பம்பரம்
|
I. ஓயாக்கட்டை
சிறுவர், தம் பம்பரங்களை வட்டத்துளாயினும், வரம்பிலா நிலத்திலாயினும் ஒருங்கே ஆடவிட்டு, யாரது நீண்ட நேரம் ஆடுகின்றதென்று பார்க்கும் ஆட்டு
ஓயாக்கட்டையாம். இது மீண்டும் மீண்டும் ஒரே வகையாய் ஆடப்பெறும்.
II. உடைத்த கட்டை
ஆட்டின் பெயர் : ஆட்டத்தில் தோற்றவனது பம்பரத்தை உடைக்கும் ஆட்டு உடைத்த கட்டை எனப்படும்.
ஆடுமுறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் ஒரு மாங்கொட்டையை வைத்து, ஒவ்வொரு வனாகப் பம்பரத்தை
அதன்மேலேற்றி, அதை வெளியேற்றுவர். அது வெளியேறியவுடன், எல்லாரும் ஒருங்கே விரைவாகத் தன் தன் பம்பரத்தை ஆட்டிக் கைமேல் ஏற்றுவர்.
மிகப் பிந்தி ஏற்றியவன் தன் பம்பரத்தை வட்டத்தின் நடுவில் வைத்தல் வேண்டும்.
பம்பரத்தை யாட்டிக் கைமேலேற்றும்போது, 'அபிட்கோசு' அல்லது 'சிங்கோசு' என்று சொல்லிக்கொள்வதால், அங்ஙனம் ஏற்றுவதற்கு, 'அபிட்கோசெடுத்தல்' அல்லது 'சிங் கோசெடுத்தல்' என்று பெயர்.
வட்டத்தின் நடுவிலுள்ள பம்பரத்தை ஏனையோரெல் லாரும், முன்பு மாங்கொட்டையை வெளியேற்றியது போல் வெளியேற்றி, ஏறத்தாழ இருபது கசத் தொலைவிலுள்ள எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போவர். ஒவ்வொருவனாக அவனவன் தன்தன் பம்பரத்தை அதன்மேலேற்றித் தள்ளியே, அதைக் கொண்டு போதல் வேண்டும். அங்ஙனம் கொண்டு போம்போது, யாரேனும்
மட்டை வீழ்த்தினும் சரட்டை போக்கினும், கீழேயிருக்கும் பம்பரத்திற்குப்
பதிலாகத் தன் பம்பரத்தை வைத்துவிடல் வேண்டும். கீழேயிருந்த பம்பரக்காரன் அதை எடுத்துப் பிறர்போல் ஆட்டுவான்.
பம்பரம் தலைகீழாய் விழுதற்கு மட்டை என்றும், பக்கமாக உருண்டுபோதற்குச் சாட்டை என்றும் பெயர்.
யார் பம்பரம் எல்லைக் கோட்டிற்குக் கொண்டு போகப்பட்டதோ, அது உடனே பிறரால் உடைக்கப்படும்.
III. பம்பரக் குத்து
ஆட்டின் பெயர் : தோற்றவனது பம்பரத்தைக் குத்தி யாடும் ஆட்டுப் பம்பரக்குத்து எனப்படும்.
ஆடுமுறை : இருவர்க்கு மேற்பட்ட சிறுவர் பலர், ஒரு வட்டத்தின் நடுவில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி, அபிட்கோசெடுத்து, அதில் மிகப்
பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்த பின், ஏனையோரெல்லாம் ஒவ்வொருவ னாகத் தன் தன் பம்பரத்தாற் குத்தி அதை வெளியேற்றுவர்.
அது வெளியேற்றப்படின், உடனே மீண்டும் முன்போல் அபிட்கோ செடுத்து, அதிற் பிந்தியவன் தன் பம்பரத்தை வட்டத்துள் வைத்தல் வேண்டும்.
ஏனையரெல்லாம் முன்போற் குத்தி அதை வெளியேற்றுவர்.
மட்டை வீழ்த்தியவன் பம்பரமும், சாட்டை போக்கியவன் பம்பரமும் வட்டத்துள் ஏற்கெனவே வைத்திருப்பதுடன் சேர்த்து வைக்கப்படும்.
வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் ஒன்று வெளியேறி யாடும்போது, அதை வட்டத்துள் வைத்திருக்கும் பம்பரக்காரன் சாட்டையால் தன் கையிலேற்றி ஆட்டின், அதுவும் வட்டத்துள் வைக்கப்படல் வேண்டும்.
வட்டத்துள் ஆடும் பம்பரங்களுள் எதையேனும், வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரக்காரன், தன் கையாலழுத்திப் பதித்துவிடின், அதை
எடுத்தல்கூடாது. உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பம்பரம் மேலும் மேலும் குத்தப்பட்டுச் சேதமாகாதபடி, அதன் சொந்தக்காரன் ஆட்டிக் கொண்டிருக்கும் பம்பரக்காரருள் ஒருவனிடம், "நீ இன்று என் பம்பரத்தை வெளியேற்றின், உன் பம்பரம் உள்ளிருக்கும் போது நான் வெளியேற்றுவேன்," என்று ஒப்பந்தஞ் செய்து கொள்வதுண்டு.
பல பம்பரங்கள் உள்ளே வைக்கப்பட்டுக் கிடப்பின், அவையனைத்தும் வெளியேற்றப்பட்ட பின்புதான் அபிட்கோசு எடுக்கப்படும்.
இங்ஙனம் மீண்டும் மீண்டும் வேண்டும் அளவு தொடர்ந்து ஆடப்பெறும்.
வட்டத்துள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரங்களுள் நண்பனதை வெளியேற்ற வேண்டுமென்றும், பிறனதை வெளியேற்றக் கூடாதென்றும், இருவேறு நோக்குக்
கொண்டு அதற்கேற்பப் பம்பரத்தை ஆட்டுவது வழக்கம்.
IV. இருவட்டக் குத்து
வட்டத்துள் வட்டமாக இருவட்டம் கீறி அவ் விரண்டுள்ளும் பம்பரத்தைக் குத்துவது, இருவட்டக்குத்து. இது பெரும்பாலும் பம்பரக் குத்துப் போன்றதே.
இதன் உள்வட்டத்தில் மாங்கொட்டை வைத்து வெளியேற்றி அபிட்கோ செடுத்துப் பிந்தியவன் பம்பரத்தை அதனுள் வைத்தபின், அதைக் குத்தி
வெளியேற்றுவர். மட்டையும் சாட்டையும் உள் வைக்கப்படும். உள் வட்டத் தில் ஆடும் பம்பரம் வெளி வட்டத்துள்ளும் வந்து ஆடலாம். ஆடும் பம்பரத்தை அழுத்துவது உள்வட்டத்தில்தான் நிகழும்; ஆயின், அதைக் குத்துவது இருவட்டத்திலும் உண்டு. வெளிவட்டத்துள் ஆடும் பம்பரம் தானாய்
நகர்ந்து வெளியேறிவிடின், அதை உடையவன் எடுத்து ஆட்டலாம்; அன்றி உள்ளேயே ஓய்ந்துவிடின் அதை எடுத்தல் கூடாது. அதுவும் மட்டைபோற்
பாவிக்கப்படும்.V. தலையாரி
ஆடுவார் தொகை : மூவர்க்குக் குறையாத சிறுவர் பலர் இதை ஆடுவர்.
ஆடுகருவி : ஆளுக்கொரு பம்பரமும், ஏறத்தாழ இருபது கசம் இடையிட்ட இரு சம அளவான வட்டங்களும், ஒருபோகாக (அதாவது சமதூரமாக) இருபுறமும் நீட்டப்பட்ட அவற்றின் விட்டங்களும், இவ் விளையாட்டிற்குரிய கருவிகளாம்.
ஆடுமுறை : முதலாவது ஒரு வட்டத்தின் நடுவிலுள்ள மாங்கொட்டையைப் பம்பரத்தின் மூலமாய் வெளியேற்றி, அபிட்கோசெடுத்து அதிற் பிந்தியவன் பம்பரத்தை உள்வைத்து, அதை ஏனையோரெல்லாம் ஒவ்வொருவனாய்ப் பம்பரமேற்றி வெளியேற்றுவர். அங்ஙனம் வெளியேற்றும்போது வட்டத் திற்கு வலப்புறமாய் வெளியேற்றல் வேண்டும்; இல்லாவிடின் மீண்டும் அபிட்கோசெடுத்துப் பிந்தியவன் பம்பரத்தை உள்ளே வைக்க வேண்டியிருக்கும்.
வெளியேற்றப்பட்ட பம்பரத்தை நேரே எதிருள்ள வட்டத்திற்குப் பம்பரத்தின் மூலமாய் அடித்துக்கொண்டு போவர். ஒருவன் இடையில் மட்டை
வீழ்த்தினும் சாட்டை போக்கினும், கீழிருக்கும் பம்பரத்திற்குப் பதிலாகத் தனதை வைத்துவிடல் வேண்டும். முன்பு கீழிருந்த பம்பரக் காரன் பின்பு
பிறரொடு சேர்ந்து ஆடுவான்.
அடித்துக்கொண்டு போகப்படும் பம்பரம் எதிர்வட்டத்துள் சேர்ந்த வுடன், பிற பம்பரக்காரரெல்லாம் தம் சாட்டைகளைக் கழுத்திற் சுற்றிக்்கொண்டு,
அதைப் பம்பர ஆணியால் ஒவ்வொரு தடவை குத்துவர். குத்தும்போது சாட்டை தளர்ந்து நிலத்தைத் தொடின், குத்தப்படும் பம்பரக்காரன் தன்
சாட்டையால் வன்மையாய் அடித்துவிடுவான்.பின்பு, இரண்டாம் வட்டத்திலிருந்து முதல் வட்டத்திற்கு, முன்போன்றே அப் பம்பரம் அடித்துக்கொண்டு போகப்படும். அங்கு அதை இவ்விரு தடவை
குத்துவர்.
அதன்பின், அது இரண்டாம் வட்டத்திற்கு மீண்டுங் கொண்டுபோகப்பட்டு, மும்மூன்று தடவை குத்தப்படும். இங்ஙனம் இங்குமங்குமாக இயக்கப்பட்டு,
ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு தடவை கூடுதலாகக் குத்தப்படும்.
இவ்வகையில் இது விரும்பிய அளவு தொடர்ந்து ஆடப்பெறும்.
பி.கு.
மொழிஞாயிறு
ஞா.தேவநேயப் பாவாணர்
ஞா.தேவநேயப் பாவாணர்
எழுதிய தமிழக விளையாட்டு குறிப்பிலிருந்து வழங்கபட்டது
No comments:
Post a Comment