ASOIAF தொடர் படித்திருக்கிறீர்களா? நான் GoT நாடகத்தொடர் பற்றி சொல்லவில்லை. அதன் மூல நூலைப் பற்றிச் சொல்கிறேன். முதல் நூலில் ஒரு கதை மாந்தரை நீங்கள் நேசித்திருப்பீர்கள். இரண்டாம் நூலில் அவரை நீங்கள் வெறுக்கத் தொடங்கியிருக்கலாம். மீண்டும் மூன்றாம் நூலில் அவரை நேசிப்பீர்கள். கெட்டது செய்பவர்கள் மீது கூட துளி ஈவு வரும் நமக்கு. இத்தனைக்கும் மார்டின் தனது கதைமாந்தர்கள் செய்யும் தவறுகளை ஒருவிடத்தில் கூட நியாயப்படுத்தி இருக்க மாட்டார். இன்னார் புனிதர் இன்னார் தீயவர் என்று வெளிப்படையாய் யாரையும் கொண்டாடியும் தூற்றியும் இருக்க மாட்டார். என்னால் ஒரு கதைமாந்தராக அதில் யாரை வேண்டுமானாலும் இரசிக்க முடியும், அவர்கள் செய்யும் தவறுகளை தவறு என்று உரைக்கவும் முடியும். அவர்களின் தவற்றை நியாயப்படுத்தாமல் படித்துவிட்டு கடந்து செல்ல முடியும். இதையே தான் நான் பாரதக்கதை, இராமயணக்கதை படிக்கும் போதும் எதிர்பார்க்கிறேன். தருமன் தவறு செய்கிறான், இராமன் தீங்கிழைக்கிறான்... இவர்களை நியாயப்படுத்த வேண்டிய தேவையென்ன? அவர்களின் தவற்றோடு சேர்த்து அவர்களை அப்படியே புனிதர்களாக அவர்களைப் போல வாழ வேண்டும் என்று மதப்பரப்புரை செய்ய வேண்டிய தேவையென்ன?
பாண்டவர்கள் ஒரு பெண்ணை பிச்சையென்கிறார்கள், மூத்தவன் அவளைப் பணையம் வைக்கிறான்; அவள் துகிலுரிக்கப்படும் போது சபையே வேடிக்கை பார்க்கிறது.. இது ஒரு கதைக்களம், படிக்கலாம், இரசிக்கலாம், அழுகலாம்.. ஆனால் இவர்களை எனது வரலாறாகவும் தெய்வங்களாகவும் ஏற்க வேண்டிய தேவையென்ன?
ஊரில் இருக்கும் பெண்களிடம் எல்லாம் அத்துமீறி விளையாடுபவன் ஒரு பெண்ணுக்கு சேலை கொடுத்ததும் தெய்வம் ஆகிவிடுகிறான். இது ஏதோ ஒரே போராட்டத்தில் பாலாஜி புனிதனானது போலவல்லவா இருக்கிறது. இருக்கட்டும். கதையில் அவன் தலைவனாக இருக்கட்டும், இரசிக்கலாம், கண்ணனை நினைத்து உருகிப் பாடிய பாடல்களை நானே இரசித்திருக்கிறேன்.. ஆனால் இவர் தான் என் கடவுள் என்று ஏற்க வேண்டிய தேவையுமில்லை, அவன் செய்த தவறுகளை நியாயப்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை.
சிக்கல் எங்கு தொடங்கிறது என்றால், கருவுற்ற தன் மனைவியை காட்டுக்கு அனுப்பும் இராமனை போன்று ஆண்மகன்கள் இருக்க வேண்டும் என்று சித்தரிக்கப்படுவதில் இருந்து தான். அவன் செய்த இந்த செயல் தவறு என்று கூடப்பலருக்கும் தோன்றுவதில்லை. காரணம் வீட்டுப் பெண்கள் என்பவர்கள் தியாகம் செய்யப்பட வேண்டியவர்கள், கன்னிகா தானம் என்று சொல்லி பிச்சையாக கொடுக்கப்படும் பொருட்கள் என்று பல காலம் இவை நியாயப்படுத்தப் பட்டிருக்கின்றன.
இக்கதைகள் எல்லாம் அவை எழுதப்பட்ட காலத்தில் சிறந்த நூல்கள், கற்பனைகள், பொழுதுபோக்க வேறு வழியில்லாத மக்களுக்கு நல்ல பொழுதுபோக்குகள். அவற்றோடு நிறுத்திக்கொள்ளலாம்.
பங்காளி சண்டைக்காக பொதுமக்களை போரில் கொன்று வீழ்த்தியவர்களின் ஆட்சியைப் போன்றதொரு ஆட்சியமைய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். அவ்வாட்சியில் திரவுபதிகளுக்கும் ஏகலைவன்களுக்கும் இடமில்லை, கோபியர்கள் எல்லாம் போக்கத்தவர்கள்.. அது அருச்சுனன் கண்ணன் போன்ற மேட்டுக்குடிகளுக்கும் ஆண்களுக்குமான சிறப்பு சலுகைகள் கொண்ட ஆட்சி அவ்வளவு தான். அதில் உங்களுக்கும் எனக்கும் கீழினும் கீழான இடம் தான் கிடைக்கும், அப்படி ஒரு இடத்தில் நம்மை வைப்பதை ஊழின் பெயரையும் தியாகத்தின் பெயரையும் கொண்டு செய்வார்கள்.
நான் ஐந்தாம் வகுப்பில் இருந்து பாரதக் கதையை விரும்பி படித்துள்ளேன், கதையளவில் எத்தனை முறையானாலும் படிக்கலாம், ஆனால் அதை வரலாறாகவோ, எனது மத போதனையாகவோ ஏற்க முடியாது! பாரதத்தையும் இராமயணத்தையும் வெறும் கதைகள் என்ற அளவில் விட்டுவிடலாம்.
No comments:
Post a Comment