Wednesday 7 May 2014

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!



















விளைச்சலுக்காய் நீ வரும் போதும்
காய்ச்சல் கண்ட என் கல்லூரி நினைவுகளைத்
தோய்த்தே கொண்டு வந்து கொட்டுகிறாய்...
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!
















உன்னாலே, இழையோடிய சோகம் வந்து
தன்னாலே என்னைப் பற்றிக் கொள்கிறது...
பட்டுச் சேலையிடை தங்க நூலாய்
எட்ட நின்றதை நான் ரசித்தாலும்,
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














மண் தொடும் நின் துளி
என் அறை ஜன்னல் தட்டுமென
ஏனோ பயந்திருந்தேன். நல்லவேளை
தானோ!!! ஜன்னல் இல்லை புது அறையில்... எனினும்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!











உறக்கம் தந்தாலும் உறங்கிடுவேனோ என்ற
பயமும் தருகின்றாய்.. உறங்கினால் எழுவேனோ??
ஐயமும் தருகின்றாய்.. கெஞ்சிடும் என்மேல்
இரக்கம் கொஞ்சமேனும் கொண்டு, இன்று
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














தனிமை வெறுமை என்று பலகொண்டு
மைக்கண் கலங்க வைக்கின்றாய் நீ...
அழுகவும் வேண்டுகின்றாய், பின்னர் என்னை
எழுதவும் தூண்டுகின்றாய்... இருப்பினும் வான்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

-சுபாசினி.

http://isainirai.blogspot.in/2013/02/blog-post_8807.html

5 comments:

  1. மழை வரின் கல்லூரி நினைவுகளும் உடன் வரும் என்ற உணர்வு எனக்கு மட்டும் தான் நிகழ்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ரசித்த வரிகள்.
    //என் கல்லூரி நினைவுகளைத் தோய்த்தே
    //பின்னர் என்னை எழுதவும் தூண்டுகின்றாய்

    ReplyDelete
    Replies
    1. மழை எப்பொழுதும் ஏதோ ஒரு தொலைந்த தூரத்து நினைவை கொண்டு வந்து வாசலில் தெளித்துவிட்டுச் செல்கிறது. :)
      நன்றி :) மீண்டும் அந்த வரிகளை தங்கள் மறுபதிவில் பார்த்து நானும் இரசிக்கிறேன். :)

      Delete
  2. மழை குறித்த ஒரு வித்தியாசமான பார்வை.. கூடச் சேர்ந்து ரசிக்க எவருமில்லாவிடில் மழை குளிராதோ? அதனினும் கொடிதாய் அது தனிமை உரைக்கச் செய்து சுட்டு விடுமோ? சுவாரசியமான கவிதை.. ஜன்னல் தட்டி விடுவாயோ என்று வெளிப்பட்ட பயமும் ஜன்னல் இல்லாத அறை தந்த நிம்மதியும் நல்ல உவமைகள்.

    ReplyDelete
    Replies
    1. தனிமையில் மழை கூட கொடுமை தான் போலும்.. தாங்கள் சொன்ன பின் அந்த வரிகளை மீண்டும் இரசிக்கிறேன் அண்ணா!!!

      Delete
  3. அருமை..
    மாமழையே! உன்னை இரசிக்க மட்டுமே என்னால் முடியும், ஆனாலும் நீ கொஞ்சம் தள்ளியே நில்லு. என்னைச் சேர்ந்து துயரில் ஆழ்த்தாதே.. இது ஏதோ உள்ளுறை உவமமாய் இருப்பதாயும் தோன்றுகிறதே...! அருமை.

    ReplyDelete