள், இவைகள்" போன்ற இலக்கணப் பிழை. சரி இவருக்குத் தமிழ் எழுதத் தான் வரவில்லை என்றால் தமிழ் வரலாறும் தெரியவில்லை. "கடல் கடந்து சென்ற ஒரே மன்னன் இராஜராஜன் " என்று எழுதியுள்ளார். இராஜேந்திர சோழனை எங்கு கொண்டு போய்ச்$ சேர்ப்பாரோ தெரியவில்லை. தனக்குத் துளியும் தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் எழுதியுள்ளார். பக்கங்களை அதிகரிக்கச் செய்த செயலா இல்லை இப்படித் தமிழர் பெருமையைப் பற்றி அடித்துவிட்டால் மக்கள் நூலை ஆகா ஓகோ என்று புகழ்வார்கள் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு நூல் எழுதும் முன் கொஞ்சமேனும் ஆராய்ந்துவிட்டு எழுதியிருக்கலாம்.

அனைத்தும் அரைகுறை ஆராய்ச்சி. யாளியின் முன்னங்கால் சிறிது என்று சொல்லும் கருத்து தொடங்கி அனைத்திலும் சொதப்பிவிட்டுருக்கிறார். தான் பார்த்த பத்துக் கோவிலை வைத்துக்கொண்டு கதை எழுதியிருக்கிறார். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நாயக்கர் கால மண்டபங்களை மட்டும் பார்த்திருப்பார் போல. கோவிலின் கோபுரத்தில் உள்ள யாளி வரிசைகள் இவர் கண்ணில் பட்டதாகத் தெரியவில்லை. இங்கிலாந்து பற்றி அவர் கொடுத்த வர்ணனைகளும் சரி தமிழகக் கோவில்கள் பற்றி அவர் கொடுத்த வர்ணனைகளும் சரி, எதுவுமே இரசிக்கும்படி இல்லை. இந்தியா, தமிழ் நாடு- அவற்றின் நாகரிகம் (நாகரீகம் என்னும் எழுத்துப் பிழை வேறு) என்று அவர் சொல்லியிருக்கும் எதுவும் உண்மைக்குப் பெருதும் பொருந்தாத சாதாரண மனிதன் சொல்லும் கதைகள். (எழுத்தாளனும் அதையே சொல்லுவது தவறு. உண்மையை அறிந்து அதைத் தன் எழுத்து மூலம் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.)

மொத்தத்தில் யாளி பற்றித் தெரியாதவர்களுக்கு சலிப்பூட்டும் நூல். தெரிந்தவர்களுக்கு எரிச்சலூட்டும் நூல்.

நூல் முழுவதும் படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

2 comments:

  1. நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் :-) மிகச் சராசரியாக எழுதப்பட்டிருக்கும் ஒரு மிகச் சுவாரசியமான விஷயம் இந்த நூல்

    ReplyDelete
  2. Yenakum intha maathiri Book yella padikanum nu oru aasai but yenga intha maathiri book kidaikum nu theriyala! ungaluku therincha sollunga pls! First Yenaku Mahakavi Bharathiyar Yeluthuna kavithai thoguppu book venum! yenga kidaikum konjam therincha sollunga!

    ReplyDelete