Saturday, 15 March 2014

கண்ணதாசன் எடுத்தாண்ட நளவெண்பாப் பாடல்

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் " என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறீர்களா???

"நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?" இப்படியாக தலைவன் பாட அதற்கு பின்வருமாறு தலைவி பதிலுரைப்பாள்

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"















அடேங்கப்பா! முகத்தை மலர்னு நெனச்சு வண்டு மோதுச்சா??? என்னமா எழுதியிருகாரு தலைவர் என்று சொல்லத் தோன்றும் வரிகள் அல்லவா இவை.
இதே பொருள் கொண்ட பாடல் ஒன்று நளவெண்பாவில் உள்ளதென்றால் நம்புவீர்களா???

"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து." - (நளவெண்பா)

திருமணம் முடிந்து பின்பு நளன் தமயந்தியை தோட்டத்திற்கு ஒரு நாள் அழைத்துச் செல்கிறேன். அங்கே தான் கண்ட காட்சியை அவளையும் காணச்சொல்கின்றான்.
அங்கே என்ன காட்சி நடக்கிறது தெரியுமா!!!

"பெண் ஒருத்தி மலர்கொய்து கொண்டிருக்கிறாள்; அங்கே மலர்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டொன்று அவளது முகத்தை தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவள் தன் கைகளால் முகத்தை மறைக்கிறாள்; அப்பொழுதும் அந்த வண்டு அவளது கைகளை காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவளுக்கு வேர்க்கின்றது" இந்தக் காட்சியைக் காண் எங்கின்றான் நளன்.















முகத்தை மலர் என்றதோடு முடித்துக்கொண்டார் கண்ணதாசன். கையையும் மலர் என்றார் புகழேந்தி!!!

பிரித்துப் பொருள் கொள்ளும் முறை:

மங்கை ஒருத்தி மலர் கொய்வாள், வாள் முகத்தைப் பங்கயம் என்று எண்ணிப் படி வண்டைச் செங்கையால் காத்து ஆள, கை மலரைக் காந்தள் எனப் பாய்தலுமே, வேர்த்தளைக் காண் என்றான் வேந்து.

செங்கையை செங்காந்தள் மலர் என்கிறார். கை மலர் என்கிறார்.
பங்கயம்- தாமரை
காந்தள்- செங்காந்தள்
வேந்து- அரசன்.(நளன்)

Sunday, 9 March 2014

தலைவியை உடன் அழைத்துச் செல்லாததற்கு தலைவன் சொல்லும் காரணங்கள்

காதலிய கூட கூட்டிட்டு போறதுக்கு ஆயிரம் காரணம் காதலர்களுக்கு இருக்கும். "போருக்குப் போறேன், ஊருக்குப் போறேன்" இப்படி பல கதைகள் சொல்லுவாங்க. ஆனா இந்தப் பாட்டுல தலைவன் சொல்ற காரணங்கள் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாத்தான் இருக்கு. அடேங்கப்பா!!! தலைவி மேல அவனுக்கு இவ்வளவு அக்கறையா, இல்ல தலைவி அவன் எதைச் சொன்னாலும் நம்புவானு தைரியத்துல தலைவன் சொல்றானானு தெரியல. இல்ல ஒருவேளை அந்த காலத்தில் போகும் வழி அவ்வள்வும் கொடுமையாக் கூட இருந்திருக்கலாம். "தலைவியைக் கூட்டிக்கொண்டு செல்" எனக் கூறும் தோழிக்கு தலைவன் உரைக்கும் பதிலாக அமைந்த அப்பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை
திணை: பாலை,
பாடியவர்: சிறைக்குடியாந்தையார்

"வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே."

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

(கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல், பொல்லாங்கு - தீமை.)

அஃதாவது, தலைவியப் பிரியும் தலைவன், தான் போகும் வழியே இடரானது, தன்னால் தலைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாது என்று தோழிக்கு எடுத்துச் சொல்லும் பாட்டு.














விளக்கம்:

பாலை வழியானது மிகவும் கொடுமையானது. அங்கே நீருக்கு பெரும்பாடு.
வேட்டைக்குச் சென்று திரும்பும் செந்நாய் நீரற்ற சுனையில் குழி தோண்டி கிடைக்கும் நீரில், அது உண்டது போக மிச்சம் உள்ள நீர் தான் கிடைக்கும்.
அதிவும் குளவி மலர்களால் மூடப்பட்டு, அம்மலர்கள் அழுகி வீசும் துர்நாற்றம் உடையதாய் இருக்கும்.
வளையல் அணைந்த கையையுடைய தலைவியை என்னோடு சேர்ந்து எப்படி அந்த நீரைப் பருகச் சொல்வது??
என்னோடு இந்த வழியில் வந்தால் என் மனதில் நிறைந்துள்ள அவள் வருந்தத்தக்கவள் ஆவாள்.

குறிப்பு:










இதில் குளவி என்பது பூச்சியினத்தைக் குறிப்பிடவில்லை. அது ஒரு மலர் வகை. [குளவி - காட்டுமல்லிகை (குறிஞ்சிப். 76,ந.) ]

வேட்டம், சின்னீர் போன்ற சொற்கள் பாலைத் திணையை நன்கு புலப்படுத்துகின்றன.

பாலைநிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிதளவாகிய நீரை விலங்கினமும் மக்களும் உண்டல் வழக்கம்; "ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட, சிறுபல் கேணி" (அகநா. 137: 1-2).


பிரித்துப் படிக்கும் முறை:
வேட்டம் செந்நாய்  கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளையுடை கையள் எம்மொடு  உணீயர் தான் வருகதில்,
வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் அளியளோ, அளியள்.

பதவுரை:
கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியது
அளியள் - மிக இரங்கத் தக்காள்

Sunday, 23 February 2014

தஞ்சை பெரிய கோவிலின் யாளி வரிசை.

ஒவ்வொரு யாளி மீதும் ஒரு வீரன் அமர்ந்திருப்பதைக் காணலாம். இது கற்பனை விலங்கேயாயினும் அசாத்திய கற்பனை தான்.







Friday, 14 February 2014

"நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்" பதிவுக்கு இட்ட மறுபதிவு. (நியூட்டனின் ஆப்பிள் கதை)

இந்த நியூட்டன் கதை நாங்காம் வகுப்பு ஆங்கில பாடத்தில் முதன்முறையாக வந்தது. அந்த ஆசிரியைப் பெயர் கல்பனா. நன்றாக நினைவிருக்கிறது. "ஆப்பிள் கீழே விழுந்த என்ன பன்னியிருப்பீங்க?" என்று கேட்டுவிட்டு எங்கள் பதிலுக்கு எல்லாம் காத்திருக்கவில்லை, " சாப்பிட்டுருப்பீங்க, அதான் நாம எல்லாம் இப்படி இருக்கோம்" என்று பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார். "அடேங்கப்பா.. எனக்கு ஆப்பிளே பிடிக்காது, நான் எப்படி அதை சாப்பிட்டிருப்பேன் என்று சொல்கிறார்கள்" இப்படியாக ஏதோ எண்ணிக்கொண்டிருந்து வகுப்பு ஓடியிருக்கும். இதெல்லாம் நினைவிருக்கிறதா? என்று கேட்க தோன்றும் பலருக்கு. அதற்குக் காரணம் பிற்பாடு நடந்த இந்த கூத்து தான்.

self evaluation பகுதியில் இருந்து மட்டும் தான் கேள்விகள் வரும். அதற்கு முன்னமே ஆசிரியை நடத்த class work நோட்டில் "is was" மாறாமல் எழுதிவைத்துக்கொண்டு அதை அப்படியே விழுங்கி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டும். இது தானே நடக்கிறது ரொம்ப காலமாக. அந்த முறை தேர்வில், புதிதாக ஒரு கேள்வி வந்திருந்தது. அதற்கு பதில் எழுதாமலேயே அனைவருக்கும் மதிப்பெண். நான் மட்டும் சொந்தமாக ஏதோ எழுதிவைக்க, "அது self evaluation ல இல்லனு கூட உனக்கு தெரியல, வர வர நீ ஒழுங்காப் படிக்கறது இல்ல சுபாஷினி" என்று தொடங்கி திட்டி தீர்த்து, பக்கத்து வகுப்பு ஆசிரியையிடம் "பாருங்க இவள, இப்பவே கதை எழுதற எங்க போய் படிச்சு மார்க் வாங்கி உருப்பட போற" என்ற அளவுக்கு அசிங்கப்படுத்திவிட்டார். அது எனது படிக்கத் தகுதியில்லாத் தனத்தின் வெளிப்பாடகவே கருதப்பட்டது. ஒரு அவமானம் சின்னமாகவே என் மனதில் பதிந்துவிட்டது. பத்தாம் வகுப்பில் ஒருமுறை அந்த ஆசிரியைப் பார்த்த போது கூட இதை சொல்லி சிரித்தார். இப்பொழுது பார்த்தால் சொல்லலாம். நானும் "மக்கப்" செய்து 1161 மதிப்பெண் எடுத்தேன் என்று.

இந்த நிகழ்வுகளை நினைவூட்டியது மதி அவர்களின் பின்வரும் பதிவு.
http://sunshinesignatures.blogspot.in/2014/01/blog-post_26.html#comment-form

Tuesday, 4 February 2014

சுடச்சுடரும் பொன்!!!

ஒருவருக்கு துன்பம் மேல் துன்பம் வர வர அவர்கள் தங்கள் நற்தன்மையை மேன்மேலும் காட்டுவர் என்னும் பொருளிலும், எப்பொழுதும் நல்ல ஒழுக்கத்துடன் இருப்பவருக்கு சூடு மேல் சூடாய் துன்பம் வரும் என்னும் பொருளிலும் இந்த சொற்றொடரைக் கொள்ளலாம். எவ்வாறாயினும் சூடு தான் பொன்னை மிளிரச் செய்கிறது. அது போல் துன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த உவமை பின்வரும் திருக்குறளில் காணப்படுகிறது.

"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (குறள்-267)."




Monday, 27 January 2014

திருக்குறளும் அரும்பதங்களும்-3 (எச்சம்)

அகழ்வாய்வில் எச்சம் என்பது ஒரு Fossils என்னும் சொல்லின் தமிழாக்கமாக அமைந்தாலும் , திருக்குறளில் எச்சம் என்னும் சொல் புகழைக் குறிக்கிறது. எஞ்சி நிற்கும் இசை, புகழ் என்னும் பொருள்படும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (குறள்- 114)

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. (குறள்- 112)

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. (குறள்- 1075)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. (குறள்- 1012)

எச்சம் - புகழ்

Thursday, 23 January 2014

ஏறுபோல் பீடு நடை!!!


ஏறுபோல் பீடு நடை!!!
என்ன ஒரு அழகான சொற்றொடர். நிமிர்ந்து நடக்கும் காளை போல் பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து வாழும் ஒரு நிலையைக் குறிக்கும் வரி. இது இடம்பெற்ற நூல் வேறு எதுவும் இல்லை. நம்  திருக்குறள் தாம்.
காங்கேயம் காளை படையப்பா படத்தில் நடந்து வருவது போன்ற ஒரு காட்சி கண் முன் தோன்றுகிறது அல்லவா??



(புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. குறள் - 59)