Showing posts with label செய்யுள் விளக்கம். Show all posts
Showing posts with label செய்யுள் விளக்கம். Show all posts

Saturday, 11 August 2018

சங்க இலக்கியக் காதல் - கைகூடிய திருமணம்

சில (8) மாதங்களுக்கு முன்பு 'யாரு மில்லைத் தானே கள்வன்' என்று தொடங்கும் சங்க இலக்கியப் பாடல் ஒன்றைப் பற்றி விரித்து எழுதியிருந்தேன். மறுநாள் என் உற்ற நண்பன் எனக்கு தமிழும் ஆங்கிலமும் கலந்து உணர்ச்சி பொங்க எழுதிய தனிமடலின் சுறுக்கத்தை தமிழில் எழுதுகிறேன்: 'சுபா! குருகு சாட்சிக்கு நின்ற பாடலைப் படித்ததும் மனம் என்னவோ செய்தது. எனது காதலில் என் பக்கச்சிக்கலையே எண்ணிக் கொண்டிருந்தேன். என் காதலி மணம் புரிவதைப் பற்றிப் பேசும் போதெல்லாம் என் சிக்கல்களே கண் முன் வந்து போகும். ஆனால் அப்பாடலைப் படித்த பின்பு தான் அவள் படும் துயர் எவ்வளவு என்று உணர்ந்தேன். அச்செய்யுளின் தலைவிக்காவது சாட்சி சொல்ல குருகு இருந்தது. ஆனால் நான் என் காதலியை மணந்து கொள்ளவதாய்ச் சொன்ன அன்று, அங்கே குருகும் கூட இல்லை. அவளின் துயர் இன்னும் எவ்வளவு பெரிதாய் இருக்கும். அவள் அப்பாவிடம் இன்று தான் பேசினேன், நாளை அவளது வீட்டிற்குச் செல்கிறேன்.'

8 மாதகாலப் போராட்டத்திற்கு பிறகு நேற்று மீண்டும் அழைத்து தனது திருமணம் கைகூடியது என்று அவன் சொன்ன போது கண்கள் கலங்கிவிட்டது. மணம் கூடிய செய்தி அவன் காதலிக்கு எவ்வளவு உவப்பாய் இருந்திருக்கும்!!

இதோ தலைவன் தன் சுற்றத்தை அழைத்துக் கொண்டு மணம் பேச வருகிறான், தன் வீட்டார் சம்மதிப்பரோ என்று ஐயுற்றிருந்த தலைவியிடம் அவளது தோழி 'உன் வீட்டாரும் சம்மதித்தனர்' என்று கூறும் ஒரு குறுந்தொகைப் பாடல்.

'வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
- அம்மூவனார்.'

எளிய உரை:
இங்க பாருடி! உன் ஆளு அவன் சொந்தத்தோட வந்து உன்ன பொண்ணு கேட்டாங்க, உங்க ஆளுங்களும் சரினு சொல்லிட்டாங்க. இனி ஊர்ல யாரு உங்களப் பத்தி பொறணி பேசறாங்கனு பார்ப்போம்.

நீண்ட உரை:

வளையள்கள் அணிந்த பெண்ணே! நான் மகிழ்ந்திருக்கிறேன். ஏன் தெரியுமா? வளையில் வாழும் விரைந்து ஓடும் வலிய கால்களையுடைய நண்டுகள் தங்கள் கூர்மையான நகங்களால் கீறி ஈர மணலில் ஓடும் ஊற்றினை சிதைக்கின்றன, அத்தகைய கரையை உடைய இழும் இழும் என்று பேரொலி எழுப்பும் கடலை உடைய நெய்தல் நிலத் தலைவனுக்கு நம் உறவினர் உன்னை மணம் முடிப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளனர். விரிந்த பூக்களை உடைய புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்த மீன் வாசம் அடிக்கும் ஊரில் வாழும் அவனது நாட்டுப் பெண்கள் எல்லாம் இனியும் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுவார்களோ?

கொஞ்சம் ஆராயலாம்:
பல உரைகள் பலவிதமாய் சொற்களுக்கு பொருள் தருகின்றன. வளை என்பதற்கு வளைந்த என்றும், மலிர் என்பதற்கும் பலவாறு விரித்துப் பொருள் கூறுகின்றன. ஆனால் என்னால் அவற்றோடு உடன்பட முடியவில்லை. அதனால் கொஞ்சம் நான் கொஞ்சம் மாற்றிப் பொருள் கொண்டு படிக்கிறேன்.

"விரைவுறு கொடுந் தாள் அளை வாழ் அலவன்"  அலவன் என்றால் நண்டு. விரைந்து ஓடக்கூடிய வலிமையான கால்களையுடைய வளையில் வாழும் நண்டு. இது தலைவின் நிலையை உணர்த்துகிறது. அவளது மனம் வலிமையாய் இருக்கின்றது, தலைவனை நினைத்து நித்தமும் அலைந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் வீட்டில் (வளையில்) அடைபட்டுக்கிடக்கிறது.

"இழுமென உரும் இசைப் புணரி உடைதரும்" புணரி என்றால் கடல். இழும் இழும் என்று பேரொலியை எழுப்பும் கடலையுடைய நாட்டின் தலைவன். இந்தக் கடலின் இழும் இழும் என்னும் ஒலியைப் போலத் தான் அவளைப் பற்றி அவர்கள் நாட்டு மக்கள் பேசும் வசையும் அவள் காதில் பேரிடியாய் விழுகிறது. அதனால் தான் அவள் மனமும் மேலே சொன்னது போல நண்டாய் அங்குமிங்கும் அலைமோதுகிறது. அப்பெரிய கடலில் இச்சிறிய நண்டு என்ன செய்யும் பாவம்?

"அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய," உகிர் என்றால் நகம். சிறிய நண்டினால் கடலை எதிர்த்தும் அதன் கரையை எதிர்த்தும் என்ன செய்ய முடியும்? அந்த நண்டு தன் கூரிய நகத்தினால் ஓடுகின்ற ஊற்றின் ஈர மணலை வரித்து வரித்தே புரட்சி செய்கிறது. தன்னால் இயன்ற வரை போராடுகிறது. இது தலைவியின் மனநிலையையும், தலைவன் போராடி இருவீட்டாரையும் திருமணத்திற்கு ஒப்புதல் தர வைத்தலையும் குறிப்பாக அழகாகச் சொல்கிறது.

"விரிஅலர்ப் புன்னை"- விரிந்த மலர்களையுடைய புன்னை என்றிருக்கலாம் புலவர். ஆனால் மலர்ந்த என்பதற்கு அலர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அலர் என்பதற்கு காதலர்களைப் பற்றி ஊரில் நான்கு பேர் நான்கு விதமாய்ப் பேசும் வசவு என்ற பொருளும் உண்டு. இவ்வரி அவர்களைப் பற்றிய அலர் பேச்சுக்கள் எப்படி ஊரில் விரிந்து ஓங்கிப் பெருகியிருக்கிறது என்று காட்டுகிறது.

சொல்ல வந்ததை இழுத்து மெதுவாய்ச்சொன்னாலும், தொடக்கத்திலேயே தான் மகிழ்ந்திருப்பதை தோழி சொல்வது, சொல்லி முடிப்பதற்குள் அவள் படப்போகும் துயரைக் குறைப்பதற்கானது. 

ஒவ்வொரு சொல்லிலும் அவ்விணை எவ்வளவு துயரங்களையும் அவப்பேச்சுக்களையும் தாண்டி மணம் புரிகின்றனர் என்பதை ஆழமாய்க் காட்டியிருக்கிறார் புலவர்.

என் நண்பனுக்கு!
உன் திருமணச்செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியினை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பதிவு பிடிக்கவில்லை என்றால் மன்னித்துவிடு!

Thursday, 7 December 2017

சங்க இலக்கியக் காதல் - புதரும் குருகும் காதலர்களும்

தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். தலைவன் திரும்பத் தலைவியைப் பார்க்க வரவில்லை. புலம்பத் தொடங்குகிறாள் தலைவி. "ஐயோ. சாட்சிக்கு கூட யாரும் இல்லையே. அன்னைக்கு ஒரு குருகு பார்த்துச்சே. அதுக்கு தெரியும் நாங்க காதலிச்சது" என்பாள். ஆமாங்க பள்ளியில் படித்த கபிலரின் பாடல் தான்.
குறுந்தொகை 25:
யாரு மில்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தா ளன்ன சிறுபசுங் காலஒழுகுநீ ராரல் பார்க்கும்குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.
குறிஞ்சி - தலைவி கூற்று
கூற்று: வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்: கபிலர்
விளக்கம்:
அன்று வேறு யாருமே இல்லை. அவன் மட்டும் தான் இருந்தான்,  கள்வனும் அவன் தான் ( குற்றம் சாட்டப்பட்டவன்). அவன் பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன். நாங்கள் மணந்த அன்று ஒரு குருகு மட்டுமே இருந்தது.
"அதுக்கு இப்ப என்ன? அதான் பள்ளிக்கூடத்தில் படிச்சது தானே" என்கிறீர்களா?
ஆம். இந்தப் பாடலைப் படிக்கும் போது பள்ளியில் என் மனக்கண் முன் விரிந்த காட்சி இப்படி இருக்கும் : பிரபலப் பத்திரிக்கைகளில் வரும் அந்தக் காலத் தலைவிகளைப் போல இந்தத் தலைவியும் ஓர் தடாகத்தின் அருகில் அமைந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருப்பாள். நீரின் அருகே ஓர் குருகோ கொக்கோ நாரையோ நிற்கும், நீரில் இரண்டு தாமரை இருக்கும். மற்றபடி அது வால்பேப்பர் படம் போல பளிச்சென்று இருக்கும்.
ஆனால் இன்று அந்தப் பாடலைப் படிக்கும் போது கண்முன் விரியும் காட்சி வேறு.

ஏன் குருகுகள்? கிளியோ மயிலோ குயிலோ சாட்சிக்கு வராதா? இல்லை அவர்கள் சந்தித்த இடங்களில் அப்பறவைகள் இல்லையா?
பொதுவாக இந்தக் குருகுகள் புதர்களுக்கு இடையே இருக்கும், காண்பதற்கு அரிதான இடத்தில் மறைந்து இருக்கும். நிற்க. இப்பொழுது பாட்டை நோக்குங்கள். அன்றைய தலைவனும் தலைவியும் இப்படி யாரும் இல்லா புதர்கள் நிறைந்த பகுதிகளில் (புதர்களிலும்) தான் சந்தித்திருக்கிறார்கள்.
இன்னொன்று குருகுகள் எப்படி மறைந்து மறைந்து பயந்து பயந்து வாழ்கிறதோ தலைவனும் தலைவியும் அப்படித் தான் மறைந்து பயந்து காதலித்திருக்கிறார்கள். அதனால் தான் அவளுக்கு குருகின் நினைவு வருகிறது.

பசுவிற்கே நீதி வழங்கிய சோழன் கதை இருக்கிறதே, சரி இழுத்து பிடித்து அந்தக் குருகை சாட்சி சொல்ல அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தால் அங்கு தான் சிக்கல். குருகுகளால் தொண்டை வளையில் இருந்து எந்த ஒலியும் எழுப்ப முடியாது, சாட்சியும் சொல்லாது. அது மௌனமாக அவர்கள் காதலித்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்பொழுது தெரிகிறது அந்தத் தலைவியின் நிலை என்னவென்று.

4 மணி நேரக் கதையை நாலே வரியில் நச்சென்று சொல்லிவிட்டுப் போகிறார் புலவர்.
திடீரென்று ஏனோ வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்த காதல் புறாக்களின் நினைவு வருகிறது. 2000 வருடங்களாக எத்தனை காதலர்களை வெள்ளோட்டுக் குளம் பார்த்திருக்கும்.
#சங்கஇலக்கியக்காதல்
#அன்றும்இன்றும்

Wednesday, 8 November 2017

சங்க இலக்கியக் காதல் - மோர்க்குழம்பு

சமையற்கட்டில் அவள் கையைக் கழுவிவிட்டு தன் ஆடையிலேயே கையைத் துடைக்கிறாள்.

அவன்: ஏய்! இது என்ன புதுப் பழக்கம். கழுவிட்டு வேற துணில தானே கையைத் துடைப்ப!
அவள்: புதுப்பழக்கமா? இது தான் நம்ம பாரம்பரியம். அவங்க அவங்க சமைச்சுட்டே கையை போட்டுருக்குற துணியில தான் துடைப்பாங்களாம். நான் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கேன். நம்ம முன்னோர் ஒன்னும் முட்டாள் இல்லைங்க.
அவன்: அடிப்பாவி! விட்ட நீ செஞ்ச தப்ப மறைக்க சங்க இலக்கியத்துலையே இதப்பத்தி பாடியிருக்காங்கனு சொல்லுவ போல.
அவள்: ஆமாம். சங்க இலக்கியத்துல பாட்டு இருக்கே!
அவன்: இதையெல்லாமா பாடியிருக்காங்க? அடிச்சுவிடு அடிச்சுவிடு!
அவள்: அட உண்மையா தான்.
அவன்: பாட்டை சொல்லு பார்ப்போம்.

அவள்: லா லா லா.. லாலா லா லா லா...
அவன்: ஏய்! சங்க இலக்கியப் பாட்டைப் பாட சொன்னா நீ என்ன சூரிய வம்சம் படப்பாட்டை பாடுற!
அவள்: என்ன அவசரம்? பின்னணி இசையோட ஆரம்பிக்கிறேன். அந்தப் படத்துல வந்த இட்லி உப்புமா காட்சி நியாபகம் இருக்கா?
அவன்: என்னது? அந்தக்காலத்துல இட்லி உப்புமா எல்லாம் செஞ்சாங்கனு மட்டும் சொல்லிடாத. என் சின்ன நெஞ்சு பிஞ்சு பிஞ்சு உடைஞ்சு போயிடும்.
அவள்: (சிரித்துவிட்டு) இல்ல, இல்ல. சங்க இலக்கியத்துல மோர்க்குழம்பா மாத்திட்டாங்க.
அவன்: என்னது மோர்க்குழம்பா? ஐயோ அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியக் கொடுக்குறாளே! போதும்! இத்தோட நிப்பாட்டிட்டு பாட்டை சொல்லு.

அவள்: சூரியவம்சம் படத்துல வர்ரது போலத் தான். சரத்குமார்-தேவயானி போல நம்ம தலைவனோடு தலைவி உடன்போகிவிடுகிறாள்.
அவன்: யூ மீன் ஓடிப்போதல்? அருமை அருமை. மேல சொல்லு.
அவள்: அந்த சூரியவம்சம் தேவையானி போலவே நம்ம தலைவியும் நல்ல செல்வாக்கான வீட்டில் பிறந்து வளார்ந்தவள். வீட்டு வேலை எதுவும் செய்யத் தெரியாதவள். ஆனால் இப்பொழுது தலைவனோடு தனியே வாழ்கிறாள். அந்தப் படத்தில் வரும் அப்பாவைப் போலவே தலைவின் அம்மாவுக்கும் ஒரே வருத்தம். " ஐயோ பொண்ணு என்ன செய்யுறாளோ! எப்படி துன்பப்படுறாளோனு" ஒரே கவலை தான் அவளோட அம்மாவிற்கு.
அவன்: அடிப்பாவி! அப்படியே சந்தடி சாக்குல உன் கதையை உள்ள கொண்டுவரியே.
அவள்: கதை கேப்பியா மாட்டியா? எல்லாக் காலத்துலையும் அம்மா பொண்ணுனா அப்படித் தான். அதுவும் மாறவேயில்லை.
அவன்: சரி சரி. மேல சொல்லு.

அவள்: இப்படி அவள் அம்மா புலம்பிக் கொண்டு இருக்கும் போது தலைவியின் ஊருக்குப் போய்விட்டு வந்த செவிலித்தாய் தலைவியைப் பற்றி சொல்கிறாள். தேவயானியின் அப்பா இட்லி உப்புமா சாப்பிட்டுவிட்டு வந்து "உன் பொண்ணு என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா?" என்று பெருமையாகச்சொல்வாரே! அதே போன்ற காட்சி தான் இதுவும்.
செவிலித்தாய் சொல்கிறாள் " அட நீ ஏன் புலம்பிட்டே இருக்க. உன் பொண்ணு அங்க என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா? அன்னைக்கு அப்படித் தான் மோர்குழம்பு சமைத்திருந்தாள். எங்க நேரம் ஆகிடுமோனு தயிரைப் பிசைந்துவிட்டு அந்தக் கையைக் கூட கழுவாம அப்படியே அதை ஆடையில துடைச்சிக்கிட்டு, அவள் கணவனுக்கு மோர்க்குழம்பு செய்து கொடுத்தான். அவனோ அது புளிப்பாய் இருந்தாலும் " இனிமையா இருக்கே!" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்"
அவன்: அவன் ரொம்ப நல்லவன்னு நினைக்கிறேன். நல்லா இல்லாத சோறக் கூட ரொம்ப நல்லா இருக்குனு சாப்பிட்டுருக்கான். காதலுக்கு கண்ணு மட்டுந்தான் இல்லைனு நினைச்சேன்.
அவள்: சரி சரி. கதை முடிஞ்சுருச்சு. கதையில சொல்லாத அடுத்த காட்சியை சொல்லவா?
அவன்: என்ன?
அவள்: சாப்பிட்டுவிட்டு தலைவன் பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு அன்பு மனைவியிடம் சொல்கிறான் " அன்பே! இனி தினமும் நானே உனக்கு உதவி செய்கிறேன்"
அவன்: போச்சுடா. கதை கேட்டது ஒரு குத்தமா???
...................................


பாடல்: குறுந்தொகை 167
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 
திணை: முல்லை.
பாடியவர்: கூடலூர் கிழார்
கூற்று: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது. 

பதவுரை:
கடிநகர் - தலைவனும் தலைவியும் மணம்புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் மனை.
கலிங்கம்- ஆடை
குய் புகை- தாளிப்பினது புகை.


விளக்கம்:
காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தலைவிக் கட்டித் தயிரைப் பிசைந்துவிட்டு அதனைத் தன் ஆடையில் துடைத்துக் கொண்டும், துடைத்த ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டும், குவளை மலர் போன்ற அவள் கண்களில் தாளித்த புகை அடித்திருந்தாலும் அவள் தானே துழாவிச்சமைத்த புளித்த மோர்க்குழம்பை அவளது கணவன் "இனிமை இனிமை" என்று சொல்லிக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து அவள் முகம் மலர்ந்திருக்கிறது.



Tuesday, 21 March 2017

குழம்பிய தலைவன், குழப்பத்தைக் குழப்பமாகவே விட்டுவிட்ட கவிஞன்

காதலை ஒருவன் ஒன்றே முக்கால் அடியில் சொல்லக் கிளம்புகிறான். அவனுக்கு மொழியென்பது எவ்வளவு கைகூட வேண்டும்! அவன் பயன்படுத்தும் சொற்கள் எவ்வளவு பொருள் பொருந்தியதாக இருக்க வேண்டும். சும்மா எடுத்தோம் கவுத்தோம்னு ஒரு கவிதை எழுதிட முடியுமா.. ஆழ்ந்த பொருள் தரும் சொல் தேடி எழுத வேண்டுமே.. வள்ளுவன் எழுதுகிறான்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.

தலைவன் புலம்புகிறான்.. அவன் நெஞ்சு யாரைக் கண்டு மயங்குகிறது என்றே தெரியாமல் தலைவன் புலம்புகிறான். " சரிப்பா தம்பி யாரைப் பார்த்து உன் நெஞ்சு மயங்குது?" என்று கேட்டாலும் அவனுக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் சொல்ல முற்படுகிறான்.

"அணங்கு  போன்றவளோ, மயில் போன்றவளோ, ஆடும் காதணிகள் அணிந்த அழகிய பெண் போன்றவளோ, சொல்லத்தெரியவில்லையே?" என்கிறான்.  " என்னப்பா சொல்லத்தெரியாமயா இப்படி 'கவித கவித' என்று சொல்லும்படி அடுக்கிக்கொண்டிருக்கிறாய்?" என்று அவனைப் பார்த்து கேட்கலாம் என்றால் அது முடியவில்லை. காரணம் அவன் 'அணங்கு' என்று சொல்லிவிட்டான். இங்கு தான் தெளிவாகக் குழம்பியிருக்கிறான் தலைவன் என்று தெரிகிறது. 'அணங்கு' என்று சொல்கிறான்; அணங்குதல் என்பதற்கு விரும்புதல் வருத்துதல் என்று முரண்படுவதாக இரண்டு பொருளுண்டு. அணங்கு என்பவள் அழகிய அமைதி தெய்வமாகவும் இருக்கலாம், பிடுத்து வருத்தும் பெண் தெய்வமாகவும் இருக்கலாம்.

தோழன்: டேய் அணங்குனா, என்ன பொருள்ளடா சொல்லுற? வருத்துறாளா? இல்ல விரும்ப வைக்குறாளா?
தலைவன்: தெரியலையே மச்சி. தெரிஞ்சா ஏன் அவள அணங்குனு சொல்லப் போறேன்.
தோழன் : இவன் எப்படியும் லவ் பண்ணி அந்த பொண்ணோட அப்பாகிட்ட அடி வாங்கப் போறான்.

ஆமாம், அவன் சொல்வது நியாயம் தானே, அவன் கண்டு மயங்கியாது யாரை என்று தெரிந்திருந்தால் அவன் ஏன் அணங்கோ என்று புலம்பப்போகிறான்?

இப்படியான முரண்களால் அழகு பெற்ற பல திரையிசைப்பாடல்கள் இருக்கின்றன. கண்ணத்தில் முத்தமிட்டாள் படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் அப்படி முரண்களால் அமைந்த ஒரு பெண்குழந்தை பற்றிய பாடல். ஆனால் இவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக வள்ளுவன் இப்பாடலில் இருக்கின்றான். கவிதையில் அவன் பாடும் பெண்ணை மட்டுமல்ல முதற்சொல்லையே தலைவன் கண்டு மயங்கி குழம்பியிருக்கிறான் என்பதற்கு அழகாய் தெரிவு செய்திருக்கிறான்.

நமக்கு இதெல்லாம் பிடித்த குணங்கள், இதெல்லாம் பிடிக்காத பண்புகள் என்று முன்முடிவுகள் எப்பொழுதும் இருக்கும், ஆனால் அவற்றைத் தகர்க்கும் விதமாய் ஒரு சிலரைப் பார்க்கும் போது மட்டும் மனம் குழம்பிக்கிடக்கும், அப்படி ஒருத்தியைப் பார்க்கும் போதும் தலைவன் இப்படித் தான் குழம்பியிருப்பான், தலைவியைப் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்று தெரியாமல் இப்படித் தான் புலம்பியிருப்பான். அணங்கு என்ற சொல்லைப் புலவர் கையாண்டாதால் இப்படி அவன் படும்பாட்டைப் புரிந்துகொள்ள பல காரணங்களைக் கற்பிக்க முடிகிறது. பரிமாண வளர்ச்சி என்பது தமிழுக்கும் பொருந்தும். சொல் ஒவ்வொன்றும் வெறும் வெற்றான பொருள் கொள்ளாமல் மனித உணர்வுகளைப் பிரதிபலிப்பதாய் இருக்கின்றன. அத்தனை காதலையும் ஒன்னேமுக்கால் அடியில் சொல்லக்கிளம்பியவனுக்கு அணங்கு என்னும் ஒற்றைச் சொல் போதுமானதாய் இருக்கிறது.

பின்குறிப்பு:
நண்பரொருவர் எழுதிய பதிவில் நான் இட்ட மறுமொழியை அடுத்து எழுதிய விளக்கம் இது. கல்லூரிக்காதலர்கள் எப்படி குறளைப் படித்தால் உணர்வார்கள் என்று இரசிக்க வேண்டுமானால் காமத்துப்பால்- kaamathupaal அவரின் பக்கத்தை சென்று பார்க்கலாம்.



Saturday, 31 May 2014

கண்ணீரும்-ஆறும்; அவை கொள்ளும் வண்ணமும்.

வண்ணங்கள் எப்பொழுதும் ஈர்ப்பவையாகவே அமைகின்றன. அறிவியலிலும் கூட வண்ணங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஒவியத்தில் துளி திறமை இல்லாதவர் கூட வண்ணங்களைக் கொட்டி மகிழ்வர்.

இப்படி இலக்கியத்திலும் நிறங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பாரதியின் "காக்கைச் சிறகினிலே" பாடல் தொடங்கி, அலைபாயுதே படத்தின் "பச்சை நிறமே " பாடல் வரை அனைத்திலுமே ஒரு வசீகரம் உண்டு. இப்படி வண்ணம் கலந்த பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட பாடல் இது.

"கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே."

-ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார்,
மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது).
















சங்கப் பாடல்களில் அகப்பொருள் பாடல்களை எடுத்துக் கொண்டால் நம் கண்ணில் அதிகம் படும் சொல் "பசலை". தலவனின் பிரிவால் தலைவியைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் நோய் இது. உடல் மெலிந்து, கலையிழந்து, தோள் தணிந்து காணப்படுவாள்.

இப்படி பசலைக் கண்ட தலைவியைக் கண்டு வேதனைக் கொண்ட தோழி தலைவனிடம் சென்று தலைவி உரைப்பது போல் கூறுகிறாள். என்ன சொல்கிறாள்? " தலைவா! உம்முடைய ஊரில் உள்ள நதியானது குளிர் காலம் என்றால் கலங்கியும், வெயில் காலம் என்றால் மணி நிறம்  கொண்டுள்ளது. ஆனால் என் கண்ணானது நீ விட்டு அகன்றதால் பசலை நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது." இவ்வாறு கூறுகிறாள்.

இது செய்யுள் தரும் நேரடி பொருள் மட்டும் தான். ஆனால் உற்று நோக்கும் போது அது எவ்வளவு அழகிய பொருள் கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

எதற்காக தலைவி நதியை உதாரணம் காட்ட வேண்டும்? அவள் சொல்ல விளைவது இதைத்தான்.

" தலைவா! வண்ணங்கள் என்னைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் என் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை. நீர் கூடப் பல நிறம் கொள்கிறது. உன் ஊரில் ஓடும் நதியானது குளிர் காலத்தில் கலங்கிய நிறமுள்ள நீரையும், வெயில் காலத்தில் மணி நிறமுள்ள நீரையும் கொண்டு தருகின்றது. ஆனால் என் கண்ணீரோ பசலை நிறம் கொண்டுள்ளது. வேறு எந்த நிறமும் தெரியவில்லயே!" என்று வருந்துகிறாள்.

"பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே" என்பது ஆழமான வரிகள். பிரிவினால் எவ்வளவு அவள் அழுதிருந்தால் அவள் கண்ணின் நீரை ஆற்று நீரோடு ஒப்பிட்டு அதன் வண்ணம் பசலை என்பாள். அடடே!!!

பதவுரை:
கூதிர்- குளிர் காலம்
தண்- குளிர்ச்சி
கழில்- கலங்கிய நீர்
வேனில்- வெயில் காலம்
யாறு- நதி

Saturday, 15 March 2014

கண்ணதாசன் எடுத்தாண்ட நளவெண்பாப் பாடல்

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் " என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறீர்களா???

"நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?" இப்படியாக தலைவன் பாட அதற்கு பின்வருமாறு தலைவி பதிலுரைப்பாள்

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"















அடேங்கப்பா! முகத்தை மலர்னு நெனச்சு வண்டு மோதுச்சா??? என்னமா எழுதியிருகாரு தலைவர் என்று சொல்லத் தோன்றும் வரிகள் அல்லவா இவை.
இதே பொருள் கொண்ட பாடல் ஒன்று நளவெண்பாவில் உள்ளதென்றால் நம்புவீர்களா???

"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து." - (நளவெண்பா)

திருமணம் முடிந்து பின்பு நளன் தமயந்தியை தோட்டத்திற்கு ஒரு நாள் அழைத்துச் செல்கிறேன். அங்கே தான் கண்ட காட்சியை அவளையும் காணச்சொல்கின்றான்.
அங்கே என்ன காட்சி நடக்கிறது தெரியுமா!!!

"பெண் ஒருத்தி மலர்கொய்து கொண்டிருக்கிறாள்; அங்கே மலர்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டொன்று அவளது முகத்தை தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவள் தன் கைகளால் முகத்தை மறைக்கிறாள்; அப்பொழுதும் அந்த வண்டு அவளது கைகளை காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவளுக்கு வேர்க்கின்றது" இந்தக் காட்சியைக் காண் எங்கின்றான் நளன்.















முகத்தை மலர் என்றதோடு முடித்துக்கொண்டார் கண்ணதாசன். கையையும் மலர் என்றார் புகழேந்தி!!!

பிரித்துப் பொருள் கொள்ளும் முறை:

மங்கை ஒருத்தி மலர் கொய்வாள், வாள் முகத்தைப் பங்கயம் என்று எண்ணிப் படி வண்டைச் செங்கையால் காத்து ஆள, கை மலரைக் காந்தள் எனப் பாய்தலுமே, வேர்த்தளைக் காண் என்றான் வேந்து.

செங்கையை செங்காந்தள் மலர் என்கிறார். கை மலர் என்கிறார்.
பங்கயம்- தாமரை
காந்தள்- செங்காந்தள்
வேந்து- அரசன்.(நளன்)

Sunday, 9 March 2014

தலைவியை உடன் அழைத்துச் செல்லாததற்கு தலைவன் சொல்லும் காரணங்கள்

காதலிய கூட கூட்டிட்டு போறதுக்கு ஆயிரம் காரணம் காதலர்களுக்கு இருக்கும். "போருக்குப் போறேன், ஊருக்குப் போறேன்" இப்படி பல கதைகள் சொல்லுவாங்க. ஆனா இந்தப் பாட்டுல தலைவன் சொல்ற காரணங்கள் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாத்தான் இருக்கு. அடேங்கப்பா!!! தலைவி மேல அவனுக்கு இவ்வளவு அக்கறையா, இல்ல தலைவி அவன் எதைச் சொன்னாலும் நம்புவானு தைரியத்துல தலைவன் சொல்றானானு தெரியல. இல்ல ஒருவேளை அந்த காலத்தில் போகும் வழி அவ்வள்வும் கொடுமையாக் கூட இருந்திருக்கலாம். "தலைவியைக் கூட்டிக்கொண்டு செல்" எனக் கூறும் தோழிக்கு தலைவன் உரைக்கும் பதிலாக அமைந்த அப்பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை
திணை: பாலை,
பாடியவர்: சிறைக்குடியாந்தையார்

"வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே."

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

(கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல், பொல்லாங்கு - தீமை.)

அஃதாவது, தலைவியப் பிரியும் தலைவன், தான் போகும் வழியே இடரானது, தன்னால் தலைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாது என்று தோழிக்கு எடுத்துச் சொல்லும் பாட்டு.














விளக்கம்:

பாலை வழியானது மிகவும் கொடுமையானது. அங்கே நீருக்கு பெரும்பாடு.
வேட்டைக்குச் சென்று திரும்பும் செந்நாய் நீரற்ற சுனையில் குழி தோண்டி கிடைக்கும் நீரில், அது உண்டது போக மிச்சம் உள்ள நீர் தான் கிடைக்கும்.
அதிவும் குளவி மலர்களால் மூடப்பட்டு, அம்மலர்கள் அழுகி வீசும் துர்நாற்றம் உடையதாய் இருக்கும்.
வளையல் அணைந்த கையையுடைய தலைவியை என்னோடு சேர்ந்து எப்படி அந்த நீரைப் பருகச் சொல்வது??
என்னோடு இந்த வழியில் வந்தால் என் மனதில் நிறைந்துள்ள அவள் வருந்தத்தக்கவள் ஆவாள்.

குறிப்பு:










இதில் குளவி என்பது பூச்சியினத்தைக் குறிப்பிடவில்லை. அது ஒரு மலர் வகை. [குளவி - காட்டுமல்லிகை (குறிஞ்சிப். 76,ந.) ]

வேட்டம், சின்னீர் போன்ற சொற்கள் பாலைத் திணையை நன்கு புலப்படுத்துகின்றன.

பாலைநிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிதளவாகிய நீரை விலங்கினமும் மக்களும் உண்டல் வழக்கம்; "ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட, சிறுபல் கேணி" (அகநா. 137: 1-2).


பிரித்துப் படிக்கும் முறை:
வேட்டம் செந்நாய்  கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளையுடை கையள் எம்மொடு  உணீயர் தான் வருகதில்,
வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் அளியளோ, அளியள்.

பதவுரை:
கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியது
அளியள் - மிக இரங்கத் தக்காள்

Thursday, 22 August 2013

சிலம்பு கழி நோன்பு

ஒரு பையனும் பொண்ணும் வீட்டு விட்டு ஓடிப் போறாங்க... இப்பவா இருந்த அத பார்க்கறவங்க அரசியல் பிரச்சனை ஆக்கி இருப்பாங்க.
ஆனா சங்க காலத்தில அவங்க படும் துயரத்த பார்த்து பரிதாப பட்டுருக்காங்க.

"வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையில் கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னி யோரே."

குறுந்தொகை பாடல்-7, பெரும்பதுமனார், பாலை திணை- கண்டோர் சொன்னது.

(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)

விளக்கம்:
வாகை மரங்களின் நெற்றுகள் (முதிர்ந்து காய்ந்த காய்) நிறைந்தது அந்தப் பாலைப் பகுதி. அதிலே நடக்கும் போது அந்த நெற்றுகள் உடைந்து சத்தம் எழுப்புகின்றன. அந்த ஒலியானது ஆரியக் கூத்து ஆடுபவர்கள் கயிற்றின் மீது நடக்கும் போது அடிக்கும் பறையைப் போன்று இருக்கிறது.
அந்தப் பகுதியிலே தலைவி தலைவனுடன் உடன் போக்கு மேற்கொள்கிறாள். ஆனால் அவர்கள் இருவருக்கும் மணம் ஆகவில்லை. அதனைத் தலைவி பெற்றோர் தனக்கு அணிவித்த காற்சிலம்பைக் கழற்றாமலேயே இருக்கிறாள் என்பதைக் கொண்டே பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். தலைவனோ வில்லை உடைய வீரக் கழல் அணிந்த ஆண்மகன், தலைவியோ மென்மையான அடி எடுத்து நடப்பவள். அவளால் அந்த பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும்??? அவர்களைப் பார்த்த நல்லோர் (முக பாவங்களைக் கொண்டு அவர்கள் படும் துயரை அறியக்கூடியவர்கள்) இந்த இருவரும் யாரோ என்று இரங்குகின்றனர்.

பின் குறிப்பு:

மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; "நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லி னெவனோ... பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’ (ஐங்.311) என்பதனால் அந் நோன்பு மணத்திற்கு முன்பு செய்யப்படும் என்று தெரிகின்றது.
ஆரியர்-ஆரிய நாட்டில் உள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும்கூத்து ஆரியக் கூத்து எனப்படும்; 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்’ என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்; விலக்குறுப்பின் வகையாகிய பதினான்கனுள் ஒன்றாகிய சேதமென்பது இரு வகைத்தென்பதும் அவ்விரண்டினுள் ஆரியக் கூத்து ஒன்று என்பதும் சிலப்பதிகார உரையால் அறிந்த செய்திகள்; "ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்’’ (சிலப்.3:12-25,அடியார். மேற்.) அக்கூத்தர் கழையை நட்டுக் கயிறு கட்டி அக்கயிற்றின் மேல் ஆடுவர். "ஆடியற் பாணிக்கொக்கு மாரிய வமிழ்தப் பாடற், கோடியர்’’ (கம்ப. கார்காலப்.33) என்று கம்பரும் இக் கூத்தரைப் பற்றிக் கூறியுள்ளார்.

உடன்போக்கின்கண் நேரும் இடையூறுகளை நீக்கற் பொருட்டு வில்லுடையனாதலின் தலைவனை வில்லோனென்றார்;உதயணன் வாசவத்தையைக் கொண்டு செல்லுகையில் வராகன் என்பவனது கையில் இருந்த வில் முதலியவற்றைப் பெற்றுச் சென்றானென்றும்,பின் தன்னை வளைத்த சவரர் புளிஞரை அவற்றால் வென்றான் என்றும்பெருங்கதையிற் காணப்படும் செய்தி இங்கே அறியற்பாலது. கழல,் வீரத்திற்கும் வென்றிக்கும் தனித்தனியே கட்டப்பட்டனவாதலின் காலனவென்று பன்மையாற் கூறினார்; போர்தோறும் வென்று கட்டின என்பது மாம்; “காலன புனைகழல்” (புறநா. 100:1, விசேடவுரை); " கெழுதகையம்பர் கிழவோன் சேந்தனில், விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய, கழலே யாடவர் கான்மிசை யணிவடம்’’ என்பது திவாகரமாதலின், கொடையின்பொருட்டும் வீரத்தின் பொருட்டும் புனைந்த கழல்கள் என்றலுமாம்.

சொற்பொருள் விளக்கம்
வில்லோன்-வில்லையுயை தலைவன், காலன கழலே- காலில் அணிந்துள்ளது கழல், தொடியோள்- தொடியணிந்த பெண், மெல்லடி – மென்மையான, மேலவும் சிலம்பே - மேலே இருப்பது சிலம்பு, நல்லோர் – நல்லவராய் இருப்போர், யார்கொல் – யாரோ? அளியர் தாமே – இரங்கத்தக்கவர்களே, ஆரியர்-ஆரியர், கயிறாடு பறையில்- கயிற்றில் ஆடுகின்றபோது அடிக்கின்ற பறைபோல, கால்பொரக் கலங்கி – காற்று அலைப்ப நிலை கலங்கி, வாகை வெண் நெற்று – வாகை மரத்தின் வெண்மையான நெற்று, ஒலிக்கும் – ஒலி எழுப்பும், வேய்பயில் - மூங்கில்கள் நெருங்கிய, அழுவம் – பாலைநிலம், முன்னியோரே – முற்பட்டு எழுந்தோர்.

Tuesday, 23 October 2012

உடுக்கள், மங்குல் என்றால் என்ன???

உடுக்கள், மங்குல் என்றால் என்ன???
பாரதிதாசன் எழுதிய இந்த வரிகளை படித்ததுண்டா? 
"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்".
அனைத்து வார்த்தைகளுக்கும் பொருள் தெரியுமா???
"கல் தோன்றி மண்தோன்றா" என்னும் செய்யுள் போல் இந்த வரிகளும் நம் தமிழ் மொழியின் தோற்றத்தைச் சொல்வாதகவே அமைகிறது.இந்த வரிகளில் உள்ள அழகைச் சொல்லியே தீர வேண்டும்
. திங்கள்= நிலா, செழும்பரிதி= கதிரவன். ஆக இங்கு உடுக்கள் என்பது எதனைக் குறிக்கிறது? விண்மீண்கள். அவற்றின் இன்னொரு பெயர் தான் உடுக்கள். அடுத்தாக மங்குல் என்றால் மேகம் என்று பொருள். ஆக சூரியன், சந்திரன், வானம், விண்மீன், மேகம், கடல், என இயற்கையோடு இயற்கையாக பிறந்த தமிழைத் தாய்மொழியாய்க் கொண்டு பிறந்தவர் நாம். இனி உடுக்கள், மங்குல் எல்லாம் நம் வழக்கில் வாழும் தானே???
சுபாஷினி.
செய்யுள் விமர்சனங்கள் தொடரும்.
பி.கு: நாம் இலக்கியச் சான்றாக தமிழ் மொழியின் தோற்றத்திற்கு பாரதிதாசனின் இவ்வரிகளை எடுத்துக்கொள்ளவில்லை.