Wednesday, 19 December 2018

கலாயோப்பி ஓசனிச்சிட்டு - Calliope Hummingbird

வட அமெரிக்காவில் பலவகை ஓசனிச்சிட்டுகள் வாழ்கின்றன. அவையெல்லாமே குளிர்காலத்தில் தெற்கே வலசை போய்விடும். அக்டோபர் மாதத்தில் வீட்டில் பறவைக்குத் தீணி வைப்பவர்கள் எல்லாம் ஓசனிச்சிட்டுகளுக்கு வைத்த குடுவைகளை மனமில்லாமல் எடுத்து உள்ளே வைத்துவிடுவார்கள். சிலர் மேலும் இரண்டு வாரம் வெளியே வைத்து ஏதேனும் ஓசனிச்சிட்டு இன்னும் பொட்டியைக் கட்டாமல் சுற்றிக் கொண்டிருக்கிறதா என்ற நப்பாசையில் காத்துக் கொண்டிருப்பர். குளிர் அதிகமாக அதிகமாக குடுவை விரிசல் விட்டுவிடும் அபாயமும் இருப்பதால் ஒரு கட்டத்தில் வேறு வழியேயில்லாமல் குடுவையை அகற்றிவிடுவர். 

இப்படியெல்லாம் இருக்க திசம்பர் மாதத்தில் ஒற்றை ஓசனிச்சிட்டு மட்டும் மேரிலாந்தில் ஒருவரின் வீட்டுப் பின்புறத்தில் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கிறது என்றால் வியப்பு தானே? நிற்க. அதைவிட வியப்பு என்னவென்றால் இது வட அமெரிக்காவின் மேற்குக் கரையோர மாகாணாஙகளில் மட்டுமே காணப்படும் ஓர் ஓசனிச்சிட்டு. வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரம் உள்ள மாகாணாத்தில் அதுவும் திசம்பர் மாதக் கடுங்குளிரில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

வட அமெரிக்காவின் மேற்கில் இருந்து தெற்கே கிளம்பிய இந்த ஓசனிச்சிட்டு வழி தவறி மேரிலாந்திற்கு வந்துவிட்டது. 40 நாட்களுக்கு முன்னர் வெளியே தொங்கிய குடுவையில் இந்த ஓசனிச்சிட்டு உணவருந்திக் கொண்டிருந்ததைக் கண்ட வீட்டு உரிமையாளருக்கு ஒரே வியப்பு. என்ன ஏதேன்று பார்த்து பறவையாளார்களை அழைத்துக் காட்டி, அதை கலாயோப்பி ஓசனிச்சிட்டு தான் என்று உறுதி செய்திருக்கின்றர். இது போல ஓசனிச்சிட்டுகள் வழிதவறி மேரிலாந்து வருவது இது ஆறாவது முறை. 

இந்தச் செய்தி பரவியதும் நியூயார்க்கு, ஜார்கியா என பல்வேறு மாநிலங்களில் பறவையார்வலர்களும் பார்வையாளர்களும் அந்த வீட்டுக்குப் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். என்னடா ஒற்றைப் பறவைக்காக இவ்வளவு தொலைவிலிருந்து வருகிறார்களே என்று வியந்த வீட்டு உரிமையாளர், வருபவர்களையும் வரவேற்று பறவையை காத்திருந்து பார்க்க அனுமதிக்கின்றனர். 




















Calliope Hummingbird
கலாயோப்பி ஓசனிச்சிட்டு
18 Dec 2018
Anne Arundel, Maryland.

நாமும் பறவையார்வலர் ஆயிற்றே, பார்க்காமல் இருக்க முடியுமா? கிளம்பிச்சென்ற கிளிக்கிவிட்டு வந்த படமிது. உங்களுக்கும் செல்லவிருப்பமென்றால் கிழே உள்ள இணைப்பில் இருக்கும் குழுவில் சேர்ந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

https://www.facebook.com/groups/2265553710368336/

Monday, 3 December 2018

வெண்டலைக் கழுகு.

வெண்டலைக் கழுகு.
Bald Eagle

என்னடா தலை வெள்ளையாகவே இல்லை, இதற்குப் போய் வெண்டலைக் கழுகு என்று பெயர் வைத்திருக்கிறார்களே என்று சிந்திக்கிறீர்களா? இது இன்னும் வயது வராத கழுகு. வெள்ளைத் தலையோடு ஒய்யாரமாக அமெரிக்க நாட்டின் சின்னமாக இருக்கும் வெண்டலைக் கழுகு முதல் நான்கு ஆண்டுகள் இப்படித் தான் இருக்கும். சென்ற நூற்றாண்டில் இப்படி வயது வராமல் வெண்டலையில்லாமல் இருந்த கழுகுகளைத் தனியொரு பறவையினம் என்று பலரும் நினைந்திருந்தனர்.

கானோவிங்கோ என்றொரு அணை மேரிலாந்தில் இருக்கிறது. அங்கே ஆண்டு முழுவதும் இந்த வெண்டலைகளைப் பார்க்கலாம். நவம்பர் மாதத்தில் கனடாவில் இருந்து வலசை போகும் வெண்டலைகளையும் இங்கே பார்க்கலாம். பொதுவாகவே 200 கழுகுகள் நவம்பர் மாதத்தில் அந்த அணையில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும். இந்த ஆண்டு அடித்துப் பிடித்து அங்கே சென்றோம். ஆனால் இந்த ஆண்டோ அங்கே ஐம்பத்தி சொச்சம் கழுககள் தான் வலசை வந்திருந்தன. ஏன் என்ற காரணம் தெளிவாகத் தெரியவில்லை.




திரண்டு வரும் புகைப்படக்கலைஞர்களுக்கும் பறவை ஆர்வலர்களுக்கு இந்த ஆண்டு ஏமாற்றம் தந்தாலும், காண வந்தவர்களை ஏமாற்றாமல் காட்சி தந்தது இந்த அம்மணி மட்டும் தான். ஆம், அசுர வேட்டை நடத்தும் ஒரு இளம் வெண்டலை (பெட்டை என்பது கூடுதல் சிறப்பு). இவளுக்கு Scoter என்ற செல்லப்பெயர் எல்லாம் வைத்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். அரை மணி நேரத்திற்கும் மேல் ஒரே இடத்தில் நின்று எதுவும் நடக்காததால் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். அடுத்த நிமிடமே சுற்றியிருந்தவர்கள் எல்லாம் பதற்றம் அடையவே என்ன என்று திரும்பிப்பார்த்தால் அம்மணி மீன் வேட்டையாடிக் கொண்டிருந்தார். மீனையும் பிடித்துவிட்டார், ஆனால் உடனே வேறொரு வெண்டலை அதனிடம் வழிப்பறி செய்ய முயன்றுகொண்டிருந்தது. பார்ப்பதா படம் எடுப்பதா என்று புரியாமல் இரண்டையும் கோட்டைவிட்டுவிட்டு, 'இதுக்கு தான் கொஞ்சமாச்சும் பொறும வேணும்' என்று எங்களை நாங்களே சபித்துக் கொண்டு, பக்கத்திலிருந்தவர்களின் புகைப்படங்களையெல்லாம் எட்டிப் பார்த்துக் கொண்டே நடக்கலானோம்.

வழியில் பார்த்தால் யாரையும் சட்டை செய்யாமல் அம்மணி வேட்டையாடிய மீனை உண்டுகொண்டிருந்தார். 'இப்பயாச்சும் ஒழுங்கா ஒரு படத்தை எடுத்துத் தொலை' என்பது போல என்னைப் பார்த்துவிட்டு பறந்துவிட்டாள்.

Conowingo Dam, MD.
Nov 17, 2018.

Wednesday, 28 November 2018

The Eye of the World நூல் விமர்சனம்

The Eye of the World by Robert Jordan.

சமீபத்தில் Mono myth, The Hero's journey வகைக் கதைகளின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு அவற்றைப்  படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரே வகைக் கதையைக் கதையை ஒவ்வொரு ஆசிரியரும் எப்படிக் கையாண்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த வாசிப்பு.

The Wheel of Time தொடரின் முதல் நூலை வாசித்து முடித்திருக்கிறேன். Tolkien (The Lord of the rings) எழுத்தின் தாக்கமும் உர்சுலாவின் (Earthsea series) எழுத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதே போல இந்த நூலின் தாக்கத்தை மார்ட்டினின் நூல்களிலும் (A song of ice and fire) ரவுலிங்கின் நூல்களிலும் (Harry Potter) பார்க்க முடிகிறது.

LOTR படித்தவர்களுக்குத் தெரியும் அந்த நூலைப் படிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று. அதே பொறுமையோடு தான் இந்த நூலையும் படிக்க முடியும். கிட்டத்தட்ட தொல்கீனின் கதைக்கு நிகரான கதைதான், தீயனவற்றை வெல்லப் போராடும் கூட்டத்தின் கதை. ஆனால் அவரைப் போல அல்லாமல் உர்சுலாவையும் மார்ட்டினையும் போல நன்மை தீமையை கருப்பு வெள்ளையாகக் காட்டாமல், எல்லா மனிதர்களுக்கும் உரிதாகக் காட்டியிருக்கிறார்.

அனைத்தையும் தாண்டி இந்த நூலில் என்னை ஈர்த்தது பெண்களுக்கு தரப்பட்ட இடம். தொல்கீனின் கதைகளில் பெண்களுக்குப் பெரிய இடமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மற்ற ஆசிரியர்களின் கதைகளிலுமே கூட ஓரிரு பெண்கள் தனித்துவம் பெறுவார்கள், மற்றபடி கதை நிகழும் அச்சமூகத்தில் பெண்களுக்கான அங்கீகாரம் என்று எதுவுமே இருக்காது.

ஆனால் இந்த நூல் அப்படியில்லை. பெண்களுக்கான இடம் இதில் முக்கியம் பெருகிறது. கதையில் சில தாய்வழிச் சமூகங்கள், அதாவது தாயிற்கு பின்னர் மகளுக்கு அரச கட்டில் கிடைக்கும்; சில சமூகங்களில் பெண்களும் போருக்குப் போவார்கள்;
கிட்டத்தட்ட கதையில் வரும் எல்லாச் சமூகங்களிலும் நாடுகளிலும் பெண்களுக்கு நிர்வாகத்தில் பங்குண்டு. சில சமயம் முடிவெடுக்கும் இடத்தில் ஆண்களை விட
தகுதிவாய்ந்த பெண்களே இருக்கிறார்கள்.

மிக சிக்கலான காலக் கட்டத்தில் ஒரு குழு துன்பமிகு பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்கள். அதில் ஒருவன் தான் விரும்பும் பெண்ணைப் பார்த்து 'நீ வர வேண்டாம்' என்கிறான். தான் விரும்பும் ஒருவன் அதைச் சொன்ன போதும் அப்பெண் கான்ணியமாக அதை மறுத்துவிட்டு 'என் பயணத்தை நான் தான் தீர்மானிக்க வேண்டும். நீயல்ல' என்கிறாள்.
'உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்' என்று அவன் சொல்லும் போதும் 'நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்' என்கிறாள்.

முதிர்ச்சியடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு மெல்லிய காதல். அவளோ நிமிர்ந்த நடையும் தெளிவும் கொண்ட பெண். ஒரு கட்டத்தில் அவளது காதலைத் தன் கண்ணியமும் தெளிவும் குறையாமல் விரும்பியவனிடம் சொல்கிறாள். அவனது சூழல் அவனால் அக்காதலை ஏற்கமுடியாது, அதனால் அவன் நிராகரிக்கிறான். ஆனால் அதையும் கூட அவளின் மதிப்பிற்கு இழுக்கு வாராமல் கண்ணியத்தோடே முடியாது என்கிறான்.
"I will hate the man you choose because he is not me, and love him if he makes you smile. No woman deserves the sure knowledge of widow's black as her brideprice, you least of all"

இது போன்ற mono myth கதைகளில் இதெல்லாம் வியப்பு தான். இந்த ஒற்றைக் காதலுக்காகவே இந்தத் தொடர் முழுவதும் படிப்பது என முடிவு செய்துவிட்டேன்.
கொஞ்சம் தேவையில்லாத வருணனைகளைக் குறைத்திருந்தால் இன்னும் நூல் அருமையாக இருந்திருக்கும்.
இருந்தாலும் பரவாயில்லை, கதையில் வரும் பெண்களுக்காக வாசிக்கலாம்.

Wednesday, 31 October 2018

இதுவும் கதை தான்

நூலகத்தின் மேல் மாடியிலே அடுக்கி வைத்த நூல்கள் நடுவே நடந்து போகிறேன்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம்..
கல்லாதது உலகளவு,
ஒற்றை உலக்கத்தைக்
கற்றல் வேண்டி கையிலேந்தினேன்..
தலைக்கு மேலிருந்த கோடுகள் எல்லாம் வளைந்து நெளிந்து தன்னுள் பிணைந்து வளையாகிக் கொண்டிருந்தன..
கூன் நிமிர்ந்து, ஆயுதம் ஏந்தும் ஒற்றைக் கோட்டு வரலாறு காலாவதியாவது கண்டேன்..
அவர்கள் என்று அவர்கள் ஆனார்கள்?
அவர்களானது அவர்களுக்குத் தெரியுமா?
பின்னரிருந்தவர் அவருலகத்தில் இருந்து சிரித்துக் கொண்டிருந்தார்..
அவரின் உலகத்தைப் பார்க்க ஆசையாய் இருந்தது.
ஆனாலும்..
திரும்பிப் பார்த்தால் தன்னுலகத்தில் இருந்து உலுக்கப்படுவரோ? வேண்டாம்
என்னுலகத்திற்கே திரும்பிச் செல்கிறேன்..
இதோ..கண்டம் விட்டுக் கண்டம் நகர்கிறார்களே,
கழுகுகளால் வேட்டையாடப்படும் விளிம்புநிலை மனிதர்கள்..
மனிதர்களா? அப்பொழுது அவர்கள் சந்திக்கும் இவர்கள் யார்?
இவர்களும் மனிதர்களா?
உம்ம்.. இங்கே கலங்காத மனமுண்டோ?
கலக்காத இனமுண்டோ?
பார்த்த போதெல்லாம் வெட்டிக்கொண்டார்கள்,
சில நேரம் கட்டியும் கொண்டார்கள்.
மோதலில் அழிந்தவர்கள் நியண்டர்தால்கள்..
காதலால் அவர்களின் மிச்சத்தை இவர்கள் மரபணுவில் தூக்கிக் கொண்டு அவர்கள் மீண்டும் நடந்தார்கள்.
என் உலகத்தில் மிதந்து கொண்டே,
ஊர்வதும் நகர்வதும் தெரியாமல்
ஊர்ந்தும் நகர்ந்தும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வந்தடைந்தவர்களைப் போல,
நானும் கீழே வந்தடைந்தேன்.
காலியாய் இருந்த இடத்தில்
இடம்பிடித்தேன்.. இடமும் பிடித்தது..
முன்னர் இங்கு யாரிருந்தார்?
முன்னர் இருந்தே நான்
இங்கு தானே இருக்கிறேன்.
நான் மட்டும் தானே இருக்கிறேன்,
நான் இங்கே மட்டும் தானே இருக்கிறேன்..
நகர்ந்தேனா? நானா?
வந்தவர் கேட்டார் 'தலையைத் தூக்காமல் படிக்கிறாயே, என்ன நூலது?'
காட்டியதும் சொன்னார் 'அறிவியலா? கதையென்று நினைத்தேன்'
ம்ம்ம்.. இதுவும் கதை தான்...
மனிதர்களின் கதை..
"A Brief History of Everyone Who Ever Lived: The Human Story Retold Through Our Genes by Adam Rutherford"

Wednesday, 15 August 2018

வரலாற்றை புரட்டிப்போட்ட கொள்ளைநோய்

உரோமப் பேரரசே ஒரு பாக்டிரீயாவால் தான் அழிந்தது என்றால் அது மிகையாகாது. ஆம்! கொள்ளைநோயொன்று மக்களையும் படைவீரர்களையும் கொத்து கொத்தாகக் கொன்று குவித்தது. அங்கு கி.பி. 541 இலிருந்து ஓரோண்டு காலத்திற்கும் மேலாக நோய் தொற்றி மக்கள் இறந்தனர். இதைப் பற்றி எழுதிய சமகாலத்து  வரலாற்று ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு 10,000 மக்கள் இறந்தனர் எங்கின்றன. அது மிகையென்றாலும் குறைந்தது ஒரு நாளைக்கு 5,000 மக்களாவது இறந்திருப்பர் எங்கின்றனர் இக்காலத்து வரலாற்று ஆசிரியர்கள். எது எப்படியானாலும் உரோமப் பேரரசில் மட்டும் 25 மில்லியன் மக்கள் அக்கொள்ளைநோயிற்கு பலியாகினர்.

அத்தோடு நிற்கவில்லை, தொடர்ந்த ஆண்டுகளில் ஐரோப்பாவில் இறப்புவிகிதம் இரட்டித்தது. உரோமைத் தொடர்ந்து ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி தாண்டி இலண்டன், வட ஆப்பிரிக்கா வரை இந்தக் கொள்ளை நோய் பரவியது. எகிப்தில் கி.பி. 542 இல் ஓர் கொள்ளைநோய் பரவியதாக அக்கால நூல்கள் சொல்கின்றன. அவை குறிப்பிடும் செய்தியைக் கொண்டு அதே கொள்ளைநோய் தான் அங்கும் பரவியிருக்கிறது என்று இனம் காண முடிகிறது. கி.பி. 1348-1350 வரையான காலக்கட்டத்தில் இலண்டனில் மக்கள் கொத்து கொத்தாக இறந்திருக்கின்றனர். கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்கள் இறந்திருக்கின்றனர். முன்னர் உரோமப் பேரரசில் நடந்தது போலவே இங்கும் அடுத்து அடுத்த நூற்றாண்டுகளில் நோய் பரவி மக்கள் இறந்திருக்கின்றனர். இதனை ஆங்கிலத்தில் 'Black Death' என்பர். கி.பி. 1666 இல் இலண்டனில் ஏற்பட்ட பெருந்தீ விபத்திற்கு பின்னரே இந்தக் கொள்ளை கட்டுக்குள் வந்திருக்கிறது.

என்ன செய்தியென்றால் நவீன மரபணு சோதனைகள் மூலம் நூற்றாண்டுகள் தாண்டி வந்த அத்தனை கொள்ளைநோய்களுமே ஒரே பாக்டீரியாவால் ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்திருக்கின்றன. ஆம், ஐரோப்பக் கண்டத்தையே கிட்டத்தட்ட 600 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்டிப்படைத்த நோயிற்கு ஒரே பாக்டீரியா தான் காரணம். பல இடங்களில் இந்தக் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் புதைகுழியில் மிஞ்சிய மரபணுக்களைக் கொண்டு இதனை உறுதிபடுத்தியிருக்கின்றனர்.

இலண்டனில் இறந்ததில் குழந்தைகள், முதியவர் மட்டுமல்லாது 35 வயதிற்கு உற்பட்டவர்களும் அப்புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கின்றனர். அதிலிருந்தே நோய் எவ்வளவு விரைவாக ஆரோக்கியமானவர்களிடமும் பரவி அழித்திருக்கின்றது என்பதை உணர முடிகிறது.

நிற்க! அந்த நோய்க்கிருமியின் பெயர் Yersinia pestis. இது பொதுவாக அணில் போன்ற சிறு பாலூட்டிகளிடம் காணப்படுவது. அவற்றை ஒருவகையான உண்ணிகள் (Oriental rat flea) கடிக்கும் போது அந்த உண்ணிகளின் வயிற்றுக்கு வந்தவுடன் இந்த பாக்டீரியா இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது. அந்த உண்ணியின் உடம்பில் இரத்தத்தை உறையச்செய்து அவற்றிற்கு மேலும் பசியெடுக்க வைக்கிறது. நோய்க்கிருமிகள் தாங்கிய உண்ணிகள் மனிதர்களைக் கடிக்கும் போது தான் சிக்கலே தொடங்குகிறது. மனிதர்களின் உடலுக்குள் வந்தவுடன் செல்களில் தங்களது வேலையைக் காட்டுகின்றது இந்த பாக்டீரியா. இயல்பாகவே நமது உடலில் வெள்ளையணுக்கள் தேவையற்ற போது இறந்துவிடும், ஆனால் அது உடலுக்கு தேவையான போது மட்டுமே. இந்த நோய்க்கிருமி, அக்குறுக்குவழியைப் பயன்படுத்தி வெள்ளை அணுக்களை தற்கொலை செய்து கொள்ள வைத்துவிடும். இப்படித் தான் நோய் தொற்று வந்ததும் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் கண்டு ஒரு சில நாட்களிலிலேயே நோய்வாய்ப்பட்டவர் இறந்துவிடுவார். இறப்பதற்கு முன்னர் இருமல் தும்மல் என்று நோயைப் பரப்பிவிட்டு பரலோகம் போய்விடுவார்.

மீண்டும் கதைக்கு வருவோம். இந்த நோய்க்கிருமி ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது என்று நெடுங்காலமாய் நம்பப்பட்டு வந்தது. உண்மையென்றால் இது சீனாவில் இருந்து பரவியது. ஆனால் இருசியா தாண்டி ஐரோப்பாவிற்குள் நுழைந்த பின்னரே அது கொள்ளைநோயாக உருமாறியிருக்கிறது. உரோமா என்னும் மக்கள் வடமேற்கு இந்தியாவிலிருந்து போய் ஐரோப்பாவில பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் குடியமர்ந்தவர்கள். சமூக பண்பாட்டு காரணங்களால் உரோமப் பேரரசில் இருந்த ஏனைய ஐரோப்பியர்களுடன் கலந்து இனப்பெருக்கம் செய்யவில்லை. பின்னாளில் அங்கு வாழும் இந்த இரு வகையான மக்களின் மரபணுக்களில் சில இந்த நோயிடமிருந்து தற்காத்துக் கொள்ள சடுதி மாற்றத்திற்கு (Mutations) உள்ளாகியிருக்கின்றன. ஆனால் இக்கிருமியின் பிறப்பிடத்தில் வாழும் சீனர்களிடமோ இந்தியர்களிடமோ இவ்வகை மரபணுக்கள் இல்லை.

இன்றுமே கூட இதே நோய்க்கிருமி உருசியாவில் சிறு பாலூட்டிகளிடம் காணப்படுகிறது. கேள்வி இதுதான், அவ்வகை மரபணுக்கள் இல்லாமல் எப்படி சீனர்களாலும் இந்தியர்களாலும் தங்களைக் காத்துக் கொள்ள முடிந்தது, ஐரோப்பியர்களால் முடியவில்லை? நிற்க! 'நம் முன்னோர்கள்' என்று தொடங்க வேண்டாம். இந்தக் கேள்விக்கான விடை அறியப்பட்டுவிட்டது. இந்த நோய்க்கிருமியின் மிக நெருங்கிய உறவினரான Yersinia pseudotuberculosis என்ற மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்காத ஒரு பாக்டீரியவின் மரபணுவுடன் இந்த நோய்க்கிருமியின் மரபணுவை ஒப்பிட்டு பார்த்ததில் இவை இரண்டும் 5000 ஆண்டுகளுக்கு முன்பே வெவ்வேறு உயிரினங்களாக பிரிந்துவிட்டன என்பது தெளிவாகிறது. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் இந்த நோய்க்கிருமியால் மனிதர்கள் யாரும் இறந்ததாகத் தெரியவில்லை. இந்த நோய்க்கிருமியிடம் இருக்கும் ஒரு புரதம்(Yersinia murine toxin- Ymt) தீங்கில்லாத அதன் உறவினரான இன்னொரு பாக்டீரியாவிடம் இல்லை. இந்தப் புரதத்தின் வேலை என்னவென்றால் இந்த பாக்டீரியா உண்ணியின் வயிற்றிற்குள் இருக்கும் போது அது செரிக்காமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வது. இந்த புரதத்தை கிமு 1000 வாக்கில் வேறொரு பாக்டீரியாவிடமிருந்து பெற்றிருக்கிறது. (மனிதர்களைப் போன்ற பாலூட்டிகளிலும் பிற உயிரனங்களிடமும் மரபணு இனப்பெருக்கத்தின் மூலம் மட்டுமே பகிரப்படுகிறது. ஆனால் நுண்ணுயிரிகளால் மற்றொரு நுண்ணுயிரியிடமிருந்தும் மரபணுக்களைப் பெறமுடியும் - lateral gene transfer).

ஆக இதுதான் கதை, அது நாள் வரை மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பே இல்லாமல் இருந்த இந்த பாக்டீரியா தீடிரென்று தன்னை ஒரு உண்ணியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மரபணு மாற்றத்திற்கு உள்ளாகிறது. அது தெரிந்தோ தெரியாமலோ மனிதருக்கு வந்தவுடன் கொள்ளைநோயாக மாறிவிட்டது. அதனால் தான் ஆசியர்களைக் கொள்ளாத அந்த நோய் ஐரோப்பியர்களைக் கொன்றிருக்கிறது. இக்கொள்ளை நோய் பரவியதற்கு திடீரென்று பரவத் தொடங்கிய எலிகள் முதலிய சிறு பாலூட்டிகள் தான் முக்கியக் காரணம். அவை ஏன் திடீரென்று பரவின என்ற கேள்விக்கான பதிலை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன்.

இந்த நெடிய கதை மூலம் சில பல பாடங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை புறந்தள்ளிவிட முடியாது. ஹீலர் பாசுக்கர் போன்றோரின் பரப்புரைகளில் எவ்வளவு பொய் இருக்கிறது என்பதை உணர்வதற்கு இந்த ஒரு கதையைப் புரிந்து கொள்வதே போதுமான இருக்கும். என்ன பாடம் என்று வேறொரு நாள் விவாதிக்கலாம்.

Reference:

A Brief History of Everyone Who Ever Lived: The Stories in Our Genes by Adam Rutherford.

Tuesday, 14 August 2018

நமர்

நமது உறவினர், சுற்றத்தினர், நமக்கானவர், நம்முடையவர்கள் எனப் பொருள்படும்படி ஒற்றைச் சொல் இல்லையே என்று நினைத்ததுண்டா?
பிறர் என்கிறோம். யார் அல்லாதோரெல்லாம் பிறர்?
நமரல்லாதோர் எல்லாம் பிறர்.
நமர் என்பது சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொல். நம்மவர் என்னும் பொருளில் வரும் ஒரு சொல்.
நாம் நமது நமர்.
யாவரும் கேளிர் எனப்பட்டதால் நமரெனும் சொல்லே வழக்கில் இல்லாமல் போயிற்றோ என்னவோ.

Sunday, 12 August 2018

மேற்கை ஏற்காதே! வீழும் சூரியனே!

தீடிரென்று மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மீது எனக்குக் காதல் பெருக்கெடுக்கிறது.
பாகுபலியில் வரும் 'மேற்கை ஏற்காதே!' பாடலைப் படத்திலும் பின்னர் அதன் காணொளியை சிலமுறையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்பொழுது அப்பாடல் பிடிக்கவில்லை. பாடல் செந்தமிழாயும், காட்சி இந்தி மயமாயும் இருந்ததால் கொஞ்சமும் ஒத்துப்போகவில்லை என்று மனதிற்குப் பிடிக்கவில்லை.
இரண்டு நாட்களாக அப்பாடலின் வரியை மட்டும் கேட்டால் அவ்வளவு அழகான வரிகள். அநியாயமாக ஒரு நல்ல பாடல் அப்படத்தில் வீணடிக்கப்பட்டுவிட்டதே என்று தோன்றியது. கார்க்கியின் கவிதை மீது காதல் பெருக்கெடுக்க அப்பாடல் மட்டும் காரணமில்லை. அதன் தெலுங்கு வடிவத்தைக் கேட்டுப் பார்த்தேன். நுணுக்கமாய் கார்க்கி பாடலில் செய்திருக்கும் மாற்றமே அதற்குக் காரணம்.
தெலுங்குப் பாடலோ மன்னனைப் பார்த்து அடிமையாய் இருக்கும் மக்கள் பாடுவது போல இருக்கிறது. ஆனால் தமிழிலோ தலைவனைப் பார்த்து மக்கள் வாழ்த்துவது போல இருக்கிறது. 'கடவுளைப் போல எங்களைக் காப்பவன்' என்னும் வரிக்குப் பதிலாக 'மழையெனப் பெய்யய்யா!' என்று மாற்றியிருக்கிறார். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று பாடிய தமிழ்ப்புலவர் வழி நின்றல்லவா பாடியிருக்கிறார். 'என் மன்னன் நீயே' எனும்படி வரும் வரியைக் கூட 'என் சிந்தை நீயே' என்று மாற்றிவிட்டார்.
முதல் வரி சொல்லவே வேண்டும். மறைந்துவிட்ட சூரியனை எழச்செய்யும் தெலுங்கு வரிக்கு மாற்றாய் 'மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே' என்று பாடியிருக்கிறார். அப்பாவையும், மகனையும் கூட ஐயா என்றழைப்பர். இப்பாடல் முழுக்க தலைவனை உரிமையாய் பாசத்தோடு அமைந்த வரிகள் தான்.
இப்பொழுது புரிகிறது ஏன் இப்பாடல் அக்காட்சி அமைப்புக்கு ஒவ்வவில்லை என்று. பிற்போக்குத்தனமான பாடலுக்கு முற்போக்கான வரிகள். சொல்லுங்கள் கார்க்கி எந்தத் தலைவனை மனதில் நினைத்து நீங்கள் எழுதிய பாடல் இது? நிச்சயம் பாகுபலி இல்லை.

Saturday, 11 August 2018

சங்க இலக்கியக் காதல் - கைகூடிய திருமணம்

சில (8) மாதங்களுக்கு முன்பு 'யாரு மில்லைத் தானே கள்வன்' என்று தொடங்கும் சங்க இலக்கியப் பாடல் ஒன்றைப் பற்றி விரித்து எழுதியிருந்தேன். மறுநாள் என் உற்ற நண்பன் எனக்கு தமிழும் ஆங்கிலமும் கலந்து உணர்ச்சி பொங்க எழுதிய தனிமடலின் சுறுக்கத்தை தமிழில் எழுதுகிறேன்: 'சுபா! குருகு சாட்சிக்கு நின்ற பாடலைப் படித்ததும் மனம் என்னவோ செய்தது. எனது காதலில் என் பக்கச்சிக்கலையே எண்ணிக் கொண்டிருந்தேன். என் காதலி மணம் புரிவதைப் பற்றிப் பேசும் போதெல்லாம் என் சிக்கல்களே கண் முன் வந்து போகும். ஆனால் அப்பாடலைப் படித்த பின்பு தான் அவள் படும் துயர் எவ்வளவு என்று உணர்ந்தேன். அச்செய்யுளின் தலைவிக்காவது சாட்சி சொல்ல குருகு இருந்தது. ஆனால் நான் என் காதலியை மணந்து கொள்ளவதாய்ச் சொன்ன அன்று, அங்கே குருகும் கூட இல்லை. அவளின் துயர் இன்னும் எவ்வளவு பெரிதாய் இருக்கும். அவள் அப்பாவிடம் இன்று தான் பேசினேன், நாளை அவளது வீட்டிற்குச் செல்கிறேன்.'

8 மாதகாலப் போராட்டத்திற்கு பிறகு நேற்று மீண்டும் அழைத்து தனது திருமணம் கைகூடியது என்று அவன் சொன்ன போது கண்கள் கலங்கிவிட்டது. மணம் கூடிய செய்தி அவன் காதலிக்கு எவ்வளவு உவப்பாய் இருந்திருக்கும்!!

இதோ தலைவன் தன் சுற்றத்தை அழைத்துக் கொண்டு மணம் பேச வருகிறான், தன் வீட்டார் சம்மதிப்பரோ என்று ஐயுற்றிருந்த தலைவியிடம் அவளது தோழி 'உன் வீட்டாரும் சம்மதித்தனர்' என்று கூறும் ஒரு குறுந்தொகைப் பாடல்.

'வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?
- அம்மூவனார்.'

எளிய உரை:
இங்க பாருடி! உன் ஆளு அவன் சொந்தத்தோட வந்து உன்ன பொண்ணு கேட்டாங்க, உங்க ஆளுங்களும் சரினு சொல்லிட்டாங்க. இனி ஊர்ல யாரு உங்களப் பத்தி பொறணி பேசறாங்கனு பார்ப்போம்.

நீண்ட உரை:

வளையள்கள் அணிந்த பெண்ணே! நான் மகிழ்ந்திருக்கிறேன். ஏன் தெரியுமா? வளையில் வாழும் விரைந்து ஓடும் வலிய கால்களையுடைய நண்டுகள் தங்கள் கூர்மையான நகங்களால் கீறி ஈர மணலில் ஓடும் ஊற்றினை சிதைக்கின்றன, அத்தகைய கரையை உடைய இழும் இழும் என்று பேரொலி எழுப்பும் கடலை உடைய நெய்தல் நிலத் தலைவனுக்கு நம் உறவினர் உன்னை மணம் முடிப்பதாய் வாக்குக் கொடுத்துள்ளனர். விரிந்த பூக்களை உடைய புன்னை மரங்கள் ஓங்கி வளர்ந்த மீன் வாசம் அடிக்கும் ஊரில் வாழும் அவனது நாட்டுப் பெண்கள் எல்லாம் இனியும் உங்களைப் பற்றித் தவறாகப் பேசுவார்களோ?

கொஞ்சம் ஆராயலாம்:
பல உரைகள் பலவிதமாய் சொற்களுக்கு பொருள் தருகின்றன. வளை என்பதற்கு வளைந்த என்றும், மலிர் என்பதற்கும் பலவாறு விரித்துப் பொருள் கூறுகின்றன. ஆனால் என்னால் அவற்றோடு உடன்பட முடியவில்லை. அதனால் கொஞ்சம் நான் கொஞ்சம் மாற்றிப் பொருள் கொண்டு படிக்கிறேன்.

"விரைவுறு கொடுந் தாள் அளை வாழ் அலவன்"  அலவன் என்றால் நண்டு. விரைந்து ஓடக்கூடிய வலிமையான கால்களையுடைய வளையில் வாழும் நண்டு. இது தலைவின் நிலையை உணர்த்துகிறது. அவளது மனம் வலிமையாய் இருக்கின்றது, தலைவனை நினைத்து நித்தமும் அலைந்து கொண்டிருக்கிறது, ஆனாலும் வீட்டில் (வளையில்) அடைபட்டுக்கிடக்கிறது.

"இழுமென உரும் இசைப் புணரி உடைதரும்" புணரி என்றால் கடல். இழும் இழும் என்று பேரொலியை எழுப்பும் கடலையுடைய நாட்டின் தலைவன். இந்தக் கடலின் இழும் இழும் என்னும் ஒலியைப் போலத் தான் அவளைப் பற்றி அவர்கள் நாட்டு மக்கள் பேசும் வசையும் அவள் காதில் பேரிடியாய் விழுகிறது. அதனால் தான் அவள் மனமும் மேலே சொன்னது போல நண்டாய் அங்குமிங்கும் அலைமோதுகிறது. அப்பெரிய கடலில் இச்சிறிய நண்டு என்ன செய்யும் பாவம்?

"அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய," உகிர் என்றால் நகம். சிறிய நண்டினால் கடலை எதிர்த்தும் அதன் கரையை எதிர்த்தும் என்ன செய்ய முடியும்? அந்த நண்டு தன் கூரிய நகத்தினால் ஓடுகின்ற ஊற்றின் ஈர மணலை வரித்து வரித்தே புரட்சி செய்கிறது. தன்னால் இயன்ற வரை போராடுகிறது. இது தலைவியின் மனநிலையையும், தலைவன் போராடி இருவீட்டாரையும் திருமணத்திற்கு ஒப்புதல் தர வைத்தலையும் குறிப்பாக அழகாகச் சொல்கிறது.

"விரிஅலர்ப் புன்னை"- விரிந்த மலர்களையுடைய புன்னை என்றிருக்கலாம் புலவர். ஆனால் மலர்ந்த என்பதற்கு அலர் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். அலர் என்பதற்கு காதலர்களைப் பற்றி ஊரில் நான்கு பேர் நான்கு விதமாய்ப் பேசும் வசவு என்ற பொருளும் உண்டு. இவ்வரி அவர்களைப் பற்றிய அலர் பேச்சுக்கள் எப்படி ஊரில் விரிந்து ஓங்கிப் பெருகியிருக்கிறது என்று காட்டுகிறது.

சொல்ல வந்ததை இழுத்து மெதுவாய்ச்சொன்னாலும், தொடக்கத்திலேயே தான் மகிழ்ந்திருப்பதை தோழி சொல்வது, சொல்லி முடிப்பதற்குள் அவள் படப்போகும் துயரைக் குறைப்பதற்கானது. 

ஒவ்வொரு சொல்லிலும் அவ்விணை எவ்வளவு துயரங்களையும் அவப்பேச்சுக்களையும் தாண்டி மணம் புரிகின்றனர் என்பதை ஆழமாய்க் காட்டியிருக்கிறார் புலவர்.

என் நண்பனுக்கு!
உன் திருமணச்செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்திருக்கிறேன். அந்த மகிழ்ச்சியினை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை. பதிவு பிடிக்கவில்லை என்றால் மன்னித்துவிடு!

Friday, 5 January 2018

முசுண்டை (பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள்)-3

இலக்கியங்கள் பாடும் முசுண்டை மலர்.


சங்க இலக்கியங்களில் முசுண்டை என்னும் மலர் பற்றிய குறிப்புகள் பரவிக் கிடக்கின்றன. ஆனாலும் இப்பொழுது பேச்சுவழக்கில் முசுண்டை என்னும் சொல் இருப்பதாய்த் தெரியவில்லை. வட்டார வழக்கில் மிஷ்டை /மிசுட்டை/ முசுட்டை என்று அறியப்படும் மலரே முசுண்டை என்பது என் துணிபு.

"அகலிரு விசும்பி னாஅல் போல
வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை- மலைபடுகடாம்-100"

இருண்ட வானத்தில் பூக்கும் விண்மீன் போல முசுண்டை மலர் கொடியினில் பூத்திருக்கிறது என்கிறது மலைபடுகடாம். மிசுட்டை மலர் பூத்திருப்பதும் அதே போலத் தான் இருக்கும். மேலும் இங்கு இன்னொன்றும் நோக்கத்தக்கது. மலைபடுகடாம் நன்னன் என்னும் மன்னனையும் அவன் ஆண்ட நவிர மலை என்னும் நாட்டையும் அதன் மக்களைப் பற்றியும் பாடும் நூல். இன்றும் ஒடிசா மாநிலத்தின் கந்தமாள் பகுதிகளில் வாழும் கந்தா/கொந்தா(வேறு சில இனக்குழுக்களும் கூட) மலைவாழ் மக்களின் (திராவிட இனத்தைச்சேர்ந்த பழங்குடியினர்) உணவில் முசுண்டை (Rivea hypocrateriformis) இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தகுந்தது.

விண்மீனோடு முசுண்டை இன்னும் சில பாடல்களில் கூட ஒப்புமைபடுத்தப்பட்டுள்ளது.
"கரிமுகிழ் முசுண்டை பொதி அவிழ் வான்பூ விசும்பு அணி மீனின் புதல் பிதல் அணிய - அகநானூறு 235-9"


இருளில் பூத்த விண்மீன் போல இருக்கும் முசுண்டை


விக்கியிலும் சில வலைப்பூக்களிலும் Operculina turpethum என்னும் மலரின் படத்தை முசுண்டை என பதிவிடப்பட்டுள்ளது. இது தவறு என்பதற்கு சில காரணங்கள் உண்டு.

Operculina turpethum, Morning glory என்னும் குடும்பத்தை சேர்ந்தது. அக்குடும்பத்தில் பெரும்பாகும் காலையில் மலரும் செடிகள் தான் இருக்கின்றன. ஆனால் முசுண்டையோ மாலையில் மலர்வது. முசுண்டை மாலையில் மலர்வது என்று எங்கும் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. சில இடங்களில் முசுண்டை பீர்க்கையோடும் முல்லையோடும் மலர்ந்து கிடந்தது என்ற குறிப்புகள் கிடைக்கின்றன. அதனால் இதுவும் மாலையில் மலரும் செடி என்பது புலப்படுகிறது.

"புன்கொடி முசுண்டைப் பொதிப்புற வான்பூப் பொன்போல் பீரமொடு புதல் புதல் மலர - நெடுநல்வாடை 13"

"வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து கரிமுகிழ் முசுண்டை முல்லைத் தாஅம் - மதுரைக்காஞ்சி 281"

வீட்டு முற்றத்தில் முசுண்டை படர்ந்து நிழல் தந்ததாக புறநானூறு கூறுகிறது.
"முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்,
பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல் - புறநானூறு - 320"

(இதில் குறிப்பிடப்படும் முஞ்ஞை பற்றி தனியே எழுதுகிறேன்)

இன்றும் வேலிகளில் முசுண்டைக் கொடி கார்காலத்தில் பூத்துக்குலுங்குவதைப் பார்க்கலாம்.


-சுபா

Picture Courtesy: Kaleeswari Sivasubramanian.