Saturday, 11 August 2018

சங்க இலக்கியக் காதல் - கைகூடிய திருமணம்

சில (8) மாதங்களுக்கு முன்பு 'யாரு மில்லைத் தானே கள்வன்' என்று தொடங்கும் சங்க இலக்கியப் பாடல் ஒன்றைப் பற்றி விரித்து எழுதியிருந்தேன். மறுநாள் என் உற்ற நண்பன் எனக்கு தமிழும் ஆங்கிலமும் கலந்து உணர்ச்சி பொங்க எழுதிய தனிமடலின் சுறுக்கத்தை தமிழில் எழுதுகிறேன்: 'சுபா! குருகு சாட்சிக்கு நின்ற பாடலைப் படித்ததும் மனம் என்னவோ செய்தது. எனது காதலில் என் பக்கச்சிக்கலையே எண்ணிக் கொண்டிருந்தேன். என் காதலி மணம் புரிவதைப் பற்றிப் பேசும் போதெல்லாம் என் சிக்கல்களே கண் முன் வந்து போகும். ஆனால் அப்பாடலைப் படித்த பின்பு தான் அவள் படும் துயர் எவ்வளவு என்று உணர்ந்தேன். அச்செய்யுளின் தலைவிக்காவது சாட்சி சொல்ல குருகு இருந்தது. ஆனால் நான் என் காதலியை மணந்து கொள்ளவதாய்ச் சொன்ன அன்று, அங்கே குருகும் கூட இல்லை. அவளின் துயர் இன்னும் எவ்வளவு பெரிதாய் இருக்கும். அவள் அப்பாவிடம் இன்று தான் பேசினேன், நாளை அவளது வீட்டிற்குச் செல்கிறேன்.'

8 மாதகாலப் போராட்டத்திற்கு பிறகு நேற்று மீண்டும் அழைத்து தனது திருமணம் கைகூடியது என்று அவன் சொன்ன போது கண்கள் கலங்கிவிட்டது. மணம் கூடிய செய்தி அவன் காதலிக்கு எவ்வளவு உவப்பாய் இருந்திருக்கும்!!

இதோ தலைவன் தன் சுற்றத்தை அழைத்துக் கொண்டு மணம் பேச வருகிறான், தன் வீட்டார் சம்மதிப்பரோ என்று ஐயுற்றிருந்த தலைவியிடம் அவளது தோழி 'உன் வீட்டாரும் சம்மதித்தனர்' என்று கூறும் ஒரு குறுந்தொகைப் பாடல்.

'வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
- அம்மூவனார்.'

எளிய உரை:
இங்க பாருடி! உன் ஆளு அவன் சொந்தத்தோட வந்து உன்ன பொண்ணு கேட்டாங்க, உங்க ஆளுங்களும் சரினு சொல்லிட்டாங்க. இனி ஊர்ல யாரு உங்களப் பத்தி பொறணி பேசறாங்கனு பார்ப்போம்.

நீண்ட உரை:

வளையள்கள் அணிந்த பெண்ணே! நான் மகிழ்ந்திருக்கிறேன். ஏன் தெரியுமா? வளையில் வாழும் விரைந்து ஓடும் வலிய கால்களையுடைய நண்டுகள் தங்கள் கூர்மையான நகங்களால் கீறி ஈர மணலில் ஓடும் ஊற்றினை சிதைக்கின்றன, அத்தகைய கரையை உடைய இழும் இழும் என்று பேரொலி எழுப்பும் கடலை உடைய நெய்தல் நிலத் தலைவனுக்கு நம் உறவினர் உன்னை மணம் முடிப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளனர். விரிந்த பூக்களை உடைய புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்த மீன் வாசம் அடிக்கும் ஊரில் வாழும் அவனது நாட்டுப் பெண்கள் எல்லாம் இனியும் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுவார்களோ?

கொஞ்சம் ஆராயலாம்:
பல உரைகள் பலவிதமாய் சொற்களுக்கு பொருள் தருகின்றன. வளை என்பதற்கு வளைந்த என்றும், மலிர் என்பதற்கும் பலவாறு விரித்துப் பொருள் கூறுகின்றன. ஆனால் என்னால் அவற்றோடு உடன்பட முடியவில்லை. அதனால் கொஞ்சம் நான் கொஞ்சம் மாற்றிப் பொருள் கொண்டு படிக்கிறேன்.

"விரைவுறு கொடுந் தாள் அளை வாழ் அலவன்"  அலவன் என்றால் நண்டு. விரைந்து ஓடக்கூடிய வலிமையான கால்களையுடைய வளையில் வாழும் நண்டு. இது தலைவின் நிலையை உணர்த்துகிறது. அவளது மனம் வலிமையாய் இருக்கின்றது, தலைவனை நினைத்து நித்தமும் அலைந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் வீட்டில் (வளையில்) அடைபட்டுக்கிடக்கிறது.

"இழுமென உரும் இசைப் புணரி உடைதரும்" புணரி என்றால் கடல். இழும் இழும் என்று பேரொலியை எழுப்பும் கடலையுடைய நாட்டின் தலைவன். இந்தக் கடலின் இழும் இழும் என்னும் ஒலியைப் போலத் தான் அவளைப் பற்றி அவர்கள் நாட்டு மக்கள் பேசும் வசையும் அவள் காதில் பேரிடியாய் விழுகிறது. அதனால் தான் அவள் மனமும் மேலே சொன்னது போல நண்டாய் அங்குமிங்கும் அலைமோதுகிறது. அப்பெரிய கடலில் இச்சிறிய நண்டு என்ன செய்யும் பாவம்?

"அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய," உகிர் என்றால் நகம். சிறிய நண்டினால் கடலை எதிர்த்தும் அதன் கரையை எதிர்த்தும் என்ன செய்ய முடியும்? அந்த நண்டு தன் கூரிய நகத்தினால் ஓடுகின்ற ஊற்றின் ஈர மணலை வரித்து வரித்தே புரட்சி செய்கிறது. தன்னால் இயன்ற வரை போராடுகிறது. இது தலைவியின் மனநிலையையும், தலைவன் போராடி இருவீட்டாரையும் திருமணத்திற்கு ஒப்புதல் தர வைத்தலையும் குறிப்பாக அழகாகச் சொல்கிறது.

"விரிஅலர்ப் புன்னை"- விரிந்த மலர்களையுடைய புன்னை என்றிருக்கலாம் புலவர். ஆனால் மலர்ந்த என்பதற்கு அலர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அலர் என்பதற்கு காதலர்களைப் பற்றி ஊரில் நான்கு பேர் நான்கு விதமாய்ப் பேசும் வசவு என்ற பொருளும் உண்டு. இவ்வரி அவர்களைப் பற்றிய அலர் பேச்சுக்கள் எப்படி ஊரில் விரிந்து ஓங்கிப் பெருகியிருக்கிறது என்று காட்டுகிறது.

சொல்ல வந்ததை இழுத்து மெதுவாய்ச்சொன்னாலும், தொடக்கத்திலேயே தான் மகிழ்ந்திருப்பதை தோழி சொல்வது, சொல்லி முடிப்பதற்குள் அவள் படப்போகும் துயரைக் குறைப்பதற்கானது. 

ஒவ்வொரு சொல்லிலும் அவ்விணை எவ்வளவு துயரங்களையும் அவப்பேச்சுக்களையும் தாண்டி மணம் புரிகின்றனர் என்பதை ஆழமாய்க் காட்டியிருக்கிறார் புலவர்.

என் நண்பனுக்கு!
உன் திருமணச்செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியினை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பதிவு பிடிக்கவில்லை என்றால் மன்னித்துவிடு!

2 comments:

  1. After long time... but worth waiting.

    ReplyDelete
  2. சங்கப்பாடலும் அதன் விளக்கமும் அருமை. அலர் என்ற சொல்லிற்கு பழிச்சொல் என்ற பொருளும் உள்ளது, இவ்விடத்திற்கு சரியாகப் பொருந்தும் என்று நம்புகிறேன்.

    ReplyDelete