அப்பாவிடம் கேட்டால் " தெரியும் பார்த்திருக்கேன் என்றார்", அம்மா "ஓ! அந்த வார்த்தை தெரியுமே" என்றார். சென்ற தலைமுறையில் யாரிடம் கேட்டாலும் மொசலடி தெரியவில்லை என்றாலும் அச்சொல் பரிச்சயமானது என்பதாகவே பதிலுரைத்தனர். எப்படி ஊருக்குள் மொசலடி என்னும் சொல்லையே அதுவரை கேட்காமல் போனேன் என்று வியப்பாய் இருந்தது. பறவைகள் பார்க்கத் தொடங்கிய பிறகு இது என்ன பறவை என்று எளிதாய் தெரிந்துவிட்டது. ஒருமுறை பறவை பார்த்துக்கொண்டிருந்த போது அப்பா என்னிடம் " அதோ பறக்குது பார். அது தான் மொசலடி" என்றார். Black Winged kite என்னும் வேட்டையாடியைத் தான் இப்பெயர் கொண்டு அழைக்கின்றனர். வேறு எந்த இடத்திலும் அப்பருந்துக்கு மொசலடி என்றோ அதற்கு ஒத்த பெயரோ குறிப்பிடப்படவில்லை. இணைய வெளியில் கேட்ட வரையிலும் யாருக்கும் அது என்ன பறவை என்று உறுதியாகத் தெரியவில்லை. அன்று என் அப்பா காட்டிய போது கூட சற்றே ஐயமாகத் தான் இருந்தது, அடிக்கடி பார்க்க முடிகிற பறவை, அப்படியும் எப்படி இந்தப் பெயர் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது என்று புரியவில்லை. பின்னர் நிறைய முறை ஊரில் பறவைகள் பார்க்கும் போது, சென்ற தலைமுறைக்காரர்கள் எல்லாம் என்னிடம் " அதோ! அங்க மொசலடி பறக்குது பார்" என்பர். பின்னர் தெளிவாகவே மொசலடி என்று அவர்களால் குறிக்கப்பெறுவது Black Winged Kite என்று தெரிந்தது.
Black Winged Kite/ மொசலடி |
பெயர்க்காரணம்:
இன்று தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் பெரும்பாலான பறவைகளின் பெயர்கள் அதன் உருவமைப்பையும் நிறத்தையும் பொருத்தே இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல பெயர்கள், இப்படி உருவ அமைப்பைத் தாண்டி அப்பறவையின் (விலங்கின்) பண்பையும் வலிமையையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இது ஒரே நாளில் மொழிபெயர்த்து வழங்கிய பெயராக இருக்க முடியாது, அப்பெயர் மக்கள் வழக்கில் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.
மொசலடி - மொசல் + அடி. மொசல் என்றால் முயல். முயலடி என்பதே மொசலடி என்று திரிந்திருக்கிறது. இப்பறவை உருவத்தில் சிறியது. (35-38 செ.மீ, சராசரியான எடை 291கி). மற்ற வேட்டையாடிகளையும் விட மிகச்சிறியது. கிட்டத்தட்ட சொல்ல வேண்டுமானால் ஒரு முயலின் அளவு தான் இருக்கும், முயலை விடவும் எடை மிகக்குறைவாக இருக்கும். தன்னினும் அதிக எடை கொண்ட முயலை ஒரே அடியில் வேட்டையாடும் திறன் கொண்டது. அதனால் மக்கள் வழக்கில் மொசலடி எனப்பட்டது. அன்றைய மக்களின் அளவுகோல்கள் இவை தான் மழையை உழவால் அளந்தனர். பறவையின் வலிமையை அது இரையாடும் இரையைக் கொண்டு அளந்திருக்கின்றனர். இவ்வகையாக பெயரைக்கொண்டே அப்பறவையின் பண்பையும் உருவையும் வலியையும் இணங்காணுதல் அவர்கட்கு எளிதாய் இருந்திருக்கிறது.
இப்பெயர் பலருக்கும் கேள்விப்படாத பெயராக இருக்கலாம். ஆனால் இவ்வகையான பெயர்கள் வழக்கில் இருந்திருக்கின்றன. தஞ்சை வட்டார வழக்கில் சிறிய வேட்டையாடிகளுள் ஒன்றை "பொறாவடி/ பொறாடி" என்று குறிப்பிடுவதாக பறவை ஆர்வலரான நண்பர் பாண்டியன் ஒருமுறை கூறினார். புறா + அடி = புறாவடி என்பது திரிந்து பொறாவடி என்றாகியிருக்கிறது.
Osprey/ விராலடிப்பான் |
அதே போல Osprey எனப்படும் மீன் பிடிக்கும் பறவையை விராலடிப்பான் என்கிறார்கள். இந்த விராலடிப்பான் மீன் வேட்டையாடும் காணொளிகளைப் பார்த்தால் நமக்கு இப்பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துகிறது என்பது தெரியும். பறந்து கொண்டிருக்கும் போதே தன் இரையான மீனைக் கண்டதும் வேகமாக நீரில் பாய்ந்து இருகால்கள் கொண்டு மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்து மேலெழும்பிப் பறக்கும். இப்பறவை மற்ற மீன்களை வேட்டையாடினாலும் குறிப்பாக ஏன் விரால் மீனின் பெயரையொட்டி விராலடிப்பான் என்று பெயர் பெற்றது எனத் தெரியவில்லை. ஆனால் இரைகொண்டு பறவைகளுக்கு இதுபோன்ற பெயர் வைக்கும் வழக்கம் பரவலாக இருந்திருக்கிறது. இலக்கியங்கள் எதிலும் மொசலடி/Black Winged kite பற்றிய குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.
Black Winged Kite/ மொசலடி |
படங்கள்:
1. பறவை ஆர்வலர் அரவிந்த் அமிர்தராஜ் அவர்கள் எடுத்த மொசலடியின் படம். (Black Winged Kite, Sollinganallur, Chennai)
2. கரீபியத் தீவுகளில் நான் எடுத்த விராலடிப்பானின் படம். (Osprey, CocoCay, The Bahamas)
3. எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் நல்லதங்காள் ஓடை நீர்தேக்கத்தின் அருகில் நான் எடுத்த மொசலடியின் படம். (Black Winged Kite, Nallathangal Check Dam, Dharapuram (Tiruppur Dt))