Showing posts with label வட்டார வழக்குச் சொற்கள். Show all posts
Showing posts with label வட்டார வழக்குச் சொற்கள். Show all posts

Wednesday, 29 March 2017

மொசலடி (பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள்) - 2

இரண்டாடுகளுக்கு முன்பு நத்தமண்டலம் என்னும் பாம்பைப் பற்றி ஊருக்குள் பலரிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் மாமாவுடன் மாமா சொன்னது இது தான். " முன்பெல்லாம் நத்தமண்டலம் அடிக்கடி வரும். இப்பெல்லாம் அதைக் காணோம். மொசலடி, வரிச்சாளினு வேட்டையாடிகளும் வர்ரது இல்லை. கோழி பத்துக்குஞ்சு பொறிக்கும். மொசலடி தூக்கிடும்னு கண்டா விரட்டுவோம். இப்ப மொசலடியும் காணோம், கோழியும் நாலு அஞ்சு குஞ்சு தான் பொறிக்குது. அன்னைக்கு மொசலடி கிட்ட தப்புன குஞ்சுகளை விட இன்னைக்கு பொறிக்கற குஞ்சுகளே குறைவு தான்" என்றார். அது என்ன மொசலடி என்று கேட்கத் தொடங்கிய போது எனது வாழ்வில் பறவைகள் நோக்கும் படலம் தொடங்கியது. அது வரை எனக்குத் தெரிந்த பறவைகளில் எனது மாமா சொன்னதைப் போன்று எந்தப்பறவையும் இல்லை. அதனால் மொசலடியைத் தேடத்தொடங்கினேன்.

அப்பாவிடம் கேட்டால் " தெரியும் பார்த்திருக்கேன் என்றார்", அம்மா "ஓ! அந்த வார்த்தை தெரியுமே" என்றார். சென்ற தலைமுறையில் யாரிடம் கேட்டாலும் மொசலடி தெரியவில்லை என்றாலும் அச்சொல் பரிச்சயமானது என்பதாகவே பதிலுரைத்தனர். எப்படி ஊருக்குள் மொசலடி என்னும் சொல்லையே அதுவரை கேட்காமல் போனேன் என்று வியப்பாய் இருந்தது. பறவைகள் பார்க்கத் தொடங்கிய பிறகு இது என்ன பறவை என்று எளிதாய் தெரிந்துவிட்டது. ஒருமுறை பறவை பார்த்துக்கொண்டிருந்த போது அப்பா என்னிடம் " அதோ பறக்குது பார். அது தான் மொசலடி" என்றார். Black Winged kite என்னும் வேட்டையாடியைத் தான் இப்பெயர் கொண்டு அழைக்கின்றனர். வேறு எந்த இடத்திலும் அப்பருந்துக்கு மொசலடி என்றோ அதற்கு ஒத்த பெயரோ குறிப்பிடப்படவில்லை. இணைய வெளியில் கேட்ட வரையிலும் யாருக்கும் அது என்ன பறவை என்று உறுதியாகத் தெரியவில்லை. அன்று என் அப்பா காட்டிய போது கூட சற்றே ஐயமாகத் தான் இருந்தது, அடிக்கடி பார்க்க முடிகிற பறவை, அப்படியும் எப்படி இந்தப் பெயர் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது என்று புரியவில்லை. பின்னர் நிறைய முறை ஊரில் பறவைகள் பார்க்கும் போது, சென்ற தலைமுறைக்காரர்கள் எல்லாம் என்னிடம் " அதோ! அங்க மொசலடி பறக்குது பார்" என்பர். பின்னர் தெளிவாகவே மொசலடி என்று அவர்களால் குறிக்கப்பெறுவது Black Winged Kite என்று தெரிந்தது.

Black Winged Kite/ மொசலடி

















பெயர்க்காரணம்:

இன்று தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் பெரும்பாலான பறவைகளின் பெயர்கள் அதன் உருவமைப்பையும் நிறத்தையும் பொருத்தே இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல பெயர்கள், இப்படி உருவ அமைப்பைத் தாண்டி அப்பறவையின் (விலங்கின்) பண்பையும் வலிமையையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இது ஒரே நாளில் மொழிபெயர்த்து வழங்கிய பெயராக இருக்க முடியாது, அப்பெயர் மக்கள் வழக்கில் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.
மொசலடி - மொசல் + அடி. மொசல் என்றால் முயல். முயலடி என்பதே மொசலடி என்று திரிந்திருக்கிறது. இப்பறவை உருவத்தில் சிறியது. (35-38 செ.மீ, சராசரியான எடை 291கி). மற்ற வேட்டையாடிகளையும் விட மிகச்சிறியது. கிட்டத்தட்ட சொல்ல வேண்டுமானால் ஒரு முயலின் அளவு தான் இருக்கும், முயலை விடவும் எடை மிகக்குறைவாக இருக்கும். தன்னினும் அதிக எடை கொண்ட முயலை ஒரே அடியில் வேட்டையாடும் திறன் கொண்டது. அதனால் மக்கள் வழக்கில் மொசலடி எனப்பட்டது. அன்றைய மக்களின் அளவுகோல்கள் இவை தான் மழையை உழவால் அளந்தனர். பறவையின் வலிமையை அது இரையாடும் இரையைக் கொண்டு அளந்திருக்கின்றனர். இவ்வகையாக பெயரைக்கொண்டே அப்பறவையின் பண்பையும் உருவையும் வலியையும் இணங்காணுதல் அவர்கட்கு எளிதாய் இருந்திருக்கிறது.

இப்பெயர் பலருக்கும் கேள்விப்படாத பெயராக இருக்கலாம். ஆனால் இவ்வகையான பெயர்கள் வழக்கில் இருந்திருக்கின்றன. தஞ்சை வட்டார வழக்கில் சிறிய வேட்டையாடிகளுள் ஒன்றை "பொறாவடி/ பொறாடி" என்று குறிப்பிடுவதாக பறவை ஆர்வலரான நண்பர் பாண்டியன் ஒருமுறை கூறினார். புறா + அடி = புறாவடி என்பது திரிந்து பொறாவடி என்றாகியிருக்கிறது.

Osprey/ விராலடிப்பான்





































அதே போல Osprey எனப்படும் மீன் பிடிக்கும் பறவையை விராலடிப்பான் என்கிறார்கள். இந்த விராலடிப்பான் மீன் வேட்டையாடும் காணொளிகளைப் பார்த்தால் நமக்கு இப்பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துகிறது என்பது தெரியும். பறந்து கொண்டிருக்கும் போதே தன் இரையான மீனைக் கண்டதும் வேகமாக நீரில் பாய்ந்து இருகால்கள் கொண்டு மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்து மேலெழும்பிப் பறக்கும். இப்பறவை மற்ற மீன்களை வேட்டையாடினாலும் குறிப்பாக ஏன் விரால் மீனின் பெயரையொட்டி விராலடிப்பான் என்று பெயர் பெற்றது எனத் தெரியவில்லை. ஆனால் இரைகொண்டு பறவைகளுக்கு இதுபோன்ற பெயர் வைக்கும் வழக்கம் பரவலாக இருந்திருக்கிறது. இலக்கியங்கள் எதிலும் மொசலடி/Black Winged kite பற்றிய குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

Black Winged Kite/ மொசலடி

















படங்கள்:
1. பறவை ஆர்வலர் அரவிந்த் அமிர்தராஜ் அவர்கள் எடுத்த மொசலடியின் படம். (Black Winged Kite, Sollinganallur, Chennai)
2. கரீபியத் தீவுகளில் நான் எடுத்த விராலடிப்பானின் படம். (Osprey, CocoCay, The Bahamas)
3. எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் நல்லதங்காள் ஓடை நீர்தேக்கத்தின் அருகில் நான் எடுத்த மொசலடியின் படம். (Black Winged Kite, Nallathangal Check Dam, Dharapuram (Tiruppur Dt))

Tuesday, 28 March 2017

பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள் - 1

இக்கட்டுரையில் குற்றம் குறையிருப்பின் குறிப்பிடுங்கள்.

நாம் இன்று மனித வரலாற்றின் ஒரு முக்கிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம் என்றே தோன்றுகிறது. எத்தகைய காலக்கட்டம் என்றால் நாம் பார்த்து வளர்ந்த பறவைகள், விலங்குகள், செடிகள் கூடவே மொழிகளும் அழியும் காலக்கட்டம். பத்தாண்டுகளுக்கு முன் நம்மில் பலரும் சிட்டுக்குருவி அருகிவிடும் என்று கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால் இன்று பல இடங்களில் அது அற்றுப்போய்விட்டது. கிட்டத்தட்ட பல உயிரனங்கள் நமது பகுதிகளில் அற்றுப்போய் சில ஆண்டுகள் கழித்துத் தான் அவை அற்றுப்போய்விட்டன என்றே நமக்குத் தெரியும். பறவைகள் பற்றி, ஊர்வன பற்றி பேசும் போது பலரும் " ஆமா பா.. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு அடிக்கடி கீறிப்பிள்ளையெல்லாம் வரும். இப்ப அத பார்த்தே ஏழெட்டு வருசம் ஆச்சு" என்பார்கள். நீங்களும் கூட சிந்திக்கலாம், கடைசியாக நீங்கள் உங்கள் வீட்டருகில் ஓணானை என்று பார்த்தீர்கள் என்று. நாளையும் அவற்றைப் பார்ப்போமா? தெரியவில்லை. ஆனாலும் நாம் சில பறவைகளையும் விலங்குகளையும் அதிகமாகப் பார்க்கத்தொடங்கிவிட்டோம். புறாக்கள்.. எலிகள்... தெரு நாய்கள்... இது உயிர்கள் அழியும் காலக்கட்டம் என்பதை விட "பல்லுயிர்த் தன்மை" அழியும் காலக்கட்டம் என்பதே சரி. நிற்க..

நாம் இன்று நமது மொழியின் முக்கியமானதொரு காலக்கட்டத்தில் இருக்கின்றோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. எத்தகைய காலக்கட்டம் என்றால் நாம் கேட்டுப் பழகிய சொற்கள் பலவும் அழியும் காலக்கட்டம். சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் வீட்டில் குளியலறையை நீங்கள் வேறேதேனும் சொல் கூறி வழங்கியிருக்கலாம், காட்டாக, நாங்கள் "பொடக்காலி" என்றோம். உண்மையில் இது தமிழில் தமிழ் இலக்கண மரபையொட்டித் தோன்றிய ஒரு சொல். எவ்வளவு நாட்களாக வழக்கில் இருந்தது என்று தெரியாது. ஆனால் இன்று இல்லை. அது எப்படி வழக்கொழிந்து போனது என்றும் தெரியாது. ஆனால் அது நாகரிகம் கருதி "Bathroom" ஆகி, பின்னர் மொழிப்பற்று கருதி "குளியலறை" ஆகிவிட்டது. இப்படியே போனால் ஆயிரம் நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த சொற்கள் சுவடில்லாமல் அழிந்து போய்விடுமே.

பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் ஐயா ஒருமுறை எழுதியதாவது "பாலூட்டி விலங்குகள் 5,416 உள்ளன. உலகில் ஏறத்தாழ 7000 மொழிகள் உள்ளன... அப்படி அவை இரண்டையும் சுட்டிக்காட்ட ஏதும் உட்பொருள் உள்ளதா எனக் கேட்டால். In the next century or so only about some 100-200 languages would survive, it is said. Even among mammals the numbers can be decimated. I just wanted to point out that these (languages and mammals) are only in just a few thousands and they may dwindle down to a few hundreds (both mammals and human languages). Speakers of each language is a community, just like each mammal with its members. When a language dies, it is like a mammal species had become extinct. Rats may be 7 billion but if all the animals on the planet are only just rats, imagine how it would be. If the only flower on planet earth is rose imagine how it would be. Language diversity, animal and plant diversities are all vital. " அவர் அழிந்து வரும் பாலூட்டிகளையும் மொழிகளையும் ஒப்புமை படுத்தியிருந்தார். இதே போன்றதொரு ஒப்புமையை நான் நமது மொழிச் சொற்களுக்கும் நம் மொழி வழங்கி வரும் பகுதிகளுள் வாழும், வாழ்ந்த உயிர்களுக்கும் ஏற்றிக்கூற நினைக்கிறேன்.

நமது மொழியில், நமது மொழி வழக்கில் இருக்கும் பகுதிகளில் வாழும் உயிரனங்களுக்கெல்லாம் பெயரிருக்கும். பெயரென்றால் சும்மா நாம் இட்டுவிடுவதான பெயர்கள் அல்ல. அவை பல நூற்றாண்டுகள் கழிந்த போதும் மக்கள் வழக்கில் வேரூன்றியவை. சங்க இலக்கியங்களில் வரும் பல விலங்குகளின் பெயர்கள் இன்றும் அவ்வாறே வழக்கில் இருக்கின்றன. இது பல பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் உயிர்களின் தொடர்ச்சியைப் போன்றதொரு தொடர்ச்சி. "இவ்வளவு நாட்கள் வழக்கில் இருந்த சொற்கள் இப்பொழுது மட்டும் எப்படி வழக்கொழியும்? மக்கள் வழக்கில் நில்லாமல் போகும் சொற்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கேட்கலாம். பல பில்லியன் ஆண்டுகள் கோலோச்சிக்கொண்டிருந்த உயிரினங்கள் இன்று மனிதனின் வளர்ச்சி மோகத்தால் அழிந்து வருகின்றன. அதற்குக் காரணம் அவை வாழத் தகுதியற்றவை - தக்கது தானே பிழைக்கும் - என்ற காரணம் அல்ல. மனிதனின் மடத்தனம். அதே போலத் தான் இச்சொற்களும், தமிழர்களின் பிறமொழி மோகத்தாலும், வளர்ச்சி, மொழி மேன்மை பெருகிறது என்ற காரணங்களாலும்அழிந்து வருகின்றன. எப்படி இன்று விட்டால் பல்லுயிர்களை நாளை நாமே நினைத்தாலும் மீட்டெடுக்க முடியாதோ அதே போல இன்று விட்டால் இச்சொற்களைப் பேசுவோர் இல்லாமல் அது அருகி அழிந்துவிடும், மீட்க இயலாது.

இப்படி தமிழ்மொழிச்சொற்களையும் உயிரனங்களையும் ஒப்புமை படுத்த முக்கியக் காரணம், உயிரனங்களுக்கான தமிழ்ப்பெயர் தான். மற்ற சொற்களைக் காட்டிலும் இச்சொற்கள் விரைவாக அழியக் காரணம் அவ்வுயிரினங்களும் அழிவதே. முன்னர் எல்லாம் உயிர்வேலிகள் இருக்கும். அவற்றில் பல செடிகொடிகள் இருந்தன. இன்று உயிர்வேலிகளே அற்றுப்போகும் நிலையில் அவ்வேலியில் இருந்த செடிகளின் பெயர்கள் மட்டும் எப்படி நம் வழக்கில் நிலைத்திருக்க முடியும். மீறிப்போனால் பிரண்டை, மொடக்கத்தான் என்று இரண்டு மூன்று செடிகளின் பெயர்களை நம்மால் சொல்லவியலும். மீதமிருந்தவை? அவற்றின் பெயர்கள்? அதில் சில செடிகளைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு மொழித்தொடர்ச்சி, பல பில்லியன் ஆண்டுகள் உயிர்த்தொடர்ச்சி, இன்று எல்லாமும் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கின்றன.

வேதனை என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூலில் தான் வாழும் நிலம் பற்றியும் எந்த எந்த நிலங்களில் எந்த எந்த பறவைகள் வாழும் என்றும் எழுதி வைக்கப்பட்ட ஒரு மொழியில், நூற்றுக்கும் மேற்பட்ட பூக்களின் பெயர்களைத் தொகுத்து வைக்கப்பட்ட ஒரு மொழியில், அகவாழ்க்கை புறவாழ்க்கை என்று எல்லாவற்றையும் குறிக்கும் போது சுற்றி வாழும் காட்டுயிர்களைப் பற்றியும் சேர்த்து எழுதி வைத்தவர்களின் மொழியில் இன்று அச்சொற்கள் அழிவது தான்.  நான் கேட்டறிந்த சில சொற்களையேனும் பதிந்து வைக்க வேண்டும், பின்வரும் சங்கதிகள் படித்துத் தெரிந்துகொள்ளட்டும் என்று தான் சிலவற்றை சேகரித்து எழுதுகிறேன். உங்களுக்குத் தெரிந்தவற்றையும் பதிவிடுங்கள்..

(எனக்குத் தெரிந்த பறவைகள் விலங்குகளின் தமிழ்ப்பெயர்கள் பற்றி இவ்விழையில் தொடர்ந்து எழுதுகிறேன். ).

Thursday, 9 March 2017

ஓர் உழவு மழை

"எங்கபா.. நேத்து மழை பெஞ்சுது.. ஓரொழவு மழையாச்சும் பெய்யும்னு பார்த்தா.. வந்த மழை வாசலைக் கூட நனைக்கலையே பா.."
இப்படி பேசி நீங்கள் கேட்டதுண்டா?
அது என்ன ஓரொழவு மழை?
சிலர் அதற்கு கொடுக்கும் விளக்கம் இப்படியாக அமையும்..
" மழைத்தண்ணி நேரே வேறு எந்த பொருள் மீதும் விழாமல், ஓர் பெரிய செக்கையோ உரலையோ நிறைக்குமானால் அது தான் ஓர் அளவு மழை"
நான் பல நாள் இப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் ஊரில் இருந்த செக்கைக் காட்டி இக்கதையை என்னிடம் சொன்னதாக நினைவு.. பிறகு ஒரு நாள் என் அம்மா என்னிடம் திருத்தமாக அது தவறு என்று சொன்னார்.
" அது ஓர் அளவு மழையில்லை.  ஓர் உழவு மழை. மழை பெய்து முடித்த பிறகு, நிலத்தை உழும் போது ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அது ஓர் உழவு மழை".
இப்படித் தான் மழையின் அளவைக் குறித்திருக்கிறார்கள். அது பின்னால் ஓரொழவு என்று ஓரளவு என்று திரிந்திருக்கிறது..
இதில் நோக்க வேண்டியது என்னவென்றால் இன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு ஒன்றை மொழிபெயர்க்கும் பலரும் "ஒரு" என்ற சொல்லை "ஓர்" என்ற சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்துவது எப்படி நம் மரபு மொழிக்கு சற்றும் ஒத்துப்போகாமல் அன்னியமாய் இருக்கிறது என்று.

பிற்சேர்க்கை:
வாசல் நனைக்கும் மழை, வாசத்தண்ணி வெளிய போகும் அளவு மழை, உழவு மழை, காட்டுத் தண்ணி வெளிய போகும் அளவு மழை - என்ற வழக்காடல்களும் உண்டு.
மழையை ஒட்டிய வழக்காடல்கள் பற்றி இந்து நாளிதழில் ஓர் தொடர் வந்தது.

Saturday, 2 January 2016

கிட்டி - கொங்கு வட்டாரச்சொற்கள்

கிட்டி.
ஆடு கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியின் பெயர் கிட்டி என்பதாகும்.
குறும்பு செய்யும் ஆடுகள் பட்டியைத்தாண்டுவதைத் தடுப்பதற்கு கட்டப்படுவது தான் இந்தக்கிட்டி. வேலியிலுள்ள சிறிய குறுகிய வழியில் ஆட்டால் வெளியில் வரமுடியாமல் இக்கிட்டியானது தடுத்துவிடும்.
இயந்திரங்களில் உலக்கையை உருளையில் இருந்து வெளிவராமல் தடுக்கும் உறுப்புகளுக்கு இப்பெயர் வைக்கலாம் அல்லவா?















இச்சொல்லின் மூலம் தெரியவில்லை. ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் குச்சிகளுக்கு கிட்டியெனப்பெயர் இருக்கலாம். கிடுகிட்டி என்றொரு இசைக்கருவியிருக்கிறது, அதில் இரு இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து கட்டியிருப்பர். படம் கீழே:
(படம்: இணையம்)
எலி பிடிக்கும் பொறி ஒன்றினுக்கும் கிட்டி எனப்பெயருண்டு. அப்பொறியிலும் இரண்டு குச்சிகள் இணைத்துக்கட்டப்பட்டிருக்கும். அதைப்பற்றி தி இந்துவில் வெளியான செய்தியையும் படத்தையும் கிழே காண்க.
இணைப்பு

Monday, 23 November 2015

பொடி நடை

அது என்ன பொடி நடை?
பலரும் இதற்கு "சின்னதா ஒரு நடை போட்டு கொஞ்சம் தூரம் போவது " என்று தவறாக பொருள்  கொள்கின்றனர். பொடி என்னும் சொல்லிற்கு சிறியது என்ற பொருள்  இருப்பதால் இப்படி கருதுகின்றோம்.

பொடி என்ற சொல்லிற்கு கால் பாதம் என்று பொருளும் இருக்கின்றது எங்கள் வீட்டில்  அடிக்கடி சொல்லும் வசனம் "பொடி சுடும் , செருப்பு தொட்டுட்டு வா". அதற்குப்பொருள் "கால்  பாதம் வெயிலால் நோகும். செருப்பு அணிந்துகொள்" என்பது.
பொடி நடை என்றால் வெறுங்காலில் நடப்பது என்று பொருள்.

Monday, 17 August 2015

அட்டாலி

காலை திடீரென்று கோபத்தில் ஒரு சொற்றொடர் நினைவிற்கு வந்தது. " உனக்கு எல்லாம் கொஞ்சம் செல்லம் கொடுத்தா, போய் அட்டாலில உக்காந்துப்ப". முன்னர் ஒருமுறை "வைதல் பாட்டு" என்று இதுபோன்ற சொற்றொடர்களை ஒரு பதிவாக எழுதிய நினைவு வந்தது. அதில் இத்தொடர் விடுபட்டுவிட்டது. அது என்ன அட்டாலி?

"பரண்" இதைத்தான் எங்கள் ஊரில் அட்டாலி என்பார்கள். வேண்டிய வேண்டாத பொருட்களையெல்லாம் போட்டுவைக்கும் இடம்.

"கொஞ்சம் இடம் குடுத்தா தலைல உக்காந்துக்காதா" என்பார்களே, அதே பொருள் கொண்ட தொடர் தான் இது. 

Tuesday, 26 August 2014

கொங்கு மண்டல வட்டார வழக்குச்சொற்கள்.

சமையல் அறை, குளியல் அறை, வரவேற்பறை என்பதெல்லாம் கிட்சென், பாத்ரூம், ட்ராயிங்க் ரூம் போன்றவற்றின் நேரடி தமிழ்மொழிபெயர்ப்பு. இதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்பாட்டில் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத்தொகுக்கும் சிறு முயற்சி.

1. ஆசாரம்

இன்று ஹால், வரவேற்பறை என்றெல்லாம் சொல்லக்கூடிய அந்த நீண்ட முன் பக்க அறைக்குத்தான் ஆசாரம் என்று பெயர். இன்றும் எங்கள் வீட்டில் இந்தச்சொல்லின் பயன்பாடிருக்கிறது.

2. திண்ணை.

இதைப்பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் புறமும் அல்லாமல் அமைந்த ஒரு பகுதி. வருபவர்களை வரவேற்று அமர வைக்கும் பகுதி.

3. சமையக்கட்டு / அடுக்களை / கொட்டம்

சமையலறையை இப்படிப்பல சொற்களால் அழைப்பர்.

பானை, மொடா போன்றவற்றை அடுக்கிவைத்திருந்ததால் அதற்கு அடுக்களையென்ற பெயர் வழக்கில் இருக்கிறது.
வேரொரு அறையோடு இணைந்திருக்கும் சமையலறையை கொட்டம் என்பார்கள். ஆதாவது ஒரு தடுப்பு வைத்து சமைக்கும் இடத்தை மட்டும் பிரித்திருப்பார்கள். அந்த இடத்தைக் கொட்டம் என்பார்கள்.

4. பொடக்காலி 

இன்று குளியலறை என்று சொல்கிறோமோ அதற்கு இணையான தமிழ்ச்சொல் பொடக்காலி.
இது புறக்காணி என்னும் சொல்லின் மரூஉ. வீட்டின் பின்பக்கத்தைப் புறம் என்று சொல்வர். "பொறவுக்கு" என்றால் பின்பக்கம் என்றும், சிறிது நேரம் கழித்து என்றும் பொருள்படும். "பொறகாண்டி" என்ற சொல்லை சதிலீலாவதி படத்தில் நீங்கள் கேட்டிருக்கலாம். அனைத்திற்கும் வீட்டின் பின்புறம் என்றே பொருள்படும். தமிழில் இடக்கரடக்கல் என்னும் ஒரு இலக்கணவகையில் இதுவரும். கைகழுவதல், கால்கழுவுதல் என்பன போன்று இதுவும் குறிப்பால் பொருளுணர்த்தும் ஒரு சொல்.

(நன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும். மேலும் படிக்க: இடக்கரடக்கல் )

5. நடை / நட

இப்பொழுது கேட் என்று சொல்வதின் வழக்குமொழி இது. போன தலைமுறை வரை மதில்சுவர் வைத்த வீடுகளைப்பார்ப்பது கடினம். அப்படி மதில்சுவர் வைத்து அதற்கு ஒரு கதவு போட்டிருந்தால் அந்தக்கதவை நடை/நட என்பார்கள். அத்தகைய வீடுகள் அரிது. அவற்றை "நட வச்ச வூடு" (நடை வைத்த வீடு) என்றழைப்பார்கள்.

இதில் விடுபட்ட சொற்களையும் சேர்த்து வேறொரு நிலைபதிவில் எழுதுகிறேன்.

நன்றி.
சுபாசினி.

Tuesday, 15 July 2014

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்.

இட்டேரிப்பக்கமா நடந்து போனால் இந்தச் சொற்களையெல்லாம் பார்க்கலாம்.
(இட்டேரி??? இப்படி யோசிப்பவர்கள் இந்தப்பக்கமா போய்ப்பாருங்க- இட்டேரி).

1. கடவு. 

சில சமயம் தோட்டத்தைச் சுற்றி வேலி நீண்டுகொண்டே போகும். ஒரு கல் தொலைவெல்லாம் தாண்டி தான் வழியிருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் வேலியில் கொஞ்சம் முள்ளை நீக்கி ஓட்டை போட்டு அந்த வழியைப் பயன்படுத்துவார்கள். (By-pass). இதற்குக் கடவு என்றுபெயர்.














2. தொக்கடா.

"இது என்ன இந்தியன் படப்பாடல் வரிமாறி இருக்கே" என்று சோசிக்காதீர்கள். இதுவும் ஒரு அழகான சொல். நாம் மட்டும் தான் கடந்து போக வேண்டும், கால்நடைகள் கடக்கக் கூடாது. அப்பொழுது என்ன செய்வது? மனிதர்கள் மட்டும் தாண்டும் வகையில் பட்டியில் ஒரு வழி அமைத்துவிடுவார்கள் (இடுப்பு உயரத்திற்கு கீழ் வழியில் கட்டை கட்டி அடைத்துவிடுவார்கள்.) இதற்குத் தொக்கடா என்று பெயர். ஆடு தாண்டாத என்று கேட்கலாம். ஆடுகளின் கால்களைக் கட்டிவைத்திருப்பார்கள் (முன்னங்காலில் ஒன்றோடு பின்னங்காலின் எதிர் பக்கக் காலோடு சேர்த்து அதனை விரைந்து ஓடாமல் கட்டி வைப்பார்கள்). அதனால் அவற்றால் தாண்ட முடியாது.

3. தொண்டுபட்டி.

பட்டிகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது இச்சொல் நினைவிற்கு வந்தது. சுற்றி வேலியால் அடைத்த பகுதியில் இரண்டொரு மாடு ஆடு வைக்கற்போர் வைக்கக் கொஞ்சம் இடம், ஒரு குட்டிச் சாலை, இப்படி இருக்கும் இடத்தை தொண்டுபட்டி என்பார்கள். (மற்ற வட்டாரங்களில் எதைத் தொண்டுபட்டி என்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை).
















4. வெள்ளதாரை.

sink / wash basin என்றெல்லாம் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது சலதாரை என்னும் சொற்பயன்பாடு அழிந்துவருவதைக் கண்டேன். சலம்- வடமொழி என்பதாலோ என்னவோ அது வழக்கொழிந்து போவதில் எனக்குப் பெரிதாய்க் கவலை ஏதுமில்லை. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது என் அம்மா வெள்ளதாரையைப் பற்றி நினைவுபடுத்தினார்.

மழை பெய்யும் போது தோட்டங்காடு, புன்செய் நன்செய் என்றிருக்கும் இடங்களில் மழைநீர் ஓடும். ஓடை, ஆறு இவற்றில் சேர்க்கமுடியாத நீர் போகும் பாதையை வெள்ளதாரை என்பார்கள். இங்கும் அடித்துவரப்பட்ட மண் சேர்ந்திருக்கும். அங்கு எந்தச் செடிகளும் வளர்வதில்லை. எல்லா நாளும் நீர் போகாமல் அடைமழை காலங்களில் மட்டும் நீரோடும் வெள்ளதாரையைச் சிறு வயதில் கண்டிருக்கிறேன். அதிலும் நீர் இருக்கும் போது கண்டதாய் நினைவில்லை. நீரின் தாரையை மட்டுமே கண்டிருந்தேன். என் அம்மா அவர்களின் சிறுவயது நினைவிகளைப் பகிர்ந்தபோது அங்கு சென்று பலரும் துணிதுவைத்ததாகக் கூறினார். ஒருமுறை மீண்டும் சென்று அந்தத் தாரையாவது இருக்கிறதாவென்று பார்த்துவர வேண்டும்.

இதெல்லாம் எங்கள் வீட்டிற்குப்பின்னால் இருக்கும் இட்டேரியில் எடுத்த படங்கள்.

















இதேபோல் இன்னும் கொஞ்சக் கொஞ்சும் வட்டாரவழக்குச்சொற்களோடு மீண்டும் எழுதுகிறேன்.
அன்புடன்
சுபாசினி.


Sunday, 16 March 2014

வைதல் பாடல்

வீட்டில் திட்டுவதில் கூட பாரம்பரியம் இருக்கத் தானே செய்கிறது!!!

இது கொஞ்சம் ஓவர்னு நினைக்காதீர்கள். உண்மை தான்...

இது என்ன புதுசா, நடவுப்பாட்டு ஏற்றப்பாட்டு போல வைதல் பாட்டா??

அப்படிக் கூட வைத்துக்கொள்ளலாம்.
அதற்காக ஊர்க்குழாய் அடியில் சண்டை போட்டுக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட வரிகளில் பாரம்பரியமா என்று எண்ண வேண்டாம். (அதில் கூட பாரம்பரியம் இருக்கலாம்)..

நம் அம்மா திட்டும் வரிகளில் கொஞ்சம் ஊர்ப் பழக்கமும், குடும்ப வசனங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
பல வரிகள் என் அம்மாச்சியிடம் இருந்து ஜீனில் வந்தவை தான்... யோசித்துப் பார்த்தால் உங்கள் வீட்டிலும் இப்படியாக ரெடிமேட் வசனங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

என் அம்மா கோபம் வந்தால் "புள்ளை இல்லாட்டி போகுதுனு சுருக்குட்டுத் தூக்கிட்டு ஏனோ செத்துப் போச்சுனு சொல்லிடுவேன்" என்பார். சின்ன வயதில் இந்த வசனம் எனக்கு திகிலூட்டப் போதுமானதாக இருந்தது. "போலீஸ் சம்சாரமா இருந்திட்டு அம்மாக்கு போலீஸ் கொலை கேசுல பிடிச்சுடுவாங்கனு பயம் அம்மாக்கு கொஞ்சம் கூட இல்லயா" என்று சந்தேகம் வர என் அப்பாவிடம் சென்று " சுருக்குட்டு தூக்குனா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கண்டு பிடிக்க முடியாத டாடி" என்று கேட்டேன். (நாலவது படிக்கற என் பொன்னுக்கு எவ்வளவு அறிவு என்று எண்ணி) அவர் சிரித்துவிட்டு "கண்டு பிடிச்சடலாம்" என்றார். அன்றிலிருந்து என் அம்மா அதை சொல்வதை குறைத்துக் கொண்டார். இது ஏதோ என் அம்மா சொல்லும் வசனம் தான் என்ரு நினைத்துக்கொண்டேன். பிற்பாடு தான் தெரிந்தது என் பக்கத்துவீட்டு அண்ணாவின் (அவருக்கே இப்பொழுது குழந்தை உள்ளது) இதை விட பரிதாபம். "அவங்க அம்மா கதவை சாத்தி சேலைய சாரத்துல போட்டு, அவன அண்டா மேல ஏத்தி 'சுருக்கு போடட்டுமானு கேட்டா' அவன் அழுதுட்டே இருந்தான், அப்பறம் அவங்க பெரிமா பெரிப்பா எல்லாம் வந்து அவங்க அம்மாவ திட்டி பையன கூட்டிட்டு போனாங்க" என்று பக்கத்து வீட்டு அத்தை நினைவில் திளைக்கும் போது தான் தெரிகிறது "சுருக்குட்டு தூக்கறது" எங்கள் ஊரின் யுனிவர்சல் டைலாக் என்று. சிலர் அதனை சோதனை செய்து பார்க்கும் அளவு கூட சென்றிருக்கிறார்கள்.

தோசைக்கு சாம்பாரும் தேங்காய் சட்டினியும் வைத்திருக்கும் போது " என்னங் மா!!! புளிச் சட்னி இல்லயா?" என்று கேட்டால் இந்த பதில் தான் கிடைக்கும் "இத விட இல்லைனாலும் நீ எல்லாம் எமன பலகாரம் பண்ணி எதுத்தவூட்ல சங்காரம் பண்ணிடுவ".... இது எங்கள் பாட்டி சொல்லி என் அம்மாவிற்கு தொற்றிக் கொண்ட பழக்கம் தான்.

"உங்கத் திங்கத் தான் செல்லம், ஊடெல்லாம் இரைக்கவுமா செல்லம்???" எந்த பொருளையாவது உடைத்தாலோ கீழே போட்டாலோ வரும் ரெஃப்லெக்டிவ் ரியாக்சன் இது. ஆனால் இவை ஆழம் பொருந்திய வரிகள். இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு செல்லம் தர வேண்டும் என்று உணர்த்தும் வரிகள்.

சின்ன குறும்பு செய்யும் போது எல்லாம் என் அம்மாவும் சித்தியும் " இப்படியே பன்னுன மிளகா பிடிச்சுவிட்டுருவென்" என்பார்கள். அது என்னடா "மிளகாய் பிடிக்கறது" என்று ஆராய்ந்து பார்த்தோமானல்... ஒரு படியிலே (ஆழாக்கில்) அடுப்புத் தனலைப் போட்டு அதன் மேல் மிளகாயை போடுவது.. அந்த மிளகாய் என்ன காரநெடி அடிக்கும்.. அய்யோ சாமி... நல்ல வேளை எங்கள் வீட்டில் படியும் இல்லை, விறகடுப்பும் இல்லை... இதையெல்லாம் படித்துவிட்டு "என்னமா வன்முறைய வளர்க்கறயா" என்று கேட்காதீர்கள். இதெல்லாம் சும்மனாச்சிக்கு குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்பட்ட பூச்சாண்டிக் கதைகள். எனினும் இவை நாட்டுப்புறப் பாடல் போல் சிற்றூர்களில் பரவிக்கிடந்தன.

பலவும் வழகொழிந்து வரும் நிலையில் இந்த வைதல் பாட்டும் மறந்து கொண்டு தான் வருகிறது. அம்மாக்களும் பாட்டிகளும் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். நாகரிகம் கருதியோ, மனநிலையாக குழந்தைகளை இத்தகைய வசனம் பாதிக்கும் என்று எண்ணியோ, இல்லை புது வசனம் ஒன்று கிடைத்தோ, நாளை நான் என் பிள்ளைகளை "Mind what you are doing" என்ற ரேஞ்சுக்கு குறைத்துவிடக்கூடும். என்ன சொல்லுங்கள், சும்மனாச்சிக்கு பயம்காட்ட சொல்லப்படும் இத்தகைய வரிகள் என்றுமே மணம் வீசுகின்றன தான்.

பி.கு.: உங்கள் வீட்டிலும் இப்படியாக இருக்கும் பாரம்பாரிய வைதல் பாடல்கள் பற்றி நிச்சயம் பின்னூட்டம் இடுங்கள். நன்றி.

Friday, 12 July 2013

கொங்கு மண்டல வட்டார வார்த்தைகள்

சில வார்த்தைகள் தமிழ்நாட்டில், தமிழில் பிறந்து தமிழிலேயே வழக்கொழிந்து போகின்றது. ஆங்கிலம் வருவதற்கு முன்பிருந்தே இவை இங்கு வழக்கில் இருந்தன. அப்படி வட்டார வழக்கில் இருக்கும், இருந்த வார்த்தைளில் சில இங்கு.

1. யேனம் - சமையல் பாத்திரங்களை இப்படிச் சொல்வார்கள்.
2. வட்டல் - உணவு சாப்பிடும் தட்டை மட்டும் வட்டல் என்பார்கள். மற்ற வட்ட வடிவில் அமைந்த எந்த தட்டுகளையும் இப்படிச் சொல்வதில்லை.
3. தாட்டிவிடு - அனுப்பிவை என்பது இதன் பொருள். ( தாட்டிவிட்டேன் - அனுப்பிவைத்தேன்)
4. சேந்துதல் - கிணற்றில் நீர் எடுப்பதை இப்படி சொல்வார்கள் (தண்ணீர் சேந்துனேன்)
5. மாட்டுதல் - சண்டை போடுதல், திட்டுதல் ( அம்மா என்ன மாட்டுவாங்க, திட்டுவாங்க என்ற பொருளில் இது வரும்)
6. சந்தகை - இடியாப்பம்.
7. கோசாப் பழம்- தர்ப்பூசனி.
மீண்டும் சில வார்த்தைகளோடு வருகிறேன்.

Sunday, 24 February 2013

மாடக்குழி

நாட்டார் வழக்கில் இருந்து இதோ ஒரு அழகிய தமிழ் சொல்.. "மாடக்குழி". shelf என்னும் ஆங்கில சொல்லுக்கு பல மொழியாக்கங்கள் இருக்கின்றன. அலமாரி என்று அகராதிகள் சொல்லும் போதும், அலமாரி தமிழ் சொல் இல்லை, கிழக்கிந்திய நிறுவனங்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு அவர்களோடு வந்த சொல். 'அடுக்கு' என்றும் சொல்லலாம். இது கூட ஆங்கில மொழிபெயர்ப்பே அன்றி, இணையான தமிழ் சொல் என்று கொள்ள முடியாது. எனவே யூரோப்பிய மொழிகளின் வருகைக்கு முன் தமிழர்கள் அதை எப்படித் தான் வழங்கியிருப்பர்?? இதோ இப்படியும் வழங்கியிருக்கின்றனர். "மாடக்குழி".. விளக்கு மாடம், திண்ணை மாடம் என்னும் வரிசையில் இதுவும் இருந்திருக்கின்றது

Sunday, 11 November 2012

இட்டேரி...

இரண்டு முள் வேலிகள் நடுவே செல்லும் வழியினை இட்டேரி என்பர். அதவாது இரண்டு பக்கமும் முள் வேலியும் கற்றாழையுமாக படை சூழ நடுவே போகும் மண்பாதை தான் இட்டேரி. வண்டிகள் செல்லும் வகையாக இது இருக்கும். கொங்கு மண்டல சிற்றூர்களில் வழக்கில் இருக்கும்(இருந்த) ஒரு வார்த்தை இது. இட்டாரி என்றும் சொல்வர். இட்டேரிகளே அழியும் நிலையில் இந்த சொல்லும் அழிந்து போகும்.