Wednesday, 8 March 2017

பறவைகளும் பால்டிமோரும்.



















இச்சிட்டின் குரல் கேட்டே இன்றைய பொழுது விடிந்தது...
It is a bliss when you get up on hearing the song of a song bird rather than an alarm... On hearing it's call I went and searched and found the bird which was perfectly camaflouged..

கரோலினா சிட்டு
Carolina Wren.


















கரோலினா சிட்டின் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே இன்னொரு பறவை அழைத்தது.
வெளியே சென்று பார்த்தால் நம்ம கோவக்காரக் குருவி.. அதாங்க Angry Bird.
இதன் நிறம், எவ்வளவு மங்கலான வெளிச்சத்திலும் பளிச்சென்று நமக்கு காட்டிக்கொடுத்துவிடும்.
குளிர்காலம் முடிந்துவிட்டது என நினைக்கிறேன். 















வர்ச்சீனிய தூவால் மான்.
White tailed deer (Odocoileus Virginianus).
நேற்றைப் போன்றே எல்லா நாட்களும் இருந்துவிட்டால் என்ன? நேற்று நண்பகலில் பறவைகள் பார்த்துக்கொண்டிருந்த போது வீட்டிற்கு எதிர்புறம் இருக்கும் காட்டுப்பகுதியில் ஐந்து மான்கள் மேய்வதைப் பார்த்தேன். ஆம் மான்கள் தான். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மேய்ந்து கொண்டிருந்தன.
இப்பெயரை தேர்வு செய்தது செல்வா ஐயா. தூவால் - வெண்மையான வால். இதன் வெள்ளை நிற வால் மிகவும் பிரபலம், ஓடும் போதும் வாலைத் தூக்கும் போதும் அழகாக அவ்வெள்ளை நிறம் தெரியும். மேற்கு அமெரிக்காவில் இதுபோன்ற வாலைக்கொண்ட இன்னொரு மானினம் இருக்கிறது. அதனால் இது வர்ச்சீனிய தூவால் மான்.
இன்று அமெரிக்கா முழுவதும் காணப்பட்டாலும் இதன் பூர்வீகம் கிழக்கு அமெரிக்கா தான். இயற்கையாக இதனை வேட்டையாடக்கூடிய நரிகளையும், மலை வேங்கையையும் அமெரிக்கர்கள் அழித்துவிட்டதால், இவை பல்கி பெருகி மேற்கிற்கும் சென்றுவிட்டன. இம்மான்களைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட காலங்களில் இவற்றை வேட்டையாட மக்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகின்றது (அதற்கும் வழிமுறைகள் இருக்கின்றன).
21-Feb-2017
Baltimore, MD.

Friday, 3 March 2017

புற்றீசல்- புத்தரச்சல் (ஊரும் பெயரும்)

அக்டோபர் 31 ஆம் நாள் அன்று அலுவலகத்தில் நீண்ட விடுமுறை வாங்கிக்கொண்டு நான் ஊர் திரும்பிய நாள். திருமணத்திற்கு விட்டுப்போன பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். வழியில் ஓரிடத்தில் ஈசல்கள் வந்து வண்டியில் மோதத் தொடங்கின. ஈசல் என்றால் ஒன்று இரண்டு எல்லாம் கிடையாது. ஒரு பெரும்படை. கிட்டத்தட்ட முக்கால் கல் தொலைவிற்கு இதே போல ஈசல்கள் பறந்து கொண்டிருந்தன. ஈசல் மழையெனலாம், பொழிந்து கொண்டிருந்தது. பயமுருத்தும் அளவிற்கு இருந்தன. அவற்றைக் கடந்து வந்ததும் நாங்கள் வந்த வாடகை வண்டியின் ஓட்டுனர் வண்டியை நிறுத்தி பொலம்பிக்கொண்டே கண்ணாடியைக் கழுவினார். " இவ்வளவு ஈசலை நான் பார்த்ததேயில்லை" என்று அவர் சொன்னார். ஆமாம். பலமுறை ஈசல் கூட்டத்தைப் பார்த்திருந்தாலும், இது போன்று பார்த்ததில்லை. குண்டடம் என்னும் ஊரில் வசிக்கும் போது தான் அதிக முறை ஈசல்களைப் பார்த்திருக்கிறேன். இது விந்தையாக இருந்தது. அச்சாலையில் கிட்டத்தட்ட ஏழாயிரம் முறை பயணித்திருக்கிறேன். 3000 முறைக்கும் மேல் மாலை வெயில் மறைந்து பின்பு சென்றிருக்கிறேன். ஒருமுறை கூட இது போலப்பார்த்ததும் இல்லை, யாரும் சொல்லிக் கேட்டதும் இல்லை. என்னை கோவை ஈசல் மழை தூவி வழியனுப்புகிறது என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். இது ஒருவேளை சாதாரண நிகழ்வாகவும், பலர் பலமுறை பார்த்த ஒன்றாகவும் இருக்கலாம். ஆனால் என்னை வியக்க வைத்தது ஈசல்களை கண்ட ஊரின் பெயர் தான். புத்தரச்சல். பல்லடம்- தாராபுரம் சாலையில் அமைந்த ஊர். இவ்வூருக்குப் பெயர் வந்த காரணங்கள் ஆயிரம் சொல்லப்படுகின்றன. ஆனால் ஒருவர் கூட ஈசல் பற்றி சொன்னதில்லை. ஒவ்வொரு முறையும் இந்த ஊரின் பெயரை ஊரார் பேருந்தில் சொல்லும் போது அது கிட்டத்தட்ட " புத்தீசல்" என்பதாகவே காதில் விழும். எல்லா ஊரின் பெயர்களைப் போலவும் வரிவடிவில் இருக்கும் பெயரை விடவும் மக்கள் வழக்கில் இருக்கும் பெயர் மாறுபட்டது. ஒரு வேளை இதிலிருந்து தான் அவ்வூருக்குப் பெயர் வந்திருக்கலாம். என் ஊகம் தவறாக இருக்கலாம். அறியேன். 

Wednesday, 1 March 2017

FMEA என்னும் இடர் பகுப்பாய்வு முறை

FMEA என்ற ஓர் அணுகுமுறை இருக்கிறது. பொறியியல் துறையில் தற்பொழுது இந்த அணுகுமுறை அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
அதன் சராம்சம் இது தான். FMEA- Failure Mode Effect Analysis. அதாவது ஓர் வடிவமைப்போ (Design), செயல்முறையோ (Process), சேவையோ (Service), பொருளோ கலனோ (product) எந்த எந்த வகையில் எல்லாம் பழுதடையும், செயலிழக்கும், தோல்வியடையும் என்பதை முன் கூட்டியே பகுத்தாய்வது. 
எடுத்துக்காட்டாக ஒரு ஆணியை வடிவமைக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்:
இப்பொழுது இவ்வாணி எங்கெல்லாம் தனது பணியை சரியாகச்செய்யாமல் போகும் என்பதைப் பார்ப்பார்கள். பார்ப்பது என்றால் சும்மா பார்ப்பதில்லை. எந்த முன்முடிவுகளும் இல்லாமல் அதன் அளவு தொடங்கி அதை உருவாக்கப் பயன்படும் தனிமங்களின் பண்புகள் வரை அனைத்தும் எந்த விதத்தில் எல்லாம் ஆணியின் செயல்பாட்டைப் பாதிக்கும் என்று நோக்குவார்கள். எந்த தனிமத்தின் அளவை எவ்வளவு விழுக்காடு மாற்றினால் ஆணி பழுதடையும், இந்த மாற்றத்தினால் ஆணியின் வேறு என்ன பண்புகள் எல்லாம் பாதிப்படையும் என்று பார்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தனிமத்தின் அளவைக் குறைத்தால் அது வழுவிழக்கலாம், அதற்காக அதை அதிகமாக சேர்ப்பதனால் அது வேறு ஏதேனும் பண்பை மாற்றிவிடும். இப்படி அனைத்தையும் பட்டியல் இடுவார்கள். அது என்ன மாதிரியான தோல்வியை அடைகிறது என்பதைப் பொறுத்து அதற்கு ஒரு இடர் முந்துரிமை எண் (Risk Priority Number- RPN) வழங்குவர். இப்படியாக அனைத்திற்கும் எண்கள் வழங்கி எப்படியெல்லாம் ஆணி பழுதடையக்கூடும் என்பதை முன் கூட்டியே கணிப்பர்; அது தோல்வி அடைவதை தடுக்க முயல்வர். இது Design Failure Mode Effect Analysis.
இதே ஓர் இயந்திரத்தை தயாரிக்கிறார்கள் என்றால் அதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பாகத்திற்கும் மேற்சொன்னது போன்று பகுப்பாய்வு செய்வர். அந்தப்பாகம் ஒவ்வொன்றும் தனித்தனியாக தோல்வியடையாவிட்டாலும், மற்ற பாகங்களோடு சேர்ந்து செயல்படும் போது எப்படியெல்லம் தோல்வியடையலாம் என்பதையும் ஆய்வர்.
 இதே போல ஒரு செயல்முறை எப்படி எல்லாம் தோல்வி அடையக் கூடும் என்பதை ஆய்வது Process Failure Mode Effect Analysis.
இது போன்று ஒரு பொருளின், செயல்முறையின் தரத்தை மேம்படுத்துவதற்கும், ஏற்படப்போகும் இடர்களை முன்னமே ஆராய்வத்திற்கும் வேறு சில அணுகுமுறைகளும் இருக்கின்றன. அவை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் பொருட்களை/செயல்முறைகளை மேம்படுத்துவதற்கும், அவற்றில் ஏற்பட்ட இடர்களை நீக்குவதற்கும், அவற்றை மாதிரியாகக் கொண்டு வேறொரு பொருளை/செயல்முறையை வடிவமைக்கும் போதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தரவுகளின் சில பகுதிகளை பொருளை/சேவையை பெறுபவர்களிடம் காட்டலாம். பொருளை/சேவையை பெறும் நிறுவனங்கள் அதனைக் கேட்டு வாங்கி அவர்களும் ஆய்வு செய்வர்.
சரி இதையெல்லாம் ஏன் இங்கு விவரித்துக் கொண்டிருக்கிறேன்? நான் மேல சொன்ன இ-மு எண் (RPN) வழங்கும் போது அதிக இடராகக் கொள்ளப்படுவது உயிரிழப்பு, உடல்நல பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசுகளின் சட்டங்களுக்கு புறம்போக செல்வது. மற்ற எவ்வகையான இடர்களையும் சரி செய்து விட முடியும், ஆனால் இவற்றை சரி செய்வது இயலாது/கடினம்.
இது மாதிரியான அணுகுமுறைகளில் ஏதேனும் ஒன்றை நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு அதனை செயல்படுத்தப்போகும் நிறுவனம் செய்திருக்கிறதா? அதனை அரசுத்தரப்பில் இருந்து யாரேனும் ஆய்வு செய்தார்களா?

Monday, 13 February 2017

இம்மையிலும் மறுமையிலும் நீயே!

காலங்கள் எவ்வளவு சென்றாலும், தலைவனிடம் (காதலன்/கணவன்) தலைவி மாறாமல் சொல்லும் வசனம் இது "எத்தனை பிறவி எடுத்தாலும் நீயும் நானும் சேர்ந்தே இருக்கனும்". அது ஏன் தான் இதைச்சொல்வதில் தலைவிகளுக்கு அவ்வளவு பேரின்பமோ தெரியவில்லை. இதோ விருமாண்டி படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்.

"உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய

என்ன கேட்குற சாமிய?
நூறு சென்மம் உன் கூட போதுமா?
நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய"

இதுவாவது பரவாயில்லை, சாகா வரம் கேட்டு தன்னுடன் இருக்க விரும்பும் தலைவனோடு நூறு சென்மம் வேண்டும் என்கிறாள். சங்ககாலத்தில் தலைவிகள் அதற்கும் ஒருபடி மேலே சென்றிருக்கிறார்கள்.

தலைவனை தலைவி விளிக்கிறாள். எப்படி? " அணிலின் பல்லைப் போன்ற முட்களைக் கொண்ட கழிமுள்ளிச்செடிகளைக் கொண்ட கடற்கரையையுடைய தலைவனே!"

"கண்ணா! கணவா!" என்று அழைக்காமல் இப்படியாக தலைவி சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறாள்?
என்ன தான் கூரிய முட்களை கொண்டிருந்தாலும் அழகிய பூக்களையும் உடையது இந்தக் கழிமுள்ளிச்செடி. அது போலவே, என்ன தான் வெளித் தோற்றத்தில் காதல் இல்லாதவராகத் தோன்றினாலும் உள்ளத்திலே அவள் மீது பேரன்பு கொண்டவன் அவளது தலைவன் என்று சொல்ல விளைந்து சுற்றி வளைக்கிறாள் தலைவி.

தலைவனிடம் அவள் கேட்பது ஒன்று தான் " இந்தப் பிறவி முடிந்து மறுபிறவியே எடுத்தாலும், நீ தான் என் கணவன், உன் உள்ளத்தில் வாழ்பவள் நானாக மட்டும் தான் இருப்பேன்". சுருக்கமாக "எத்தனை பிறவி எடுத்தாலும், உனக்கு நான், எனக்கு நீ". இங்கு அலைப்பாயுதே படப்பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

"உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே"

இதோ தலைவி இப்படியாக உருகும் குறுந்தொகைப்பாடல் இது தான்.


குறுந்தொகை  49,  அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

பதவுரை:
அணில் பல் அன்ன - அணிலின் பல்லினைப் போன்ற
கொங்கு- தேன்
முண்டகம் - கழிமுள்ளிச்செடி.
கேழ்- கோடு
மாநீர் - கடல்
இம்மை மறுமை - இப்பிறப்பும் அடுத்த பிறப்பும்.

விளக்கம்:
அணிலின் பற்களைப் போன்ற முட்களை உடைய கழிமுள்ளிச்செடிகளைக் கொண்ட கடற்கரையையும், மணிகள் எழுப்பும் நீலவண்ணக்கோடுகளை ஒத்த நீலவண்ணக்கடலையும் கொண்ட நாட்டுத் தலைவனே! இப்பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுத்தாலும் நீ தான் என் கணவன், நான் தான் உன் நெஞ்சில் வாழ்பவள். (இங்கு கடலும் கடல் சார்ந்த நிலமும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது நெய்தல் நிலமெனக் கொள்க)

ஆனால் இதில் நோக்க வேண்டியது என்ன தெரியுமா? இத்தகைய தலைவியை விடுத்து பரத்தியர் வீடு சென்று திரும்புகிறான் தலைவன், அதையும் தாண்டி அவனைக் காதலிக்கிறாள் தலைவி. (இந்த கெட்ட பசங்கள காதலிக்கிற பொண்ணுங்க அப்பவே இருந்துருக்காங்க போல). யார் கண்டது வீடு திரும்பிய கணவன் மேல் கோபத்தில் இருந்த தலைவி " பார்த்து நடந்துக்கோ, நான் மட்டும் தான் உன் நெஞ்சுல குடியிருக்கனும்" என்று கோபமாக சொன்னாளோ என்னவோ தெரியவில்லை...


Friday, 3 February 2017

கடவுளர் எத்தனை பேர்?

அண்ணன் இராஜராஜன் இப்படி ஒரு கேள்வியை பதிவிட்டிருந்தார். நியாயமான கேள்வி. ஆமாம் கடவுளர் எத்தனை பேர்?
கொஞ்ச நூற்றாண்டுகள் வரை "நீ பெருசா நான் பெருசா" என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மதங்கள் சைவமும், வைணவமும். மகாபாரத இராமாயணக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு தோன்றியது ஒன்று தான், இரு கதைகளிலும் சிவ வழிபாடு செய்யப்பட்டவர்கள் அரக்கர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். இறுதியில் காக்கும் கடவுள் விஷ்ணு வெல்கிறார். ஆனால் இன்று இந்த இரண்டு மதங்களையும் ஒற்றைக் குடையின் கீழ் அடக்கிவிட்டார்கள். கூடவே, மழை கொடுத்த மாரி, மக்களைக் காத்த காளி என அனைவருக்கும் இந்து மதத்தில் அக்கா, தங்கை, பெரியம்மா என்று பதவிகள் கொடுத்துவிட்டனர். எங்கள் குலதெய்வக்கோவில் புனரமைக்கப்பட்ட பின் ஆங்காங்கே முளைத்தது விஷ்ணு பிரம்மா சிலைகள். அப்பொழுது புரிந்தது எனக்கு, நான் எப்படி இந்துவாக மதம் மாற்றப்பட்டேன் என்று. கூடவே போனால் போகுது என்று வீரப்புச்சி எங்க அப்புச்சி என்று இருந்த மூதாதையர் சிலைகளும் இந்துவாக மதம் மாற்றப்பட்டனர். ஆக ஒதுக்கி வைக்கப்பட்ட நாட்டார் மக்களின் தெய்வங்களும் இந்து மதத்தில். அது மட்டுமா, பௌத்த மத இசக்கிகளையும் சேர்த்துக்கொண்டார்கள், அவ்வளவு ஏன் புத்தனே இந்து தான், விஷ்ணுவின் அவதாரம் தான் என்று சொல்லும் கூட்டமும் உண்டு. இன்னும் ஒருபடி மேலே சென்று ஏசு தான் கிருட்டிணன் என்பாரும் உளர். கிரேக்கத்தில் இருந்தது இந்து மதம் என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால், கடவுளர் எத்தனை பேர் இருந்தால் என்ன அவர்கள் அனைவருக்கும் இந்து மதத்தில் இடமுண்டு. முப்பது முக்கோடி தேவர் தொடங்கி, ஐயனார் புத்தர் வரை அனைவருக்கும் இடமுண்டு. அமெரிக்கா போல் விசா பிரச்சனை எல்லாம் வராது. இந்து மதத்தில் நாத்திகருக்கே இடமுண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது ரொம்ப நல்லா இருக்கே என்று நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. என்ன தான் அனைவரையும் உள்ளிழுத்துக்கொண்டாலும் இங்கே அனைவரும் சமம் இல்லை. இந்து மதத்தின் வேத நூலாக பல இந்துக்களால் கொண்டாடப்படும் நூல்களில் அவற்றிற்கு இடமில்லை. நீங்கள் சிலரைவிட கொஞ்சம் என்ன ரொம்பவே கீழே தான் இருக்க வேண்டும்.

பி.கு: கடவுள் எத்தனை பேர் என்ற தர்க்க/ அறிவியல் ரீதியான கருத்துக்களை  நான் முன்வைக்கவேயில்லை. அதற்கு கடவுள் யார் என்ற கேள்வி வரும். ஆனால் கடவுள் எத்தனை பேரானாலும் அவர்களுக்கு இங்கே இடமுண்டு.   I swear upon all old Gods, New Gods, the Seven, Red God, Drowned god, Deep ones and more.... :P

Saturday, 10 September 2016

ஆகாச ஊற்று

தாரையிலே அமராவதி ஆற்றங்கரையில் தில்லாபுரி அம்மன் கோயில் அருகே ஒரு சுனை இருப்பதாகவும் அதன் பெயர் ஆகாச ஊற்று என்றும் அங்கு சிறு வயதில் நிறைய முறை சென்றதாகவும் என் வீட்டில் அடிக்கடி பேசிக்கொள்வார்கள். நிற்க! அந்த சுனைக்கு ஒரு செவிவழிக்கதையும் உண்டு. மகா பாரதத்தில் வரும் விராடன் என்னும் மன்னன் தான் எங்களது ஊரை ஆண்டானென்றும் அதனால் தான் எங்களது ஊருக்கு விராடபுரம் என்று பெயர் வந்ததாகவும் சொல்வார்கள். அதைப்பற்றி நான் நீட்டி முழக்கி எழுதிய கட்டுரையை படிக்க பின் வரும் இணைப்பை சொடுக்கவும்.
http://isainirai.blogspot.in/2014/06/blog-post_22.html?m=1
சுருக்கமாக பாண்டவர்கள் அன்னியான வாச காலத்தில் தில்லாபுரி அம்மன் கோவிலில் தான் தங்களது ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தார்களாம். அப்பொழுது அங்கு அர்ச்சுனன் அம்பு விட்டு ஒரு சுனையை உருவாக்கினானாம். நான் மேலே சொன்ன அந்த சுனை தான் இந்த சுனை. இப்படி அர்ச்சுனன் காலத்தில் இருந்து இருக்கும் சுனையை பார்க்க வேண்டும் என்று என் வீட்டாரை கடந்த வாரம் நச்சி அழைத்துக்கொண்டு போன போது தான் தெரிந்தது அந்த சுனை வற்றிவிட்டது என்று. நிலத்தடி நீரை உறிஞ்சியது எல்லாம் காரணமில்லை. வேறு ஏதோ காரணம் இருக்கும் என்று சிந்தித்த போது தான் தெரிந்தது. ஆதலால் சகலமானவர்களுக்கும்  நான்  சொல்ல வருவது என்னவென்றால் கலி முத்திடுச்சு. இது என்னடா அர்ச்சுனனுக்கு வந்த சோதனை!

Monday, 29 August 2016

புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..

ஒரு நூலின் அட்டைப்படம் அந்நூலை என்னை படிக்கவிடாமல் செய்யும் கதை.
"புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
உடைந்த காதும் உலர்ந்த முகமுமாய்,
மூடிய விழியும் முழு நீள மௌனமுமாய்,
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
குமுறும் எண்ணங்களையும் குழறும் சொற்களையும்
குறுஞ்சிரிப்பில் ஒளித்து வைக்குமொரு
பெண்ணின் மெய்ப்பாட்டோடு
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
பிரபஞ்சனின் நூலின் அட்டைப்படத்தில்
அமர்ந்து சாலை மறியல் செய்யும்
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
எங்கு என் விரல் பட்டு
அமைதி விடுத்து அவன் சொல்லாமல் போனதை சொல்லிவிடுவானோ
எனத் தயங்கி நிற்கிறேன்...
அட்டையை வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு
நூலை ஓரமாய் வைக்கிறேன்..  இன்று
நிறைய படித்துவிட்டேன் என்று.."
சுபா