Tuesday, 17 October 2017

சங்க இலக்கியக் காதல் - ஒரு முன்னோட்டம்

சங்க காலத்திலும் காதலர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

தலைவியும் தலைவனும் காண்கிறார்கள், களிக்கிறார்கள். ஆனால் களித்திருந்த காலங்களிலும் கூடத் தலைவி "திக் திக்" என்றே இருக்கிறாள். எங்கே அவன் விட்டுவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் மிகுதியாகவே இருக்கிறது. புலம்பித் தீர்க்கிறாள். இருவரும் பழகுவது ஊருக்குத் தெரிந்து அவர்கள் பங்கிற்கு கண்டதையும் பேசுகிறாள். தலைவிக்கு மேலும் பயமும் கவலையும் அதிகரிக்கிறது.

தலைவனிடம் நேரே கேட்கக் கூட பயமும் தயக்கமும் அவளுக்கு இருக்கிறது. அதனால் தோழியும் அவளும் தலைவன் காதில் விழும்படி சாடை மாடையாக காதல், திருமணம், ஊரார் பேச்சு என்றெல்லாம் கதைக்கிறார்கள். தலைவன் திரும்பி வரவேயில்லை என்றால் குருகையும் கூழையையும் சாட்சிக்கு வருவார்கள் என்று பிதற்றுகிறாள்.

ஒருவேளை தலைவன் திருமணத்திற்கு இசைந்தாலும் அதன் பிறகு இன்னும் சிக்கல்கள் தான். அந்தக் காலத்திலும் காதல் பட அப்பாக்கள் தான் அதிகம் போல. தலைவியை சிறை வைக்கிறார்கள், காதலை எதிர்க்கிறார்கள். தலைவனுக்கோ திருமணத்திற்கு பொருள் வேண்டும். பொருள் ஈட்டச் செல்கின்றான். அப்பொழுது தலைவிக்கு பயம் இன்னும் கூடிக் கொண்டே போகிறது. தலைவனின் பிரிவு, அவன் வருவான என்ற பயம், வீட்டுக்காவல், ஊரார் பேச்சு என்று தாங்க முடியாமல் உடல் மெலிந்து போகிறாள்.

தலைவன் வந்துவிட்டாலும் பெற்றோர் ஒன்றும் ஏற்பதாயில்லை. வேறு வழியில்லாமல் உடன்போக்கு மேற்கொள்கிறார்கள். தோழி உதவுகிறாள். அட உடன்போக்கு என்ன அவ்வளவு எளிதாகவா இருக்கிறது, போகிற வழியெல்லாம் சிக்கல் தான்.

ஒரு வழியாக தலைவனுடன் வாழத் தொடங்குகிறாள். அப்பாடா என்று இருக்கலாம் என்று பார்த்தால் தலைவன் பரத்தி வீட்டிற்குப் போகிறான். மீண்டும் புலம்பல் தொடங்குகிறது. எல்லாம் முடித்து மக்கட்செல்வம் வரும் போது தலைவி தாயாகும் போது அவளது மகள் உடன்போக்கு மேற்கொள்கிறார்கள். அப்பொழுதும் மகளை நினைத்துப் புலம்புகிறாள்.

தலைவனின் வாழ்க்கை கொஞ்சம் வேறு மாதிரி. இப்பொழுது இருப்பது போலத் தான். தலைவியைப் பார்க்கிறான், காதலிக்கிறான். தலைவியும் ஏற்றால் களவொழுக்கும், இல்லையேல் " ஏத்துக்குவியா இல்லைனா கைய அறுத்துக்குவா" என்று கேட்கிறான். இல்லை இல்லை. அப்பொழுது கையை அறுக்கும் பழக்கம் இல்லை. அதனால் மடலேறுகிறான். ஊருக்கே இவனின் ஒருதலைக் காதல் தெரிய வருகிறது. ஊர் அவனை மட்டுமா பேசும் அவளையும் சேர்த்தே பேசும். தலைவிக்கு அப்பொழுதும் சிக்கல் தான், அதனால் வீட்டில் பிரச்சனை வேறு.

தலைவனும் தலைவியும் பார்த்தவுடன் தலைவியை வீட்டுக் காவலில் வைக்கிறார்கள். தலைவி வர முடியவில்லை என்று சொல்ல வந்த தோழியிடம் " அவள வர சொல்லுறியா இல்ல போலீச கூப்பிடவா" என்று கேட்கிறான் தலைவன். ஆமாம் தலைவி வரவில்லையென்றால் அரசனிடம் முறையிடுவேன் என்கிறேன்.

தலைவியும் அவனும் திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்து பொருளீட்டச் சென்றால் அங்கும் அவனுக்குத் தலைவியின் நினைப்பு தான்.

2000 ஆண்டுகள் ஆனாலும் காதல் மட்டும் இன்று இருப்பது போலவே இருக்கிறது. காதலி காதலை ஏற்க மாட்டாள், விட்டுவிடுவாள் என்ற நினைப்பு வரும் போதே காதலன் தடாலடி முடிவெடுத்து தலைவியை சிக்கலில் மாட்டிவிட நினைக்கிறேன். ஆனால் தலைவியோ தோழியிடமும் பறவைகளிடமும் புலம்பிக் காலத்தைக் கழிக்கிறாள். இன்றும் இதே நிலை தானே..

Wednesday, 4 October 2017

கூப்பரின் புறாவடி - Cooper's Hawk

Cooper's Hawk
கூப்பரின் புறாவடி
இப்பருந்தை கூப்பரின் புறாவடி என்றழைக்கலாம் என்பது என் எண்ணம். எப்படி மொசலடி, புறாவடி போன்ற பெயர்கள் பருந்துகளைக் குறிக்க நம் வட்டார மொழி வழக்கில் பயன்படுகின்றன என்று முன்பொரு முறை எழுதியிருந்தேன்.
(http://isainirai.blogspot.com/2017/03/2.html) அதன்படி இதனையும் புறாவடி என்று அழைக்கலாம். பறவையியலாளர் வில்லியம் கூப்பரை (William C Cooper) போற்றும் விதமாக இப்பருந்துக்கு கூப்பரின் பெயர் இடப்பட்டதால் இதனை முறையே கூப்பரின் புறாவடி எனலாம்.
ஏன் புறாவடி?
ஆடோபான் அவர் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "It passes along in a silent gliding manner, with a swiftness even superior to that of the Wild pigeon (Passenger Pigeon). In the Southern states it was known by the name Great Pigeon Hawk". அமெரிக்கக் காட்டுப்புறாவை விட சிறப்பாய் பறந்து அதனை எளிதாய் வேட்டையாடும் திறன் கொண்ட பறவை இது. அதனை வட அமெரிக்காவின் தென் பகுதிகளில் Great Pigeon Hawk என்றே அழைத்திருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட நம் புறாவடி போன்ற ஒரு பெயர் தான். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு Passenger Pigeon என சொல்லப்படும் உருவத்தில் பெரியதாய் இருக்கும் காட்டுப்புறாகளை வேட்டையாடிய பருந்து இது. ஆனால் அப்புறாக்கள் அழிந்து போகவே இது தற்பொழுதும் பெரும்பாலும் புலம்பும் புறாக்களை இரையாய்க் கொள்கிறது.
முன்னர் காடுகளிலே காணப்பட்ட இப்பருந்து இன்று காட்டுகளின் ஓரங்களிலும், சில சமயம் மரங்கள் அடர்ந்த நகர்ப்புறங்களிலுமே காணப்படுகிறது. இதனைக் காட்டுவாழ் கொன்றுண்ணி என்று வகைப்படுத்துதலே தவறோ என்கிறார் Pete Dunne. அவரது முந்தைய நூல்களில் இதனைக் காட்டுவாழ் கொன்றுண்ணி என்று வகைப்படுத்திய அவரே அதை தவறு என்கிறார். இன்று தன் முக்கிய இரை, காடுகளில் வாழ்ந்த காட்டுப்புறாவிலிருந்து நகர்புறங்களில் வாழும் புலம்பும் புறாவுக்கு மாறவே, முன்னர் காடுகளில் இருந்த இப்பறவையும் இடம்பெயர்ந்திருக்கிறது என்கிறார். இரையின் பரம்பலே கொன்றுண்ணிகளின் பரம்பலையும் நிர்ணயிக்கின்றன.
எப்படியானாலும் இது அன்றும் இன்றும் புறாவடி தான். புறாவடி என்று அழைப்பதன் மூலம் பறவை ஆர்வலர்களுக்கு இதன் முக்கிய இரை பற்றியும், அதன் வேட்டை முறை பற்றியும் விளக்காமலேயே எளிதாய் புரியும். அமெரிக்க வாழ் பறவையார்வலர்களுக்கு இதன் இரை புலம்பும் புறா என்பதும், அதன் பரம்பல் என்ன என்பதும் கூட சொல்லாமலேயே தெரிந்துவிடும். அதனாலேயே இப்பெயர் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
இப்படம் அமெரிக்கத் தலை நகரில், கட்டிடங்களுக்கு இடையே மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் எடுக்கப்பட்டது.
Cooper's Hawk
கூப்பரின் புறாவடி














Jan 21-2017
Smithsonian's National Zoo, DC.