Showing posts with label சங்க இலக்கியக் காதல். Show all posts
Showing posts with label சங்க இலக்கியக் காதல். Show all posts

Saturday, 11 August 2018

சங்க இலக்கியக் காதல் - கைகூடிய திருமணம்

சில (8) மாதங்களுக்கு முன்பு 'யாரு மில்லைத் தானே கள்வன்' என்று தொடங்கும் சங்க இலக்கியப் பாடல் ஒன்றைப் பற்றி விரித்து எழுதியிருந்தேன். மறுநாள் என் உற்ற நண்பன் எனக்கு தமிழும் ஆங்கிலமும் கலந்து உணர்ச்சி பொங்க எழுதிய தனிமடலின் சுறுக்கத்தை தமிழில் எழுதுகிறேன்: 'சுபா! குருகு சாட்சிக்கு நின்ற பாடலைப் படித்ததும் மனம் என்னவோ செய்தது. எனது காதலில் என் பக்கச்சிக்கலையே எண்ணிக் கொண்டிருந்தேன். என் காதலி மணம் புரிவதைப் பற்றிப் பேசும் போதெல்லாம் என் சிக்கல்களே கண் முன் வந்து போகும். ஆனால் அப்பாடலைப் படித்த பின்பு தான் அவள் படும் துயர் எவ்வளவு என்று உணர்ந்தேன். அச்செய்யுளின் தலைவிக்காவது சாட்சி சொல்ல குருகு இருந்தது. ஆனால் நான் என் காதலியை மணந்து கொள்ளவதாய்ச் சொன்ன அன்று, அங்கே குருகும் கூட இல்லை. அவளின் துயர் இன்னும் எவ்வளவு பெரிதாய் இருக்கும். அவள் அப்பாவிடம் இன்று தான் பேசினேன், நாளை அவளது வீட்டிற்குச் செல்கிறேன்.'

8 மாதகாலப் போராட்டத்திற்கு பிறகு நேற்று மீண்டும் அழைத்து தனது திருமணம் கைகூடியது என்று அவன் சொன்ன போது கண்கள் கலங்கிவிட்டது. மணம் கூடிய செய்தி அவன் காதலிக்கு எவ்வளவு உவப்பாய் இருந்திருக்கும்!!

இதோ தலைவன் தன் சுற்றத்தை அழைத்துக் கொண்டு மணம் பேச வருகிறான், தன் வீட்டார் சம்மதிப்பரோ என்று ஐயுற்றிருந்த தலைவியிடம் அவளது தோழி 'உன் வீட்டாரும் சம்மதித்தனர்' என்று கூறும் ஒரு குறுந்தொகைப் பாடல்.

'வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
- அம்மூவனார்.'

எளிய உரை:
இங்க பாருடி! உன் ஆளு அவன் சொந்தத்தோட வந்து உன்ன பொண்ணு கேட்டாங்க, உங்க ஆளுங்களும் சரினு சொல்லிட்டாங்க. இனி ஊர்ல யாரு உங்களப் பத்தி பொறணி பேசறாங்கனு பார்ப்போம்.

நீண்ட உரை:

வளையள்கள் அணிந்த பெண்ணே! நான் மகிழ்ந்திருக்கிறேன். ஏன் தெரியுமா? வளையில் வாழும் விரைந்து ஓடும் வலிய கால்களையுடைய நண்டுகள் தங்கள் கூர்மையான நகங்களால் கீறி ஈர மணலில் ஓடும் ஊற்றினை சிதைக்கின்றன, அத்தகைய கரையை உடைய இழும் இழும் என்று பேரொலி எழுப்பும் கடலை உடைய நெய்தல் நிலத் தலைவனுக்கு நம் உறவினர் உன்னை மணம் முடிப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளனர். விரிந்த பூக்களை உடைய புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்த மீன் வாசம் அடிக்கும் ஊரில் வாழும் அவனது நாட்டுப் பெண்கள் எல்லாம் இனியும் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுவார்களோ?

கொஞ்சம் ஆராயலாம்:
பல உரைகள் பலவிதமாய் சொற்களுக்கு பொருள் தருகின்றன. வளை என்பதற்கு வளைந்த என்றும், மலிர் என்பதற்கும் பலவாறு விரித்துப் பொருள் கூறுகின்றன. ஆனால் என்னால் அவற்றோடு உடன்பட முடியவில்லை. அதனால் கொஞ்சம் நான் கொஞ்சம் மாற்றிப் பொருள் கொண்டு படிக்கிறேன்.

"விரைவுறு கொடுந் தாள் அளை வாழ் அலவன்"  அலவன் என்றால் நண்டு. விரைந்து ஓடக்கூடிய வலிமையான கால்களையுடைய வளையில் வாழும் நண்டு. இது தலைவின் நிலையை உணர்த்துகிறது. அவளது மனம் வலிமையாய் இருக்கின்றது, தலைவனை நினைத்து நித்தமும் அலைந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் வீட்டில் (வளையில்) அடைபட்டுக்கிடக்கிறது.

"இழுமென உரும் இசைப் புணரி உடைதரும்" புணரி என்றால் கடல். இழும் இழும் என்று பேரொலியை எழுப்பும் கடலையுடைய நாட்டின் தலைவன். இந்தக் கடலின் இழும் இழும் என்னும் ஒலியைப் போலத் தான் அவளைப் பற்றி அவர்கள் நாட்டு மக்கள் பேசும் வசையும் அவள் காதில் பேரிடியாய் விழுகிறது. அதனால் தான் அவள் மனமும் மேலே சொன்னது போல நண்டாய் அங்குமிங்கும் அலைமோதுகிறது. அப்பெரிய கடலில் இச்சிறிய நண்டு என்ன செய்யும் பாவம்?

"அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய," உகிர் என்றால் நகம். சிறிய நண்டினால் கடலை எதிர்த்தும் அதன் கரையை எதிர்த்தும் என்ன செய்ய முடியும்? அந்த நண்டு தன் கூரிய நகத்தினால் ஓடுகின்ற ஊற்றின் ஈர மணலை வரித்து வரித்தே புரட்சி செய்கிறது. தன்னால் இயன்ற வரை போராடுகிறது. இது தலைவியின் மனநிலையையும், தலைவன் போராடி இருவீட்டாரையும் திருமணத்திற்கு ஒப்புதல் தர வைத்தலையும் குறிப்பாக அழகாகச் சொல்கிறது.

"விரிஅலர்ப் புன்னை"- விரிந்த மலர்களையுடைய புன்னை என்றிருக்கலாம் புலவர். ஆனால் மலர்ந்த என்பதற்கு அலர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அலர் என்பதற்கு காதலர்களைப் பற்றி ஊரில் நான்கு பேர் நான்கு விதமாய்ப் பேசும் வசவு என்ற பொருளும் உண்டு. இவ்வரி அவர்களைப் பற்றிய அலர் பேச்சுக்கள் எப்படி ஊரில் விரிந்து ஓங்கிப் பெருகியிருக்கிறது என்று காட்டுகிறது.

சொல்ல வந்ததை இழுத்து மெதுவாய்ச்சொன்னாலும், தொடக்கத்திலேயே தான் மகிழ்ந்திருப்பதை தோழி சொல்வது, சொல்லி முடிப்பதற்குள் அவள் படப்போகும் துயரைக் குறைப்பதற்கானது. 

ஒவ்வொரு சொல்லிலும் அவ்விணை எவ்வளவு துயரங்களையும் அவப்பேச்சுக்களையும் தாண்டி மணம் புரிகின்றனர் என்பதை ஆழமாய்க் காட்டியிருக்கிறார் புலவர்.

என் நண்பனுக்கு!
உன் திருமணச்செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியினை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பதிவு பிடிக்கவில்லை என்றால் மன்னித்துவிடு!

Thursday, 7 December 2017

சங்க இலக்கியக் காதல் - புதரும் குருகும் காதலர்களும்

தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். தலைவன் திரும்பத் தலைவியைப் பார்க்க வரவில்லை. புலம்பத் தொடங்குகிறாள் தலைவி. "ஐயோ. சாட்சிக்கு கூட யாரும் இல்லையே. அன்னைக்கு ஒரு குருகு பார்த்துச்சே. அதுக்கு தெரியும் நாங்க காதலிச்சது" என்பாள். ஆமாங்க பள்ளியில் படித்த கபிலரின் பாடல் தான்.
குறுந்தொகை 25:
யாரு மில்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தா ளன்ன சிறுபசுங் காலஒழுகுநீ ராரல் பார்க்கும்குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.
குறிஞ்சி - தலைவி கூற்று
கூற்று: வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்: கபிலர்
விளக்கம்:
அன்று வேறு யாருமே இல்லை. அவன் மட்டும் தான் இருந்தான்,  கள்வனும் அவன் தான் ( குற்றம் சாட்டப்பட்டவன்). அவன் பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன். நாங்கள் மணந்த அன்று ஒரு குருகு மட்டுமே இருந்தது.
"அதுக்கு இப்ப என்ன? அதான் பள்ளிக்கூடத்தில் படிச்சது தானே" என்கிறீர்களா?
ஆம். இந்தப் பாடலைப் படிக்கும் போது பள்ளியில் என் மனக்கண் முன் விரிந்த காட்சி இப்படி இருக்கும் : பிரபலப் பத்திரிக்கைகளில் வரும் அந்தக் காலத் தலைவிகளைப் போல இந்தத் தலைவியும் ஓர் தடாகத்தின் அருகில் அமைந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருப்பாள். நீரின் அருகே ஓர் குருகோ கொக்கோ நாரையோ நிற்கும், நீரில் இரண்டு தாமரை இருக்கும். மற்றபடி அது வால்பேப்பர் படம் போல பளிச்சென்று இருக்கும்.
ஆனால் இன்று அந்தப் பாடலைப் படிக்கும் போது கண்முன் விரியும் காட்சி வேறு.

ஏன் குருகுகள்? கிளியோ மயிலோ குயிலோ சாட்சிக்கு வராதா? இல்லை அவர்கள் சந்தித்த இடங்களில் அப்பறவைகள் இல்லையா?
பொதுவாக இந்தக் குருகுகள் புதர்களுக்கு இடையே இருக்கும், காண்பதற்கு அரிதான இடத்தில் மறைந்து இருக்கும். நிற்க. இப்பொழுது பாட்டை நோக்குங்கள். அன்றைய தலைவனும் தலைவியும் இப்படி யாரும் இல்லா புதர்கள் நிறைந்த பகுதிகளில் (புதர்களிலும்) தான் சந்தித்திருக்கிறார்கள்.
இன்னொன்று குருகுகள் எப்படி மறைந்து மறைந்து பயந்து பயந்து வாழ்கிறதோ தலைவனும் தலைவியும் அப்படித் தான் மறைந்து பயந்து காதலித்திருக்கிறார்கள். அதனால் தான் அவளுக்கு குருகின் நினைவு வருகிறது.

பசுவிற்கே நீதி வழங்கிய சோழன் கதை இருக்கிறதே, சரி இழுத்து பிடித்து அந்தக் குருகை சாட்சி சொல்ல அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தால் அங்கு தான் சிக்கல். குருகுகளால் தொண்டை வளையில் இருந்து எந்த ஒலியும் எழுப்ப முடியாது, சாட்சியும் சொல்லாது. அது மௌனமாக அவர்கள் காதலித்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்பொழுது தெரிகிறது அந்தத் தலைவியின் நிலை என்னவென்று.

4 மணி நேரக் கதையை நாலே வரியில் நச்சென்று சொல்லிவிட்டுப் போகிறார் புலவர்.
திடீரென்று ஏனோ வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்த காதல் புறாக்களின் நினைவு வருகிறது. 2000 வருடங்களாக எத்தனை காதலர்களை வெள்ளோட்டுக் குளம் பார்த்திருக்கும்.
#சங்கஇலக்கியக்காதல்
#அன்றும்இன்றும்

Tuesday, 28 November 2017

Lyanna Stark & Rhaegar Targaryen- சங்க இலக்கியத்தோடு சேர்த்த புனைவுக்காதல் கதை

(A Song of Ice and Fire என்ற நூலில் வரும் நிகழ்வை சங்க இலக்கியக் காதலோடு சேர்த்து ஓர் புனைவு. ஆமாங்க அதான் Fanfiction.)

அவன் அன்று தான் கண்ட அழகியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். பேரழகிகளுக்கென வரையறுக்கப்பட்டவை எதுவுமே இல்லாத ஓர் பேரழகி, காட்டுரோஜா இல்லை இல்லை பொங்கி வரும் காட்டாறு. கூதிர் காலம் மட்டுமே கொண்ட வடப்புலத்தின் முல்லை நிலத் தலைவி அவள். இவன் நெருப்பு கக்கும் டிராகன் வம்சம், இருந்தும் என்ன. அந்தக் குளிர் நாட்டு ஓநாய்க்குட்டி அவனை ஓர் நொடியில் ஆட்கொண்டுவிட்டாள்.

Lyanna Stark

















அவன் யாழ் எடுத்து மீட்டளானான். நேற்றும் யாழ் மீட்டும் போது தானே அந்தப் பேரழகி இவன் பாடலுக்கு மனமுறுகி கண்ணீர் வடித்தாள். யாழ் மீட்டிக் கொண்டே மனதில் வந்த பாவை பாவையை நினைத்துப் பாடத் தொடங்கினான்.

"மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே."


'தூய அருவியைப் போன்ற பல வெள்ளை மலர்கள் - இங்கு அவள் நாட்டில் பொழியும் பனியே வெள்ளைமலர்- பூக்கின்ற நாட்டுத் தலைவனின் சிறிய பெண் இவள். தீயென இருந்த என்னை நீராய் வந்த அவள் ஒன்றும் இல்லாமல் செய்கிறாளே!' என்று எண்ணி எண்ணி யாழ் மீட்டினான்.

Rhaegar playing his Harp

















அடடே! அவனுக்கும் அவளுக்கும் எவ்வளவு வேறுபாடு. அவன் தெற்கு அவளோ வடக்கு, அவன் சுட்டெரிக்கும் நெருப்பு அவளோ உறைய வைக்கும் கொடும்பனி, அவன் வார்த்த வெள்ளியைப் போன்ற முடியையும் நீலக் கண்களையும் கொண்ட தேவலோகத்து அழகைக் கொண்டவன், அவளோ கருங்கூந்தலும் கருவிழியும் கொண்ட மாந்தர் குலத்து அழகி. கனவிலும் சேர முடியாத இணை.

அவன் தான் பட்டத்து இளவரசன் ரேகார் தார்கேரியன் (Rhaegar Targaryen). இருந்தும் என்ன செய்ய. அவள் முல்லை நிலத் தலைவனின் மகள் இலயான்னா இசுடார்க்(Lyanna Stark). அவனது தந்தையின் பேரரசிற்கு உட்பட்டவர்கள் தான். ஆனாலும் தனியே குலப்பெருமை கொண்டவர்கள். 300 ஆண்டுகளுக்கு முன்பு டிராகன்கள் இருந்த காலத்தில் தன் மக்களைக் காப்பதற்காக அவளது முன்னோர் அவனது முன்னோரை மன்னனாக ஏற்றனர். இன்றும் அவளது அப்பா "ம்ம்" என்று ஒரு வார்த்தை சொன்னால் மறவர் கூட்டம் தலைநகருக்குப் படையெடுத்து வரும். அவளின் நாட்டைப் போலவே அவளுக்கும் அவனுக்குமான இடைவெளி கடக்க முடியாத கொடும்பாதை என்று நினைக்க நினைக்க இன்னும் அவள் அவனிடமிருந்து எட்டாத தூரத்திற்கு செல்வதாகவே அவனுக்குத் தோன்றியது. தன் நெஞ்சை நொந்து கொண்டே இன்னொரு பாட்டெடுத்துப் பாடலானான்.

"குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே." 

'கிழக்குக் கடலோரம் வாழும் பறக்க முடியாத நாரை மேற்குக் கடலில் வாழும் அயிரை மீனிற்கு ஆசைப்பட்டது போலல்லவா அவளை நான் அடைய நினைக்கும் ஆசையும்?' ஏங்கினான். 'நான் பறக்க முடியாத நாரை அல்ல. ஓர் டிராகன். அவள் வடக்கில் இருந்தால் என்ன ஒரு நொடியில் பறந்து சென்று கவர்ந்து வரத் தன்னால் முடியும்' என்று நெஞ்சிற்கு ஆறுதல் சொன்னான். ஆனாலும் கூடப் பறக்க அவள் தயாரா?

-தொடரும்.

..................................................................................................................................................................
Prince Rhaegar Targaryen was the eldest son and heir to King Aerys II Targaryen. His house Sigil is a three headed dragon and his house words are "Fire and blood". He is from South, a land which has Summer throughout the year.

Lyanna Stark was the only daughter of Rickard Stark. Her house Sigil is a running grey direwolf, on an ice-white field and her House words are "Winter is coming". She is from far North where it is always winter.

மூலக் கதையில் ரேகார் யாழ் மீட்டுவதில் வல்லவன். அவன் யாழ் மீட்டுவது கண்டு மயங்காதவர் யாரும் இல்லை. இலயான்னாவும் அதற்கு விதிவிலக்கல்ல. 
இங்கு சங்க இலக்கியப் பாடல்கள் அவர்கள் இருவருக்கும் எவ்வளவு அழகாய் பொருந்தி வருகிறது பாருங்கள். அவள் நீர் (பனி), அவன் தீ. அவர்களுக்கு இடையையேயான இடைவெளியை அந்தக் கதைக்கு ஏற்றாற் போன்ற உவமைகளோடே சங்க இலக்கியப் பாடல்கள் அமைந்திருப்பது படிக்கப் படிக்க எவ்வளவு உவப்பை ஊட்டுகின்றது. 

பாடல் 1: 
குறுந்தொகை 95

மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.

தலைவன் கூற்று.
பாடியவர்: கபிலர்.
உரை:
தோழனே, பெரிய மலையிலிருந்து விழும் தூய வெண்மையான அருவி,  பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கின்ற, பல மலர்களையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரிய தோளையுடைய இளம்பெண்ணின் நீரைப் போன்ற மென்மை, தீயைப் போன்ற என் வலிமையைக் இழக்கச் செய்தது.

பாடல் 2:
குறுந்தொகை 128

குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.

தலைவன் கூற்று.
பாடியவர்: பரணர்.
உரை: நெஞ்சே! கிழக்குக் கடலலைக்குப் பக்கத்தில் இருந்த, சிறகை இழந்த நாரை, திண்ணிய தேரையுடைய சேரமன்னனாகிய பொறையனது மேற்குக் கடற்கரையில் உள்ள தொண்டி நகரின் ஆறு கடலோடு கலக்கும் துறைமுகத்தில் உள்ள அயிரைமீனாகிய அரிய உணவைப் பெறுவதற்குத் தலையை மேலே தூக்கிப் பார்ப்பது போல, தொலைதூரத்தில் உள்ளவளும் எளிதில் அடைய முடியாத  அரியவளுமாகிய தலைவியை நீ அடைய நினைக்கிறாய். நீ துன்புறுவதற்கான ஊழ்வினையைப் பெற்றுள்ளாய்! அதனால்தான், இவ்வாறு நீ வருந்துகிறாய்.


-சுபா

படங்கள்: இணையம்
செய்யுள் உரை: முனைவர். பிரபாகரன்.
https://www.andrill.in/

Wednesday, 22 November 2017

சங்க இலக்கியக் காதல்- தேடல்

அவன்: Heatset காணோம் தேடித்தானு சொன்னேனே! கிடைச்சுதா?
அவள்: அதுவா? தரையை உடைத்துக் கொண்டும் புகுந்திருக்காது, சுவற்றை ஊடுருவியும் போயிருக்காது, காலதர் வழி வெளியேவும் குதித்திருக்காது. வீட்டில் ஒவ்வொரு அங்குலமாய் நீங்கள் தேடினால் கிடைக்காமலா போய்விடும்?
அவன்: கவித கவித! ஆமாம் இந்த எங்கிருந்து சுட்ட? குறுந்தொகையா?
அவள்: ஆமாம்! எப்படி சரியா சொன்ன?
அவன்: இது கூடத் தெரியாதா? நீ மட்டுந்தான் குறுந்தொகையெல்லாம் படிச்சிருக்கியா? நாங்கெல்லாம் படிக்க மாட்டோமா என்ன?

அவள்: பார்ரா! சரி அது என்ன பாட்டு?
அவன்: இப்படி பொசுக்குனு கேட்டா? மறந்திடுச்சு. 400 பாட்டையுமா மானப்பாடம் செஞ்சு வைக்க முடியும்? எங்க ஐம்பதாவது பாட்டு என்னனு நீ சொல்லு பார்ப்போம்.
அவள்: எனக்குத் தெரியாது சாமி. நீங்க தான் ஏதோ படிச்சேனு சொன்னீங்க. சரி பாட்டோட பொருளாச்சும் சொல்லு.
அவன்: ஒரு நாள் கணவன் எதையோ தேடிட்டு இருந்தானாம். அப்ப தலைவிய கூப்பிட்டானாம். உடனே அவளும் தண்ணீ சேந்தறத விட்டுட்டு ஓடி வந்து அதைத் தேடிக்கொடுத்தாளாம். அந்த வாளியோ அவ விட்டுட்டு போன இடத்துலயே இருந்துச்சாம். அந்தக் கதை தானே?
அவள்: வாளிய கிணத்து மேட்டுல விட்டுட்டு போனா அங்கயே தான் இருக்கும். ஆமாம் நான் சொன்ன பொருளுக்கும் இந்தக் கதைக்கு என்ன சம்பந்தம்.
அவன்: சம்பந்தப்படுத்திக்கிட்டேன். அப்படி ஓடி வந்தவ தேடும் போது கணவனுக்கு போர் அடிக்கக் கூடாதுனு ஒரு பாட்டு பாடுனா. அந்தப் பாட்டு தான் இது.

அவள்: அடப்பாவி! வள்ளுவன் வாசுகி கதை, வெள்ளிவிதீயார் கதையெல்லாம் சேர்த்து புதுக் கதை சொல்லிட்டு இருக்கியே!
அவன்: அடப்போடி! நீ தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு, தமிழனின் மூழ்கிப் போன வரலாறு அப்படினு எல்லாம் உலா வருகிற கதையெல்லாம் படிச்சது இல்லையா? போன தடவ குறுந்தொகை பாட்டு விளாக்கம் எழுதுன தானே? எத்தனை பேர் படிச்சாங்க?
அவள்: நூறு பேர் இருக்கும்.
அவன்: தெரியுமே! பத விளக்கம், அருஞ்சொற்பொருள் அப்படி இப்படினு மொக்கைய போட்டுருப்ப. நான் சொல்ற மாதிரி செய். இந்த மாதிரி நாலு கதைய சேர்த்து "தெரியுமா உங்களுக்கு! தமிழனாய் இருந்தால் சேர் செய்யவும்" அந்த மாதிரி எதாச்சும் எழுதி, இடையில உன் குறுந்தொகை விளக்கத்தை சேர்த்து எழுது. அப்புறம் பார் எத்தனை பேர் படிக்கறாங்கனு.
அவள்: (சிரித்துவிட்டு) சரி சாமி. இனிமேல் அப்படியே செய்கிறேன்!

அவன்: சரி சரி. அது என்ன பாட்டு? அந்த அம்மா எதை தேடுனாங்க. ஊசியா நூலா?
அவள்: கணவன்.
அவன்: என்னது கணவனையா? மேல சொல்லு. நில்லு நில்லு. கூட ஒரு பின்னணி இசை வச்சுருப்பியே. அதை மொதல்ல பாடு.
அவள்: "கண்கள் இரண்டும் இனி உம்மைக் கண்டு பேசுமோ... காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ"
அவன்: ரொம்ப பழையா பாட்டா இருக்கும் போல. என்ன படம்.
அவள்: மன்னாதி மன்னன். அச்சம் என்பது மடமையடா பாட்டு வருமே அந்தப் படம்.
அவன்: ஓ!

அவள்: இந்தப் பாட்டுலையும் கணவனைக் காணாத அந்த அம்மா எப்படி எல்லாம் தேடுவேன்னு பாடியிருப்பாங்க. அதே போலத் தான் குறுந்தொகைல வெள்ளிவீதியாரும் இந்தப்பாட்டுல தன் கணவனைத் தேடுனதைப் பற்றி எழுதியிருப்பாங்க.
"என் தலைவன் எங்கே சென்றிருப்பான். நிலத்தைத் தோண்டி உள்ளேயும் புகுந்திருக்க முடியாது. வானத்தைத் தாண்டி வெளியேயும் சென்றிருக்க முடியாது. கடலைக் காலாலும் கடந்திருக்க முடியாது. அப்படியென்றால் ஒவ்வொரு நாடாக, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊராக, வீடு வீடாகத் தேடினால் கிடைத்துவிடுவான் தானே?" அப்படினு ரொம்ப அப்பாவியா எழுதியிருக்காங்க.

அவன்: "தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளைத் தேடிப் பார்பதென்று மெய் தேடல் தொடங்கியதே!" பாவம். இப்பவா இருந்த "காணவில்லை"நு முகநூலில் ஒரு பதிவு போட்டு தேடலாம். அப்ப அதெல்லாம் முடியாதே. அவங்க கணவரைத் தான் தேடுனாங்களா? சும்மா கவிதைக்காக எழுதியிருக்க மாட்டாங்களா. கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கே.
அவள்: அவங்க கணவனைத் தேடி அலைந்ததா அகநானூற்றிலையும் பாடல்கள் இருக்கு. ஆதிமந்தி மாதிரி இவங்களும் கணவனைத் தேடி அலைந்திருக்காங்க. "கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே" அப்படி பாடிட்டே கணவனைத் தேடி அலைந்த பெண்கள் இருக்கத் தான் செய்யுறாங்க.
அவன்: ம்ம்ம். அவங்க கொண்டது மட்டுந்தான் காதலா என்ன? கணவன் தொலைத்த headset தேடி அலைந்து கண்டுபிடித்த பெண்களும் இருக்கிறார்கள். அவர்களின் காதல் இன்னும் மேன்மையானது. தெரியாதா உனக்கு?
அவள்: ???

பாடல்: குறுந்தொகை 130

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே. 

பாடியவர்: வெள்ளிவீதியார்
கூற்று – 1: பிரிவிடை அழிந்த (வருந்திய) தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. ”நீ அவர் பிரிந்தரென்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன். நின் ஆற்றாமை நீங்குக”, எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

கூற்று – 2: தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையாற் கூறியதூஉமாம்.

விளக்கம்:
இப்பாடல் எளிய தமிழில் இன்றும் நாம் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தமையால் பதவுரையையும் செய்யுள் விளக்கமும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மன்னாதி மன்னன் படபாட்டுக்கும் இதுக்கும் இன்னொரு தொடர்பு கூட இருக்கிறது. தூது போகவா என்று கேட்கும் தோழிக்கு தலைவி சொல்லும் பதில் தான் இந்தப் பாடல். "சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்" என்று வருகிற வரிகளை இந்தப் பாட்டின் தலைவி சொல்லாமல் மனதிற்குள் குமுறும் வரிகளாய் இட்டுக் கேளுங்களேன்! " எங்க நீ தூது போறேன்னு தான் சொல்லுற. ஆனா சேதி மட்டுந்தான் சொல்ற. எல்லாரும் இப்படித் தான்." என்று பொருந்துவதாகவே வரும்.

சுபா

Wednesday, 8 November 2017

சங்க இலக்கியக் காதல் - மோர்க்குழம்பு

சமையற்கட்டில் அவள் கையைக் கழுவிவிட்டு தன் ஆடையிலேயே கையைத் துடைக்கிறாள்.

அவன்: ஏய்! இது என்ன புதுப் பழக்கம். கழுவிட்டு வேற துணில தானே கையைத் துடைப்ப!
அவள்: புதுப்பழக்கமா? இது தான் நம்ம பாரம்பரியம். அவங்க அவங்க சமைச்சுட்டே கையை போட்டுருக்குற துணியில தான் துடைப்பாங்களாம். நான் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கேன். நம்ம முன்னோர் ஒன்னும் முட்டாள் இல்லைங்க.
அவன்: அடிப்பாவி! விட்ட நீ செஞ்ச தப்ப மறைக்க சங்க இலக்கியத்துலையே இதப்பத்தி பாடியிருக்காங்கனு சொல்லுவ போல.
அவள்: ஆமாம். சங்க இலக்கியத்துல பாட்டு இருக்கே!
அவன்: இதையெல்லாமா பாடியிருக்காங்க? அடிச்சுவிடு அடிச்சுவிடு!
அவள்: அட உண்மையா தான்.
அவன்: பாட்டை சொல்லு பார்ப்போம்.

அவள்: லா லா லா.. லாலா லா லா லா...
அவன்: ஏய்! சங்க இலக்கியப் பாட்டைப் பாட சொன்னா நீ என்ன சூரிய வம்சம் படப்பாட்டை பாடுற!
அவள்: என்ன அவசரம்? பின்னணி இசையோட ஆரம்பிக்கிறேன். அந்தப் படத்துல வந்த இட்லி உப்புமா காட்சி நியாபகம் இருக்கா?
அவன்: என்னது? அந்தக்காலத்துல இட்லி உப்புமா எல்லாம் செஞ்சாங்கனு மட்டும் சொல்லிடாத. என் சின்ன நெஞ்சு பிஞ்சு பிஞ்சு உடைஞ்சு போயிடும்.
அவள்: (சிரித்துவிட்டு) இல்ல, இல்ல. சங்க இலக்கியத்துல மோர்க்குழம்பா மாத்திட்டாங்க.
அவன்: என்னது மோர்க்குழம்பா? ஐயோ அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியக் கொடுக்குறாளே! போதும்! இத்தோட நிப்பாட்டிட்டு பாட்டை சொல்லு.

அவள்: சூரியவம்சம் படத்துல வர்ரது போலத் தான். சரத்குமார்-தேவயானி போல நம்ம தலைவனோடு தலைவி உடன்போகிவிடுகிறாள்.
அவன்: யூ மீன் ஓடிப்போதல்? அருமை அருமை. மேல சொல்லு.
அவள்: அந்த சூரியவம்சம் தேவையானி போலவே நம்ம தலைவியும் நல்ல செல்வாக்கான வீட்டில் பிறந்து வளார்ந்தவள். வீட்டு வேலை எதுவும் செய்யத் தெரியாதவள். ஆனால் இப்பொழுது தலைவனோடு தனியே வாழ்கிறாள். அந்தப் படத்தில் வரும் அப்பாவைப் போலவே தலைவின் அம்மாவுக்கும் ஒரே வருத்தம். " ஐயோ பொண்ணு என்ன செய்யுறாளோ! எப்படி துன்பப்படுறாளோனு" ஒரே கவலை தான் அவளோட அம்மாவிற்கு.
அவன்: அடிப்பாவி! அப்படியே சந்தடி சாக்குல உன் கதையை உள்ள கொண்டுவரியே.
அவள்: கதை கேப்பியா மாட்டியா? எல்லாக் காலத்துலையும் அம்மா பொண்ணுனா அப்படித் தான். அதுவும் மாறவேயில்லை.
அவன்: சரி சரி. மேல சொல்லு.

அவள்: இப்படி அவள் அம்மா புலம்பிக் கொண்டு இருக்கும் போது தலைவியின் ஊருக்குப் போய்விட்டு வந்த செவிலித்தாய் தலைவியைப் பற்றி சொல்கிறாள். தேவயானியின் அப்பா இட்லி உப்புமா சாப்பிட்டுவிட்டு வந்து "உன் பொண்ணு என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா?" என்று பெருமையாகச்சொல்வாரே! அதே போன்ற காட்சி தான் இதுவும்.
செவிலித்தாய் சொல்கிறாள் " அட நீ ஏன் புலம்பிட்டே இருக்க. உன் பொண்ணு அங்க என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா? அன்னைக்கு அப்படித் தான் மோர்குழம்பு சமைத்திருந்தாள். எங்க நேரம் ஆகிடுமோனு தயிரைப் பிசைந்துவிட்டு அந்தக் கையைக் கூட கழுவாம அப்படியே அதை ஆடையில துடைச்சிக்கிட்டு, அவள் கணவனுக்கு மோர்க்குழம்பு செய்து கொடுத்தான். அவனோ அது புளிப்பாய் இருந்தாலும் " இனிமையா இருக்கே!" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்"
அவன்: அவன் ரொம்ப நல்லவன்னு நினைக்கிறேன். நல்லா இல்லாத சோறக் கூட ரொம்ப நல்லா இருக்குனு சாப்பிட்டுருக்கான். காதலுக்கு கண்ணு மட்டுந்தான் இல்லைனு நினைச்சேன்.
அவள்: சரி சரி. கதை முடிஞ்சுருச்சு. கதையில சொல்லாத அடுத்த காட்சியை சொல்லவா?
அவன்: என்ன?
அவள்: சாப்பிட்டுவிட்டு தலைவன் பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு அன்பு மனைவியிடம் சொல்கிறான் " அன்பே! இனி தினமும் நானே உனக்கு உதவி செய்கிறேன்"
அவன்: போச்சுடா. கதை கேட்டது ஒரு குத்தமா???
...................................


பாடல்: குறுந்தொகை 167
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 
திணை: முல்லை.
பாடியவர்: கூடலூர் கிழார்
கூற்று: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது. 

பதவுரை:
கடிநகர் - தலைவனும் தலைவியும் மணம்புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் மனை.
கலிங்கம்- ஆடை
குய் புகை- தாளிப்பினது புகை.


விளக்கம்:
காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தலைவிக் கட்டித் தயிரைப் பிசைந்துவிட்டு அதனைத் தன் ஆடையில் துடைத்துக் கொண்டும், துடைத்த ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டும், குவளை மலர் போன்ற அவள் கண்களில் தாளித்த புகை அடித்திருந்தாலும் அவள் தானே துழாவிச்சமைத்த புளித்த மோர்க்குழம்பை அவளது கணவன் "இனிமை இனிமை" என்று சொல்லிக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து அவள் முகம் மலர்ந்திருக்கிறது.



Monday, 13 February 2017

இம்மையிலும் மறுமையிலும் நீயே!

காலங்கள் எவ்வளவு சென்றாலும், தலைவனிடம் (காதலன்/கணவன்) தலைவி மாறாமல் சொல்லும் வசனம் இது "எத்தனை பிறவி எடுத்தாலும் நீயும் நானும் சேர்ந்தே இருக்கனும்". அது ஏன் தான் இதைச்சொல்வதில் தலைவிகளுக்கு அவ்வளவு பேரின்பமோ தெரியவில்லை. இதோ விருமாண்டி படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்.

"உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய

என்ன கேட்குற சாமிய?
நூறு சென்மம் உன் கூட போதுமா?
நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய"

இதுவாவது பரவாயில்லை, சாகா வரம் கேட்டு தன்னுடன் இருக்க விரும்பும் தலைவனோடு நூறு சென்மம் வேண்டும் என்கிறாள். சங்ககாலத்தில் தலைவிகள் அதற்கும் ஒருபடி மேலே சென்றிருக்கிறார்கள்.

தலைவனை தலைவி விளிக்கிறாள். எப்படி? " அணிலின் பல்லைப் போன்ற முட்களைக் கொண்ட கழிமுள்ளிச்செடிகளைக் கொண்ட கடற்கரையையுடைய தலைவனே!"

"கண்ணா! கணவா!" என்று அழைக்காமல் இப்படியாக தலைவி சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறாள்?
என்ன தான் கூரிய முட்களை கொண்டிருந்தாலும் அழகிய பூக்களையும் உடையது இந்தக் கழிமுள்ளிச்செடி. அது போலவே, என்ன தான் வெளித் தோற்றத்தில் காதல் இல்லாதவராகத் தோன்றினாலும் உள்ளத்திலே அவள் மீது பேரன்பு கொண்டவன் அவளது தலைவன் என்று சொல்ல விளைந்து சுற்றி வளைக்கிறாள் தலைவி.

தலைவனிடம் அவள் கேட்பது ஒன்று தான் " இந்தப் பிறவி முடிந்து மறுபிறவியே எடுத்தாலும், நீ தான் என் கணவன், உன் உள்ளத்தில் வாழ்பவள் நானாக மட்டும் தான் இருப்பேன்". சுருக்கமாக "எத்தனை பிறவி எடுத்தாலும், உனக்கு நான், எனக்கு நீ". இங்கு அலைப்பாயுதே படப்பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

"உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே"

இதோ தலைவி இப்படியாக உருகும் குறுந்தொகைப்பாடல் இது தான்.


குறுந்தொகை  49,  அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

பதவுரை:
அணில் பல் அன்ன - அணிலின் பல்லினைப் போன்ற
கொங்கு- தேன்
முண்டகம் - கழிமுள்ளிச்செடி.
கேழ்- கோடு
மாநீர் - கடல்
இம்மை மறுமை - இப்பிறப்பும் அடுத்த பிறப்பும்.

விளக்கம்:
அணிலின் பற்களைப் போன்ற முட்களை உடைய கழிமுள்ளிச்செடிகளைக் கொண்ட கடற்கரையையும், மணிகள் எழுப்பும் நீலவண்ணக்கோடுகளை ஒத்த நீலவண்ணக்கடலையும் கொண்ட நாட்டுத் தலைவனே! இப்பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுத்தாலும் நீ தான் என் கணவன், நான் தான் உன் நெஞ்சில் வாழ்பவள். (இங்கு கடலும் கடல் சார்ந்த நிலமும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது நெய்தல் நிலமெனக் கொள்க)

ஆனால் இதில் நோக்க வேண்டியது என்ன தெரியுமா? இத்தகைய தலைவியை விடுத்து பரத்தியர் வீடு சென்று திரும்புகிறான் தலைவன், அதையும் தாண்டி அவனைக் காதலிக்கிறாள் தலைவி. (இந்த கெட்ட பசங்கள காதலிக்கிற பொண்ணுங்க அப்பவே இருந்துருக்காங்க போல). யார் கண்டது வீடு திரும்பிய கணவன் மேல் கோபத்தில் இருந்த தலைவி " பார்த்து நடந்துக்கோ, நான் மட்டும் தான் உன் நெஞ்சுல குடியிருக்கனும்" என்று கோபமாக சொன்னாளோ என்னவோ தெரியவில்லை...


Saturday, 31 May 2014

கண்ணீரும்-ஆறும்; அவை கொள்ளும் வண்ணமும்.

வண்ணங்கள் எப்பொழுதும் ஈர்ப்பவையாகவே அமைகின்றன. அறிவியலிலும் கூட வண்ணங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஒவியத்தில் துளி திறமை இல்லாதவர் கூட வண்ணங்களைக் கொட்டி மகிழ்வர்.

இப்படி இலக்கியத்திலும் நிறங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பாரதியின் "காக்கைச் சிறகினிலே" பாடல் தொடங்கி, அலைபாயுதே படத்தின் "பச்சை நிறமே " பாடல் வரை அனைத்திலுமே ஒரு வசீகரம் உண்டு. இப்படி வண்ணம் கலந்த பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட பாடல் இது.

"கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே."

-ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார்,
மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது).
















சங்கப் பாடல்களில் அகப்பொருள் பாடல்களை எடுத்துக் கொண்டால் நம் கண்ணில் அதிகம் படும் சொல் "பசலை". தலவனின் பிரிவால் தலைவியைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் நோய் இது. உடல் மெலிந்து, கலையிழந்து, தோள் தணிந்து காணப்படுவாள்.

இப்படி பசலைக் கண்ட தலைவியைக் கண்டு வேதனைக் கொண்ட தோழி தலைவனிடம் சென்று தலைவி உரைப்பது போல் கூறுகிறாள். என்ன சொல்கிறாள்? " தலைவா! உம்முடைய ஊரில் உள்ள நதியானது குளிர் காலம் என்றால் கலங்கியும், வெயில் காலம் என்றால் மணி நிறம்  கொண்டுள்ளது. ஆனால் என் கண்ணானது நீ விட்டு அகன்றதால் பசலை நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது." இவ்வாறு கூறுகிறாள்.

இது செய்யுள் தரும் நேரடி பொருள் மட்டும் தான். ஆனால் உற்று நோக்கும் போது அது எவ்வளவு அழகிய பொருள் கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

எதற்காக தலைவி நதியை உதாரணம் காட்ட வேண்டும்? அவள் சொல்ல விளைவது இதைத்தான்.

" தலைவா! வண்ணங்கள் என்னைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் என் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை. நீர் கூடப் பல நிறம் கொள்கிறது. உன் ஊரில் ஓடும் நதியானது குளிர் காலத்தில் கலங்கிய நிறமுள்ள நீரையும், வெயில் காலத்தில் மணி நிறமுள்ள நீரையும் கொண்டு தருகின்றது. ஆனால் என் கண்ணீரோ பசலை நிறம் கொண்டுள்ளது. வேறு எந்த நிறமும் தெரியவில்லயே!" என்று வருந்துகிறாள்.

"பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே" என்பது ஆழமான வரிகள். பிரிவினால் எவ்வளவு அவள் அழுதிருந்தால் அவள் கண்ணின் நீரை ஆற்று நீரோடு ஒப்பிட்டு அதன் வண்ணம் பசலை என்பாள். அடடே!!!

பதவுரை:
கூதிர்- குளிர் காலம்
தண்- குளிர்ச்சி
கழில்- கலங்கிய நீர்
வேனில்- வெயில் காலம்
யாறு- நதி

Sunday, 9 March 2014

தலைவியை உடன் அழைத்துச் செல்லாததற்கு தலைவன் சொல்லும் காரணங்கள்

காதலிய கூட கூட்டிட்டு போறதுக்கு ஆயிரம் காரணம் காதலர்களுக்கு இருக்கும். "போருக்குப் போறேன், ஊருக்குப் போறேன்" இப்படி பல கதைகள் சொல்லுவாங்க. ஆனா இந்தப் பாட்டுல தலைவன் சொல்ற காரணங்கள் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாத்தான் இருக்கு. அடேங்கப்பா!!! தலைவி மேல அவனுக்கு இவ்வளவு அக்கறையா, இல்ல தலைவி அவன் எதைச் சொன்னாலும் நம்புவானு தைரியத்துல தலைவன் சொல்றானானு தெரியல. இல்ல ஒருவேளை அந்த காலத்தில் போகும் வழி அவ்வள்வும் கொடுமையாக் கூட இருந்திருக்கலாம். "தலைவியைக் கூட்டிக்கொண்டு செல்" எனக் கூறும் தோழிக்கு தலைவன் உரைக்கும் பதிலாக அமைந்த அப்பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை
திணை: பாலை,
பாடியவர்: சிறைக்குடியாந்தையார்

"வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே."

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

(கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல், பொல்லாங்கு - தீமை.)

அஃதாவது, தலைவியப் பிரியும் தலைவன், தான் போகும் வழியே இடரானது, தன்னால் தலைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாது என்று தோழிக்கு எடுத்துச் சொல்லும் பாட்டு.














விளக்கம்:

பாலை வழியானது மிகவும் கொடுமையானது. அங்கே நீருக்கு பெரும்பாடு.
வேட்டைக்குச் சென்று திரும்பும் செந்நாய் நீரற்ற சுனையில் குழி தோண்டி கிடைக்கும் நீரில், அது உண்டது போக மிச்சம் உள்ள நீர் தான் கிடைக்கும்.
அதிவும் குளவி மலர்களால் மூடப்பட்டு, அம்மலர்கள் அழுகி வீசும் துர்நாற்றம் உடையதாய் இருக்கும்.
வளையல் அணைந்த கையையுடைய தலைவியை என்னோடு சேர்ந்து எப்படி அந்த நீரைப் பருகச் சொல்வது??
என்னோடு இந்த வழியில் வந்தால் என் மனதில் நிறைந்துள்ள அவள் வருந்தத்தக்கவள் ஆவாள்.

குறிப்பு:










இதில் குளவி என்பது பூச்சியினத்தைக் குறிப்பிடவில்லை. அது ஒரு மலர் வகை. [குளவி - காட்டுமல்லிகை (குறிஞ்சிப். 76,ந.) ]

வேட்டம், சின்னீர் போன்ற சொற்கள் பாலைத் திணையை நன்கு புலப்படுத்துகின்றன.

பாலைநிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிதளவாகிய நீரை விலங்கினமும் மக்களும் உண்டல் வழக்கம்; "ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட, சிறுபல் கேணி" (அகநா. 137: 1-2).


பிரித்துப் படிக்கும் முறை:
வேட்டம் செந்நாய்  கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளையுடை கையள் எம்மொடு  உணீயர் தான் வருகதில்,
வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் அளியளோ, அளியள்.

பதவுரை:
கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியது
அளியள் - மிக இரங்கத் தக்காள்

Thursday, 22 August 2013

சிலம்பு கழி நோன்பு

ஒரு பையனும் பொண்ணும் வீட்டு விட்டு ஓடிப் போறாங்க... இப்பவா இருந்த அத பார்க்கறவங்க அரசியல் பிரச்சனை ஆக்கி இருப்பாங்க.
ஆனா சங்க காலத்தில அவங்க படும் துயரத்த பார்த்து பரிதாப பட்டுருக்காங்க.

"வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையில் கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னி யோரே."

குறுந்தொகை பாடல்-7, பெரும்பதுமனார், பாலை திணை- கண்டோர் சொன்னது.

(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)

விளக்கம்:
வாகை மரங்களின் நெற்றுகள் (முதிர்ந்து காய்ந்த காய்) நிறைந்தது அந்தப் பாலைப் பகுதி. அதிலே நடக்கும் போது அந்த நெற்றுகள் உடைந்து சத்தம் எழுப்புகின்றன. அந்த ஒலியானது ஆரியக் கூத்து ஆடுபவர்கள் கயிற்றின் மீது நடக்கும் போது அடிக்கும் பறையைப் போன்று இருக்கிறது.
அந்தப் பகுதியிலே தலைவி தலைவனுடன் உடன் போக்கு மேற்கொள்கிறாள். ஆனால் அவர்கள் இருவருக்கும் மணம் ஆகவில்லை. அதனைத் தலைவி பெற்றோர் தனக்கு அணிவித்த காற்சிலம்பைக் கழற்றாமலேயே இருக்கிறாள் என்பதைக் கொண்டே பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். தலைவனோ வில்லை உடைய வீரக் கழல் அணிந்த ஆண்மகன், தலைவியோ மென்மையான அடி எடுத்து நடப்பவள். அவளால் அந்த பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும்??? அவர்களைப் பார்த்த நல்லோர் (முக பாவங்களைக் கொண்டு அவர்கள் படும் துயரை அறியக்கூடியவர்கள்) இந்த இருவரும் யாரோ என்று இரங்குகின்றனர்.

பின் குறிப்பு:

மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; "நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லி னெவனோ... பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’ (ஐங்.311) என்பதனால் அந் நோன்பு மணத்திற்கு முன்பு செய்யப்படும் என்று தெரிகின்றது.
ஆரியர்-ஆரிய நாட்டில் உள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும்கூத்து ஆரியக் கூத்து எனப்படும்; 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்’ என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்; விலக்குறுப்பின் வகையாகிய பதினான்கனுள் ஒன்றாகிய சேதமென்பது இரு வகைத்தென்பதும் அவ்விரண்டினுள் ஆரியக் கூத்து ஒன்று என்பதும் சிலப்பதிகார உரையால் அறிந்த செய்திகள்; "ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்’’ (சிலப்.3:12-25,அடியார். மேற்.) அக்கூத்தர் கழையை நட்டுக் கயிறு கட்டி அக்கயிற்றின் மேல் ஆடுவர். "ஆடியற் பாணிக்கொக்கு மாரிய வமிழ்தப் பாடற், கோடியர்’’ (கம்ப. கார்காலப்.33) என்று கம்பரும் இக் கூத்தரைப் பற்றிக் கூறியுள்ளார்.

உடன்போக்கின்கண் நேரும் இடையூறுகளை நீக்கற் பொருட்டு வில்லுடையனாதலின் தலைவனை வில்லோனென்றார்;உதயணன் வாசவத்தையைக் கொண்டு செல்லுகையில் வராகன் என்பவனது கையில் இருந்த வில் முதலியவற்றைப் பெற்றுச் சென்றானென்றும்,பின் தன்னை வளைத்த சவரர் புளிஞரை அவற்றால் வென்றான் என்றும்பெருங்கதையிற் காணப்படும் செய்தி இங்கே அறியற்பாலது. கழல,் வீரத்திற்கும் வென்றிக்கும் தனித்தனியே கட்டப்பட்டனவாதலின் காலனவென்று பன்மையாற் கூறினார்; போர்தோறும் வென்று கட்டின என்பது மாம்; “காலன புனைகழல்” (புறநா. 100:1, விசேடவுரை); " கெழுதகையம்பர் கிழவோன் சேந்தனில், விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய, கழலே யாடவர் கான்மிசை யணிவடம்’’ என்பது திவாகரமாதலின், கொடையின்பொருட்டும் வீரத்தின் பொருட்டும் புனைந்த கழல்கள் என்றலுமாம்.

சொற்பொருள் விளக்கம்
வில்லோன்-வில்லையுயை தலைவன், காலன கழலே- காலில் அணிந்துள்ளது கழல், தொடியோள்- தொடியணிந்த பெண், மெல்லடி – மென்மையான, மேலவும் சிலம்பே - மேலே இருப்பது சிலம்பு, நல்லோர் – நல்லவராய் இருப்போர், யார்கொல் – யாரோ? அளியர் தாமே – இரங்கத்தக்கவர்களே, ஆரியர்-ஆரியர், கயிறாடு பறையில்- கயிற்றில் ஆடுகின்றபோது அடிக்கின்ற பறைபோல, கால்பொரக் கலங்கி – காற்று அலைப்ப நிலை கலங்கி, வாகை வெண் நெற்று – வாகை மரத்தின் வெண்மையான நெற்று, ஒலிக்கும் – ஒலி எழுப்பும், வேய்பயில் - மூங்கில்கள் நெருங்கிய, அழுவம் – பாலைநிலம், முன்னியோரே – முற்பட்டு எழுந்தோர்.