Friday, 3 March 2017

புற்றீசல்- புத்தரச்சல் (ஊரும் பெயரும்)

அக்டோபர் 31 ஆம் நாள் அன்று அலுவலகத்தில் நீண்ட விடுமுறை வாங்கிக்கொண்டு நான் ஊர் திரும்பிய நாள். திருமணத்திற்கு விட்டுப்போன பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். வழியில் ஓரிடத்தில் ஈசல்கள் வந்து வண்டியில் மோதத் தொடங்கின. ஈசல் என்றால் ஒன்று இரண்டு எல்லாம் கிடையாது. ஒரு பெரும்படை. கிட்டத்தட்ட முக்கால் கல் தொலைவிற்கு இதே போல ஈசல்கள் பறந்து கொண்டிருந்தன. ஈசல் மழையெனலாம், பொழிந்து கொண்டிருந்தது. பயமுருத்தும் அளவிற்கு இருந்தன. அவற்றைக் கடந்து வந்ததும் நாங்கள் வந்த வாடகை வண்டியின் ஓட்டுனர் வண்டியை நிறுத்தி பொலம்பிக்கொண்டே கண்ணாடியைக் கழுவினார். " இவ்வளவு ஈசலை நான் பார்த்ததேயில்லை" என்று அவர் சொன்னார். ஆமாம். பலமுறை ஈசல் கூட்டத்தைப் பார்த்திருந்தாலும், இது போன்று பார்த்ததில்லை. குண்டடம் என்னும் ஊரில் வசிக்கும் போது தான் அதிக முறை ஈசல்களைப் பார்த்திருக்கிறேன். இது விந்தையாக இருந்தது. அச்சாலையில் கிட்டத்தட்ட ஏழாயிரம் முறை பயணித்திருக்கிறேன். 3000 முறைக்கும் மேல் மாலை வெயில் மறைந்து பின்பு சென்றிருக்கிறேன். ஒருமுறை கூட இது போலப்பார்த்ததும் இல்லை, யாரும் சொல்லிக் கேட்டதும் இல்லை. என்னை கோவை ஈசல் மழை தூவி வழியனுப்புகிறது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இது ஒருவேளை சாதாரண நிகழ்வாகவும், பலர் பலமுறை பார்த்த ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால் என்னை வியக்க வைத்தது ஈசல்களை கண்ட ஊரின் பெயர் தான். புத்தரச்சல். பல்லடம்- தாராபுரம் சாலையில் அமைந்த ஊர். இவ்வூருக்குப் பெயர் வந்த காரணங்கள் ஆயிரம் சொல்லப்படுகின்றன. ஆனால் ஒருவர் கூட ஈசல் பற்றி சொன்னதில்லை. ஒவ்வொரு முறையும் இந்த ஊரின் பெயரை ஊரார் பேருந்தில் சொல்லும் போது அது கிட்டத்தட்ட " புத்தீசல்" என்பதாகவே காதில் விழும். எல்லா ஊரின் பெயர்களைப் போலவும் வரிவடிவில் இருக்கும் பெயரை விடவும் மக்கள் வழக்கில் இருக்கும் பெயர் மாறுபட்டது. ஒரு வேளை இதிலிருந்து தான் அவ்வூருக்குப் பெயர் வந்திருக்கலாம். என் ஊகம் தவறாக இருக்கலாம். அறியேன். 

1 comment:

  1. புற்று இரைச்சல் என்பது புத்தரச்சலாக மருவியது. புத்தெரிச்சல் என்றும் சிலர் எரிச்சலோடு குறிப்பிடுகிறார்கள். அதாவது ஊரே தீவிபத்தில் எரிந்து போனதாகவும் அதனால் தான் தாராபுரம் சாலையில் இருந்த ஊர் மக்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து இப்பொழுது ஊர் இருக்கும் இடத்தில் குடியேறியதாகவும் கதை உலவுகிறது. எப்படியாயினும் எமது தாய்மண் என்ற எண்ணமே எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது

    ReplyDelete